May 28, 2014

தொச்சு போட்ட சோப் -கடுகு

வீட்டினுள் நுழைந்தபோதே சமையலறையிலிருந்து தொச்சுவின் குரல் கேட்டது. என் முகத்தில் விழிக்காதே என்று சில வாரங்களுக்கு முன்பு அவனைக் கோபித்து அனுப்பியிருந்தேன்.  அதனால்தானோ என்னவோ, நான் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் (அதாவது சமையலறைக்குள்) படை எடுத்திருக்கிறான். உள்ளே படையலும் நடந்து கொண்டிருக்கும்!

அருமை அம்மாவிற்கும் அக்காவிற்கும் சோப் போட்டு விட்டு. பையிலும்  (தொப்பையிலும்) நிரம்பிய பிறகு, கையிலும் வாங்கிக் கொண்டு போவான். ஆகவே என்ன சோப் போடுகின்றான் என்றுகேட்க, பூனை போல் வீட்டிற்குள் நுழைந்தேன்.

என் மாமியார், ஆமாண்டி, கமலா, உழைச்சாத்தான் லாபம், லாபம் மட்டுமில்லை, நமக்குக் கிடைக்கிற பொருளும் உசத்தியாக இருக்கும்.... அப்ப என்னடா சொல்றே...நம்ப வீட்டிலேயே செய்யலாம்னு சொல்றியா? என்று கேட்டாள்.

வீட்ல செய்யக் கூடியது என்பதால்தானே டிவியிலே சொன்னாங்க...அக்கா எல்லாத்தையும் குறிச்சுக் கொடுத்தாள். நானும் மார்க்கெட்டெல்லாம் அலைஞ்சு எல்லாச் சாமானும் எங்கெங்கே கிடைக்கறதுன்னு கண்டு பிடிச்சுட்டு வந்தேன். ஆட்டோவிற்கே நூறு ரூபாய்க்கு மேலே ஆயிடுத்தே?என்றான் தொச்சு.

“நூறு ரூபாய்தானேடா... நான் தறேன்...என்று கமலா சொன்னதும்...

“போதும் அக்கா...இதுக்கெல்லாம் போய் உன்கிட்ட பணம் வாங்கிப்பேனா?... போன வாரம் கூட பம்பாய்க்கு போன் பண்ணதுக்காக நூறு ரூபாய் கொடுத்தே...

தொச்சு சொல்வதைக் கேட்ட போது எனக்கு ஒரே எரிச்சல். அதே சமயம் குழப்பம். இவர்கள் என்ன திட்டம் போடுகிறார்கள். என் அருமை சதி, பதிக்கு எதிராக என்ன சதி செய்கிறாள் என்று புரியவில்லை.

தொச்சு...இன்னும் ஒரே ஒரு தோசை போடறேண்டா...என்று மாமியார் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் சொன்னதும், சமையலறையில் நிசப்தம் நிலவியது. தொச்சுவின் வாய்க்கு வேறு வேலை கிடைத்து விட்டதே!

“என்ன கமலா...யாரு வந்திருக்கிறது, உன் தம்பிக்காரனா?என்று வார்த்தைகளைப் பாவக்காய் ஜூஸில் தோய்த்துக் கேட்டேன்.

May 20, 2014

அஞ்சறைப் பெட்டி


படித்தது, பார்த்தது, ரசித்தது, 
                   சிரித்தது, கேட்டது, திரித்தது 
                           என்று சில குட்டித் துணுக்குகள்!

1.சில பதிவுகளுக்கு முன்பு GONE WITH THE WIND புத்தகத்தைப் பற்றி குட்டித் துணுக்குப் போட்டிருந்தேன். அதே தகவல் இரண்டு நாளுக்கு முன்பு வெளியான  READER'S DIGEST  பத்திரிகையில் வெளியாகி உள்ளது!
சுட்டி: : GONE WITH THE WIND

2. மணற்கொள்ளை என்பது ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளிச் செல்வதைக் குறிக்கும்.  ஜமைக்காவில் ஒரு பகுதியில்    பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம்.  அதற்காக மணலை வாங்கி மலையாக குவித்து வைத்திருந்தது. அதிலிருந்து 500 டிரக் மணல்  திருடு போய்விட்டதாம்! (ஆதாரம்: TIME).

3. அமெரிக்காவின்  தெற்கு கரோலினா மாநிலத்தின்   கடல் பகுதியில் 1857’ம் ஆண்டு ஒரு கப்பல் மூழ்கி விட்டது. இப்போது  வெகு ஆழத்தில் அது கண்டு பிடிக்கப்பட்டது. அதில்  சுமார் 3600 சவரன் தங்கம் கிடைத்தது. (ஆதாரம்: TIME).

4. சோனி நிறுவனம் பற்றி இரண்டு தகவல்கள்.

**. நிதி நிலமை அவ்வளவு திருப்திகரமாக இல்லயாம். அதனால் 5000 ஊழியர் களுக்கு  ‘டாட்டா’  கொடுக்கத்  திட்டமாம்.

**சோனியின் புதிய காசெட் டேப் விரைவில் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது அதில் என்ன விசேஷமாம்? (அதன் கொள்ளளவு 185 டெராபைட்.) கிட்டத்தட்ட  60 மில்லியன் (அதாவது 6 கோடி) பாடல்கள் அதில் பிடிக்குமாம். ஒரு செகண்ட் கூட விடாமல் கேட்டால் கூட 100 வருஷம் தேவைப்படும்! (ஆதாரம்: டைம் இதழ்)

5. ஒபாமா சொன்னது
சில வாரங்களுக்கு முன்பு  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிபர் ஒபாமா   ஒரு  உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன தகவல்: நாலு  நிமிஷத்திற்கு  ஒன்று என்ற கணக்கில் நாட்டில் பல வீடுகள் ஸோலார் பேனல்கள்  வீடுகளாக  மாறி வருகின்றன.

May 10, 2014

வாயைத் திறந்தால் ஆபத்து!


அமெரிக்கக் காமெடியன் புகழ் பெற்ற Groucho Marx (1890-1977) நாடக, திரைப்பட நடிகர்   மட்டுமல்ல நல்ல நகைச்சுவை எழுத்தாளரும் கூட. டி..வி ஷோக்களிலும் கலக்கி இருக்கிறார்.
மார்க்ஸ் பிரதர்ஸ் என்ற பெயரில் அவரும், CHICO, ZEPPO, HARPO  என்ற அவரது மூன்று சகோதரர்களும் புகழ் பெற்று விளங்கினார்கள்.
 
Groucho எழுதும் கடிதங்கள் மிகுந்த நகைச்சுவையுடன் இருக்கும். 1965-ல் அமெரிக்க  LIBRARY OF CONGRESS  அவரது கடிதங்களைத் தொகுத்து வைக்க விரும்பியது. இது மிகப் பெரிய கௌரவம். GROUCHO LETTERS  என்ற பெயரில் வெளியான புத்தகத்தை, பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன். ("பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன்" என்பது  ரீல் தானே என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில்: ஆம்!)

சமீபத்தில் அவர் எழுதிய GROUCHO MARX AND OTHER SHORT AND LONG TALES என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. நியூயார்க்கர்,  நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அதில் இருந்த WHY HARPO DOESN’T TALK என்ற கட்டுரையில் ஒரு சுவையான தகவல் இருந்தது. அந்தக் கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன்.

·                *                 *

ஒரு சமயம் ILLIONOIS மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில் எங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  எங்கள் குழுவில் நாங்கள்  நாலு பேர்,  துணை நடிகர்கள் நாலு பேர்,  நடிகைகள் எட்டு பேர் இருந்தோம். ஒரு புதன்கிழமை மாலை அந்த ஊருக்குப் போய் சேர்ந்தோம். ஹால் மிகவும் சிறியதாக இருந்தது.
மறுநாள் மியூசிக் ரிகர்சல் பார்க்கப் போனோம். இசையைப் பொறுத்தவரை நான் ஒரு பெரிய பூஜ்யம். இருந்தாலும் குழுவின் தலைவைனாயிற்றே நான்! அதனால் போனேன்!
ஸ்டேஜிற்குள் நுழைந்ததும். எங்கிருந்தோ ’தாதா’ மாதிரி ஒரு ஆசாமி வந்தார். “யாருப்பா நீ.. போர்டைப் பார்க்கலை? இங்கே சுருட்டு குடிக்கக் குடிக்கக்கூடாது. ஆமாம்.. உனக்கு ஐந்து டாலர் அபராதம் போடறேன்” என்றார்.  
“முதல்லே நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டேன்.
“ நானா?.. என்னையா கேட்கறே? நான் ஜான் வெல்ஸ். இந்த ஹாலின் மானேஜர்; சொந்தக்காரன். இங்கு சட்டவிதிகள் இருக்கின்றன. அந்த போர்டில் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பார்.
“போர்டா? .. அதோ அதுவா?.. அது என் கண்ணிலே படவில்லையே. கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலையிலே போட்டுவிட்டால் போதுமா? போர்டை ஏதாவது பாத்ரூமுக்குள்ளே மாட்டி வெச்சு, கதவை மூடி வெச்சிருக்கலாமே” என்றேன்.”
“ ஐயா.. நக்கல் புலியா? இப்படி சொன்னதுக்கு நீ ஐந்து டாலர் அபராதம் கட்டணும்” என்றார் அதிகாரமாக.