March 02, 2010

அன்புள்ள டில்லி - 12

பணம் புரளும் டில்லி
இந்தியாவின் தலைநகர் என்பதால் டில்லியில் பிழைப்பதற்கு எராளமான வழிகள் உள்ளன. இங்குள்ள அரசாங்கக் கட்டிடங்களுக்கு (பல மாடிகள் கொண்டவை) வெள்ளை அடித்தே கோடீசுவரனாகிவிட முடியும். குண்டூசி சப்ளை செய்து பணக்காரனாக ஆக முடியும். டில்லி காண்டிராக்டர்களின் சொர்க்கம். லைசென்ஸ், பர்மிட் முதலியன வழங்கும் அலுவலகங்கள் பல இருப்பதால் இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும் வருபவர்கள் எராளம். இதனாலும் இவர்கள் தரும் "காபி செலவு"களினாலும் பணப் புழக்கம் எராளம். தரகர்கள் வளமாக வாழும் பூமி இது.
பார்ட்டிகள் நிறைந்த டில்லி
            டில்லியில் விருந்துகளுக்குப் பஞ்சமே இல்லை. தூ தரகங்கள் அவ்வப்போது தேர்ந்தெடுத்து அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று அழைப்பு விடுப்பார்கள். "உண்டறியாதன உண்டேன்' என்று கூறும் அளவிற்குக் கிடைக்கும். சில சமயம் பரிசுப் பொருள்களும் தரப்படும். அத்துடன் சைக்ளோஸ்டைல் செய்யப்பட்ட பத்திரிகைக் குறிப்பு எதாவது தருவார்கள். "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற வாசகத்தை மறக்காத நிருபர்கள், தங்களிடம் தரப்பட்ட குறிப்பைப் பத்திரிகையில் பிரசுரித்து விடுவார்கள்.
இன்ன எம்பஸியில் பார்ட்டி என்று தகவல் கிடைத்தாலே போதும், அழையாத விருந்தாளிகளாகப் போகிறவர்களும் உண்டு.
ஒரு சமயம் ராஷ்டிரபதி பவன் டீ பார்ட்டிக்கு எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது. என் மனைவி கமலாவுடன் சென்றேன். (கமலா இதற்காகப் புது பட்டுப் புடவை வாங்கிக் கொண்ட விவரங்கள் எல்லாம் இங்கு அனாவசியம்) சின்னப் பொதுக் கூட்டம் மாதிரி கூட்டம். எல்லாரும் ஹாலில் நின்று கொண்டிருந்தோம். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாததால் பல பேருக்கு யாருடன் பேசுவது என்று தெரியவில்லை. அவரவர் தங்கள் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ராஷ்டிரபதி ராதா கிருஷ்ணன் வந்தார்.  அட்டா. என்ன ஒரு அடக்கமான அறிவுக் களை!  எங்களருகில் அவர் வந்த போது ஒரு நமஸ்காரம் போட்டோம்.  அவரும் கை கூப்பினார். ஒரு சுற்று நமஸ்காரம் போட்டுக் கொண்டே சென்றார். டீயும் பிஸ்கட்டுகளும் மேஜை மேல் தோன்றின. அவ்வளவுதான்,  கூட்டம் மேஜைகளைச் சூழ்ந்து கொண்டது. இத்தனைக்கும் வந்திருந்தவர்கள் படேபடே ஆசாமிகள், அதிகாரிகள். அமைச்சர்கள்! டீ சாப்பிட்டோம். வீட்டிற்கு நடையைக் கட்டினோம். ராஷ்டிராபதி பவனுக்குப் போகிறோம், போய் வந்தோம் என்று ஜம்பமடித்துக் கொள்ள வாய்ப்பளித்த வரையில் இந்த மாதிரிப் பார்ட்டிகள் பலருக்கு முக்கியமான பார்ட்டிகள்தான்!

தனம் தரும் தமிழ்
            டில்லியில் பல தூதரகங்கள், அரசு அலுவலகங்களின் தலைமைப் பீடங்கள், விளம்பர, பிரசுர இலாகாக்கள் என்று பல இருப்பதால், மொழி பெயர்ப்பாளர்களுக்கு டிமாண்ட் நிறைய உண்டு.  இவை வெளியிடும் பிரசுரங்களுக்கும், ஒலிப்ரப்பிய  சொற்பொழிவுகளுக்கும், அரசு விளம்பர வாசகங்களுக்கும், அவைகளுக்குக் குரல் கொடுக்கும் பணிகளுக்கும் பிரதேச மொழி தெரிந்தவர்களுக்கு டிமாண்ட் எப்போதும்  இருக்கும்.ந்தது.  தமிழ் மொழிக்கும் நிறைய தேவை இருந்தது.  ஆகவே தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் கொஞ்சம் பைசா பார்க்க முடியும்.  தமிழ் சுமாராகத் தெரிந்திருந்தாலும் போதும்; ஆனால் சம்பந்தப்பட்டவர்களை நன்றாகத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அது தான் முக்கியம், அப்போதுதான் வாய்ப்புகள் கிடைக்கும்.
           டில்லியில் உள்ள பல லைப்ரரிகளில் நான் அங்கத்தினராக இருந்ததுடன், அடிக்கடி போய் புத்தகங்களை எடுத்து வருவேன். அமெரிக்கன் லைப்ரரியில் மைக்ரோ பிலிம் யூனிட்டில் நியூயார்க் டைம்ஸின் பதிவுகள் இருக்கும். முன்னதாகவே "இன்டெக்ஸ் டு நியூயார்க் டைம்ஸ்' என்ற புத்தகத்திலிருந்து தேவையான கட்டுரைகள் எந்தத் தேதியில், எந்தப் பக்கத்தில் வந்துள்ளன என்பது போன்ற குறிப்புகள் எடுத்து வைத்திருப்பேன். ஞாயிறன்று (அப்போதெல்லாம்) அமெரிக்கன் லைப்ரரி உண்டு. சரியாக ஒன்பதரைக்கு கதவைத் திறந்தவுடன் மைக்ரோ பிலிம் புரொஜக்டர் மேஜைக்கு ஓடிப் போய் இடத்தைப் பிடித்துக் கொள்வேன். குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் படிப்பேன். குறிப்புகளை எடுத்துக் கொள்வேன். நிறைய துணுக்குகளுக்கு விஷயமும் கட்டுரைகளுக்கு ஐடியாவும் கிடைக்கும்.
     டில்லி லைப்ரரிகளில் சுமார் 30, 40 வருஷ பத்திரிகைகளும் கிடைக்கும். நியூ ஸ்டேட்ஸ்மன், ஸ்பெக்டேட்டர், லைஃப், டைம் அண்ட் டைட் போன்ற பல பத்திரிகைகளின் பழைய இதழ்களை விடாமல் படித்தேன். படிப்பதில் உள்ள வழக்கமான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று. காரணம் வேறொன்றுமில்லை. இதன் காரணமாக கொஞ்சம் சில்லறை சம்பாதிக்க வழி எற்பட்டது தான்.
இப்படி நான் புத்தக சாலைகளை மேய்ந்து கொண்டிருந்த போது கிடைத்த புத்தகம் வேலூரில் உள்ள டாக்டர் மேரி வர்கீஸ் என்பரின் சரிதம். அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டது. ஒரு விபத்தின் விளைவாக உடலின் கீழ்ப் பகுதி பாரிசத்தால் செயலிழந்து போயும், நெஞ்சுறுதியுடன் துயரங்களைச் சமாளித்து ஒரு மிகச் சிறந்த "சக்கர நாற்காலி' சர்ஜனாகத் திகழ்ந்தவர் மேரி. அவரது வரலாற்றைச் சுருக்கி குமுதத்திற்கு அனுப்ப, அதில் பிரசுரமாகியது.
இதைப் பார்த்து லக்னோவிலிருந்து ஒரு பிரசுராலயம். இந்தப் புத்தகத்தை வரிக்கு வரி தமிழ்ப் படுத்தித் தரச் சொல்லியது. நல்ல தொகையை கொடுத்தது. இதைத் தொடர்ந்து தான் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவும் எனக்கு மொழி பெயர்ப்புப் பணிகளைத் தர முன்வந்தது.

9 comments:

  1. டில்லி நல்ல ஊர்தான். ஆனா இப்போ போய் குடியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. //குண்டூசி சப்ளை செய்து பணக்காரனாக ஆக முடியும்.//


    விக்ரமன் படத்தில் வருவது போலவா.... :))

    ReplyDelete
  3. // படிப்பதில் உள்ள வழக்கமான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று. காரணம் வேறொன்றுமில்லை. இதன் காரணமாக கொஞ்சம் சில்லறை சம்பாதிக்க வழி எற்பட்டது தான். // It may be true you earned some income also by reading , but I think it was incidental. That habit of reading had increased your knowledge and wisdom and made you a great writer. The best thing you are doing is sharing the same with us - unknown readers. We are benefited. Thank you, - R. Jagannathan

    ReplyDelete
  4. //டில்லியில் உள்ள பல லைப்ரரிகளில்//
    இதை ஏன் வெள்ளை அடிக்கப் பட்டு இருக்கு?

    இந்த Junoon தமிழ் உங்க வேலை இல்லையே.

    ----
    அப்புறம் இப்போதைக்கு உங்க பதவுகள் பொறுத்த வரைக்கும் நான் தர்மர் கண்ணாடி மட்டுமே அணிவதாக இருக்கிறேன்.
    ----

    http://www.virutcham.com

    ReplyDelete
  5. //டில்லியில் உள்ள பல லைப்ரரிகளில்//
    இதை ஏன் வெள்ளை அடிக்கப் பட்டு இருக்கு?>>
    அடுத்த SUBJCT ஏன்று காட்டுவதற்குத்தான். ஒரு LINE SPACE விட்டிருக்கலாம். கவன்க்குறைவுதான் காரணம்.

    ReplyDelete
  6. <<>
    ----
    அதென்ன தர்மர் கண்ணாடி? புரியவில்லையே. தயவு செய்து பதவுரை, பொழிப்புரை என்று போடுங்கள்!

    ReplyDelete
  7. அதாவது தர்மருக்கு இந்த உலகத்தில் எல்லாமே நல்லதாகவே தெரிந்ததாமே. அந்தக் கண்ணாடி

    virutcham

    ReplyDelete
  8. உங்களைப் போன்ற அந்தக் கால மனிதர்களை பார்த்தாலே எங்களுக்கெல்லாம் பொறாமையாக வருகிறது. நீங்களெல்லாம் ஒவ்வொன்றையும் அனுபவித்து‍ வாழ்ந்துள்ளீர்கள். எநத் பாதுகாப்பு கெடுபிடியும் இல்லாமல் குடியரசுத் தலைவரை பார்‌ப்பது‍ என்பது‍ இப்போது‍ முடிகிற காரியமா?
    ஜெ. பாபு
    கோவை

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!