Showing posts with label சிட்டுக்குருவி. Show all posts
Showing posts with label சிட்டுக்குருவி. Show all posts

April 06, 2013

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 3

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 3


  சித்ராவுக்கு டானிக், வைட்டமின் என்று பலவற்றை வாங்கி வந்தான் சிவா.
    ஆஸ்பத்திரியில் பெயரை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்தாள் சித்ரா.
    பேபி பவுடர், ஃபீடிங் பாட்டில், நாப்கின் என்று பல பொருள்களை வாங்கினார்கள்.
    "தொட்டில் வாங்க வேண்டாமா?''
    "சித்ரா, தொட்டில் போட இடம் இல்லையே?''
    "தூளியில் போட்டால் என் செல்ல ராஜா நன்றாகப் புரண்டு தூங்க முடியாதே!''
    "செல்லராஜா இல்லை, செல்லதுரை.''
    "ஆமாம்... திடீர் என்று ராத்திரியில் நோவு எடுத்தால் எப்படி ஆஸ்பத்திரிக்குப் போகிறது?''
    "தெருக்கோடி டாக்ஸி ஸ்டாண்டு சர்தார்ஜியிடம் சொன்னேன். அவன் வீட்டு அட்ரஸையும் வாங்கி வந்திருக்கிறேன். நல்ல மனிதன். "நீ எப்போது வந்து குரல் கொடுத்தாலும் வண்டியை எடுத்துக் கொண்டு வரேன்' என்று சொல்லி இருக்கிறான்... ஆமாம்... சித்ரா... உன் வாய்க்குப் பிடிச்சதைப் பண்ணிப் போட ஆள் இல்லையே!''
    "நீங்க ஒருவர் அன்பாக இருக்கிறபோது எனக்கு வேறு எதுவுமே வேண்டாம்! அண்ணாவுக்கு லீவு கிடைக்கலியாம்.''
    "சித்ரா, நான் அடுத்த வாரத்திலிருந்து லீவு போட்டு விடுகிறேன். உனக்கு ஹெல்ப் பண்ண''
    "இன்னும் இரண்டு மாசம் கழிச்சுதான் குவா, குவா. அதற்கப்புறம் இரண்டு மூன்று மாசம் தான் முக்கியம். அப்போது லீவு போட்டால் நல்லது. அம்மாடி... பாருங்களேன், வயிற்றில் உதைக்கிறான் உங்கள் செல்வம்.''
    "ஏண்டா, சுட்டிப் பயலே. அம்மாவைத் தொந்தரவா பண்றே?'' என்று சித்ராவின் வயிற்றைப் பார்த்துச் சொல்லி, மெள்ளமாகத் தட்டினான்.
    "அவனை ஏதாவது அடித்தீர்கள் என்றால் எனக்கு ரொம்பக் கோவம் வரும்!''
    "சித்ரா. உனக்குக் கோபம் வந்தே நான் பார்த்ததில்லை'' என்று கூறியபடியே அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.


April 03, 2013

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 2

 இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 2

"ஹலோ... நமஸ்தே... ஐ மீன், குட்மார்னிங்... மிஸ்... சித்ரா'' என்றான் சிவா, லைப்ரரி "இஷ்யூ' டெஸ்க்கில் இருந்த சித்ராவைப் பார்த்து.
    ""உஷ்... உரக்கப் பேசக்கூடாது... இது லைப்ரரி... நமஸ்காரம். அன்றைக்குப் படம் முடிந்த பிறகு உங்களைப் பார்க்க முடியவில்லையே. உங்கள் போன் நம்பரைக் கேட்க வேண்டும் என்று அண்ணா சொன்னார்'' - கிசு கிசு குரலில் சித்ரா சொன்னாள்.
    ""மருந்து தானே? சொல்லியிருக்கிறேன். கிடைத்தவுடன் கொண்டு வந்து தருகிறேன்.''
    ""உஷ்... மறுபடியும் உரக்கப் பேசுகிறீர்கள்.''
    ""சாரி...  "சைலன்ட் மூவி"யில் பேசுகிற மாதிரி பேச வேண்டுமா?.. ஒன்றுமில்லை, அந்த லெட்டர்...''
    ""இதோ வைத்திருக்கிறேன்'' என்று சொல்லிச் சித்ரா டிராயரைத் திறந்து எடுத்துக் கொடுத்தாள்.
    "தாங்க்ஸ்...''
    அச்சமயம் வேறொரு பெண் அங்கு வந்து, ""சித்ரா நீ லஞ்சுக்குப் போ. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றாள்.
    கைப் பையை எடுத்துக் கொண்டு சித்ரா புறப்பட்டாள். சிவா தயங்கியபடியே லைப்ரரியை விட்டு வெளியே வந்தான். சித்ராவும் வெளியே வருவதைப் பார்த்த, சிவா, பைத்தியக்கார இளிப்பை இளித்து வைத்தான்.
    "ஒன்றுமில்லை. அம்மா எழுதியிருந்த கடிதத்தை நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பா வந்தது'' என்றான்.
    ""உம்.''
    ""நானும் லஞ்சுக்குத்தான் போகிறேன். "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' கான்டீனுக்கு, இஃப் யூ டோண்ட் மைண்ட், நீங்களும் வரலாம். கான்டீனில் போய் உட்கார்ந்து பேசலாம். ரொம்ப இன்டரஸ்டிங்காகப் பேசறீங்க...''


    அடுத்த அரைமணி நேரம். இருவரும் கான்டீனில் - இல்லை. அது ஒரு சின்ன சொர்க்க லோகம்! அவனைப் பொறுத்தவரை  -பல விஷயங்களைப் பேசினார்கள்.
    ""அம்மாவுக்கு ஊரைவிட்டு வருவதற்கு இஷ்டமில்லை. நான் இங்கே தனியாக ஓட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறேனாம்.''
    ”உம்''
    "இத்துடன் பத்து லெட்டர் போட்டு விட்டாள்.''
    ""கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லியா?''
    "ஆமாம்.''
    "செய்து கொள்வது தானே?''
    "நான் தயார். அவள்?''
    "அவள் யார்? உங்களுக்கென்ன குறை. மெடிகல் ரெப்ரசென்டேடிவ். சம்பளம், டி.ஏ., அது இது என்று வரும்... முக்கியமானது ஒண்ணு கேட்க மறந்துட்டேனே, வென்டாலினுக்காக எவ்வளவு பணம் தரணும்?''
    "இப்போது பணம் வேண்டாம். மருந்து கிடைச்சதும் கேட்டு வாங்கிக் கொள்கிறேன். உங்கள் மாமாவுடன்தான் இருக்கீங்களா?''
    "மாமா கிராமத்தில் இருக்கிறார். நானும் அண்ணாவும் தனியாகத்தான் இருக்கிறோம்.''
    "அப்படியா? காலையில் சமையல் வேலை. பகலில் லைப்ரரி ட்யூடி... மறுபடியும் ஈவினிங் சமையல், பாவம் ரொம்ப எக்ஸாஸ்டிங்!''
    "அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது ஒரு பெரிய பிராப்ளம் வந்திருக்கிறது''  சித்ராவின் முகத்தில் கவலையின் ரேகைகள் ஓடின.
    "என்ன விஷயம், சித்ரா?''
    "எங்க அண்ணாவுக்கு நேஃபாவிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது.''
    "உங்க அம்மா, அப்பா யாராவது இங்கு வரமாட்டார்களா?''
    ""இங்கு எப்படி வர முடியும்? இந்த உலகத்திலேயே அவங்க இல்லையே!'' þ சித்ராவின் கண்களில் இரண்டு முத்துக்கள்.
    "மை காட்... உங்க மனசை வருத்தப்படச் செய்துட்டேன்... உங்கள் பிரதர் நேஃபா போய்விட்டால்?''
    ""என்ன செய்வது என்று தெரியவில்லை.''
    "யார் வீட்டிலாவது பேயிங் கெஸ்ட்டாக இருக்கலாமே.''
    "நல்லவங்களாக இருக்கணும். நம்பிக்கையானவங்களாக இருக்கணும். எங்க அண்ணாவும் ஒரு சிலர் கிட்டே சொல்லியிருக்கிறார்.''
    ""நானும் யாராவது இருந்தால் சொல்கிறேன்.''

   

March 30, 2013

இரண்டு சிட்டுக் குருவிகள் -பாகம் 1

இரண்டு சிட்டுக் குருவிகள்   --- எழுதியது ???

    குளுகுளுவென்று முழுதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அமெரிக்கன் லைப்ரரிக்குள் செல்லும் போது சிவாவுக்கு எப்போதும் கிளுகிளுவென்று இருக்கும். காரணம், அந்த லைப்ரரியில் பணியாற்றும் பல அழகிய பெண்களில் ஒருத்தி அவனது மனத்தைக் கவர்ந்தவள். அதாவது, அவனுக்கு அவள் மேல் ஒரு "இது!'  இத்தனைக்கும் அவளுடன் பேசியது கூடக் கிடையாது. அந்தப் புத்தகசாலைக்கு வரும் பல புத்தகப் புழுக்களில் அவனும் ஒரு புழு - அவனைப் பொறுத்தவரை.

    அவளது கவனத்தைக் கவருவதற்கு அவன் பல முயற்சிகள் செய்திருக்கிறான். அவள் ரெஃபரன்ஸ் டெஸ்க்கில் இருக்கும் போது வேண்டுமென்றே 'எஸ்கொயர் ஏப்ரல் 74 இஷ்யூ வேண்டுமே' என்பான். அல்லது ' வில்லியம் ஹாஸ்லிட் அப்ச்ன்' என்ற அமெரிக்க எழுத்தாளரின் விலாசத்தைக் கண்டுபிடித்துத் தரமுடியுமா?'' என்று கேட்பான்! இதுமாதிரி எத்தனையோ விசாரணைக்கள் வருவது சகஜமாதலால், அவள் பதில் சொல்லி விட்டுப் போவாளே தவிர, அவனை இரண்டாம் தடவையாகத் திரும்பிப் பார்த்ததில்லை.
    சிவாவுக்கு அன்றைய தினம் லைப்ரரி மாடிப்படி ஏறும்போது வழக்கமான கிளுகிளுப்புடன் சிறிது குறுகுறுப்பும் சேர்ந்து கொண்டது. ஏனெனில், அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பத்து நாட்களுக்கு முன்பே திருப்பி இருக்க வேண்டும்! கவுண்டரில் "அவள்' இருந்தாள். (ஆமாம், "அவள்' பெயர் என்ன?)

இரண்டடி இடைவெளியில் அவளை நெருக்கமாகப் பார்க்க -அதாவது அவள் புத்தகத்தின் டிக்கட்டுகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது - அவளைக் கண்களால் ரசிக்க வாய்ப்பு கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி வேறு உள்ளத்தில் ஊறியது.

    "ஐ யம் சாரி... டூர் போய்விட்டேன். அதனால்தான் லேட்டாகிவிட்டது...'' என்று குழைந்து கொண்டே சொன்னான், புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது.
    "தட் ஈஸ் ஆல்ரைட்... டூர் போகும் முன்பு புத்தகம் திருப்பிதர வேண்டிய தேதியைப் பார்த்துக் கொடுத்து விட்டுப் போவது நல்லது.''
    அவனது லைப்ரரி டிக்கட்டைக் கொடுத்துவிட்டு, புத்தகங்களை அடுக்கும் வேலையில் அவள் ஈடுபட்டாள்.
    "எந்த ஊருக்கு டூர்? என்ன வேலை உங்களுக்கு?' என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராக இருந்தான் சிவா. ஆனால் அவள் கேட்டால் தானே!
    லைப்ரரியில் அரைமணி நேரம் இருந்துவிட்டு ஒரு பிரம்மாண்டமான புத்தகத்தை எடுத்தான். அதன் தலைப்பு கூட அவனுக்குப் புரியவில்லை. சும்மா அவளை "இம்ப்ரெஸ்' செய்வதற்காகத்தான்! கவுண்ட்டரில் அவன் போன போது, அவள் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள்.