June 27, 2012

ஏர் இந்தியா கையேடு!

இன்று ஏர் இந்தியாவைப் பார்த்து  ஊர்   சிரிக்கிறது. 
பல வருஷங்களுக்கு முன்பு  ஏர் இந்தியா வெளியிட்ட  THIS MAKES NO SENSE என்ற குட்டிப் புத்தகத்தைப் படித்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அது வேறு சிரிப்பு; இது வேறு சிரிப்பு!
அந்த பிரசுரத்தைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்கவும்” THIS MAKES NO SENSE

  இதை அப்லோட் செய்து உதவிய திரு கே ஜி கௌதமன் அவர்களுக்கு நன்றி!

June 22, 2012

தொச்சுவுக்கு அல்சர்

 முன்குறிப்பு:
வீட்டுக்குள்  நுழையும்போதே கமாலாவின் முகத்தில் எள் ப்ளஸ் கொள் மட்டுமல்ல நவதானியங்களும் வெடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கையில் சிலம்பு வைத்திருக்கும் கண்ணகி  போஸில் ஒரு கடிதத்துடன் தலை விரித்தபடி (அன்று வெள்ளிக்கிழமையாதலால்  எண்ணை தேய்த்துக் குளித்து தலைமுடியை ஆற விட்டபடி.)  நின்று கொண்டிருந்தாள்.
”அப்பா.. என்ன வெய்யில்?”என்றேன்,   ஏதோ பேச வேண்டுமே!
“ ஒவ்வொரு வருஷமும் வர்ற வெய்யில் தான்.."
 " ஆமாம். கையில என்ன லெட்டர்?”
“ தொச்சு எழுதிஇருக்கிறான்..”
“ மணி ஆர்டர் அனுப்பணுமா. செக் அனுப்பணுமா?”
“ மணி ஆர்டரும் இல்லை,. சுப்பிரமணி ஆர்டரும்  இல்லை. கோபமா எழுதி இருக்கிறான்!”
“ கோபம் பாபம்னு  அவன்கிட்ட சொல்லு.. என்னவாம் கோபத்துக்கு காரணம்?”
“ உங்கள் “ பிளாக்:கில் நீங்க ஆஸ்பத்திரியில் இருந்ததை எழுதியிருக்கிறீங்களாமே.. அவனுக்கு அல்சர் வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தானே அதைப் பத்தி எழுதினால் என்ன, அதுக்குக்கூட நான் தகுதி இல்லாதவனான்னு கேட்டிருக்கிறான்.”
“ என் பிளாக் என்னஆஸ்பத்திரி  அனுபவ பிளக்கா? ..  அப்புறம் கால் சுளுக்குன்னு மூணு நிமிஷம் ஆஸ்பத்திரியில் அங்கச்சி இருந்தாளே, அதைப் பத்தியும் எழுதச் சொல்வான்.”
” வேண்டாம் .. வேண்டாம்..எதைப் பத்தியும் எழுத வேண்டாம்..தொச்சுன்னு சொன்னாலே  உங்களுக்குப் பத்தி எரியறது.” என்று கோபமாக உள்ளே போனாள் கமலா,
நம் பிளாக்கில் எத்தனையோ குப்பையைப் போடும்போது, தொச்சுவைப் பற்றி எழுதினால் ஒன்றும் மோசமாகி விடாது என்று எண்ணி ” தொச்சுவுக்கு அல்சர்”
கட்டுரையைப் போடுகிறேன்.( நமக்குள் இருக்கட்டும்:  வருகிற வாரம் ஊரிலிருந்து என் அம்மா வரப்போகிறாள்!)

யாராவது பாராட்டி எழுதினால்  கமாலாவின் கோபம்  ஆறும். இல்லாவிட்டால்   நானே பத்து  புனைபெயரில் எழுதவேண்டும்! ( கஷ்டமடா சாமி!)

================================
தொச்சுவுக்கு அல்சர்
                ஒரு இலக்கியக் .கூட்டத்தில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்தேன். வீட்டிற்கு   தொச்சு வந்திருப்பதை அவனுடைய  (கர்ண கடூரமான) குரல் அறிவித்தது. அவனது புத்திர சிகாமணிகள் என் வீட்டை ஒரு குருக்ஷேத்திர மைதானமாகக் கருதிப் பாரதப் போர் நடத்திக் கொண்டிருந்தன.
                “டேய் தொச்சு, இன்னும் ஒரு அடை போடறேண்டா'' என்று என் அருமை மனைவி கமலா, ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்துக் கெஞ்சுவது போல் தொச்சுவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
                தொச்சுவின் மனைவி அங்கச்சி, “அக்கா... நீங்க போட்டுண்டே இருந்தால் உங்க மனசு கஷ்டப்படக் கூடாதே என்று இவர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். ஆறு அடைக்கு மேலே நான் கொடுக்கவே மாட்டேன்... வயிறு நிறைய சாப்பிடணும்னு நாட்டிலே ஒரு சட்டமும் இல்லையே, அக்கா. அரை வயிறு சாப்பிட்டால் போதும்'' என்றாள்.
                “தொச்சு என்னிக்கும் அரை வயிறுதான் சாப்பிடுவான்'' என்று என் மாமியார் அறிவித்தாள்.
                வீட்டிற்குள் நுழைந்ததும் நான்.... “கமலா தண்ணி கொண்டு வா'' என்று கத்தினேன்.
                “அடாடா... வீட்டுக்குள் வரும் போதே எரிஞ்சு விழ வேண்டுமா... இந்தாங்க தண்ணி'' என்று சொல்லி "டங்"கென்று டம்ளரை வைத்தாள் கமலா.
                டைனிங் ஹாலில் அடை சம்ஹாரம் பண்ணிக் கொண்டிருந்த தொச்சு, “ஐயோ அம்மா'' என்று சோகக் குரல் கொடுத்தான்.

June 17, 2012

ஐயோ வேண்டாம் ஆஸ்பத்திரி


 முன்குறிப்பு:  இந்த வார துக்ளக்கில் “சோ” தனது  ஆஸ்பத்திரி அனுபவத்தை அபாரமாக எழுதி இருக்கிறார். அதை படித்ததும்  நான் சுமார் 40 வருஷத்திற்கு முன்பு எழுதிய ஆஸ்பத்திரி கட்டுரை  ஞாபகத்திற்கு வந்தது.  அதை இங்கு போடுகிறேன்.
===========================\
 "விசுக்"கென்று பலமாகத் தும்மல் போட்டேன். அதைத் தொடர்ந்து மேலும் பல "விசுக்"குகள்.
                ""பொழுது விடியவில்லை. சுப்ரபாதம் மாதிரி தும்மல் போட ஆரம்பித்து விட்டீர்கள். எத்தனை வருஷமாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதற்கு வைத்தியம் பண்ணிக் கொள்ளுங்கள் என்று. கேட்டால்தானே?'' என்று கேட்டாள் என் மனைவி கமலா.
              "ஆபரேஷன் பண்ணிக் கொள்ளணும். அப்போதுதான் சரியாகும். இந்த அடுக்குத் தும்மல்'' என்றேன் நான்.
               "பண்ணிக் கொள்ளுங்களேன். எல்லாவற்றிற்கும் ரேஷன் வந்துவிட்டது. ஆனால் ஆபரேஷனுக்கு, நல்ல காலம், இன்னும் ரேஷன் வரவில்லை'' என்றாள் என் இல்லாள்.
                இரண்டே இரண்டு நாள் தங்கி விட்டுப் போகலாம் என்று இரண்டு மாதத்துக்கு முன்பு வந்த என் மாமியார் அந்தச் சமயத்தில், "வீட்டிலே ஒரு கலியாணம், கார்த்தி என்று எதுவும் பேச முடிகிறதில்லை. இப்படி அபசகுனம் மாதிரி தும்மல் போட்டால் என்ன செய்கிறது? போதாதற்கு அப்பப்போ வயிற்று வலி பிலாக்கணம். அல்சரோ என்னவோ, அதையும் பார்த்துக்கச் சொல்லேன், கமலா'' என்றாள்.
                என் மாமியார் சாதாரணமாக என்னைப் பார்த்துப் பேசுவதில்லை. ஏதாவது மரம், மண், நாற்காலி ஆகியவற்றை "மாப்பிள்ளை"யாகக் கருதி, அதைப் பார்த்தே பேசுவாள்!
                என் மனைவி "நானும் எத்தனையோ தடவை படிச்சுப் படிச்சுச் சொல்லியாச்சு. பிடிவாதம். இவா மனுஷாளுக்கு எது இருக்கிறதோ இல்லையோ, அம்மா, பிடிவாதம் வேண்டிய மட்டும் இருக்கு'' என்றாள்.
                பேச்சுக் கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் நான் சும்மா இருந்து விட்டேன்.
                "அவ்வளவுதான், சுவாமி மெüனம் சாதிக்க ஆரம்பிச்சுட்டார்! யார் நல்லதுக்குச் சொல்கிறோம் என்று புரிந்து கொண்டால் தானே? அவராகப் போய் ஆபரேஷன் பண்ணிக் கொண்டால் தான் உண்டு. ஆபரேஷன் வேண்டாம் என்று தீர்மானம் பண்ணிவிட்டால், அந்தத் திரிவிக்கிரமனே வந்தாலும் நடக்காது'' என்று தன் தாயாரிடம் கூறினாள், என் அருமை மனைவி.
                பெண்ணுக்குப் பரிந்து பேசுகிற பாவனையில், "நீ கொடுத்து வைச்சது அவ்வளவு தான் என்று எழுதி இருக்கும் போது யார் மேலும் குற்றம் சொல்ல முடியாது. அரை மிளகாய் போட்டால், வயிறு எரிகிறது என்கிறார். தும்மல் போடும்போது கண்ணே வெளியே வந்துவிடும் போலிருக்கிறது'' என்று அலுத்துக் கொண்டாள்.
                பதிலுக்கு என் மனைவி ஆரம்பிக்கு முன், "கமலா, வருகிற வாரம் வெலிங்டன் ஆஸ்பத்திரிக்குப் போகிறேன். ஆளை விடு'' என்றேன்.

June 11, 2012

ஆச்சரியம்: ஆனால் உண்மை!

 கடந்த சில நாட்களாக ஒரு புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். 
அந்தப் புத்தகம்: EPIGRAMS  ANCIENT AND MODERN: HUMOROUS, WITTY, SATIRICAL, MORAL   ....
1863-ல் பிரசுரமானது  தொகுததவர் :JOHN BOOTH B.A. பக்கங்கள்: 352
கடந்த வாரம் படித்துக் கோண்டிருந்த போது ஒரு சின்ன அதிசயம்  அல்லது COINCIDENCE  நடந்தது,  

அன்று ( 6-6-12) தான்   வீனஸ்/சுக்ரன்/வெள்ளி எனச் சொல்லப்படும் கோள்  சூரியப் பாதையில் சென்றது, அடுத்து 2117-ல் தான் வீனஸ் கோள்  சூரியப் பாதையைக் கடக்கும்,
(இதற்கு முன்பு  ஜூன் 2004, டிசம்பர் 1882, டிசம்பர் 1874, ஜுன்  1769  வருஷங்களிலும் அதற்கு முன்பு பல தடவைகளிலும் கடந்து இருக்கிறது,  NASA- வில் கடந்த 7000 வருஷங்களில் அது எத்தனை தடவைக் கடந்துள்ளது போன்ற விவரங்கள் உள்ளன.) 
 ஏழாம் தேதி அன்று, இந்த  EPIGRAM   புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட கவிதை: ஜூன், 1769 -ல் வீனஸ் கடந்ததைப் பற்றி எழுதப்பட்ட கவிதை!  ஆச்சரியமான  COINCIDENCE!

அதை இங்கு தருகிறேன்:
On the beautiful Duchess of Hamilton (afterwards
Duchess of Argyll) viewing the transit of Venus in 1769,
at Glasgow University.
Duchess of Hamilton
(இது தான் அவருடைய  படம் என்று கருதுகிறேன்!)
 
They tell me Venus is in the sun, 
But I say that's a story ; 
Venus is not in the sun, 
She's in the observatory.

June 07, 2012

ரே பிராட்பரி காலமானார்

பிரபல எழுத்தாளர் ரே பிராட்பரி இன்று தனது 91-வது வயதில் காலமானார்.
அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் “தாளிப்பு”வில் போட்டிருக்கிறேன்.
அதைப் படிக்க விரும்புபவர்கள் கீழே சொடுக்கவும்.
ரே-ப்ராட்பரி

June 06, 2012

நாலும் கலந்து,,,

எது சுலபம்?
கிரஹாம் கிரீன் ஒரு பெயர் பெற்ற இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர். நம் ஆர். கே. நாராயணின் திறமையைக் கண்டு ஊக்குவித்தவர் அவர்.
கிரீன்,  TRAVELS WITH MY AUNT'  என்ற புத்தகத்தை எழுதினார், அதன் கையெழுத்துப் பிரதியை நியூ யார்க்கில் உள்ள தனது பிரசுரகர்த்தருக்கு அனுப்பினார், சில வாரங்கள் கழித்து பிரசுரகர்த்தர் ஒரு பதில் தந்தி அனுப்பினார்.”புத்தகம் பிரமாதமாக இருக்கிறது. புத்தகத்தின் தலைப்பை நாம் மாற்ற வேண்டும்” என்று  எழுதியிருந்தார்,
இதற்கு கிரீன் பதில் தந்தி அனுப்பினார்: அதில் “ தலைப்பை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதை விடச் சுலபமானது, பிரசுரகர்த்தரை மாற்றி விடுவது!”
என்று எழுதியிருந்தார்!
==================

மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குறை

அமெரிக்க எழுத்தாளர்  JAMES THURBER எழுதிய ஒரு நகைச்சுவைப் புத்தகம்  MY LIFE AND HARD TIMES.  இதை 1933-ல் பிரஞ்சில்  மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள்.
பிரஞ்சு  மொழி தெரிந்த அவருடைய நண்பர், தர்பரிடம்  : “ பிரஞ்சு  மொழியில் வந்திருக்கிற உங்கள் புத்தகத்தைப் படித்தேன். ஒரிஜினல் புத்தகத்தை விட பிரஞ்சில் இன்னும் நன்றாக இருக்கிறது என்று சொல்வேன்” என்று சொன்னார்:

தர்பர் மிகவும் சாவதானமாக, அதே சமயம் சற்று  குறும்புடன் ” ஆமாம், ஆமாம், என் புத்தகங்களை மொழிபெயர்க்கும்போது ஒரிஜினலில் இருக்கும் பல சிறப்புகள் விட்டுப் போய்விடுகின்றன. அதனால் தான் இப்படி அமைந்து விடுகின்றன” என்றார்!

===============
ஆறாம் ஜார்ஜ்

இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ், இரண்டாம் உலகப்போருக்கு முன்பு ஒரு சமய கனடா நாட்டுக்கு விஜயம் செய்தார், அவர் மாண்ட்ரியல் நகருக்கு சென்ற போது அந்த நகரின் மேயர் அவரை வரவேற்று விருந்தளித்தார். மேயர் வழக்கமான சூட்- கோட் உடைதான் அணிந்திருந்தார், மேயருக்கான விசேஷ உடை, அங்கி ஆகிய எதையும் அணிந்திருக்கவில்லை.
அவரிடம் மன்னர்,” ஏன்,. மேயருக்கான விசேஷ உடைகள் எதையும் அணிந்து  கொள்வதில்லையா?” என்று கேட்டார்.
 அதற்கு மேயர் பரபரப்புடன், “ அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் அங்கி அணிந்துகொள்வது உண்டு. ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகளின் போது (!) போட்டுக் கொள்வேன்" என்று சொன்னார்!
இது எப்படி இருக்கு!

( வெகு நாள் வரை மேயர் இப்படிச்  சொன்னதை  வெளியே வராமல் பார்த்துக் கொண்டது கனடா அரசு.  ஆனால் ஒரு சாமர்த்தியமான பத்திரிகையாளர் எப்படியோ கண்டுபிடித்து அம்பலப் படுத்தி விட்டாராம்!
=======
ப்ரோக்கலிக்குத் தடை
அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் ஒரு நொறுக்குத்த்தீனி பிரியர். வாப்பாட்ட்டு ரசிகர். அவருக்கு பிடிக்காதது ப்ரோக்கலி என்னும் கறிகாய்தான். ( படத்தைப் பார்க்க,) காலிஃப்ளவர்  இனத்தைச் சேர்ந்தது.
“ ப்ரோக்கலியின் சுவை. மருந்து மாதிரி இருக்கிறது, எவன் அதைச் சாப்பிடுவான்? எந்த காரணத்தையும் கொண்டு என் உணவில் அது இருக்கக்கூடாது, என்னுடைய தனி விமானமான
ஏர்-ஃபோர்ஸ் ஒன்னில் ப்ரோக்கலி முழு தடை,  இது அதிபர் என்ற முறையில் நான் இடும் உத்தரவு!  நான் சிறுவனாக இருந்த போது என் அம்மா ப்ரோக்கலி  சாப்பிடும்படி கட்டயப்படுத்துவார். நான் இப்போது அமெரிக்க ஜனாதிபதி, நான் ப்ரோக்கலி  சாப்பிடப் போவதில்லை” என்று (மார்ச் 18, 1990)  அறிவித்தார்.

அவ்வளவுதான், ப்ரோக்கலி பண்ணயாளர்கள் பொங்கி எழுந்தார்கள். அவர்களுக்குப் பயம், ப்ரோக்கலியை மக்களும் ஒதுக்கி விடுவார்களோ என்று!
தங்கள் எதிர்ப்பைக் காட்ட சுமார் 10,0000பவுண்ட் ப்ரோக்கலிகளைக் கொண்டு வந்து அதிபரின் வெள்ளை மாளிகையின் முன் இறக்கினார்கள். வெள்ளை மாளிகை புல்வெளி மைதானத்தில் ஒரு நிகழ்ச்சியாக அமைத்து அதிபரின் மனைவி பார்பரா புஷ்  அதைப் பெற்றுக்கொண்டார்.  பிறகு அதை இலவசமாக உணவு வழங்கும் விடுதிகளுக்கு அனுப்பிவிட்டார்!

    

கனிவான கவனத்திற்கு

ஏர் இந்தியா-வின்  FOOLISHLY YOURS  புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தனித்தனியே  PDF file  அனுப்புவது சிரமமாக் இருக்கிறது. இதுவரை அதைப் பெற்றவர்கள். அன்புகூர்ந்து  UPLOAD  செய்து அதன் LINK-ஐ எனக்குக் கொடுத்தால், தாளிப்புவில் போட்டு விடுவேன்.

திரு வடிவேலன் செய்துவிட்டார்.
இதோ லின்க்

அடுத்து:   ஏர் இந்தியா-வின்  THIS MAKES NO SENSE  புத்தகமும் ஒரு நகைச்சுவைக் கொத்து, அதை இப்போது SCAN  பண்ணி புத்தகமாகச் செய்து கொண்டிருக்கிறேன். அதையும் UPLOAD  செய்து அதன் LINK-ஐ எனக்குக் கொடுக்க யாராவது முன் வந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்!


June 02, 2012

சந்தேகம் - கடுகு


1. புகைப்படம்

அனுராதாவின் மேஜை டிராயரைத் தற்செயலாக திறந்த போது, ஒரு டயரியிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகுதான் சந்தேகம் என்னை அரிக்கத் தொடங்கியது.

ஒரு இளைஞன் அவளை அணைத்தபடி இருக்கிறான். கொடைக்கானல் பகுதி மாதிரியான இடத்தில், அனு ஒரே உற்சாகமாகவும் சற்று நாணமாகவும் காட்சி அளிக்கிறாள். படம் தெளிவாக இல்லை. பாக்ஸ் காமிராவில் எடுத்ததாக இருக்குமோ? அல்லது என் கண்களில் சதை வளர்ந்திருப்பதால் தெளிவாக இல்லையோ?

அனுவைச் சமர்த்துப் பெண் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்! காலேஜில் படிக்கிறாள். கூடவே காதலும் படிக்கிறாள். என் தலையைத் தடவிக் கொண்டேன். முழு வழுக்கையாக இருந்த தலையில் மயிரைப் பிய்த்துக் கொள்ள முடியுமா.. கவலைப்படுவதற்கு? ..சரி.. இந்தப் போட்டோ விவகாரத்தைக் கமலாவிடம் சொல்லலாமா? அவள் வெலவெலத்துப் போய்விடுவாள்.

2. அனுவுக்குக் காதல்?

அனு என் பேத்தி. நல்ல அழகு. அனு எங்கள் பெண் வயிற்றுப்பேத்தி. எங்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் மூன்று மாதம் ஆஸ்திரேலியா போயிருக்கிறார்கள். காலேஜில் படிக்கும் பேத்தியைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருவரும் ஊரிலிருந்து வந்து இருக்கிறோம்.

அனு, அவள் அம்மா அதாவது எங்கள் பெண் பத்மா மாதிரியே மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். பத்மா, என் மனைவி கமலாவை அந்த காலத்தில் உரித்து வைத்திருந்தாள்.

கான்வெண்டில் படித்த பெண் அனு, கிடார் கற்றுக் கொள்கிறாள். அரை அடி உயர  ச்போட்டுக் கொள்கிறாள். அறை முழுவதும் ஏதோ பாப் பாடகர்களின் படங்கள் ஒட்டி வைத்திருக்கிறாள். ஸ்டீரியோ பிளேயரில் காட்டுக் கத்தல் இசை போட்டுக் கேட்கிறாள்.

இதெல்லாம் ஒன்றும் தப்பில்லை.. ஒரு பையனுடன் சுற்றி வருகிறாளே.. நிச்சயமாக அவளது பெற்றோர்களுக்குத் தெரியாது.

விவரம் தெரியாத வயதுக் குழந்தை. அவளிடம் எப்படிக் கேட்பது? என் மேஜை டிராயரை ஏன் குடைந்தாய் என்று கேட்பாள். பேனாவிற்கு "இங்க்' போடத்தான் திறந்தேன் என்றால் நம்புவாளா?