August 13, 2019

தேள் கண்டார்; தேளே கண்டார்!

  சென்ற பதிவு 50 வருட பழசு. இந்தப் பதிவு அவ்வளவு பழசு இல்லை. கிட்டத்தட்ட 40 வருட பழசுதான் என்று சொல்லலாம். இந்த ரீதியில் இன்னும் ஐந்தாறு பதிவுக்கு பிறகு ஹைதர் காலத்திலிருந்து மோடி காலத்திற்கு நான் வந்து விடுவேன் என்று நீங்கள் நம்பலாம்;
  

நாற்பது வருஷங்களு க்கு  முன்பு இதே ஆகஸ்ட் மாதம், 1980 ஆம் வருஷம்,  பிரபல நகைச்சுவை எழுத்தாளர் எஸ். வி.வி அவர்களின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு நகைச்சுவை இதழ் வெளியிடப் போவதாகவும், அதைத் தயாரித்துத் தரும்படியும்   'கல்கி’ ஆசிரியர் (டெல்லியில் இருந்த) என்னைக்  கேட்டுக்கொண்டார்.  எத்தனை பெரிய கௌரவம்!. 
நான்  பலருக்குக் கடிதம் எழுதினேன். அவர்கள் அன்பு கூர்ந்து  நகைச்சுவை கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் என்று  எழுதி அனுப்பினார்கள்.   ஒரு நகைச்சுவை இதழைத் தயார் செய்தேன்.   வெளியிடப்பட்ட தேதி ஆகஸ்ட்  24,, 1980! 
அந்த இதழ் தற்செயலாக சென்ற வாரம் எனக்கு கிடைத்தது. இதழில் முக்கியமாக எழுதியவர்கள்:ரா.கி. ரங்கராஜன், எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன், இயக்குனர் ஸ்ரீதர்,  சாருகேசி, கோபுலு ஆகியவர்கள் கட்டுரைகளுடன், எஸ்.வி.வி. பற்றி அமரர் கல்கி எழுதிய கட்டுரையும், அத்துடன் எஸ். வி. வி. அவர்கள் எழுதிய கட்டுரையும் இடம் பெற்றது 
அத்துடன் ஆர்ட் புக்வால்ட் கட்டுரை,. ரஷ்ய நகைச்சுவை கட்டுரையும் சேர்த்தேன். 
   இத்தனை ஜாம்பவான்கள் கட்டுரைகளுக்கு நடுவே நம்முடைய கட்டுரை வந்தால் பெருமையாக இருக்கும். அதே சமயம் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவு அதில் நகைச்சுவை இருக்க வேண்டும் என்று நான் மிகவும் முயன்று “தேள் கண்டார் தேளே கண்டார்!” என்ற ’கமலா’  கதை ஒன்றை எழுதினேன் அத்துடன் கமல், கடுகு என்ற புனைப்பெயர்களில் இரண்டு கட்டுரைகளையும்   எழுதினேன்.
 அந்த இதழின் கடைசி பக்கம் ‘ஈவினிங் நேரத்திலே’  என்ற தலைப்பிலே ஒரு நகைச்சுவை கவிதையையும்.( எப்போதோ யாரோ எழுதியதை நான் எழுதி வைத்திருந்தேன்.) போட்டேன்.  அந்த கவிதை ’மாலைப் பொழுதினிலே’ என்ற கவிதையை பல ஆங்கில வார்த்தைகளைப் போட்டு, அட்டகாசமாக   எழுதி இருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அதை எழுதியவர் யார்  என்று குறித்து வைத்துக் கொள்ளவில்லை.  
இதெல்லாம் என்னுடைய  ‘டாம் டாம்’.
 அந்த நகைச்சுவை இதழில் நான் எழுதிய  ‘தேள் கண்டார், தேளே கண்டார்!’ என்ற கதையை இந்தப் பதிவில் போடுகிறேன். 

August 02, 2019

தினமணி கதிர் துணுக்கு - 50 வருட பழசு!

 வேலூர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் திரு கதிர் (ஆனந்த்) இவர் திமுக பிரமுகர் திரு துரை முருகன் அவர்களின் மகன். ஆகவே அவரை திரு டி. எம். கதிர் (D.M.Kadir அல்லது D.M.K.) என்றும் குறிப்பிடலாம்!

பல வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு துணுக்கை, தினமணி கதிரில் நான் எழுதியது நினைவுக்கு வந்தது. அதை இங்கே தருகிறேன்.


1967 வாக்கில் நான் டெல்லியில் இருந்தேன் அப்போது தினமணி கதிரில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்த சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி என்ற நிறுவனத்தில் தான் தினமணி கதிர் கிடைக்கும். அங்கு போய் ஒவ்வொரு வாரமும் தினமணி கதிர் வாங்குவது வழக்கம். அங்கு எந்தப் பத்திரிகை வாங்கினாலும் ரசீது போட்டு தான் கொடுப்பார்கள்.


ஒரு தரம் நான் தினமணி கதிரை எடுத்துக்கொண்டு, ரசீது போடுபவரிடம் கொடுத்தேன் அவர் ஆங்கிலத்தில் D.M.K - 0.50 (?) என்று எழுதி ரசீது போட்டுக் கொடுத்தார். (வழக்கமாக DINAMANI KADIR என்றுதான் ரசீதில் எழுதுவார்கள்.)


அந்த ரசீதைப் பார்த்தபோது ஒரு துணுக்கு எனக்கு அதில் கிடைத்தது. சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சியைப் பொதுவாக டெல்லியில் சி. என். ஏ. என்று குறிப்பிடுவது வழக்கம். C.N.A என்றால் அறிஞர் அண்ணாவையும் குறிக்கும் அல்லவா? “அறிஞர் அண்ணாவிடம் இருந்து D.M.K.யை வாங்கினேன்” என்கிற மாதிரி ஒரு துணுக்கை எழுதி அனுப்பினேன். ரசீதின் படத்துடன் அது கதிரில் பிரசுரம் ஆயிற்று!

July 22, 2019

"அம்மாவின் கேள்விகள்”

ராபர்ட் ஃபுல்ஜும் ஒரு பிரபல அமெரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் மிகவும் சிறப்பானவை. நேரில் பேசுவது போல் இருக்கும் அவர் நடை.  
அவரது புத்தகங்கள் கிட்டதட்ட 10 பத்து லட்சம் காபிகள்  அச்சாகி உள்ளன. 27 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இது விக்கிப்பீடியா தரும் தகவல்.

அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு: WHAT ON EARTH HAVE I DONE?  “நான் ஏன் பிறந்தேன்?” என்கிற மாதிரி இது ஒரு சுயவிசாரக் கேள்வி மட்டுமல்ல; நம்மையெல்லாம் சிந்திக்கச் செய்யும் கேள்வி.
  “அம்மாவின் கேள்விகள்”  என்ற தலைப்பில் வர்  இந்த புத்தகத்தை பற்றி முதல் கட்டுரையாக எழுதியுள்ளார் அதைப் படித்து ரசித்தேன். எனக்கு தெரிந்த அளவில் அல்லது புரிந்த அளவில் தமிழ்ப் படுத்தி தருகிறேன்.
                                                                         *     *           *
"அம்மாவின் கேள்விகள்”
சியாட்டில் நகரில் என் வீடு ஒரு சிறுவர் பள்ளிக்கு எதிரில் உள்ளது, மரச்சட்டங்களால்  பள்ளிக்கு வேலி போட்டு இருக்கிறார்கள். சற்று உயரமான வேலி. அதனால்  பள்ளியில் நடப்பதை என் வீட்டிலிருந்து பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகளின் ஆட்டம், பாட்டம்,  கூச்சல் எல்லாம் தெளிவாகக் கேட்கும்.

ஒரு நாள் நான் வீட்டிற்கு முன் பக்க வராந்தாவில் நின்று கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காரில் கொண்டு வந்து, விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.  ஒரு கார் கதவு திறக்கும் ஓசையும், அதைத் தொடர்ந்து   ‘தபால்’ என்று கதவை மூடும் ஓசையும் கேட்டது.  ஒரு அம்மா சற்று எரிச்சலுடன் இரைவதும் கேட்டது: “ஏய் BILLY, என்னடா செஞ்சு தொலைச்சே?” என்று  கத்துவது கேட்டது. “ ஒன்றுமில்லை, அம்மா”  என்கிற மாதிரி, சிறிது அழுகையைக் கலந்து பதில் சொன்னது குழந்தை.

 சரி, குழந்தை என்னதான் செய்து விட்டது? அந்த பில்லி, ஆப்பிள் ஜூஸ் பாட்டிலைத் திறந்து காருக்குள் கொட்டி விட்டதா? அம்மா கட்டிக்கொடுத்த இடைவேளை உணவு டப்பாவைத் திறந்து, சால்லேட் எடுத்தபோது டப்பா  காருக்குள் கவிழ்ந்து கொட்டிவிட்டதா?   அல்லது காரிலேயே வாயில் எடுத்து விட்டதா? டப்பாவில் இருந்த  முள்கரண்டியை எடுத்து, காரின் முன் சீட்டில் பச்சை குத்துவது போல் குருவி, மீன், பட்டாம்பூச்சி என்று  வரைந்திருந்ததா? அல்லது சிவப்பு  ‘மார்க்கர்’ பேனாவால் கார் சீட்டின் மேலே போடப்பட்டிருந்த எம்பிராய்டரி அலங்காரத் துணியில் கோலம் போட்டு இருந்ததா?  தெரியவில்லை.


June 10, 2019

கிரேசி மறைந்தார்அருமை நண்பர்   கிரேசி மோகன் மறைந்தார். எவ்விதமான வைரஸு’ம் இல்லாத 
நகைச்சுவை அவர் ரத்தத்தில் 
அபரிமிதமாக இருந்தது. வஞ்சனை இன்றி வாரி வழங்கிய வள்ளல்.  இவர் தமிழ்நாட்டின்  மற்றொரு கலைவாணர்! - கடுகு

##################################May 15, 2019

இதுதாண்டா கவர்ன்மென்ட்!

இருபது வருஷ சப்ளை
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை  இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள்  நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.
 டில்லியில் தபால் துறை அலுவலகத்தில்  சர்வ தேச பார்சல் அக்கவுண்டிங்க் செக் ஷனில் இந்த வரவு-செலவு கணக்குகள், சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். (இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)

          இந்த கணக்கு முறை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை.  இதில்  “இங்கிலாந்து - இந்தியா” கணக்கு மிகவும் முக்கியமானது. இங்கிலாந்து சார்பாகவும் நாமே கணக்குத் தயாரிக்க வேண்டும். சுமார் 20, 30 நாடுகளுக்குப் போகும் பார்சல்கள் எல்லாம்  லண்டன் வழியாகப் போகும்; லண்டன் வழியாக வரும்  (பிரிட்டிஷ் காலத்தில் அவர்கள் செய்த வழிமுறை.) 

சுதந்திரம் வந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மாதிரி பல்வேறு  நாடுகளிலிருந்து வரும் பார்சல்கள் லண்டன் வழியாக வரும். 
இதன் காரணமாக  இந்தியா - லண்டன் பார்சல் கணக்கு தயாரிக்கப்படும் படிவம் மிகப் பெரியதாக இருக்கும். பெரியது என்றால் நம்பமாட்டீர்கள்,  கிட்டத்தட்ட இரண்டு அடிக்கு மூன்றடி இருக்கும். சற்று தடிமனான காகிதத்தில் இருக்கும். காலப் போக்கில் பெரும்பாலான நாடுகள் காணாமல் போய்விட்டன அல்லது பெயரை மாற்றிக் கொண்டன. அல்லது நேரடியாகக் கணக்குகளை அனுப்பத் தொடங்கி விட்டன.
இந்த 'பிரிட்டன்- இந்தியா' கணக்கு மாதா மாதம் தயாரிக்கப்பட வேண்டும். நான்கு காபிகள் தயாரிக்க வேண்டும்.   அதுவும் ஒரே ஒரு நபர் செய்யும் வேலை. ஆக வருஷத்திற்கு 48 பாரங்கள் மட்டுமே  தேவைப்படும். 1950, 60  வாக்கில் எப்போதோ, என்ன அடிப்படையிலோ 1,000  பாரம் அச்சடித்து விட்டதால் (20 வருஷ சப்ளை!)  தீரவே இல்லை. ரிகார்ட் ரூமில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த   கட்டுகளில் அடியில் இருந்த கட்டுகள் அப்பளமாகப் போய் விட்டன.
புதிதாக, கச்சிதமாக,  சரியான தகவல்களுடன் அச்சடிக்கலாமென்றால், கையில் இருப்பது தீரும் என்றே தோன்றவில்லை. 
இந்த சமயத்தில் 1970 வாக்கில் ஒரு நாள்  ஒரு  சுற்றறிக்கை வந்தது.   எல்லா டிபார்ட்மெண்டும்  தேவையில்லாத பழைய ஃபைல்கள், ரிஜிஸ்டர்கள், பில் பண்டில்களை மூன்று நாட்களுக்குள் களைந்து விடவேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தார்கள்.  அப்பளமாகிப் போன இந்த FORMS  பண்டில்கள் உட்பட பல பழைய ரிகார்டுகளை அக்கவுன்ட்ஸ் ஆபீசர்  களைந்து விட்டார்.   ‘அப்பாடா’ என்று எல்லாரும் மூச்சு விட்டோம்.
       அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து, ஸ்டோர் செக் ஷனிலிருந்து ஒரு டெலிபோன் வந்தது. அதிர்ச்சிக் குண்டைப்  போட்டார்கள்.  எந்த படிவத்தைக் களைந்துவிட்டு ‘அப்பாடா’ என்று மூச்சு விட்டோமோ, அதே படிவம் ஆயிரம் காபி அச்சகத்திலிருந்து வந்திருந்தது! நாங்கள் கேட்காமலேயே அச்சடித்து அனுப்பி இருந்தார்கள். அடுத்த இருபது வருஷ சப்ளை!!!