Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

April 23, 2013

லால்குடி ஜெயராமன்

 திரு லால்குடி ஜெயராமன் காலமாகி விட்டார்.  அவர் என் நண்பர். அவருக்கு நான் நண்பன்.   அவர் சிறந்த  கலைஞர். நகைச்சுவையாளர். சிலேடை விரும்பி. சுமார் 35 வருஷத்திற்கு முன்பு அவர் என் வீட்டிற்கு வந்து என்னக்  கௌரவப்படுத்தி இருக்கிறார். ( ’கர்வப்படுத்தி இருக்கிறார்’  என்று  சொன்னாலும் தப்பு இல்லை!)    அவருக்கு என் அஞ்சலி.
-------------------------------------------------
’என் அன்புள்ள டில்லி’ தொடரில் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன்.
                                                     
நான்தான் ’லால்'
டில்லியில் உள்ள சங்கீத சபாக்கள் வருஷத்தில் ஐந்தாறு நிகழ்ச்சிகளை நடத்தும். அதற்கு மேல் நடத்தக் கட்டுப்படி ஆகாது.
இந்த சபா நிகழ்ச்சிகளிலும், ஜுகல் பந்தி போன்ற நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொள்பவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். ஒரு சமயம் மாதம் இரண்டு தடவைகூட வந்திருக்கிறார். இதைக் குறிப்பிட்டு நான் பத்திரிகையில் எழுதியிருந்தேன். "டில்லிக்கு லால் என்றால் ஒரு ஈடுபாடு உண்டு போலும். ஜவஹர்-லால், குல்ஜாரி-லால், லால்-பகதூர் ஆகியவர்கள் மாதிரி லால்-குடியும் டில்லியில் ஆட்சி புரிகிறார் இசை ரசிகர்களை'' என்று எழுதியிருந்தேன்.

சில நாள் கழித்து ஒரு காலை நேரத்தில் எனக்குப் போன் வந்தது. என் மனைவி கமலா போனை எடுத்தாள். மறுமுனையிலிருந்த குரல், "ஹலோ, நான் லால் பேசறேன்' என்று சொன்னது குரல்.கமலாவிற்குப் புரியவில்லை. "நீங்க யாரு? யார் வேண்டும்?'' என்று கேட்டாள்.
"நான் லால்குடி ஜெயராமன் பேசுகிறேன். அவருடன் பேச வேண்டும்'' என்றார்.
"ஓ... லால்குடி சாரா? நமஸ்காரம்.  நமஸ்காரம் அவர் பாத்ரூ... இல்லை... இல்லை இதோ கூப்பிடுகிறேன்'' என்றாள் கமலா.


லால்குடியுடன் நான் பேசினேன்.  அவர் ” சார், உங்களைப் பார்க்க வேண்டும். நான் உங்கள் விசிறி. உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.  உங்களுக்கு எப்போது   சௌகரியப்படும்?'' என்று கேட்டார்..

எனக்குத் தலைகால் புரியவில்லை. உலகமே என் எழுத்தைப் பாராட்டிக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது என்ற கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். அட, உண்மையாகவே என் எழுத்திற்கு ஒரு விசிறி கிடைத்து விட்டார்.!