May 05, 2017

மிகச் சிறிய "ஷெர்லாக் ஹோம்ஸ்' கதை


     ஆர்தர் கானன் டாயில் எழுதியது!

முன் குறிப்பு:
 மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் மனைவி மேரி ராணி, ஒரு அழகிய பொம்மை வீடு கட்டினார். அதில் ஒரு அறையில் புத்தக ஷெல்ஃப்கள் வைத்தார். அதில் பல குட்டிப் புத்தகங்களை வைக்க விரும்பினார். அதற்காக பல பிரபல எழுத்தாளர்களை அணுகி, ஒரு மினி புத்தகம் அளவு வரக்கூடிய கதையோ, கட்டுரையோ எழுதித் தரும்படி கேட்டார்
பிரபல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய ஆர்தர் கானன் டாயலிடமும் கேட்டார். அவர் எழுதித் தந்த கதை ஒன்றை அங்குல உயரப் புத்தகமாகத் தயாரித்து பொம்மை வீட்டு புத்தகசாலையில் வைத்தார்.
ஆர்தர் கானன் டாயில் எழுதிய 
அந்தக் கதை....

வாட்ஸன் கற்றுக் கொண்ட வித்தை 

ஷெர்லாக்-ஹோம்ஸுடன் காலைச் சிற்றுண்டியை சாப்பிட மேஜையின் முன் வாட்ஸன் உட்கார்ந்தார். ஹோம்ஸை உற்றுப் பார்த்தபடி இருந்தார். ஹோம்ஸ்  தலையை  நிமிர்ந்து  வாட்ஸனைப்  பார்த்தார்.
"வாட்ஸன்... என்னவோ யோசனையில் ஆழ்ந்திருக்கிறாயே, எதைப் பற்றி?'  என்று கேட்டார்.

"உன்னைப் பற்றித்தான்...'
"என்னது... என்னைப் பற்றியா?'
"ஆமாம்... ஹோம்ஸ், நீ செய்கிற துப்பறியும் வித்தைகள் மிகவும் சாதாரணமானவை. இருந்தும் பொதுமக்கள் இதில் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக  இருக்கிறது.'

"நீங்கள் சொல்வது சரிதான்... நானே ஒருசமயம் நீங்கள் சொன்னதையே சொல்லி  இருக்கிறேன்...'
"உங்கள் துப்பறியும் வழிமுறைகளை சுலபத்தில் கற்றுக் கொள்ள முடியும்...'
"சந்தோகமில்லாமல்... நீங்களே முயன்று பார்த்துத் தெரிந்து கொள் ளுங்களேன்...'
"சந்தோஷமாக முயற்சி செய்கிறேன். சரி, இன்று காலையில் நீங்கள் கண் விழித்தது முதல் ஏதோ ஒரு விஷயத்தை அலசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது என் யூகம்!'
"எக்ஸலண்ட்... ஆமாம், எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள்?'
"காரணம், நீங்கள் எப்போதும் சுத்தமாகவும் ட்ரிம்மாகவும் இருப்பீர்கள். இன்று நீங்கள் ஷேவ் பண்ணவே மறந்து விட்டீர்கள்...'
"டியர் வாட்ஸன்... ரொம்பவும் கெட்டிக்காரத்தனமான யூகம். நீங்கள் இவ்வளவு திறமை வாய்ந்த மாணவன் என்று நான் நினைக்கவே இல்லை. உங்களுடைய கழுகுக் கண்கள் வேறு எதையாவது கண்டு பிடித்ததா?
"கண்டு பிடித்தது... உங்களை Barlow என்பவர் உதவிக்கு அணுகி இருக் கிறார்அவருடைய கேஸை இன்னும் முடித்துத் தரவில்லை'
"மை காட்... உங்களுக்கு எப்படித் தெரிந்தது?'
"மேஜை மேல் இருந்த கவரில் அவர் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதைத் திறந்தபோது, நீங்கள் லேசாக முகத்தைச் சுளித்துக் கொண்டீர்கள். வேண்டா வெறுப்பாக ஜேபியில் திணித்துக் கொண்டீர்கள்...'
"பிரமாதம்... எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்கிறீர்கள்... இன்னும் ஏதாவது பாயிண்ட் இருக்கிறதா?'
"ஹோம்ஸ்... நான் நினைக்கிறேன். நீங்கள் ஏதோ பண முதலீடு விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள்  என்று...'
"வாட்ஸன்... ரொம்ப கெட்டிக்காரர்தான் நீங்கள்... சரி... இன்னும் ஏதாவது விஷயம்  இருக்கிறதா?'
"இருக்கிறது. நீங்கள் இன்று வழக்கமான நீண்ட கோட்டைப் போட்டுக் கொள்ளாமல், கருப்பு கோட்டு அணிந்து கொண்டிருக்கிறீர்கள். யாரோ ஒரு முக்கியமான நபர் உங்களைச் சந்திக்க வரப் போகிறார்...'
"இன்னும்  இருக்கிறதா?'
"இன்னும் பல விஷயங்களை என்னால் கண்டுபிடிக்க முடியும். உங்களைப் போல கெட்டிக்காரர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே  இவைகளைச் சொன்னேன்.'
"இருக்கலாம்... சிலர் அவ்வளவு கெட்டிக்காரர்கள் அல்ல. அவர்கள் அதிகம் பேர்  இல்லை... அந்தக் குறைவான பேர்களில் நீங்களும் ஒருவர்.'
"ஹோம்ஸ்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'
"டியர் வாட்ஸன்... நீங்கள் சொன்னவையெல்லாம் சரியானவையாக இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டி ருப்பேன்...'
"அப்படியென்றால், என் யூகங்கள் எல்லாம் தவறானவையா?'
"ஓரளவுதான்... சரி... இப்போது ஒவ்வொரு பாயிண்டாகப் பார்க்கலாம். நான் இன்று ஷேவ் பண்ணிக் கொள்ளாததற்குக் காரணம், என்னுடைய ரேஸரைத் தீட்டுவதற்கு அனுப்பி இருக்கிறேன். நான் கோட் போட்டுக் கொண்டதற்குக் காரணம் என் பல் வைத்தியரைக் காலையில் போய்ப் பார்க்க வேண்டும். அவர் பெயர் BARLOW. அந்தக் கவரில் அவர் இன்று வரச் சொல்லி எழுதி இருந்தார். அதை உறுதி செய்வதற்காகத்தான் கவரைப் பார்த்தேன். நான். கிரிக்கெட் செய்தியைப் பார்க்கப் பேப்பரைத் திறந்தேன். அது பிஸினஸ் பக்கத்திற்கு அடுத்த பக்கம். பரவாயில்லை, வாட்ஸன். இப்படியே கவனித்து, யூகித்துப் பழகினால் தானாக இந்த வித்தையில் தேறி விடுவீர்கள்... '  என்றார்  ஹோம்ஸ்.

பி.கு.: தாமஸ் ஹார்டி, ரட்யார்ட் கிப்ளிங்க், சாமர்செட் மாம் போன்றவர்களும் குட்டிப் புத்தகங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். பெர்னார்ட்ஷா மறுத்து விட்டாராம். விண்ட்ஸர் மாளிகையில் அந்த பொம்மை வீடு இப்போதும்            உள்ளதாம்.


7 comments:

 1. சின்ன கதை நல்ல கதை....

  ReplyDelete
 2. பொம்மை புத்தகசாலையைப் படித்தது இல்லை. மிகச் சிறிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதையையும் இப்போது படித்தேன். பல சப்ஜெக்டுகளை இன்டெரெஸ்டிங்காக எழுதுகிறீர்கள். (எல்லாம் குமுதம் ஆசிரியர் டிரெயினிங் அல்லது நீங்கள் அவரிடமிருந்து உணர்ந்து அறிந்துகொண்டது)

  ReplyDelete
 3. ருசிகரமான தகவல்கள். இந்தப் பொம்மைப் புத்தகசாலை விஷயம் இப்போதே தெரிந்து கொண்டேன். வாட்சன் என்ன முயன்றாலும் ஹோம்ஸ் அளவுக்கு யோசிக்க முடியாது என்பதை நிரூபித்து விட்டார். :)

  ReplyDelete
 4. டிசைன் வித்தை அற்புதம்! எப்படிப் போட்டீர்கள் என வியப்பாக இருக்கிறது. இங்கே வரும்போதெல்லாம் புதுசா என்ன என்று ஆவலையும் தூண்டுகிறது.

  ReplyDelete
 5. <>
  இல்லை.. வெகு சுலபம். இந்த தளத்திற்குப் போக்வும். எலியை இஷ்டத்திற்கு விடுங்கள்.
  Link:
  https://codymoose.github.io/web-applications/DigitalDoily/index.html

  ReplyDelete
 6. கடுகு சார்... சும்மா ரெண்டு இழுப்பு இழுத்தாலே நல்ல டிசைன் வருது. ஆனால் அதில் என்ன திறமை இருக்கு. நீங்க எப்படிப் போட்டீங்க. இப்படி கொண்டுவரணும்னு நினைத்து ஒவ்வொண்ணா செய்தீங்களா? சரி.. கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 7. அதிக திரமை வேண்டாம். வெவ்வேற் கலரில் வெவ்றுவே பிரஷ் தடிமனில், நேர்க் கோடு, வளைவுக் கோடு,வட்டம், புள்ளி என்று புகுந்து விளையாடலாம். அதே சமயத்தில் 8, 10, என்று MIRROR image, repeat செய்யலாம். There is no end - Kadugu

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!