Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

October 09, 2017

வாராய் எந்தன் மகனே!

                                                                  
     இஸ்ரேல் எழுத்தாளர் EPHRAIM KISHON எழுதிய A CHIP OF THE OLD BLOCK என்ற நகைச்சுவை கட்டுரையை தமிழ்ப்படுத்தி கொஞ்சம் தாளித்துக் கொட்டி-இங்கு தருகிறேன்.

      ஒரு திரைப்படத்தைபிரிவியூ’ காட்சியில் போட்டுப் பார்ப்பது  ஒரு உற்சாகமான அனுபவம். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் முதன் முதலாகப் பார்ப்பது ஒரு உற்சாகமான விஷயம். உதாரணமாக, திரைப்பட பிரிவியூவை  எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், உலகில் எல்லா பிரிவியூக்களை மிஞ்சும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தருவது, குழந்தை பிறந்ததும், அதை முதன் முதலில் பார்க்கும் போது ஏற்படும் உணர்ச்சிமிக்க மகிழ்ச்சிக்கு ஈடு ஒன்றும் கிடையாது.
     என்னுடைய மனைவி, என் மகன் RAFI-யை அர்த்தராத்திரியில் தான் உலகிற்கு அறிமுகம் செய்தாள். இருந்தாலும் குழந்தையின் அப்பாவான நான் RAFI-யை பார்க்க பொழுது விடியும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. மருத்துவமனையிலிருந்து தகவல் சொன்ன டாக்டர் குழந்தையை முதன்முதலில் பார்க்க வரும்போது என்னை தனியாக வரும்படி சொன்னார். ஆகவே நான் தனியாகச் சென்றேன். தனி என்றால் என் அம்மா (அம்மா வேறு நான் வேறு இல்லை), என் மாமனார், மாமியார் (இவர்கள் புதிதாக தாத்தா, பாட்டி ஆனவர்கள் என்பதுடன் அவர்களுடய குழந்தைக்குத்தான் குழந்தை பிறந்திருக்கிறது ) . அப்புறம், மாமி  ILKA- வை விட்டுவிட்டு நான் போக முடியாது. அப்படி போனால்  என்னை மன்னிக்கமாட்டார்கள்
சித்தப்பா ZEIGLER-ஐயும் சித்தியையும் அழைத்துப் போகாமல் இருக்க முடியாது.  காரணம், அவர்கள் குழந்தைக்குக் கொடுக்க, அழகான டிரஸ், வெள்ளைப் பூப்போன்ற பூட்ஸ்கள், மெத்தென்று இருக்கும் குல்லாய், கண்ணைப் பறிக்கும் நீலக் கலர்  வெல்வெட் நிஜார் ஆகியவைகளை வாங்கி வந்திருந்தார்கள். .
     *இதில் ஆச்சரியம் என்னவென்றால், பின்னால் RAFI-க்கு JACK அதே மாதிரி செட் டிரஸ்ஸைக் கொடுத்தார். என் நண்பர்கள் நான்கு பேரும் கூட அதே மாதிரி செட்). இது ஒரு அற்புதமான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதோ ஒரு ஸ்டோரில் விலை போகாத செட்களை பாதி விலைக்கு தள்ளுபடியில் கொடுத்திருப்பார்கள்.)

May 05, 2017

மிகச் சிறிய "ஷெர்லாக் ஹோம்ஸ்' கதை


     ஆர்தர் கானன் டாயில் எழுதியது!

முன் குறிப்பு:
 மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் மனைவி மேரி ராணி, ஒரு அழகிய பொம்மை வீடு கட்டினார். அதில் ஒரு அறையில் புத்தக ஷெல்ஃப்கள் வைத்தார். அதில் பல குட்டிப் புத்தகங்களை வைக்க விரும்பினார். அதற்காக பல பிரபல எழுத்தாளர்களை அணுகி, ஒரு மினி புத்தகம் அளவு வரக்கூடிய கதையோ, கட்டுரையோ எழுதித் தரும்படி கேட்டார்
பிரபல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய ஆர்தர் கானன் டாயலிடமும் கேட்டார். அவர் எழுதித் தந்த கதை ஒன்றை அங்குல உயரப் புத்தகமாகத் தயாரித்து பொம்மை வீட்டு புத்தகசாலையில் வைத்தார்.
ஆர்தர் கானன் டாயில் எழுதிய 
அந்தக் கதை....

வாட்ஸன் கற்றுக் கொண்ட வித்தை 

ஷெர்லாக்-ஹோம்ஸுடன் காலைச் சிற்றுண்டியை சாப்பிட மேஜையின் முன் வாட்ஸன் உட்கார்ந்தார். ஹோம்ஸை உற்றுப் பார்த்தபடி இருந்தார். ஹோம்ஸ்  தலையை  நிமிர்ந்து  வாட்ஸனைப்  பார்த்தார்.
"வாட்ஸன்... என்னவோ யோசனையில் ஆழ்ந்திருக்கிறாயே, எதைப் பற்றி?'  என்று கேட்டார்.

"உன்னைப் பற்றித்தான்...'
"என்னது... என்னைப் பற்றியா?'
"ஆமாம்... ஹோம்ஸ், நீ செய்கிற துப்பறியும் வித்தைகள் மிகவும் சாதாரணமானவை. இருந்தும் பொதுமக்கள் இதில் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக  இருக்கிறது.'

March 03, 2016

ரஜனிஹாசனும் ராசம்மாவும்

பாரதிராஜா பார்த்திருந்தால் கொத்திக் கொண்டிருப்பார்.  
பாக்யராஜ் சபலப்பட்டிருப்பார். பாலசந்தரும் கிறங்கியிருப்பார். மணிரத்னம் மயங்கியிருப்பார்.
 அவ்வளவு அழகான, சினிமாவுக்கு ஏற்ற முகவெட்டு உடைய
கிராமம் அது!
ஊருக்கு நடுவே இருக்கும் தெருவில், மங்களூர் ஓடு போட்ட சின்ன வீட்டு வாசலில், நன்றாக மெழுகப்பட்ட மண் தரையில் உட்கார்ந்து கொண்டு அரிசி நோம்பிக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மூதாட்டி.
அன்புள்ள வாசகர்களே, மூதாட்டி என்று அலட்சியமாகக் கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள்.
இந்தப் பெண்மணி  ராசம்மா தான்  நமது ஹீரோயின்!

ஏழு அபஸ்வரங்களையும் கலந்து அவள் பாடிக் கொண்டே அரிசியில் கல்லைப்பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டை சினிமா இசை அமைப்பாளர் கேட்டிருந்தால், இத்தனை நாள் ஏதாவது ஒரு திரைப் படத்தில் போட்டிருப்பார்.
ராசம்மாவுக்கு அறுபது வயதிருக்கும். நடுத்தரக் குடும்பப் பாங்கு அவளுடைய நூல் புடவையிலும் கழுத்தில் உள்ள காப்பிக் கொட்டைச் சங்கிலியிலும், காது கம்மலிலும், நெற்றியில் உள்ள கம்பீரமான பொட்டிலும் வெளிப்படுகிறது.
பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாலும் கல்லைப் பொறுக்கிக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை மட்டும் அவ்வப்போது தெருக்கோடிக்கே போய்க் கொண்டிருந்தது.
“என்ன ராசம்மா... இன்னும் தபால்காரன் வரலியா?” என்று வீட்டினுள்ளிருந்து ஒரு குரல் வந்தது.
“அதுதானே குந்திக்கினு பார்த்துக்கிட்டு இருக்கேன். புதன்கிழமைன்னா நம்ம குமார் லெட்டர் வருமே... அதோ தெருக் கோடியிலே தபால்காரர் சைக்கிள் தெரியுது...”
அடுத்த இரண்டு நிமிடத்துக்குள் தபால்காரர் ராசம்மாவிடம் ஒரு கவரைக் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.

March 08, 2013

எழுத்துக் கொலை --அகஸ்தியன்

(இது ஒரு பயங்கர கதை. கதவைத்  தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, விளக்கை அணைத்து விட்டு, கண்களை மூடிக் கொண்டுப் படியுங்கள்!!)
 - - - - - - - - - - - - - - - - - - 
மும்முரமாக மாத நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு கொலை செய்தாகிவிட்டது.  கதையில்தான். இருந் தாலும் குறைந்தபட்சம் மூன்று கொலை இருந்தால்தான் வாசகர்களுக்கு திருப்தி ஏற்படும் என்று மாத நாவல் ஆசிரியர் சொல்லியிருந்தார்.
மாதம், இரண்டு மூன்று நாவல்களை எழுதுபவன். ஒவ்வொரு நாவலிலும் மூன்று பேரையாவது கொலை செய்ய வேண்டு மென்றால் சுலபமான காரியமில்லை. நிஜமாகவே கொலைகள் செய்வது சுலபம் என்று தோன்றுகிறது.
"இரவு ஒன்பது மணிக்கு கதையை முடித்துக் கொடுத்துவிடுகிறேன். பையனை அனுப்புங்கள்'' என்று ஆசிரியரிடம் சொல்லி இருந்தேன். ஆகவே மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தேன்.
என் மனைவி --தீர்க்காயுசாக அவள் இருக்கட்டும் -இரண்டு நாளாக ஊரில் இல்லை. பிறந்தகம் போயிருந்தாள். அட நீங்க ஒண்ணு... சண்டை, கிண்டை எதுவுமில்லை, சும்மாத்தான் போயிருந்தாள். அவள் ஊரில் இல்லாததால் தொந்தரவு இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.
அவள் வீட்டில் இருந்தால், நான் எழுதுகிறேனே என்பதையும்.......
 சரி....சார், அந்த கதையெல்லாம் இப்போது எதற்கு?
மூன்றாவது கொலையைச் செய்தாக வேண்டும்.

June 02, 2012

சந்தேகம் - கடுகு


1. புகைப்படம்

அனுராதாவின் மேஜை டிராயரைத் தற்செயலாக திறந்த போது, ஒரு டயரியிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகுதான் சந்தேகம் என்னை அரிக்கத் தொடங்கியது.

ஒரு இளைஞன் அவளை அணைத்தபடி இருக்கிறான். கொடைக்கானல் பகுதி மாதிரியான இடத்தில், அனு ஒரே உற்சாகமாகவும் சற்று நாணமாகவும் காட்சி அளிக்கிறாள். படம் தெளிவாக இல்லை. பாக்ஸ் காமிராவில் எடுத்ததாக இருக்குமோ? அல்லது என் கண்களில் சதை வளர்ந்திருப்பதால் தெளிவாக இல்லையோ?

அனுவைச் சமர்த்துப் பெண் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்! காலேஜில் படிக்கிறாள். கூடவே காதலும் படிக்கிறாள். என் தலையைத் தடவிக் கொண்டேன். முழு வழுக்கையாக இருந்த தலையில் மயிரைப் பிய்த்துக் கொள்ள முடியுமா.. கவலைப்படுவதற்கு? ..சரி.. இந்தப் போட்டோ விவகாரத்தைக் கமலாவிடம் சொல்லலாமா? அவள் வெலவெலத்துப் போய்விடுவாள்.

2. அனுவுக்குக் காதல்?

அனு என் பேத்தி. நல்ல அழகு. அனு எங்கள் பெண் வயிற்றுப்பேத்தி. எங்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் மூன்று மாதம் ஆஸ்திரேலியா போயிருக்கிறார்கள். காலேஜில் படிக்கும் பேத்தியைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருவரும் ஊரிலிருந்து வந்து இருக்கிறோம்.

அனு, அவள் அம்மா அதாவது எங்கள் பெண் பத்மா மாதிரியே மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். பத்மா, என் மனைவி கமலாவை அந்த காலத்தில் உரித்து வைத்திருந்தாள்.

கான்வெண்டில் படித்த பெண் அனு, கிடார் கற்றுக் கொள்கிறாள். அரை அடி உயர  ச்போட்டுக் கொள்கிறாள். அறை முழுவதும் ஏதோ பாப் பாடகர்களின் படங்கள் ஒட்டி வைத்திருக்கிறாள். ஸ்டீரியோ பிளேயரில் காட்டுக் கத்தல் இசை போட்டுக் கேட்கிறாள்.

இதெல்லாம் ஒன்றும் தப்பில்லை.. ஒரு பையனுடன் சுற்றி வருகிறாளே.. நிச்சயமாக அவளது பெற்றோர்களுக்குத் தெரியாது.

விவரம் தெரியாத வயதுக் குழந்தை. அவளிடம் எப்படிக் கேட்பது? என் மேஜை டிராயரை ஏன் குடைந்தாய் என்று கேட்பாள். பேனாவிற்கு "இங்க்' போடத்தான் திறந்தேன் என்றால் நம்புவாளா?

November 28, 2011

எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் -கடுகு

"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்."-  இப்ப்டி ஒருதலைப்பில் ஒரு நகைச்சுவைக் கதை வேண்டும் என்று கல்கியிலிருந்து ஒரு சமயம் கேட்டார்கள்.  அப்போது எழுதி அனுப்பிய  கதை
 =====================

"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்.
 இந்த வாக்கியத்தைச் சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார்  ஜோதிடப்புலி, ஆரூட சிங்கம், நியூமராலஜி நரி, கைரேகைக் கரடியான மூலைக்கொத்தளம் மன்னாரு ஜோதிடர்.
பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு அவருக்கு முன்பு அமர்ந்திருந்த அஷ்டபுஜத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
நூற்றியொரு ரூபாய் கொடுத்து ஆரூடம் கேட்க வந்திருந்தார். ஒரு வாக்கியம் மட்டும் சொல்லிவிட்டுச் சும்மா இருக்கிறாரோ ஜோதிடர் என்று யோசித்தபடியே இருக்க, ஜோதிடரின் ஒரு சிஷ்யகோடி, "அவ்வளவுதான்! இனிமேல் ஒண்ணும் வாக்குலே வராது. சுவாமி மௌனத்தில் போய்விட்டார்" என்றார்.
ஆறு மாதம் காத்திருந்து அப்பாயிண்மென்ட் வாங்கி, சிபாரிசு பிடித்து நூற்றியொரு ரூபாய் கொடுத்து- அல்லது அழுது- ஜோதிடம் கேட்க வந்தால் ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டால் எப்படி? அட்சர லட்சம் என்பது மாதிரி அல்லவா இருக்கிறது!
திடீரென்று அஷ்டபுஜத்துக்குச் சந்தேகம் வந்தது. `எட்டுக்கு மேல் வேண்டாம்' என்று சொன்னாரா, ஏட்டுக்கு மேல்  வேண்டாம் என்று சொன்னாரா என்று சந்தேகம் தோன்றியது. காரணம் அஷ்டபுஜம் சாதாரண கான்ஸ்டபிள். அதுவும் கொத்தவால் சாவடி, சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் இல்லாமல்-- `வறண்ட' பிரதேசமான பெசன்ட் நகர் பகுதியில் டியூட்டி! விரைவில் `ஏட்டு' ஆகப் பிரமோஷன் வரக்கூடும். `அதற்கு மேல் பிரமோஷன் வந்தால் விட்டுவிடு' என்று ஜோதிடர் சொல்கிறாரா? சப் இன்ஸ்பெக்டர் மாதிரி உத்தியோகத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதால் சொல்கிறாரா? - புரியவில்லை.
வீட்டுக்கு வந்தார். சடாரென்று அவர் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. வீட்டு நம்பர் ஒன்பது! ஆகா! எட்டுக்கு மேல் உள்ள நம்பர் வீடு... அதனால்தான் நமக்கு அதிர்ஷ்டம் இல்லையோ!
வீட்டுக்குள் நுழைந்ததும் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினார். அப்போது அவரது ஜேபியிலிருந்து ஒரு லாட்டரிச் சீட்டு விழுந்தது. "ஹூம், நாமும் லாட்டரி டிக்கட் வாங்கிட்டுதான் இருக்கோம். ஒரு தபா கூட பரிசு விழுறதில்லை' என்று தமக்குள் சொல்லிக் கொண்டே சீட்டை எடுத்துப் பார்த்தார். `99999' என்ற எண் சீட்டு அது. ஒன்பது என்றால் அதிர்ஷ்டம் என்று ரேஸ் பிரியர்கள், சீட்டுப் பிரியர்கள் போன்ற பல `சூது விற்பன்னர்கள்' சொல்லி இருந்ததால் இந்த சீட்டை வாங்கியிருந்தார். அஷ்டபுஜம் என்ற தமது பெயரைக் கூட நவமணி, நவரத்தினசாமி என்று மாற்றிக் கொள்ளலாமா என்று சில சமயம் யோசித்தும் இருக்கிறார்!
=          =                     =
"என்னங்க... எந்திரிங்க.. தந்திகாரு வந்திருக்காரு இன்னமோ தந்தியாம்" என்று சொல்லிக் கொண்டே அஷ்டபுஜத்தின் மனைவி அவரை எழுப்பினாள்.
"தந்தியா.. இன்னாட இது?" என்று கேட்டபடியே தமது வயதான உறவுக்காரர்கள் எல்லாரையும் மனசில் வீடியோ போட்டு பார்த்தார்.
தந்தியை வாங்கிப் பிரித்தார். அடுத்த செகண்ட் தமது ஐம்பத்தெட்டு இன்ச் தொப்பையைத் துக்கிக் கொண்டு `ஹையா' என்று குரல் கொடுத்தபடியே குதித்தார் -இருந்த இடத்திலேயே.
"என்னங்க.. இன்னா ஆச்சு உங்களுக்கு.. அடி மாரியாத்தா.. உனக்கு கூழு வாக்கறேன்... இவருக்கு என்னவோ கிலி புடிச்சிக்கிச்சே" என்று அம்புஜம் அலறினாள்.
"அடியே ஒப்பாரி வெக்காதே. அய்யா இனிமே பாரி. வாரி வாரி வழங்கப் போற பாரி.. தந்தி இன்னாத் தெரியுமா? உல்டா பிரதேஷ் லாட்டரியிலே எனக்கு - மனசை தெகிரியமா வெச்சுக்கோ-  எனக்கு ஐம்பது லச்சம் வுயுந்திருக்குது.. ஐம்பது லட்சம் அம்புஜம்...
"என்னது அம்பது லட்சமா?.. சரியாப் பாருங்க அம்பதா ஒம்பதா? அவசரத்திலே 41 லச்சம் போயிடப் போவுது யார் வீட்டு பிள்ளை இல்லாத சொத்து?"
மறுநாள் தமிழ் தினசரிகள் எட்டுக்காலம் தலைப்பில் "ஏழை போலீஸ்காரருக்கு ஐம்பது லட்சம் பரிசு" என்று பல ஆச்சரியக்குறிகள் பின்தொடரச் செய்தி வெளியிட்டிருந்தன. அதன் பிறகுதான் அஷ்டபுஜத்திற்குத் தனக்கு அடித்த அபார அதிர்ஷ்டம் உறுதியாயிற்று. அந்த `யோகம்' அடிச்ச பிறகு பேரையும் நவரத்தினசாமின்னு மாற்ற முடிவு செய்தார் அஷ்டபுஜம்.
செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்து நவரத்னசாமி ஆனார்- முன்னாள் போலீஸ்காரரும் இன்னாள் லட்சாதிபதியுமான முன்னாள் அஷ்டபுஜம்!
=                  =                        =
பெயரை மாற்றிக் கொண்ட வேளை அதிர்ஷ்ட தினமாக அமைந்தது.
அவர் இருந்த வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய பாக்டரியை ஏற்படுத்தப் போவதாக அரசாங்க அறிவிப்பு வந்ததால், மனைகள் விலை சடசடவென்று ஏறத் தொடங்கின. பம்பாயிலிருந்து வந்த ஒரு சேட், நவரத்னசாமியுடன் பார்ட்னராகச் சேர்ந்து அவர் வீட்டு மனையில் ஒரு நட்சத்திர ஓட்டலைக் கட்ட முன் வந்தார்.
"இந்த மனை சின்னதாச்சே எப்படிங்க சேட் ஓட்டல் கட்ட முடியும்" என்று ந.சாமி கேட்டார்.
"ஒசரமாக் கட்டிப்பிட்டாப்  போச்சு. மேலே ஒரு ரிவால்விங் ரெஸ்ட்ராண்ட் சும்மா ஏழெட்டு மாடி கட்டிப்பிடலாம். நல்லா பிசினஸ் ஆவும். மெயின் ரோடுல உங்க வீடு இருக்கிறதும் அதிர்ஷ்டம்" -- சேட் போட்ட சோப்பில் நவரத்தினசாமி கரைந்து போனார்.
லாட்டரிப் பணம் செங்கல்லாகவும் சிமெண்ட்டாகவும் இரும்பாகவும் மாறி அவரது வீடு இருந்த இடத்தில் கட்டடம் எழும்ப ஆரம்பித்தது.
"சேட்.. இன்ஜினியரு சொல்றாரு எட்டு மாடி கட்டறதாக.. எனக்கு எட்டு ஆவுறதில்லை` ஒன்பதாகக் கட்டிப்பிடலாம்."
”சரி.. செஞ்சுடலாம்.”
"
கடைசி மாடியின் ரூஃபிங் போட ஜல்லியும் சிமெண்ட்டும் டன் டன்னாக மேலே ஏறிக் கொண்டிருந்தன.
திடீரென்று ஸெண்டரிங் பலகைகள் சரிய, ரூஃப் டாப்பில் இருந்த கலவைகள் மளமளவென்று விழ, அந்த அதிர்ச்சி வேகம் தாளாமல் கட்டடமே ஒரு கண் இமைக்கும் நேரத்தில் ஏகப்பட்ட சடபுட சப்தத்துடன் கன்னா பின்னாவென்று குப்பலாக இடிந்து விழுந்தது!
இன்ஜினீயர் கட்டடம் `நிக்குமா' என்று பார்க்காமல் நமக்கு எவ்வளவு `நிக்கும்' என்று மட்டும் கணக்குப் பார்த்ததில் வந்த வினை.
ஒன்பதாவது மாடியே கட்டடத்திற்கு வினையாக வந்தது. நவரத்னசாமியின் லாட்டரிப் பரிசுப் பணம் நிமிஷத்தில் தவிடு பொடியாகியது!
ஈரத் துணியைத் தலையில் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த நவரத்னசாமியின் காதில் அசரீரிக் குரல் கேட்டது. "எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்."
அடாடா! மன்னாரு எவ்வளவு பெரிய ஜோசியர். எட்டாவது மாடிக்கு மேல் கட்டாதே என்று அவர் சூசகமாகச் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் போனோமே என்று நவரத்னசாமி எட்டுக் கட்டைக் குரலில் ஒப்பாரி வைக்க ஆரம்பித்ததார்!

( தயவு செய்து பின்னூட்டம் போட்டு என்னைக் கிழிக்காதீர்கள்!)

April 25, 2011

நலங்கு பாட்டி -கடுகு

``சௌம்யா! மெஹந்தி போடறதுக்கு நீ இன்னும் ஏற்பாடு பண்ணலை. முகூர்த்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை...''
``சொல்லிட்டேன்மா. அப்புறம் ஒரு விஷயம். நலங்கு அது இதுன்னு பண்ணறதுக்கு எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் பாட்டி முதல்ல வந்து, .சாரட்டு வண்டிலே சனக மகாராசன் பிள்ளை போல வர்றான், நம்ப சரோஜாவுக்கு வங்கி, ஒட்டியாணம், புல்லாக்கு, நத்து, ஜிமிக்கி போட வர்றான், மீசைக்கார வீரன்' என்கிற மாதிரி எல்லா கலியாணத்திலேயும் நம்ப பாட்டி பாடுவாள். என் கலியாணத்தில் பாட வேண்டாம்னு சொல்லு. எங்க கம்ப்யூட்டர் கம்பெனியிலே இருந்து வர்றவங்க `சரியான நாட்டுப்புறம்’னு சொல்லிச் சிரிப்பாங்க'' என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, ``ஆயிரம் கல்யாணத்தில நலங்குப் பாட்டு பாடியிருக்கேன். என் பேத்திக்கு இஷ்டமில்லைன்னா பாடலை'' என்றாள்.

சௌம்யா-சுரேஷ் கலியாணம் தடபுடலாக நடந்தது. கலியாணம் ஆனவுடன் அமெரிக்காவில் நியுஜெர்ஸியில் வேலை கிடைத்து போய் விட்டார்கள்
இரண்டு வருஷம் கழித்து கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள பாட்டியை நியூஜெர்ஸிக்கு வரவழைத்துக் கொண்டாள் சௌம்யா.

பிரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வரா கோயிலில் ஒரு கலியாணத்திற்குப் பாட்டியை  சௌம்யா. அழைத்துக் கொண்டு போனாள்
கலியாணத்தின் போது, ``யாராவது நலங்கு பாட்டுப் பாடுங்கோளேன்'' என்றார் புரோகிதர்.
சட்டென்று  “.சாரட்டு வண்டிலே சனக மகாராசன்....”என்று  பாட்டி பாட ஆரம்பிக்க, ஒரே கை தட்டல்! கேலியும் கிண்டலுமாக பல பாடல்கள். பாட்டிக்கு பலர் கை குலுக்கினார்கள். கரடிப் பிடியாக கட்டிப் பிடித்துப் பாராட்டினார்கள். ``சௌம்யா! யுவர் பாட்டி ஈஸ் கிரேட்! யூ ஆர் லக்கி!'' என்றார்கள்.
*
இரண்டு மாதம் கழித்து நலங்கு பாட்டியின் கலியாணப் பாடல்கள் சிடியை நியூஜெர்சி தமிழ் பண்பாட்டு மையம் வெளியிட்டது.
சௌம்யாவிற்கு பெருமை தலைகால் புரியவில்லை.