December 31, 2010

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

வணக்கம்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். 1845ல் பிரசுரமான புத்தகம். பிரமாதமாக இருந்தது நகைச்சுவை. படிக்கும் போதே உள் மனதில் ’இதுமாதிரி நாமும் முயற்சி பண்ணலாமே' என்று தோன்றியது.
எழுத ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் எழுதி முடிக்கத் திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் 10, 20 பக்கங்கள் எழுதியதும் தொடரமுடியவில்லை. அதன் பிறகு திடீரென்று `’உன்னால் எழுதிவிட முடியும்' என்று என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு ஒரே மூச்சில் எட்டு அத்தியாயங்கள் எழுதினேன். தனித் தனி எபிஸோட் மாதிரி அமைந்திருப்பதால் அத்தியாயங்கள் எழுதிக் கொண்டே போகலாம்.
கதையின் பெயர்: அம்புஜத்தின் அர்ச்சனைகள். அத்தியாயங்கள் ஒரு தொடர்புடன்  இருந்தாலும் தனித் தனி அர்ச்சனைகளாகவும் படிக்க இயலும். கதைக்குப் படம் போட யாரைப் பிடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் இல்லாமல்கதை ரசிக்குமா என்று சந்தேகம் எற்படுகிறது/. ஓவியர்  ஒருவர் அகப்பட்டு, அவரும் காலதாமதம் செய்யாமல் படம் போட்டுக் கொடுத்தால், பொங்கலன்று அந்தத் தொடரைத் துவங்குகிறேன்..

மீண்டும் அனைவ்ருக்கும்  நலவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் - கடுகு

பரணி - கேரக்டர்

கணக்கு வழக்கு இல்லாத அளவுக்கு புகையிலைத் தோட்டம், எலுமிச்சம்பழத் தோப்பு, திராட்சைக்காடு என்று பணத்தைச் சாகுபடி செய்யும் தோட்டங்களை ஆந்திராவில் வைத்திருக்கும் மிகப் பெரிய செல்வந்தரின் ஒரே மகன் பரணி. சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் "குழந்தை'! நூறு ரூபாய்க்குக் குறைந்த நோட்டைக் கையால் தொடுவதே பாவம் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு "பாக்கெட் மணி' பக்கெட் பக்கெட் டாக "நாயினா' அனுப்பிக் கொண்டிருக்க, சென்னையில் ஒரு கோஷ்டியையே சேர்த்துக் கொண்டு அட்டகாசமாக இருப்பவன் பரணி.
இருபத்திரண்டு வயதில் பி.யூ.சி. பரீட்சையின்மேல் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் பரணியைச் சுற்றி நாலைந்து நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். "டேய் பசங்களா, இன்னிக்குக் கிளாஸ் "கட்'டுடா'' என்றால் எல்லா நண்பர்களும் "கட்'டிடுவார்கள். காரணம், அன்று பரணி சினிமா, ஓட்டல் என்று முழு தின புரோகிராம் போட்டிருப்பான்.
"டேய், பரணி, இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல். நான் லீவு போடலைடா'' என்று நண்பன் முரளி சொல்வான்.

December 26, 2010

அட்லான்டாவில் ஒரு நெகிழ்ச்சி

அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் உள்ள எமரி சர்வகலாசாலை பட்டமளிப்பு விழா  திறந்த வெளியில் மேடை.
கீழே நாற்காலிகளில் பட்டம் பெற வந்திருக்கும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள். அதில் நானும் ஒருவன்.
    லேசான காலை இளம் வெய்யில் இதமாக இருக்கிறது.
    நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. ஒரு பெண் மேடையின் மூலைக்கு வந்து நிற்கிறாள்.
    டீன், புரொபசர், என்று பலர் உரை நிகழ்த்துகிறார்கள். அவர்களின் உரையை அந்தப் பெண் சைகை மொழியால் "மொழி பெயர்க்கி"றார். (காது கேளாதவர்களுக்காக டி.வி.யில் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி.)
    எதற்காக இப்படி செய்கிறார்கள்? ஒருக்கால் அமெரிக்காவில் இது வழக்கமாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டேன்.
    ஒவ்வொருவர் பெயராகக் கூப்பிட, மாணவர்கள் மேடைக்குச் சென்று பட்டத்தைப் பெற்றார்கள். நிகழ்ச்சி முடிவுறப் போகிறது என்று நினைத்த சமயம், டீன் மைக்கில் வந்து, ""கடைசியாக மிகச் சிறந்த ஸ்டூடண்ட் பரிசு அறிவிக்க முன் வந்திருக்கிறேன். அவர் பெயரைக் கூப்பிடுமுன் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அவருக்கு பாராட்டைத் தெரிவிப்பதற்குக் கைகளைத் தட்ட வேண்டாம். அதற்குப் பதில் கைகளை உயர்த்தி விரல்களை "வா வா' என்று அழைப்பது மாதிரி காட்டுங்கள். காரணம், பின்னால் சொல்கிறேன்.
    ”முதலில் மாணவர் பற்றி ஒரு சின்ன குறிப்பு.
    ”நமது "ராலின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்"தில் பட்டம் பெற இருக்கும் அவர், இதே சர்வகலாசாலையில் சமூக சேவை படிப்பிலும் தேறியுள்ளார். அத்துடன் டெகடூர் பகுதியில் ஒரு தொண்டு அமைப்பையும் நிறுவி சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஒரே சமயம் இரண்டு பட்டங்களையும் பெறப் போகிற அவருக்குக் காது கேட்காது. பேச வராது... நான் சொன்னபடி விரல்களை நீங்கள் அசைத்தால், அவரைப் பாராட்டுகிறீர்கள் என்று அவர் தெரிந்து கொள்வார்'' என்று கூறிவிட்டு, அந்த ஸ்டூடண்டின்--  அவர் ஒரு பெண் -- பெயரை அறிவித்தார்.
  ஒரு மாணவி அப்பெண்ணை மேடைக்கு அழைத்து வர, மைதானமே எழுந்து நின்று விரல்களை அசைத்துப் பாராட்டைத் தெரிவித்தது. பலர் கண்களில் நீர்.  மாணவியோ மலர்ந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே மேடைக்கு வந்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டாள்.

( இதே  நாள் நடந்த அனைத்துக் கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் பற்றி  பின்னால் எழுதுகிறேன்.  BE PREPARED TO SHED  MORE TEARS!)

இயந்திரசாமி - 4

December 22, 2010

யார் கையெழுத்து?

புதிதாக, இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது ஒரு கடிதம் கிடைத்தது. அது உலகப் பிரமுகரின் (கடித பாணியில் எழுதப்பட்ட) சுற்றறிக்கை. அந்த பிரமுகரின் கையெழுத்தை மட்டும் இங்கு தந்திருக்கிறேன். அவர் யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்!
 =================
 பின்குறிப்பு:   கேள்வியிலேயே பதிலும் ஒளிந்து கொண்டிருக்கிறது .

பழமொழி ஆராய்ச்சி -கடுகு

சமீபத்தில் தமிழ்நாட்டில் நாட்டுப் பாடல்களுக்கு மவுஸ் ஏற்பட்டு இருக்கிறது. நாமும் ஒரு நாட்டுப் பாடல் புத்தகத்தைத் தொகுக்கலாம் என்று எழுத்தாளர் ஏகாம்பரம் நினைத்தார். ஆனால் பலர்  அவரை முந்திக் கொண்டு விட்டதால், சரி நம்முடைய பழந்தமிழ் நாட்டின் பழந்தமிழ் பழமொழிகளைத் தொகுத்து அவைகளுக்கு ஆராய்ச்சி உரைகளை எழுதி வெளியிடலாம் என்று எண்ணினார். எழுதியும் முடித்தார். சினிமா ட்ரெய்லர் மாதிரி சில சுவையான பகுதிகளை அளிக்கிறோம்.

மாமியார் உடைத்தால் மண்கலம்  மருமகள் உடைத்தால் பொன்குடம்.
அருமையான, உயர்வான, மாமியாருக்கு மதிப்பு அளிக்கும் இந்தப் பழமொழிக்கு,  யாரோ ஒரு மாமியார் விரோதி தவறான விளக்கத்தைத் தந்துள்ளார். அதை மக்கள் உண்மையென்று நம்பியும் வருகிறார்கள்.
 ஆழ்ந்து ஆராயுமிடத்து, ஒரு மாமியாரின் உயர்ந்த பண்பையும், மருமகள் பேரில் அவள் கொண்டுள்ள பாசத்தையும் நேசத்தையும் இந்தப் பழமொழியைப் போல் எதுவும் தெரியப்படுத்தவில்லை என்பது விளங்கும். பொன்குடம் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? வெள்ளிக்குடமே அபூர்வம். ஆகவே மருமகளிடம் பொன் குடம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தாலும் அது மாமியாரின் பெருந்தன்மையைத்தான் காட்டும், ’மருமகள், இளம் பெண்ணாயிற்றே! பெருமையாகப் பொன் குடத்தை எடுத்துக் கொண்டு போகட்டும், நாம் சாதாரண மண் குடத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற தாராள குணத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.
      அடுத்தது, பொன் குடம் எங்காவது உடையுமா? கீழே விழுந்தால் நசுங்கும். சரி, அது உண்மையிலேயே பொன்குடம் அல்ல என்று வைத்துக் கொண்டாலும் மாமியாரின் பெருமையைத்தான் எடுத்துக்காட்டும்.. மாமியாரைப் பொறுத்தவரை, மருமகளின் ஒவ்வொரு பொருளும் பொன் போன்றது. அவைகளுக்கு அவ்வளவு மதிப்பு தருவாள். அதே சமயம் தன் பொருள்களை வெறும் மண்ணாகக் கருதுவாள்.

மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?
இந்தப் பழமொழியின் உண்மை உருவத்தைப் பற்றி அறியப் பல காடுகளுக்குச் சென்று மயில்களின் நடை, உடை பாவனைகளை ஆராய்ந்தேன். மயிலாப்பூர் வாசிகளுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ என்று அங்கும் விசாரித்தேன். தமிழ்நாட்டில் பல மைல்கள் பயணம் செய்தேன். மயிலைப் பற்றிய உண்மைத் தகவலை அறிய. கடைசியில் குயிலம்பட்டியில் காக்கைப் பாடினியாரின் வம்சத்தில் வந்த கூகைப் புலவர் இதற்குச் சரியான விளக்கம் கூறினார். "இந்தப் பழமொழியின் உண்மையான ரூபம்: "மயிலே மயிலே என் மேல் இரக்கப்படு, அம்மா!''

THE HAND THAT ROCKS THE WORLD

 by WILLAM BOSS WALLACE.
             Writtten in 1865

 Blessings on the hand of women!
Angels guard its strength and grace,
In the palace, cottage, hovel,
Oh, no matter where the place;
Would that never storms assailed it,
Rainbows ever gently curled;
For the hand that rocks the cradle
Is the hand that rules the world.
     
Infancy's the tender fountain,
Power may with beauty flow,
Mother's first to guide the streamlets,
From them souls unresting grow--
Grow on for the good or evil,
Sunshine streamed or evil hurled;
For the hand that rocks the cradle
Is the hand that rules the world.
     
Woman, how divine your mission
Here upon our natal sod!
Keep, oh, keep the young heart open
Always toA the breath of God!
All true trophies of the ages
Are from mother-love impearled;
For the hand that rocks the cradle
Is the hand that rules the world.    

Blessings on the hand of women!
Fathers, sons, and daughters cry,
And the sacred song is mingled
With the worship in the sky--
Mingles where no tempest darkens,
Rainbows evermore are hurled;
For the hand that rocks the cradle
Is the hand that rules the world.
 

(From:Webster's Little folks speakers -1875)

December 17, 2010

நான் ஒரு ராட்சசன்! -கடுகு

உண்மையிலேயே நான் ரொம்ப சாதுவான ஆசாமி, குழந்தைகளை கண்டால் எனக்கு அபார ஆசை. நேருவிற்கு அடுத்தபடி குழந்தைகளை நேசிப்பவன் நான், "சாச்சா கடுகு' என்று குழந்தைகளால் குறிப்பிடப்படுவதை விரும்புகிறவன்.  இப்படியிருந்தும் என் தெருவில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் நான் ராட்சசன், பூதம், பூச்சாண்டி, "ரெண்டு கண்ணன்' "கோபக்கார மாமா' என்று ஆகிவிட்டேன்.  மன்னிக்கவும்.  ஆக்கப்பட்டுவிட்டேன்.
      நான் ராட்சசன் எக்ஸட்ரா ஆன கதை இதுதான்:
      என் குழந்தை ஏதாவது பிடிவாதம் பிடித்தாள் என்றால் உடனே என் மனைவி, ""இரு இரு சாயங்காலம் அப்பா ஆபீசிலிருந்து வரட்டும். தோலை உரிக்கச் சொல்கிறேன்'' என்பாள்.  அல்லது "போனால் போகிறது என்று பார்க்கிறேன்.  அப்பாவிடம் சொன்னால் எலும்பை முறிப்பார்'' என்பாள்.  அல்லது ""நல்லபடியா கொஞ்சி ஆசையா நான் சொன்னால் கேட்க மாட்டாய்.  அப்பா, விறகுக் கட்டையால் முதுகில் ரத்தம் வருகிற மாதரி அடித்தால் தான் உனக்குச் சரி'' என்பாள்.
      இப்படி எல்லாம் சொல்லி என்னை ஒரு கொடுங்கோலனாக, ராட்சசனாக, நரசிம்ம அவதாரமாக, பயங்கர மனிதனாக ஆக்கிவிட்டாள்!
      இவள் செய்த கைங்கரியத்துடன் அக்கம் பக்கத்து மாமிகளின் கைங்கரியமும் சேர்ந்து என் இமேஜைப் பயங்கரமாக்கிவிட்டது.
      ""சிலேட் பலகையை உடைச்சிண்டு வந்து நிக்கறே.  எதிர் வீட்டு மாமாகிட்டே சொல்றேன்.  மரத்திலே தலைகீழாத் தொங்க விடுவார்'' என்று  ஒரு மாமியும்,--
            ""பக்கத்து வீட்டு மாமா வறார்.  சத்தம் போடாமல் பாலைக் குடிச்சுடு. அவர் வந்தால் கன்னம் சிவந்து போகும்படி அடிப்பார்'' என்று இன்னொரு மாமியும்,--
            ""ஏண்டா வானரங்களா, வீட்டுக்குள்ளே என்னடா கிரிக்கெட்?.  மூன்றாம் வீட்டு மாமாவைக் கூப்பிடட்டுமா... கையை ஒடிச்சுக் கழுத்திலே மாட்டுவார்'' என்று வேறொரு மாமியும்,--
            ""உங்களைத்தான் மாமா... எங்காத்து லட்சுமி ரொம்பப் படுத்தறா... கோணியிலே மூட்டை கட்டிண்டு எடுத்துண்டு போங்கோ"" என்று பிறிதொரு மாமியும் ---
            ""இதோ பாருங்கோ... என் பையன் பத்ரிக்குக் கணக்கே வரலை... உங்க கிட்டே அனுப்பறேன்.  ரெண்டு நாள் சொல்லிக் கொடுங்கோ.  சரியாப் போடலைன்னா முட்டி உடையற மாதிரி ரூலர் கட்டையாலே அடியுங்கோ' --
 என்று வேறொரு தம்பதியினரும் கூறி என்னை ஒரு "குழந்தைகள் கண்ட கொடுங்கோல"னாக ஆக்கிவிட்டனர்.
      என் மனைவி சில சமயம். குழந்தைக்குப் பயத்தை ஏற்படுத்திச் சாதத்தை ஊட்டுவதற்காக என்னை நாயாகக் குரைக்கச் சொல்வாள்.  "நீ சமுத்தா  சாப்பிடாவிட்டால் கறுப்பு நாய் வந்து கடிக்கும்''  என்று சொல்லிவிட்டு கண்ணால் எனக்குச் சமிக்ஞை காட்டுவாள்.
      அடுத்த அறையிலிருந்து கொண்டு, நாய் மாதிரி --அதுவும் கறுப்பு நாய் மாதிரி-- நான் குரைக்க வேண்டும்! இதனால் என் குழந்தைக்கு என்னைக் கண்டாலே குலை நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாயைக் கண்டால் பயமே இல்லாது போய்விட்டது!
      அடுத்து,.....தொடர நேரமில்லை.
      அதோ கமலா சமிக்ஞை செய்கிறாள்... ளொள்... ளொள்... ளொள்!

காபியில் ஈ -கடுகு

``என்னப்பா காபியிலே ஈ'' என்று ஓட்டலில் ஒருவர் கேட்டதும் அதற்கு சர்வர் சொல்லும் பல்வேறு பதில்களும் நல்ல நகைச்சுவைத் துணுக்குகளாக ரொம்ப நாட்களாகப் புழங்கி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது `காபியில் ஈ' டைப் ஜோக்குகள் தொகுப்பு புத்தக விமர்சனத்தைப் படித்தேன். கிட்டத்தட்ட 170 ஜோக்குகள் அதில் இருந்ததாக எழுதப்பட்டு இருந்தது.. ஒரு சில பதில்களை விமர்சனத்தில் போட்டிருந்தார்.
அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன். கடைசியில் என் சொந்த ஜோக்கையும் தந்துள்ளேன்!..

``என்னப்பா... காபியில ஈ இருக்குதே...''
சர்வர்: ``ஏன் சார் இல்லாததையும் பொல்லாததையும் சொல்றீங்க? எங்க சார் காபி... எங்க இருக்குதுன்னு பார்க்கலாம். இதென்ன சார் இது? ஈயா? இது கொசு..!''

* சர்வர்: காபியில ஈயா? இது மிலிடரி ஓட்டல்னு போர்டு போட்டு இருக்கறதைப் பார்க்கலையா? உங்களுக்காக ஈக்குப் பதிலா ஏதாவது வெஜிடபிள் போட முடியுமா?”

* சர்வர்:  என்னது சார்... ஈயா? செத்துக் கிடக்கிறதா, சார்.”.. உங்களையெல்லாம் திருப்திப் படுத்தவே முடியாது. காபி சூடாவும் இருக்கணும். ஈயும் உயிரோடு இருக்கணும்னா நடக்காது சார்...”

* சர்வர்: சார்... இது சாதா காபி. ஈதான் இருக்கும். ஸ்பெஷல் காபி ஆர்டர் பண்ணியிருக்கணும். அப்ப பெரிசா தேனியைப் போட்டிருப்போம்,”

* சர்வர்: அந்த ஈயைப் பத்தி சொல்லாதீங்க. அடங்காப் பிடாரி. தினமும் ”சூடான காபி பக்கமே போகாதடா என்று அடிச்சு அடிச்சு சொல்லியிருக்கேன். கேட்டாதானே... வேணும் அதுக்கு. நீங்க விடுங்க. அதுக்காகப் பரிதாபப்படாதீங்க.”.


இப்போது என் ஜோக்:
* சர்வர்: காபியில ஒரு ஈயா சார்?.. நீங்க படிச்சவங்க. நான் படிக்காதவன். அதான் இந்த ஓட்டல்ல சர்வர் வேலையில் இருக்கிறேன். காபியிலே ஒரு ஈ இருக்கக் கூடாதுன்னு எனக்கு இப்பதான் முதலாளி சொல்லிக் கொடுத்தார். COFFEEயில் இரண்டு ஈ போடணும்னு எனக்குத் தெரியாது. TEA யில் மட்டும்தான் ஒரு ஈ இருக்கணும். இல்லையா சார்?'
======================================================

பாரதசாரி   அவர்கள் அனுப்பிய பின்னூட்டம்
மேலும் சில நான் கேட்டவை: 1. விடுங்க சார் அது எவ்வளவு குடிச்சிடும்?. 2. அத நீங்க ஏன் சார் குடிச்சீங்க? அது ஈ ஆர்டர் பண்ண காபி. 3. சும்மா கவலைபடாம குடிங்க, ஈ  ஃப்ரீ தான்,  சார்ஜ் செய்ய மாட்டோம்.

இயந்திரசாமி - 3

December 13, 2010

அன்புடையீர்,

வணக்கம்.
இந்த வலைப்பூவில் பொன்மொழிகளையும் நகைச்சுவை மொழிகளையும் போட்டு  வருகிறேன். என் பழைய நோட்டுப் புத்தகங்களில் தேடி பிடித்துப் போடுகிறேன். ஒரு பொன்மொழியைத் தேடி எடுக்க 15-20 நிமிஷம் ஆகிறது.  இதனால் எனக்கும் ஆதாயம் உண்டு. தேடும் சாக்கில் 50,60 பொன்மொழிகளைப் படிக்கிறேன்.
நான் தினம் ஒரு பொன்மொழியை எழுதி,  என் 13 வயது பேத்தியின் மேஜை மீது வைத்துவிடுவேன். சமயத்தில் ஈ-மெயிலிலும் அனுப்புவேன். பொன்மொழிகளை அவள் தன் டயரியில் எழுதி  வைத்துக்கொள்வாள். சில சமயம் உரையாடும்போது எதாவது ஒரு பொருத்தமான பொன்மொழியை எடுத்து விடுவாள். எதற்கு இதை இங்கு எழுதுகிறேன் என்றால், நீங்களும் அது மாதிரி உங்கள் குழந்தைகளை எழுதச் சொல்லுங்கள். இப்படிச் செய்வது அவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவும்,.

சில வாரங்களுக்கு முன்பு  என் பேத்தியிடமிருந்து அவளே உருவாக்கிய ஒரு பொன்மொழி ஈ-மெயிலில் எனக்கு வந்தது. தெரிந்த கருத்துதான். ஆனால் அதை அவள் வித்தியாசமாகக் கூறியிருந்தாள். அதை MAST HEAD-ல் போட்டிருக்கிறேன். (படமும் அவள் வடிவமைத்ததுதான்!)

அவள் எழுதிய பொன்மொழி”  In life there is no 'Edit-Undo' of 'CNTRL+Z':!

December 11, 2010

ஜோக்

என்ன செய்கிறான் சம்பளத்தை?
ஒரு நாள் என் ஆபீஸ் நண்பன் நாராயணன் என்னிடம் வந்து, ``இந்த கேசவன் வாங்கற சம்பளத்தை என்ன பண்றான் என்றே எனக்குத் தெரியலை'' என்றான்.
`` இன்னிக்கு தேதி மூணு. ஏன்,  என்ன சமாச்சாரம்? உங்கிட்ட வந்து பணம் கடன், கிடன் கேட்டானா?'' என்று கேட்டேன்.
``இல்லைப்பா... நான் கேட்டேன். கையிலே ஒரு பைசா இல்லை என்று சொல்கிறான்..''

 எனக்குத் தெரியலை
( ஒரு பள்ளிக் கூடத்தில் நடந்தது!)

ஆசிரியர்: ஏண்டா, சோமு... ஒரு நாளில்  நீ எப்படி இத்தனை தப்பு பண்றேன்னு எனக்குத் தெரியலை!
சோமு:  ஒண்ணுமில்லை சார்... நான் விடிகாலையில் சீக்கிரமே  5 மணிக்கு எழுந்துவிடுவேன்!

அத்தையோ சித்தியோ...
“ ஏங்க, என் அத்தை,  தன்னோட சொத்தை என் மேலே எழுதி வெச்சிருக்கிறதாலதானே  என்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டீங்க?”
“ சீச்சீ.. பைத்தியம். அதெல்லாம் ஒண்ணுமில்லை. அததை என்ன பெரிய அத்தை? ..  உன் சித்தி எழுதி வச்சிருந்தால்கூடஉன்னைக் கலியாணம் பண்ணி கிட்டிருப்பேன்...!”

புள்ளிகள்: காமெடியன் ஜேக் பார்

ஜேக் பார் (JACK PAAR ) ஒரு காமெடியன். அமெரிக்க ரேடியோ, டிவி, திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்ற நூற்றாண்டு ஆசாமி.(1918-2004)
அவர் எழுதிய புத்தகங்களை எல்லாம் நான் வைத்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.
 தன் ரேடியோ அனுபவங்களை நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.  அதிலிருந்து ஒரு சமபவத்தை இங்கு தருகிறேன்.

ஜேக் பார் ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணினார். அந்த நிகழ்ச்சியை ரகசியமாக ரிக்கார்ட் பண்ணினார். பார்ட்டிக்கு வந்தவர்களை வாயிலிலேயே கை குலுக்கி வரவேற்றார். அப்போது அவர்களிடம், ``இன்று காலை என் அம்மாவைக் கொன்று விட்டேன்'' என்று முகத்தில் புன்னகையடன், `வெல்கம்... வெல்கம்...' என்று கூறுகிற பாவனையுடன் சொன்னார். வருகிறவர்கள் அவரிடம் கை குலுக்கியபடி அவர் என்ன சொன்னார் என்பதைக் காதில் வாங்காமல் ``ஓ... குட்... குட்...'' என்றும், `கிரேட்', `சந்தோஷம்' என்றும் சொன்னார்கள். ஒருத்தர்கூட ``என்னது... கொலை பண்ணி விட்டாயா?'' என்று அதிர்ச்சியடையவில்லை.
பின்னால் இதை அப்படியே ஒளிபரப்பினார்களாம்.

இப்படி பல பிராக்டிகல் ஜோக் செய்வாராம் இவர்.

December 05, 2010

ஆண்டு நிறைவு

அன்புடையீர்,
வணக்கம்,
நமது வலைப்பூவிற்கு இன்று ஒரு வயது  பூர்த்தியாகிறது. இந்த ஒரு வருடத்தில் நான் போட்ட  பதிவுகள் எல்லாவற்றிற்கும் வரவேற்பு இருந்தது - ஒரு பதிவு நீங்கலாக. அது ஒரு நகைச்சுவைக் கட்டுரையாக இருந்தபோதிலும் அரசு ஊழியர்கள் மனதைப் புண்படுத்தும்  என்று சிலர் கருத்துத் தெரிவித்தமையால் அதை எடுத்து விட்டேன்
.
இந்த வலைப் பூவைத் துவங்கிய அன்றே பலர் எனக்கு வாழ்த்து  தெரிவித்தார்கள்.  இட்லி வடையில் சற்று முக்கியத்துவம் தந்து அறிவிப்பு  போட்டதால் பலருக்கு இந்த தளத்தைப் பற்றி தெரிந்தது,
எழுத்தாளர் பா.ரா. அவர்கள், என் மெயில் முகவரியைக் கண்டு பிடித்து வாழ்த்துகளை அனுப்பியிருந்தார். எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள் என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார், சுஜாதா தேசிகன் ‘சபாஷ்’ போட்டார், ஆலோசனைகளையும் தந்தார். நிறைய பேர் பின்னூட்டங்களில் பாராட்டினார்கள்; பாராட்டி வருகிறார்கள்.
அனைவருக்கும் நன்றி.

நான் படித்ததை, பார்த்ததை, கேட்டதை, அனுபவித்ததை நாலு பேருக்குப் பயன் தரும் என்ற எண்ணத்தில் பதிவுகளைப் போட்டு வருகிறேன்.
” உங்கள் நகைச்சுவை கட்டுரைகளைப் படித்துச் சிரிக்கும்போது கண்களில் நீர் வந்து விடுவது உண்டு: அதே மாதிரி  மனதைத் தொடும் உங்கள் கட்டுரைகளைப் படித்து நெகிழ்ந்து கணணீர் பெருக்கி இருக்கிறோம்” என்று பலர் எழுதியதை படிக்கும்போது என் கண்கள் ஈரமாயின. ஆகவே எத்தனை சிரமமாக இருந்தாலும், பொருட்படுத்தாமல் பதிவுகளை எழுதி, டைப் செய்து போட்டு வருகிறேன். இதில் கிடைக்கும் மன நிறைவுக்கு முன் என் சிரம்ங்கள் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன.
(போட்டோஷாப்பிலும் சுமார் தேர்ச்சி இருப்பதால்  MASTHEAD கிராபிக்ஸும்  நான உருவாக்குபவைதான்.)

இன்று டிசம்பர் 5-ம் தேதி. கல்கி அவர்கள் காலமான தேதி. காலமான தேதி என்பதை விட காலமாக ஆன தேதி என்று சொல்வதே சரியாக இருக்கும்.
என்றும் நான் வணங்கும் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை விரல்களால் தொட்டு, கண்களில் ஒற்றிக் கொண்டு, தொடர்ந்து என்னை இயக்கும்படி அவரிடம் பிரார்த்திக் கொள்கிறேன்.
மீண்டும் வணக்கத்துடன்
-கடுகு

ஒருமையுடன் நினதுதிரு மலர்

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை
பேசாதிருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்கவேண்டும்
மதிவேண்டும்  நின் கருணை நிதி வேண்டும்  நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி  உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
                                                                 திருவருட்பா- ராமலிங்க அடிகள்

புள்ளிகள்: மேரி கியூரியின் இல்லம்


மேரி கியூரியின் இல்லம்
நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியைப் பற்றிய என்  பதிவிற்குத் தாமதமாக வந்த பின்னூட்டம். எழுதியவர்: ஆனந்தி, நியூ ஜெர்ஸி’
  அலுவலக வேலையாக நான் அமெரிக்காவிலிருந்து   வார்ஸா (போலந்து) போனேன். ஒரே ஒரு நாள் வேலை. காலையில் போய் அன்று இரவே அமெரிக்கா திரும்ப வேண்டும். (வார்ஸாவில் தான் மேரி கியூரி வாழ்ந்த வீடு உள்ளது என்று எனக்குத் தெரியும். கியூரியின் வரலாறை பத்து தடவையாவது படித்திருப்பேன்.) எப்படியாவது வேலையை முடித்துக் கொண்டு மேரி கியூரியின் வீட்டைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

 கியூரி மியூஸியமாக மாற்றப்பட்ட அவர் வீட்டுக்குப் போனேன். அங்கு போன பிறகுதான்  நுழைவு டிக்கட் வாங்க போலந்து நாட்டுப் பணம் கையில் இல்லை. என்று தெரிந்தது. டாலராக வாங்க முடியாதாம். டாலரை மாற்ற எங்கு போவது என்று தெரியவில்லை. அங்கும் இங்கும் அலைய நேரம் இல்லை. மியூசியத்தின் அதிகாரியிடம் என் நிலைமையை விளக்கினேன். ``ஓ... அப்படியா... டிக்கட் வாங்க வேண்டாம்...'' என்று சொல்லி அனுமதித்தார்.
மியூசியத்தைச் சுற்றிப் பார்த்தேன். கியூரி மிகவும் சின்ன இடத்தில் குடியிருந்தார். கியூரியின் தாயார் பள்ளி ஆசிரியை. பழைய காலக் கட்டடம். அந்த கட்டடத்தின் மாடியில் . கியூரி  வசித்து வந்தார். அந்த பள்ளி மாடிதான் மியூஸியம்.  அவர் குடியிருந்த பகுதி மிகவும் சின்ன போர்ஷன். . இந்த வீட்டிலா வாழ்ந்தார் என்று மனம் நெகிழ்ந்து போனேன்.. வசதிகளற்ற வீடு.  என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது..
நோபல் பரிசுத் தொகை கிடைத்ததும்  அந்த பணத்தைக்கொண்டு கியூரி செய்த முதல் செலவு என்ன தெரியுமா?,
அவர் வீட்டு டாய்லெட் , பாத் ரூம்  பைப், குழாய் எல்லாவற்றையும் ரிப்பேர் செய்ததுதானாம்!

இயந்திரசாமி -2

Be the best of Whatever You Are
by Douglas Malloch

Fall Splendor
If you can't be a pine on the top of the hill
Be a scrub in the valley--but be
The best little scrub by the side of the rill;
Be a bush if you can't be a tree.
If you can't be a bush be a bit of the grass,
And some highway some happier make;
If you can't be a muskie then just be a bass--
But the liveliest bass in the lake!
We can't all be captains, we've got to be crew,
There's something for all of us here.
There's big work to do and there's lesser to do,
And the task we must do is the near.
If you can't be a highway then just be a trail,
If you can't be the sun be a star;
It isn't by size that you win or you fail--
Be the best of whatever you are!

from: The best Loved poems of American people 
==========
Scrub : Shrub
Muskie: Fragrant like that of musk
Bass: saltwater fish
rill - narrow rivulet

பட்டாபி -- கேரக்டர்

பட்டாபிக்கு தெரியாதது சிரிப்பு. தெரிந்தது, முணுமுணுப்பு!
ஏழெட்டுக் கப்பல்கள் ஒரே சமயத்தில் கவிழ்ந்து போனவன் கூட சிறிது முக மலர்ச்சியுடன் இருப்பான். நம் பட்டாபியைப் பார்த்தால் எட்டுக் கப்பல்கள் கவிழ்ந்ததுடன், இன்கம்டக்ஸ் ரெய்டும் நடந்து, வீடும் ஏலத்திற்கு வந்து விட்டது போன்று படு சோகத்துடன் காட்சியளிப்பார்!
இவருக்கு என்ன கவலை? ஒன்றுமில்லை. ஒரு கவலையுமில்லையே என்று நினைத்துக் கவலைப்படும் ஆத்மா!
மண்ணடி இரும்புக் கடை ஒன்றில் நாற்பத்தியேழு வருஷம் பணியாற்றி விட்டு ரிடையர்  ஆனவர் பட்டாபி. முழு வழுக்கை. நீண்ட அரைக்கை சட்டை (காமராஜர் மாடல்), கச்சம் வைத்த வேட்டி, இடது கையில் பொடி டப்பா, வலது கையில் நியூஸ் பேப்பர்.. ஒரே சமயத்தில் பாகற்காய், எட்டிக்காய், இஞ்சி, கொய்னா ஆகியவற்றை அரைத்துச் சாப்பிட்ட மாதிரி முக விலாசம்.
இவரது பையன்கள், பெண்கள் எல்லாருக்கும்  கலியாணம் ஆகி குழந்தை குட்டிகளுடன் இருக்கிறார்கள். இருந்தாலும் பட்டாபி சதா முணுமுணுத்துக் கொண்டிருப்பார். சரி பட்டாபியின்  முணுமுணுப்பை டேப் ரிகார்ட் செய்து போட்டுப் பார்க்கலாமா?

November 30, 2010

ஒரிஜினல் எந்திரன்

பல வருஷங்களுக்கு முன்பேயே எந்திரனை உருவாகியவன் நான்.  என்ன, அதற்கு அப்போது அதற்கு நான் வைத்த பெயர் இயந்திரசாமி! இயந்திரசாமி ஜோக் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாயிற்று. அதன் ரசிகர்களில் ஒருவர் : “சோ” என்பது ஒரு விசேஷம். அவரும் ஒரு இயந்திரசாமி ஜோக் அனுப்பி இருந்தார். முதலில் என் ஜோக்குகளைப் பார்த்து வாருங்கள்.  கடைசியில் அவருடைய ஜோக்கைப் போடுகிறேன்.

November 25, 2010

ஆவியும் நானும் -கடுகு

செங்கற்பட்டு நகரத்திற்கே பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது.  எதன் மேல்? ஆவி ஜோசியத்தின் மீது! வீட்டுக்கு வீடு மீடியம், பிளான்சட் ஆவி ஜோதிடம் என்று. ,(அந்த ஆவிகள் சொன்ன ஜோசியம் எல்லாம் பேத்தல் என்பது வெளிப்பட்டுவிட சில மாதங்களாவது ஆகும் என்பதால் யாருக்கு சந்தேகமே வரவில்லை,)  ஆவி ஜோதிடப்பித்து பலரைப் பிடித்துக்கொண்டது. அவரவர் தங்கள் வீட்டு ஆவி ரொம்ப கெட்டிக்கார ஆவி; எதிர்காலத்தை நூறுக்கு நூறு சரியாகச் சொல்லும் என்று தங்கள் வீட்டு வளர்ப்புப் பிராணியைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்கிற மாதிரி சொன்னார்கள்.
ஆமாம், எனக்கும் இந்த பைத்தியம் பிடித்தது.  ஆவி உலகின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது ஆர்.கே.நாராயணன் எழுதிய `தி இங்கிலீஷ் டீச்சர்' நாவல் என்றும் சொல்வேன். அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் அந்த நாவலை எழுதினார் என்று கூறுவார்கள். இறந்து போன தன் மனைவியுடன் மீடியம் மூலமாகத் தொடர்பு கொள்வதாக
அந்த நாவலில்எழுதி இருந்தார்.
ஆர்.கே.நாராயணனுக்கு ஈ.எஸ்.பி. மீது நம்பிக்கை இருந்ததால் எனக்கும் கொஞ்சம் ஈடுபாடு ஏற்பட்டது. வேலையில்லாமல் ஊர் சுற்றி கொண்டிருந்த எனக்கு இந்த பித்து பிடித்ததும் ஆச்சரியமல்ல. ஒரு ’நல்ல’ ஆவியிடம் ஜோதிடம் கேட்ட போது  - அடுத்த வருடம் உனக்கு வேலை கிடைக்கும், ராய்ப்பூரில் ஒரு கார் நிறுவனத்தில் வேலை என்று சொல்லிற்று.. ராய்ப்பூரில் வேலைக்கு ஆர்டர் வரும் வரையில் (!) ஆவிகளுடன் பொழுதைப் போக்க நினைத்தேன்.
 ( குறிப்பு: இன்று வரை கார் கம்பனி வேலையும் கிடைக்கவில்லை; ராய்ப்பூரை நான் பார்க்கவு மில்லை!)

இந்த சமயத்தில் கிருஸ்துவக் கல்லூரி ஆசிரியருக்கும் இதில் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது. அவர் சற்று ஆழமாக இந்த ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பினார். அவர் எங்கள் தெருவிலேயே இருந்ததால் அவருடன் எனக்குப் பரிச்சயம் இருந்தது. ஆகவே என்னிடம்”வா.. நான் ஆராய்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன், எனக்கு நீ உதவியாக இரு. என்றார்.
அவர் . மிகவும் கெட்டிக்காரர். மிகவும் எளிமையானவர். பார்த்தாலே அவர் மீது மதிப்பு ஏற்படும். தாம்பரத்திலுள்ள கிருஸ்துவக் கல்லூரியில் லெக்சரராக இருந்தார். (பின்னால் இவர் பல பெரிய ஆராய்ச்சிகளை எல்லாம் செய்து, கரக்பூர் சென்று, நேஷனல் புரொபசர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். பிறகு அமெரிக்கா சென்று அங்கும் பல சிகரங்களைத் தொட்டார் என்று கேள்வி.)

சரி, விட்ட இடத்திலிருந்து வருகிறேன். ஒரு மீடியம் எங்களுக்கு அகப்பட்டான். சின்னப் பையன் தான். அவன் சரியான மீடியமா என்று பல சோதனைகளைச் செய்தோம். அவ்ற்றில் அவன் தேறினான்.
ஒரு பலகையில் பார்டர் மாதிரி  எல்லா ஆங்கில எழுத்துக்களையும்எழுதினோம். நடுவே ஒரு சின்ன கேரம் காயினை வைத்து அதைத் தொடச் சொன்னோம். நிசப்தமாக இருந்தோம். திடீரென்று அந்தப் பையன் காயை நகர்த்த ஆரம்பித்தான். குட்மார்னிங் என்றோம். அவன் g.o.o.d. m.o.r.n.i.n.g. என்று ஒவ்வொரு எழுத்தாகக் காட்டினான்,
”உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை வரலாறு என்ன? நாங்கள் ஜோசியம் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆவி உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புகிறோம். எங்களுக்கு உதவ முடியுமா?” என்று கேட்டோம்.
”அப்படியா?... செய்கிறேன்.....”
“முதலில் உங்களைப்பற்றி எங்களுக்குத் தெரிய வேண்டுமே...” என்றோம்.
மீடியம் மளமளவென்று எழுத்துக்களின் மேல் கேரம் காயினை இங்கும் அங்கும் வேகமாய்  நகர்த்த , முடிந்த அளவு அவைகளைக் குறித்துக் கொண்டு வந்தேன்.
”என் பெயர் பாபுலால் .. நான் பெங்களூரில் பிஸினஸ் செய்து வந்தேன். ஒரு கார் விபத்தில் நான் இறந்து போனேன் ..”. என்று ஆரம்பித்தது.  நிறைய விஷயங்களைச் சொல்லியது  அந்த ஆவி . பக்கம் பக்கமாக பல விஷயங்களை மீடியம் சொல்ல நான் எழுதினேன்.  பத்து இருபது நாட்களில் சுமார் 50, 100 பக்கங்களுக்கு மேல் எழுதியிருப்பேன். 

ஆவியும் நானும் - ஆச்சரியமான பின்னூட்டம்!

’ ஆவியும் நானும்’ என்ற பதிவைப் பார்த்து விட்டு, திரு ஸ்ரீராம் (Rochester, New York)  நீண்ட பின்னூட்டம் போட்டிருந்தார். அது நீண்டதாகவும் அதே சமயம் ஆச்சரியமான தகவல் கொண்ட பின்னூட்டமாகவும் இருந்தது. ஆகவே அதைப் பதிவாகவே இங்கு போடுகிறேன்,
==============
உங்கள் ஆவியும் நானும் பதிவைப் பார்த்தேன். ரசித்தேன்; அதே சமயம் வியந்தேன்.காரணம் அதில் விவரித்த பல நிகழ்ச்சிகள் எங்கள் குடும்பத்திலும் அச்சு அசலாக நிகழ்ந்தன. உங்கள் ஆவி உலக ஆராய்ச்சி 1950 வாக்கில் என்றால்  எங்கள் வீட்டில் நடந்தவை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தவை.
மீடியம் என் சொந்த  சகோதரி. 12 வயதிலிருந்து 14 வயது வரை மீடியமாக இருந்தாள். பிறகு என் பேற்றோர்  அவளை ஊக்கப்படுத்தவில்லை. மீடியமாக இருப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள்.
விவரமாகக் கூறுகிறேன்.என் தந்தையின் சின்ன தம்பி, சுமார் 24 வயதில் ஒரு விபத்தில் காலமானார், எங்கள் குடும்பத்திற்கு  மிகப்பெரிய அதிர்ச்சி; சோகம்.
அந்த சமயத்தில் பிளான்சட் ஜோதிட மோகம பரவி இருந்தது, என் பாட்டிக்குத் தன் மகனுடன் மீடியம் மூலமாகப் பேசவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. என் ச்கோதரியை மீடிமாக இருக்கச் சொன்னார்கள். அவளுக்கு ஒன்றும் தெரியாத வயது, பிளான்செட் போர்ட் தயார் பண்ணி அவளை உட்கார வைத்தார்கள். எல்லாரும் மௌனமாகப் பிரார்த்தனை செய்தார்கள். அவளுடைய  கை மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒவ்வொரு ஆங்கில எழுத்தாகக் காண்பித்தது. என் சித்தப்பாவின் ஆவி தான் என்பதை பல கேள்வி- பதில் மூலம் உறுதி படுத்திக் கொண்டோம். எங்கள் மூதாதையர் பற்றி பாட்டி விசாரித்தாள். என் சகோதரி கொடுத்த பதில்கள் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தன. அவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லாத விவரங்களையெல்லாம் சரியாகச் சொன்னாள்.
போர்டில் எழுத்துகளைக் காட்டி கொண்டிருந்தவள் சில நாட்கள் கழித்து பேப்பர். பேனா கேட்டாள். அதில் அவள் எழுத ஆரம்பித்தாள் ” என் பிள்ளை --------தான் பேசறான். இந்த சின்னப் பொண் பிறக்கிறதுக்கு முன்னே நடந்த விஷயங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது,” என்று என் பாட்டி உத்திரவாதமாகச் சொன்னாள்

November 20, 2010

பொன்மொழியை லேசாகத் திரித்தால்... கடுகு

Behind every great man stands a woman

ஒரு பொன்மொழியையோ, பழமொழியையோ லேசாகத் திரித்துச் சொல்வது ஒரு வித சாமர்த்தியமான நகைச்சுவை. இந்த வகையான நகைச்சுவைப் பதிவுகளை அவ்வப்போது போட எண்ணியுள்ளேன்.

மேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப் பொன்மொழி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு பிரபலமான மனிதனின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். அதாவது அவளுடைய ஆதரவும் ஊக்கமூட்டலும் அவளது கணவனுக்கு உறுதுணையாக உள்ளன என்பது இதன் கருத்து.

சரி, சில குயுக்தியான மாறுதல் வரிகளைப் பார்க்கலாம்.

* ஒவ்வொரு நல்ல மனிதனின் பின்னாலும் ஒரு நல்ல பெண்மணி இருக்கிறாள்- அப்பாடா என்று ஓய்ந்து போய்!

* ஒவ்வொரு முட்டாளின் பின்னாலும் ஒரு மகத்தான பெண் இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள் -- நல்லதாக ஒரு நகை உண்டா, நட்டு உண்டா என்று அழுது கொண்டு!

* ஒவ்வொரு வெற்றிகரமான ஹீரோவின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறார்; அவளுக்குப் பின்னால்?  அவருடைய மனைவி எரிச்சலுடன் இருக்கிறாள்!

* ஒவ்வொரு தோல்வியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றிகரமான ஆசாமியின் பின்னாலும் அவனுடைய மாமியார் இருக்கிறார், ஆச்சரியம் தாங்காமல்!

*பிரிட்டனின் பிரதமராக இருந்த மெக்மில்லனின் மனைவி லேடி டோரதி மெக்மில்லன் ஒரு சமயம் சொன்னார். ``எந்த ஒரு மனிதனும் வெற்றியாளனாக முடியாது- அவனுக்குப் பின்னால் அவன் மனைவியோ அல்லது அம்மாவோ இல்லாவிட்டால்! இரண்டு பேருமே இருந்து விட்டால் அவனுக்கு இரட்டை அதிர்ஷ்டம்தான்!''

* ஒவ்வொரு பிரபலமானவரின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். ...ஆனால் ஒவ்வொரு பிரபலமான பெண்மணியைப் பொறுத்தவரை ஒரு ஆண் அவளுக்கு முன்னே இருக்கிறான், பல சமயம் அவள் காலைத் தடுக்கி விட்டுக் கொண்டு!\\
===========\
ரவிபிரகாஷ்  அவர்கள் அனுப்பிய பின்னூட்டத்தை. முன்னூட்டமாகப் போட்டிருக்கிறேன்!.

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!

ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!

ராஜாமணி -- கேரக்டர்

ராஜாமணிக்குத் தெரியாத விஷயங்கள் எதுவும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவிலோ, கலைக்களஞ்சியங்களிலோ, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையிலோ  இதுவரை அச்சாகவில்லை. உண்மையில் உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் அவருக்கு அவ்வளவு தேர்ச்சியா என்று வியப்படையாதீர்கள்.  ராஜாமணி பேச ஆரம்பித்தால் அப்படித் தான் ஒரு பிரமை உங்களுக்கு உண்டாகும்! இலக்கியம், அரசியல், சினிமா, பக்தி,  ஜோசியம், பொருளாதாரம், கிசுகிசு,  விஞ்ஞானம், மருத்துவம் என்று எந்தத் துறையிலும் அவர் புகுந்து விளையாடுவார்.  
முப்பது வயது. நிறைய படித்துக் கொண்டிருப்பவர்.ஆதலால் சோடாபுட்டி கண்ணாடி! மழமழ வென்று வாரிவிடப்பட்ட கிராப்பு. மழமழ வென்று ஷேவ் செய்யப் பட்ட முகம். நல்ல சிகப்பு. பளிச் சென்ற வெள்ளை பாலிஸ்டர் ஸ்லாக், சரிகை வேஷ்டி, கையில் ஒரு புத்தகம், படித்த இடத்திற்கு அடையாளமாக அதன் நடுவே ஒரு விரலை விட்டுப் பிடித்துக்கொண்டிருக்கும் பாங்கு - இவை  ராஜாமணியை ஓரளவு விவரிக்கும்.
ஜப்பான் கம்பெனி ஒன்றில் பிரதிநிதி. குறைந்த வேலை. நிறைந்த சம்பளம். கல்யாண மார்க்கெட்டில் இருப்பவர்.
அதோ ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையிலிருந்து வெளியே வருகிறார். வாருங்கள் அவரைச் சந்திக்கலாம்.
"ஹலோ  ராஜாமணியா ... .என்ன நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறீங்க...?''
"நிறைய இல்லை. நாலு புஸ்தகம் தான். ஜென் புத்தீஸம், ஹோரரி அஸ்ட்ராலஜி, தொல்காப்பிய விளக்கம். அப்புறம் திருவரங்கன் உலா நாவல் ..''
"ஜோஸ்யத்தில் எப்போதிலிருந்து இன்ட்ரஸ்ட்? ...''

ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும்

                  ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும்
இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும்
முயன்ற வினை 
காட்டுவிப்பானும் இருவினைப்
பாசக்கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவனுண்டே
தில்லை அம்பலத்தே!


இவ்வுலகத்தினர் அனைவருக்கும் அமுது படைப்பவனும், மாயையில் அழுத்துவிப்பவனும், உலகை இயக்குபவனும், ஜீவாத்மாவின் வினைகளுகேற்ப அவர்களுக்கு உரிய பலனை வழங்கி ஆட்டுவிப்பவனும் ஒருவன் உண்டு
அவன் தில்லை அம்பலத்தே உள்ள ஐயன்

November 16, 2010

துவளாத மனத்தின் வெற்றி

ஃப்ரெட் ஸ்மித்தின் ( FRED SMITH) கதையைப் பாருங்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது புதிய தொழில் முயற்சி பற்றி ஒரு "தீஸிஸ்' எழுதினார்.
      "24 மணி நேரத்திற்குள் வினியோகம்' என்ற தலைப்பில்.
      இன்று ஒப்படைக்கப்பட்ட தபாலையோ, பார்சலையோ மறுநாளே நிச்சயமாக டெலிவரி செய்தால் அம்முயற்சிக்கு மகத்தான வரவேற்பு இருக்கும் என்கிற ரீதியில் எழுதித் தந்தார்.
      ஆசிரியர், ""உருப்படாத யோசனை. தனியே தபால் துறையை நடத்தலாம் என்கிறாய். சொந்தமாகப் பல ஊர்களில் அலுவலகங்கள் வேண்டும். விமானக் கம்பெனிகள் ஆயிரம் தொல்லைகள் கொடுக்கும். ஏகப்பட்ட முதலீடு தேவைப்படும். பெரிய பெரிய விமானக் கம்பெனிகள் போட்டிக்கு வந்தால் எதிர்த்து நிற்க முடியுமா?'' என்று கூறி ஸ்மித்தின் யோசனையை நிராகரித்து விட்டார்.
      ஸ்மித்திற்குத் தன் யோசனை மீதும் அது நிச்சயம் வெற்றியடையும் என்பதின் மீதும் அயராத நம்பிக்கை இருந்தது. படிப்பை முடித்த பிறகு தொழில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த போது, "24 மணி நேரத்தில் டெலிவரி' என்று உத்தரவாதத்துடன் "ஃபெடரல் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தை ஆரம்பித்தார்.
      அமெரிக்காவின் அரசு வங்கியின் (நமது ரிசர்வ் வங்கி மாதிரி) பணத்தை ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எடுத்துச் செல்ல, வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். (இதனால் வங்கிக்குக் கணிசமான செலவு மீதம் என்பதால் வங்கி இவருடன் ஒப்பந்தம் செய்து  கொண்டது.)
      ஃப்ரெட், இரண்டு விமானக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். சுமார் நாலு கோடி டாலரைக் கடனாக வாங்கி, ஒரு விமானத்தை வாங்கினார்.
      அப்போது (1971) அவருக்கு வயது 26. ஆனால் வங்கி ஒப்பந்தத்தை ஒரு சில காரணங்களுக்காக வாபஸ் வாங்கிக் கொண்டது.
      "நான் மூழ்கிப் போக மாட்டேன்' என்று சூளுரைத்து, தனது கம்பெனியை கடிதங்கள், பார்சல்கள் எடுத்துச் செல்லும் கூரியர் கம்பெனியாக ஆக்கினார். முதல் மூன்று வருடங்கள் திவால் ஆகிவிடும் போலிருந்தது. சிறிதும் தளராமல், கம்பெனியை நடத்தினார். தன் சொந்த சொத்தக்களை எல்லாம் விற்றார். கம்பெனி மெதுவாகத் தலை தூக்கியது.
      1983-ல் அதாவது 10 வருஷங்களுக்குள் சரித்திரம் படைத்து விட்டது. மிக குறுகிய காலத்தில் நூறு கோடி வருவாயைத் தொட்டது.
      இன்று "ஃபெடக்ஸ்' இல்லாவிட்டால் அமெரிக்காவே ஸ்தம்பித்து போய்விடும் என்றாகி விட்டது. ஃபெடக்ஸ், ஃப்ரெட் ஸ்மித்தின் வெற்றி மட்டுமல்ல. துவளாத மனத்தின் வெற்றியும் கூட.