February 18, 2012

ரஜினி படியளக்கிறார்!


ரஜினி படியளக்கிறார்!
எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. என் நண்பரான நிருபர் நச்சு திடீரென்று வந்து, ‘‘இந்தாப்பா. நான் உன்னிடம் வாங்கின கடன் 500 ரூபாய்’’ என்று சொல்லி ஒரு பளபள நோட்டைக் கொடுத்தான்.
‘‘பணமா? உனக்கு நான் எப்ப கொடுத்தேன்? மறந்தே விட்டது’’ என்றேன்.
‘‘நீ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மூன்று வருஷத்துக்கு முன்னே வாங்கினது. இடையில் நம்ம நிருபர் வேலையில் ஒண்ணும் ‌‌ஹோஎன்று பணம் பார்க்க முடியவில்லை. இப்பதான் தொழில் சூடுபிடித்து இருக்கிறது.’’
‘‘எப்படியப்பா?’’
‘‘எல்லாம் ரஜினிதான் படியளக்கிறார். சூப்பர் ஸ்டார்தான்...’’
‘‘புரியலையே...’’
‘‘இப்போ சிவாஜிபட வேலையில் இறங்கி இருக்கிறார். இல்லையா? பத்திரிகைகளுக்கு எக்ஸ்க்ளூஸிவ் செய்திகள் தந்து நாலு காசு பாக்கறேன்...’’
‘‘அப்பாடி! பெரிய ஆளெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கியா? வெரிகுட்!’’
‘‘குட்டும் இல்லை, மட்டும் இல்லை... இதோபார், சில எக்ஸ்க்ளூஸிவ் செய்திகள்...’’ என்று சொல்லி சில கட்டுரைகளைக் கொடுத்தான். ‘‘படிச்சுப் பாரு...’’ என்றான். படிக்கப் படிக்க எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. அவன் தந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
சிவாஜி படத்தில் சிவாஜியாக ரஜினி
சிவாஜியாக ரஜினி நடிக்கும் ஒரு குட்டி மேடை நாடகத்தை சிவாஜி படத்தில் இணைக்க ரகசியத் திட்டம் உள்ளதாம். இதற்கு சிவாஜியின் வம்சத்தினரிடம் அனுமதி பெற மகாராஷ்டிராவுக்கு ராமு, சோமு, குப்பு என்று மூன்று பேர் கொண்ட ஒரு பெரும்படையையே(!) அனுப்பியிருக்கிறார்கள். சிவாஜியின் வம்சத்தினர் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறப்படுவதால் அங்கும் ஒருத்தரை அனுப்பக் கூடும்.
நான் ரஜினியின் தீவிர ரசிகை
ரஜினியின் குழந்தையாக நடிக்க ஒரு அழகான சிறுமியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். மூன்றாம் வகுப்பில் படிக்கும் மனஸ்வினியை தீவிரமாக தேடிக் கண்டுபிடித்த நம் நிருபரிடம் அவள் எதுவும் கூறமாட்டேன் என்று கூறிவிட்டாள். கதையைப் பற்றியோ அவளுடைய கதாபாத்திரத்தைப் பற்றியோ கூற மறுத்துவிட்டாள். கடைசியில் ஒன்று மட்டும் சொன்னாள். ‘‘நான் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினி படங்களை என் ஸ்கூல் நோட் புத்தகங்களில் ஒட்டி டீச்சரிடம் திட்டுகூட வாங்கி இருக்கிறேன். 20, 25 வருஷமாக ரஜினியின் பயங்கர விசிறி. இப்போது அவருடன் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு இறைவன் கொடுத்த வரம்’’ என்றார். ‘‘அதிருக்கட்டும்... உங்கள் வயது என்ன?’’ என்று நம் நிருபர் கேட்டதற்கு, ‘‘பெண்களின் வயதைக் கேட்பது அநாகரீகம்’’ என்று ஒரு போடு போட்டாள்.

February 06, 2012

ஜி.பி.ஓ. வாழ்க்கை

முக்கிய குறிப்பு: 
தொடர்ந்து வராது. ஆனால்அவ்வப்போது தொடர்ந்து வரும்!

அறுபது வருஷத்திற்கு முந்தைய ஜெனரல் போஸ்டாபீஸில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். பீச் ஸ்டேஷனில் இறங்கினதும் பிரம்மாண்ட கல் கட்டிடம் பிரமிப்பைத் தந்தது. உள்ளே போனேன். பெரிய ஹாலில் நிறைய தபால்காரர்கள் தபால்களைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். வெளியே ஹாலில் வரிசையாக 15, 16 கவுன்டர்கள். மணியார்டர், ரிஜிஸ்தர், தபால் தலை, போஸ்டல் ஆர்டர் என்று. இந்த கவுன்டர்கள் சற்று உயரமாக இருக்கும். ஆகவே நாற்காலிகளில் உட்காருவது பரணில் ஏறுவது மாதிரி இருக்கும். (ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அந்த நாற்காலிகள் ஒவ்வொன்றும் ஒரு இரும்பு சிம்மாசனம் மாதிரி பயங்கர சுமையாக இருக்கும். சுலபமாக நகர்த்தக்கூட முடியாது!)
எங்கு பார்த்தாலும் ஒரே சளசள ஒசைதான். போதாததற்கு டமால் டமால் என்ற முத்திரை குத்தும் ஓசை. (சமீபத்தில்தான் ஓசைப்படுத்தாத ரப்பர் ஸ்டாம்புகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள் தபால் நிலையங்களில்!) எங்கு பார்த்தாலும் தபால் கார்டுகள், ரிகார்டுகள். தபால் பைகளை லேபிள் வைத்துக் கட்டி அரக்கு சீல் வைத்துக் கொண்டிருந்தார்கள். சின்ன மின்சார ஹீட்டரில் சாம்பார் கொதிப்பது போல் அரக்கு உருகி  தளதளத்துக் கொண்டிருந்தது. எங்கும் அரக்கு நெடி, புகை. (மாசுக் கட்டுப்பாடு என்ற வார்த்தையை யாரும் கேள்விப்பட்டிராத காலகட்டம்)

உயரமான கூரைகளில் உள்ள சாரங்களில் நிறையப் புறாக்கள். அவை குமுகுமு என்று தங்கள் மொழியில் ஓசைப்படுத்தின. மத்திய அரசில் வேலை என்று பெருமிதத்துடன் வந்தால் ஒரு மினி கொத்தவால் சாவடியாக இருக்கிறதே ஆபீஸ்!

‘‘உங்களை ரிஜிஸ்ட்ரேஜன் டிபார்ட்மெண்டிற்குப் போட்டிருக்கிறேன். ஏம்பா... இவரை  ஹெட்கிளார்க்கிட்ட அழைச்சிட்டு போ. புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கார்’’ என்றார் ஸ்டாஃப் செக் ஷனில் இருந்த உதவி பிரசிடென்ஸி போஸ்ட் மாஸ்டர் அங்கு போனேன். நிறைய பேர் ரிஜிஸ்தர் தபால்களை பீட் படி பிரித்துக கொடுத்தார்கள். வேறு சிலர் பீட் வாரியாக அந்த தபால்களின் எண்கள், எந்த ஊரிலிருந்து வருபவை போன்ற விவரங்களை டெலிவரி ஷீட்டில் கார்பன் பேப்பர் வைத்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.

என்னிடம் கொடுத்து எழுதச் சொன்னார். ‘‘87 மதுரை, 105 பெங்களூர், 27 அரக்கோணம், 25 மண்ணடி’’ என்று வரிசையாக எழுதினேன். ‘‘சீக்கிரம். வேகமாக எழுதுங்க. டெலிவரிக்கு டைம் ஆயிடுத்து. மணி அடிச்சுடுவாங்க சரியா பதினொண்ணரைக்கு’’ என்று ஒருத்தர் சொன்னார். ‘‘சரி, மொத்தமாக எத்தனை லெட்டர்னு எழுதுங்க... இந்தாப்பா 17’ம் நம்பர்  பீட் யாருய்யா... வேலு, வாய்யா, இந்தா எண்ணிப் பார்த்து கையெழுத்து போட்டு எடுத்துக்கிட்டுப் போ. 17ம் பீட்டுக்கு இன்ஷுரன்ஸ் தபால் ஒண்ணு இருக்குதாம். உள்ளே கூண்டிலே போய் வாங்கிக்கோ’’ என்றார். (இவர் சூபர்வைசர் என்று பின்னால் தெரிந்தது)

புள்ளிகள்: குழந்தை மாதிரி தூங்கினேன்


அமெரிக்க அதிபராக நிற்கப் போட்டியிட ஜார்ஜ் புஷ் விரும்பினார். அதே கட்சியைச் சேர்ந்த DOLE-ம் போட்டியிட விரும்பினார். யாருக்கு கட்சி சீட் கிடைக்கும் என்று சஸ்பென்ஸாக இருந்தது. கடைசியில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு டிக்கட் தரப்பட்டது. 
வாய்ப்பை இழந்த DOLE -யிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். ''இந்தத் தோல்வியை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?'' அதற்கு DOLE ‌சொன்னார்: ''பத்திரிகைகளில் வந்த விவரங்கள் மாதிரி எல்லாம் நான் தோல்வியை எடுத்துக் கொள்ளவில்லை. நமக்கு டிக்கட் இல்லை என்று தெரிந்த அன்று இரவு குழந்தை மாதிரி தூங்கினேன். ஆமாம்... இரண்டு மணிக்கு ஒரு தரம் விழித்து எழுந்து அழுதேன்...'' என்றார் குறும்பாக!