September 28, 2016

உண்மை, நம்புங்கள்!

Believe it or not   என் பதிவுகளைப் படிப்பவர்கள், அவை சுவையாக உள்ளன என்றோ, அறுவை என்றோ, சிரிப்பை உண்டாக்கியது என்றோ, கண்ணில் நீரை வரவழைத்தது என்றோ கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யாரும் ‘ரீல் விடுகிறீர்கள்’ என்றோ, ‘சும்மா கதை விடுகிறீர்கள், நம்ப மாட்டோம’’ என்றோ கூறியதில்லை. இந்தப் பதிவில் மூன்று  குட்டித் தகவல்களை, என் வாழ்க்கை அனுபவங்களைத் தருகிறேன். அவை முழுக்க முழுக்க உண்மை என்று முதலிலேயே தெரிவித்துவிடுகிறேன். நம்ப முடியாத அளவு, ஆனால் உண்மைச் சம்பவங்கள்.
1.டான் கீ ஹோட்டே
ரே பிராட்பரி என்ற பிரபல எழுத்தாளரைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதியபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். அதன் சுட்டி: ஆகா! புத்தகங்கள்! அதில் அவர் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அறிமுக உரையைத் தமிழ்ப்படுத்தித் தந்திருந்தேன். 
அந்த உரையில் DON QUIXOTE என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. உச்சரிப்பும் தெரிய வில்லை. ஸ்பானிஷ் மொழி வார்த்தை அது! எதற்கு வம்பு என்று ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். அதை எழுதும்போது இரவு மணி ஏழு.. தினமும் இரவு 7-7.30 மணிக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சியை எல்லாரும் பார்ப்போம். (மற்ற சமயத்தில் டிவியே போட மாட்டோம்.)
 இரவு ஏழு மணி நிகழ்ச்சியின் பெயர்: JEOPARDY. மிகவும் பிரபலமான, மிகவும் பாப்புலரான வினாடி வினா நிகழ்ச்சி. கடந்த 25, 30 வருஷமாக வாரத்தில் ஐந்து நாள் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒரே நாளில் நாற்பதாயிரம்,   ஐம்பதாயிரம் டாலர்,  என்று கூட ஜெயித்திருக்கிறார்கள்.

September 17, 2016

விளம்பர வாசகங்கள்

ஒரு பொருளைத் தயாரிப்பதை விடக் கடினமானது, அதைப் பிரமாதமாக விளம்பரப்படுத்துவது, விளம்பரத்தில் அந்தப் பொருளைப் பற்றி ஒரு குட்டி வாசகம் இருந்தால், அது பலரையும் கவரும்படியாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கவேண்டும்.
            சில வருடங்களுக்கு முன்பு பாப்புலராக இருந்த பல வாசகங்கள் இன்று மறைந்து போய்விட்டன.
            “தொண்டையில் கிச்..கிச்.”, “பேஷ்..பேஷ்..”, “இதை...இதை... இதைத் தா நினைச்சேன்” என்பவை எல்லாம் இப்போதும் உள்ளனவா என்று தெரியவில்லை. அவை இருந்த காலத்தில் பலரின் கவனத்தை அவை கவர்ந்தன என்பதில் சந்தேகமில்லை.
      நான் எழுதிய ஒரு விளம்பர JINGLE, 10-15 வருடங்கள் ரேடியோவிலும் டிவியிலும் சக்கைப் போடு போட்டது. காரணம் அந்த ட்யூன் அவ்வளவு சிறப்பாக அமைந்து விட்டதுதான்.  என் பாடலில் தனி சிறப்பு எதுவுமில்லை.
            இந்த விளம்பரத்தைப் பல மொழிகளில் தயாரித்துத் தர ஒப்பந்தம் செய்யப்பட்ட பம்பாய் நிறுவனம், சென்னை வந்து படப்பிடிப்பை நடத்தியது.
ஒன்றரை வரிப் பாடலுடன் விளம்பரத்தை முடிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஈ. சி ஆரில் படப்பிடிப்பு செய்ய ஏற்பாடு  கொண்டிருந்தார்கள்.

September 08, 2016

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து....

 நான் டில்லியிலிருந்த போது சுமார்  இருபது வஷங்களுக்கு மேல் தினமும் ஸ்டேட்ஸ்மென் தினசரியைத்தான் படித்து வந்தேன். அது கல்கத்தா பத்திரிகையாக இருந்தாலும், டில்லி பதிப்பில், டில்லி செய்திகள் நிறைய இடம் பெறும். அத்துடன் சுப்புடு அதில்தான் இசை விமர்சனங்களை எழுதி வந்தார். மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும்  MONDAY NOTEBOOK என்ற பகுதியில் பல சுவையான துணுக்குகள் தொகுப்பாக வரும்.. அதில் வந்த ஒரு தகவலை முதலில் தருகிறேன்.
" டியூக் ஆஃப் எடின்பரோ ( பிரின்ஸ் ஃபிலிப்) பற்றிய குட்டிச் செய்தி.
ஒரு  சமயம் அவர் ஒரு சேம்பர் ஆஃப்  காமர்ஸின் கூட்டத்தில் பேச சம்மதித்திருந்தார். அது ஒரு பிரபல சேம்பர்.  நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சேம்பரின் தலைவர் தன் வரவேற்புரையில் பிரின்ஸைப் பற்றிக் குறிப்பிட்டபோது பிரின்ஸின் பல திறமைகளை ’ஆஹா’ ‘ ஓஹோ’வென்று விவரித்தார். 

September 01, 2016

’கோல்ட்’வின்னின் பொன்/பென் மொழிகள்


ஹாலிவுட் தயாரிப்பாளர் SAMUEL GOLDWYN (1882-1974) நிறைய ஜோக் அடிப்பார். சிரிப்புப் பொன்மொழிகளை உதிர்ப்பார். (இவற்றைத் தயார் பண்ணிக் கொடுக்கச் சிலரை வேலையில் வைத்திருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு.)அவர் பல வருஷங்களுக்கு முன் STELLA DALLAS என்று ஒரு படம் எடுத்தார். அதில் BARBARA STANWYCK என்பவர் கதாநாயகியாக நடித்தார். 

ஒரு முக்கியமான காட்சியில் கதாநாயகி கண்ணீர் விட்டு அழுதபடியே பேசி நடித்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த கோல்ட்வின்னுக்கும் கண்களில் நீர் கசிந்துவிட்டது. அந்த ஸீன் படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயகியிடம் “நீங்கள் அழுதுகொண்டே நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. இதே காட்சியைத் திரும்பவும் எடுக்க விரும்புகிறேன். இப்போது அழக்கூடாது; ஆனால் பொங்கி வரும் அழுகையைக் கஷ்டப்பட்டு அடக்குவதுபோல் நடித்து வசனங்களைப் பேசுங்கள். பிரமாதமான காட்சியாக அமைந்து விடும்.” என்றார்.
கதாநாயகியும் அப்படியே நடித்தார். அதைப் பார்த்த கோல்ட்வின்னுக்கும் அழுகை பீறிட்டு வந்தது.


இந்தக் காட்சியைப் பற்றிப் பின்னால் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தான் அழுததைச் சொல்லிவிட்டு “இவைதான் என் வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான கணங்கள்” என்றாராம்.
இது எப்படி இருக்கு?
+++++++++
பிடித்த பொன்மொழி  
அவருக்குப் பிடித்த ஒரு பொன்மொழியும் அதைப் பற்றி அவர் எழுதிய சிறிய கட்டுரையையும் இங்கு தருகிறேன்.

உன்னைப் பொறுத்தவரை நீ உனக்கு
உண்மையாக இரு” - ஷேக்ஸ்பியர் .

நான் ஹார்வர்ட் பல்கலை கழகத்திலோ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலோ படிக்கவில்லை என்பது ஊரறிந்த ரகசியம்.
நான் ஒரு தொழிற்சாலை ஊழியராக இருந்தபோது, இரவுப் பள்ளியில் படித்து கற்றுக்கொண்ட சிறிதளவு கல்விதான் என் படிப்பின் அளவு, நான் ஷேக்ஸ்பியரைக் கற்றுணர்ந்த பெரிய மேதை அல்ல.  இருப்பினும்,மேலே குறிப்பிட்டுள்ள அவரது  பொன்மொழியை வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியமான வழிகாட்டி என்று நான் கருதி வந்துள்ளேன். ‘வெற்றிகரமான’ என்று நான் கூறுவதை அந்த வார்த்தை தரும் அர்த்தத்தை நூறு சதவிகிதம் நம்புகிறேன்.
ஹாலிவுட்டில் நான் இருந்த வருடங்களில், நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் நான் கூறிவந்த புத்திமதி ஒன்றே ஒன்றுதான். நடிகை, நடிகர்கள் அவர்களுடைய கால கட்டத்தில் பிரபலமாக இருந்தவர்களைப் போல தாங்களும் இருக்க விரும்புவது, வேறொருவருடைய டைரக் ஷன் பாணியைப் பின்பற்ற டைரக்டர்கள் முயற்சி செய்வது, மிகவும் வெற்றிகரமாக இருக்கும் கதை வசனகர்த்தாக்களைப் போல் எழுத திரையுலக எழுத்தாளர்கள் பிரயத்தனம் செய்வது ஆகிய யாவற்றையும் ஒதுக்கச் சொல்வேன். அவர்களிடம் நான் கூறுவதுண்டு: “நீங்கள் நீங்களாகவே இருங்கள்”