September 28, 2016

உண்மை, நம்புங்கள்!

Believe it or not   என் பதிவுகளைப் படிப்பவர்கள், அவை சுவையாக உள்ளன என்றோ, அறுவை என்றோ, சிரிப்பை உண்டாக்கியது என்றோ, கண்ணில் நீரை வரவழைத்தது என்றோ கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யாரும் ‘ரீல் விடுகிறீர்கள்’ என்றோ, ‘சும்மா கதை விடுகிறீர்கள், நம்ப மாட்டோம’’ என்றோ கூறியதில்லை. இந்தப் பதிவில் மூன்று  குட்டித் தகவல்களை, என் வாழ்க்கை அனுபவங்களைத் தருகிறேன். அவை முழுக்க முழுக்க உண்மை என்று முதலிலேயே தெரிவித்துவிடுகிறேன். நம்ப முடியாத அளவு, ஆனால் உண்மைச் சம்பவங்கள்.
1.டான் கீ ஹோட்டே
ரே பிராட்பரி என்ற பிரபல எழுத்தாளரைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதியபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். அதன் சுட்டி: ஆகா! புத்தகங்கள்! அதில் அவர் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அறிமுக உரையைத் தமிழ்ப்படுத்தித் தந்திருந்தேன். 
அந்த உரையில் DON QUIXOTE என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. உச்சரிப்பும் தெரிய வில்லை. ஸ்பானிஷ் மொழி வார்த்தை அது! எதற்கு வம்பு என்று ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். அதை எழுதும்போது இரவு மணி ஏழு.. தினமும் இரவு 7-7.30 மணிக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சியை எல்லாரும் பார்ப்போம். (மற்ற சமயத்தில் டிவியே போட மாட்டோம்.)
 இரவு ஏழு மணி நிகழ்ச்சியின் பெயர்: JEOPARDY. மிகவும் பிரபலமான, மிகவும் பாப்புலரான வினாடி வினா நிகழ்ச்சி. கடந்த 25, 30 வருஷமாக வாரத்தில் ஐந்து நாள் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒரே நாளில் நாற்பதாயிரம்,   ஐம்பதாயிரம் டாலர்,  என்று கூட ஜெயித்திருக்கிறார்கள்.
 அந்த நிகழ்ச்சி ஆரம்பமாகிவிடவே எழுதுவதை நிறுத்திவிட்டு டி வி இருந்த அறைக்குச் சென்றேன். நான் அறையில் நுழைகிறேன். QUIZ MASTER கேட்ட கேள்வி என்ன தெரியுமா? DON QUIXOTE நாவல் தொடர்பான ஒரு கேள்வி. அவர் DON QUIXOTE-ஐ உச்சரித்ததைக் கவனித்தேன். எனக்காகவே அந்தக் கேள்வியை அவர் கேட்டதாக நான் நினைத்துக்கொண்டேன். நம்ப முடிகிறதா? (சரி. DON QUIXOTE-ஐ எப்படி உச்சரிப்பது? டான் கீ ஹோட்டே.)

2.மறுபடியும் JEOPARDY
மேற்படி சம்பவம் சுமார் நான்கு வருடத்திற்கு முன்பு நடந்தது. சமீபத்தில் நடந்ததைக் கூறுகிறேன். இதுவும் JEOPARDY   தொடர்பானது.
    நான் சோபாவில் உட்கார்ந்து பல மணி நேரம் படிக்கும் வழக்கம் உடையவன். அப்படி பல மணி நேரம் உட்கார்ந்தால் கால் பகுதியில் ரத்தம் (or fluid) அதிகமாகச் சேர்ந்து வீக்கம் ஏற்படுவது உண்டு. அதைத் தவிர்க்க காலை சற்று உயரமாக ஒரு ஸ்டூலின் மீது வைத்துக்கொள்வது நல்லது என்பதால், கால் வைத்துக்கொள்ள மெத்தென்று பஞ்சு அல்லது ஃபோம் வைத்துத் தயாரிக்கப்பட்ட, சற்று சாய்வான ஸ்டூலுடன் கூடிய சோபாவை என் பெண் வாங்கிக் கொடுத்தாள்.
 “அப்பா... உங்களுக்கு ஒரு OTTOMAN வாங்கித் தருகிறேன். அதில்தான் உட்கார வேண்டும்” என்றாள்.            “
        
“என்னது ஆட்டோமேன்?” என்று கேட்டேன். விளக்கினாள். அப்படிப்பட்ட சோபாவின் படத்தைக் காட்டினாள். (பார்க்க படத்தை). பின்னால்   வாங்கியும் கொடுத்துவிட்டாள். இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
 சில வாரங்களுக்கு முன்னால் இந்த சோபாவில் உட்கார்ந்து TIME வார இதழைப் படித்துக் கொண்டிருந்தேன். படிப்பதில் கவனம் செலுத்தாமல் மனம் எங்கேயோ மேய ஆரம்பித்துவிட்டது. ‘இந்த சோபா எவ்வளவு சௌகரியமாக இருக்கிறது’ என்று எண்ணியது. ஆமாம். இதற்கு ஏதோ வித்தியாசமான பெயராயிற்றே,  அந்தப் பெயர் என்ன? என்று யோசித்தது. காரணம் பெயர் முற்றிலுமாக மறந்தே போய்விட்டது. நாலைந்து நிமிஷம் மூளையைக் கசக்கிக்கொண்டேன். பலனில்லை. ‘பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று ‘சீச்சீ...இந்தப் பழம் புளிக்கும்’ என்ற தத்துவத்தின்(!) அடிப்படையில் அதை மனதிலிருந்து உதறிவிட்டுத் தொடர்ந்து TIME இதழைப் படிக்க ஆரம்பித்தேன். படித்துக்கொண்டிருந்த பக்கத்தைப் புரட்டினேன். அது TURKEY நாட்டைப் பற்றிய கட்டுரை. அதில் சட்டென்று கண்ணில் பட்டது OTTOMAN என்ற வார்த்தை.!
            அடாடா.. மண்டையைக் குடைந்துகொண்டிருந்த கேள்விக்கு விடை இதோ கிடைத்து விட்டதே என்று எண்ணினேன். What a coincidence!
     இருங்கள், இன்னொரு அத்தியாயம் இருக்கிறது.
அன்றிரவு JEOPARDY நிகழ்ச்சியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சியில் விளம்பர இடைவேளை வந்த போது என் பெண்ணிடம், மத்தியானம் நடந்த OTTOMAN COINCIDENCE பற்றி சொன்னேன்.
  “அப்படியா...ஆச்சரியமாக இருக்கிறதே” என்றாள்.
 வினாடி வினா நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்த நிகழ்ச்சியில் ஐந்து தலைப்புகளில் ஆறு கேள்விகளைக் கேட்பார் குவிஸ் மாஸ்டர். முதலில் தலைப்புகளை அறிவிப்பார். விளம்பர இடைவேளைக்குப் பிறகு JEOPARDYயின் இரண்டாம் பாகமான DOUBLE JEOPARDY ஆரம்பமானது. நிகழ்ச்சி நடத்துபவர் தலைப்புகளை அறிவித்தார். முதல் தலைப்பு ...  நம்புங்கள்...  OTTOMAN என்று சொன்னார்.
  “ஓ மை காட்... மற்றொரு COINCIDENCE!” என்றாள் என் பெண். இந்த DOUBLE COINCIDENCE-ஐ ஏற்பாடு செய்தது யார்?

3. ஒரு ரயில் டிக்கெட்
அந்தக் காலத்தில் கோடை விடுமுறையில் டில்லியிலிருந்து எந்த ஊருக்கும் ரயில் ரிசர்வேஷன் செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. சில சமயம் 24-30 மணி நேரம் கூட க்யூவில் நிற்க வேண்டியிருக்கும்.
            ஒரு சமயம் எனக்கு சென்னை வர வேண்டிய வேலை வந்துவிட்டது. கோடை விடுமுறை சீஸன் ஆரம்பித்து விட்டதால் ரிசர்வேஷன் என்பது எட்டாத கனவு ஆகிவிட்டது. ரிசர்வேஷனில் பல ஒதுக்கீடுகள் – முக்கியமாக டில்லியில் – உண்டு. இராணுவத்தினருக்கு, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு, அமைச்சர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்று எத்தனையோ.
     பார்லிமென்ட் கட்டடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தனி ரயில்வே ரிசர்வேஷன் கவுன் டர் உண்டு. எம்.பி.களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு போனால் அங்கு புக்கிங் செய்து கொள்ள முடியும்.
      சில நாட்களுக்கு முன்பு ஒரு புது எம்.பி.யை ‘குமுதம்’ இதழுக்காகப் பேட்டி கண்டிருந்தேன். அவர் அந்தமான் தொகுதி எம்.பி. தமிழர். (பின்னால் நிதி அமைச்சகத்தில் ராஜாங்க மந்திரியான திரு கே. ஆர். கணேஷ்.)
         அவரிடம் போய் கடிதம் கேட்கலாமா என்று நினைத்தேன். அதிகம் பரிச்சயம் இல்லாததால் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சென்னைக்குப் போய்வர வேண்டியதும் மிகவும் முக்கியமானதுதான். ‘சரி.. அவரைக் கேட்டுப் பார்க்கலாம்’ என்று எண்ணி அவர் வீட்டுக்குப் போனேன்.       
  விஷயத்தைச் சொன்னேன். “அதற்கென்ன? எழுதித்தருகிறேன்.” என்று கூறி பார்லிமென்ட் ரயில்வே புக்கிங் ஆபீசருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார், என் பெயருக்கு ரிசர்வேஷன் கொடுக்கச் சொல்லி.
          அதை வாங்கிக்கொண்டு மறுநாள் பார்லிமென்ட் கட்டடத்துக்குச் சென்று ‘பாஸ்’ வாங்கிக்கொண்டு ரயில்வே புக்கிங் ரூமிற்குச் சென்றேன்.
  கடிதத்தையும் ரிசர்வேஷன் படிவத்தையும் கொடுத்தேன்.என்னிடமிருந்து அவற்றை வாங்கும்போதே அந்த எழுத்தர் முகத்தில் ஒரு கடுகடுப்பு ஏற்பட்டதைக் கவனித்தேன்.
எம்.பி. கொடுத்த கடிதத்தை இரண்டு மூன்று தடவை படித்தார். இரண்டு வரி கடிதத்தை அத்தனை தடவை படிக்க வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.
       அவர் என்னைப்பார்த்து ‘இந்த மாதிரி எழுதப்பட்ட கடிதங்களுக்கு ரிசர்வேஷன் செய்யக்கூடாது என்று உத்தரவு. ரொம்ப ஸாரி.” என்றார்.
            “இதில் என்ன தப்பு இருக்கிறது? அல்லது என்ன மாதிரி எழுதி இருக்கவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றேன்.
            “இதில் உங்களை FRIEND என்று எழுதியிருக்கிறார். தொகுதி உறுப்பினர் என்றோ உறவினர் என்றோ எழுதி இருக்கவேண்டும்.” என்றார்.
  திரும்பவும் எம்.பி.யிடம் போய்க் கேட்பதா என்று தயக்கம் ஏற்பட்டது. “இதென்ன, நீங்கள் தினமும் வந்து தொந்தரவு செய்கிறீர்கள்? “ என்று கேட்பாரோ என்று தோன்றியது.
 பார்லிமென்ட் கட்டடத்தில் எங்கேயாவது அவர் இருப்பார். ஆனால் அவரை தேடிப் போக முடியாது..‘பாஸ்’ வாங்கியவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் போய்விட்டு, நேராக வெளியே வந்துவிட வேண்டும். வேறு எங்கும் போகக்கூடாது. அங்கங்கே ‘சென்ட்ரி’கள் மடக்கிவிடுவார்கள்.
    ‘ஓ.கே.’ என்று சொல்லிவிட்டு புக்கிங் கவுண்டரிலிருந்து எழுந்து (பார்லிமென்ட் புக்கிங் ஆபீசில் கவுன்டருக்கு வெளியே சேர் போட்டிருப்பார்கள், புக்கிங் செய்ய வருபவர்கள் உட்கார்ந்துகொள்ள!) திரும்பினேன்.
   அதற்குள் பின்னாலிருந்து யாரோ  ஒருவர்  என் தோளில் கையைப் போட்டு “ஹலோ” என்றார்.
      சுதாரித்துக் கொண்டு பார்த்தேன். கே. ஆர். கணேஷ்தான். கும்பிடப்போன தெய்வம் மாதிரி எதிரே வந்து நின்றார்.
   அவரிடம், “ஒன்றுமில்லை. டிக்கெட் ரிசர்வேஷன் செய்துகொள்ள உங்கள் லெட்டரை சற்று மாற்றி எழுதி வாங்கி வரச் சொல்கிறார்கள்.  FRIEND என்பதற்குப் பதில் ‘தொகுதிக்காரர்’ அல்லது  ‘உறவினர்’ என்று எழுத வேண்டுமாம்” என்றேன்.
 இதையெல்லாம் அந்த ரயில்வே புக்கிங் ஊழியர் கேட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவர் உடனே எழுந்து “ஆமாம்.. சார்... அதுதான் எங்களுக்கு உத்தரவு” என்றார்.
    “ஓ... அப்படியா.” என்று சொல்லியபடியே சேரில் உட்கார்ந்தார். என் கையிலிருந்த பேப்பரை வாங்கி அவரிடம் நீட்டினார்.
  “பரவாயில்லை சார். நீங்கள் நேரே வந்திருக்கிறீர்கள். நான் டிக்கெட் கொடுத்துவிடுகிறேன். மெசெஞ்சர் மூலமாக வரும் கடிதங்களுக்கத்தான் இந்த உத்தரவு.” என்கிற மாதிரி ஏதோ காரணம் சொன்னார்.
   அடுத்த ஒரு நிமிடத்தில் ரிசர்வேஷன் செய்து டிக்கெட்டை என்னிடம் கொடுத்தார்.
     “ஆதிமூலமே” என்று நான்  கூப்பிடக்கூடவில்லை. எனக்கு உதவுவதற்குக் கணேஷை அனுப்பிவிட்டார்.
            கடவுளின் கருணையே கருணை!

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

12 comments:

 1. மூன்றாவது 'கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா' கதைதான். மற்ற அனுபவங்கள் ஆச்சர்யம்

  ReplyDelete
 2. Don Quixote- The way you read it is the righ pronunciation for us!! The way the TV anchor pronounced Don Qi Hote - how did you know he referred to Don Quixote!!
  Aadhi moolamae endru kooppittirnthaal PerumaaLae vanthu kaiyil ticket koduththiruppaar polum!!

  ReplyDelete
 3. In the TV show, they show the questions on the screen, as super for people who are unable to follow the American accent.
  -kadugu

  ReplyDelete
  Replies
  1. Thank you. I have seen that when I was in SFO early this year.

   Delete
 4. உங்களுடைய strange coincidences மிகவும் ரசித்தேன். எனக்கும் சில முறை இப்படி நடந்து என்னை ஆச்சர்யபடுத்தியிருக்கிறது.
  உங்கள் பதிவுகளின் வாசகி நான். சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள் சார்.

  ReplyDelete
 5. மிக்க நன்றி.
  -கடுகு

  ReplyDelete
 6. All your experiences are remarkable.For good people God will always help.I am not only admiring your writing but also enjoying.
  K.Ragavan
  Bengaluru

  ReplyDelete
 7. Thank you Sir . I will cheat myself by thinking that I fully deserve these compliments. - Kadugu

  ReplyDelete
 8. உங்கள் coincidence அருமை. எனக்கும் இது போல ஒரு நிகழ்வு 25 வருடங்களுக்கு முன்பு அமைந்தது. TNPSC பரீட்சைக்கு முந்தின நாள் திருப்பிப் பார்த்த அதே மாடல் வினா விடைகள் மறுநாள் கேட்கப்பட, குஷியாக விடை அளித்து பாஸ் ஆனது ஒரு சுகம் என்றால் மெயின் எக்ஸாமில் அந்த coincidence அமையாமல் பெயில் ஆகியது பெரும் சோகம் - நக்கீரன்

  ReplyDelete

 9. Arthur Koestler எழுதிய The Roots of Coincidence (1972) என்ற புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
  - கடுகு

  ReplyDelete
 10. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  மீண்டும் மீண்டும் படித்தேன். சுவாரசியமான சம்பவங்கள், ரசிக்க வைக்கின்றன.

  நன்றி,

  அன்புடன்

  சீதாலஷ்மி சுப்ரமணியம்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :