Showing posts with label ஹி..ஹி.... Show all posts
Showing posts with label ஹி..ஹி.... Show all posts

April 15, 2011

நியூயார்க்கர் கார்ட்டூன்கள் -- கடுகு



சென்ற ஆண்டு நான் அமெரிக்க போயிருந்தபோது ( ”போதுமே உங்கள் ஜம்பம்” என்று யாரோ ஒருவர்  உரக்கக் கத்துவது என் காதில் விழவில்லை!) ஒரு நண்பர் வீட்டில் ஒரு தடிமனான புத்தகம் கண்ணில் பட்டது. ஆர்ட் பேப்பரில் அச்சடிக்கப்பட்டிருந்தது. பெரிய சைஸ்.  . 672 பக்கங்கள், மிகவும் கனமான புத்தகம்/ சொல்லாமல் நைசாக எடுத்து வரமுடியாது என்பதால் வேறு வழியின்றி’ (!)கேட்டு வாங்கி வந்தேன். படித்து விட்டுத் தருகிறேன்; என்று சொல்லி எடுத்து வந்தேன். 1925-லிருந்து  2004   வரை நியூயார்க்கர் வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன்களிலிருந்து 68647 கார்ட்டூன்களை எடுத்து போட்டிருந்தார்கள். ஒரு கார்ட்டூன் கூட விடாமல் பார்த்தேன். ஓவியர்களின் கற்பனை திறனைக் கண்டு  வியந்தேன். ( ஒரு சில கார்ட்டூன்கள் புரியவில்லை. அந்த  கால கட்டத்தில்  நடந்த நிகழ்ச்சிகளை மனதில் வைத்து வரையப்பட்டவையாக இருக்கும்.)
அந்த  புத்தகத்திலிருந்து   சில கார்ட்டூன்களை ‘தாளிப்பு’வில் அவ்வப்போது போடலாம் என்றிருக்கிறேன். இதோ முதல் கார்ட்டூன்!

( ” ஆமாம். புத்தகத்தைச் சுருட்டிக் கொண்டு வந்துவிட்டீர்களா? இல்லாவிட்டால் அவ்வப்போது கார்ட்டூன்களை  எப்படி போடமுடியும்? என்று கேட்கும் சந்தேக ரத்னாக்களுக்கு இதோ பதில்: அத்தனை கார்ட்டூன்களையும்   CD-யிலும் கொடுத்து இருந்தார்கள் ,CD -களை கடனா வாங்கி வந்தேன்.).

’பீசாவின் சாய்ந்த கோபுரம்’   படத்தை வாங்கி வந்து வீட்டில் மாட்டியதன் விளைவு - 1925 வருஷ ஜோக்!

March 05, 2011

எம்.எல்.ஏ. ஏகாம்பரம் --கடுகு


*``தொகுதிப் பக்கமே வருவதில்லைன்னு குற்றம் சாட்டறாங்க. போன வருஷம் தொகுதியில் காலரா. அதற்கு முன்னே ஆறு மாசத்துக்கு முந்தி டெங்கு ஜுரம் பரவி இருந்தது. கொசுத்தொல்லை சமாளிக்க முடியலை. சுத்தமான குடிதண்ணீர் இல்லை. இப்படியிருக்கும் போது எப்படிய்யா  போக முடியும்?''

*``அரசியலில் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், `இவன் மாறாத கட்சி இல்லை' என்று என்னைப் பார்த்து ஏகடியம் பேசுகிறார்கள். லேபர் பார்ட்டி, டெமோக்ராட்ஸ் பார்ட்டி, டோரி பார்ட்டி போன்ற கட்சிகளில் எப்போதாவது சேர்ந்திருகிறேனா?''

*மாவட்டச் செயலாளர்: தொகுதி மக்கள் நிதி திரட்டி கார் வாங்கிக் கொடுக்கறதா இருக்காங்களாம்...''
ஏகாம்பரம்: ``அதுக்குப் பதிலா ஒரு ஆம்புன்ஸ் வாங்கிக் கொடுத்தா கோர்ட்டுக்குப் போய்வர வசதியா இருக்கும்.''

*``தொகுதி மக்களுக்காகச் செலவிட அரசு கொடுத்த பணத்தை என் மனைவி பிள்ளைகளுக்காகச் செலவிட்டு விட்டேன் என்று கூறுகிறாயே. என் மனைவி, மகன்கள் என்ற காரணத்தால் அவர்கள் தொகுதி மக்களாக இல்லாமல் போய் விடுவார்களா? இதுகூடவா உன் மரமண்டைக்குத் தெரியாது?''

*``அசெம்பிளியில் நான் பேசவில்லை என்று விவரம் புரியாமல்  குற்றம் சாட்டுகின்றனர் சிலர்! எம்.எல்.ஏ. சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்தவன் நான்தான். அலவன்ஸ் அதிகரிப்புக்கு முழங்கியவனும் நானே. இலவச பாஸ், டெலிபோன் என்று எத்தனையோ தடவை பேசி இருக்கிறேன்.''


*ஏகாம்பரம்:  டேய். உன்னோட அப்பாங்கற முறையில சொல்றேன், அரசியல்ல நீ நுழையறதைப் பத்தி சந்தோஷம்தான். ஒண்ணு மட்டும் நீ மறக்கக் கூடாது. நீ எது வேணாலும் செய். அதுக்கு முன்ஜாமீன் கிடைக்குமான்னு முதல்ல
நிச்சயப்படுத்திக்கோ. அப்புறம் செய்!''

*
ஏகாம்பரம்: டாக்டர்... இந்த நெஞ்சு வலி மூணு மாசம் கழிச்சு வந்தா நல்லா இருக்கும்.
டாக்டர்: அதென்ன மூணு மாசம் கணக்கு?
ஏகாம்பரம்: முன்ஜாமீன் கெடு 3 மாசத்தில முடிஞ்சிடறது.
*
``ஒரு பொதுத் தேர்தல்னா எவ்வளவு செலவாகிறது? இந்தச் செலவை நம் மக்கள்தான் சுமக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஒரு தரம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அவர் பத்து வருஷம் எம்.எல்.ஏ. என்று வைத்து விடலாம்.''
*
``குற்றப்பத்திரிகை ஆயிரம் பக்கம் கொடுத்திருக்காங்க. அதைப் படிச்சுக் காட்ட கோர்ட் ஏற்பாடு பண்ண வேண்டாமா? வகுப்பில் பின்தங்கியவன் என்பதால் என்னை இப்படி இன்சல்ட் செய்கிறார்களா?''

*
``தாலுகா ஆபீஸ் போகிறீர்கள். டீ செலவுக்கு பத்து ரூபாய் பியூனுக்குக் கொடுக்கிறீர்கள். அதன் பெயர் லஞ்சமா? அதே மாதிரிதான் தொண்டனான நான் ஐந்து லட்சம் இனாம் வாங்கினால் லஞ்சமா? அரசியலில் 64 கோடி, 133 கோடி என கோடிக் கணக்கில் பணம் புரளும் போது ஐந்து லட்சம் என்பது ஒரு பிசாத்துத் தொகை!''

November 20, 2010

பொன்மொழியை லேசாகத் திரித்தால்... கடுகு

Behind every great man stands a woman

ஒரு பொன்மொழியையோ, பழமொழியையோ லேசாகத் திரித்துச் சொல்வது ஒரு வித சாமர்த்தியமான நகைச்சுவை. இந்த வகையான நகைச்சுவைப் பதிவுகளை அவ்வப்போது போட எண்ணியுள்ளேன்.

மேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப் பொன்மொழி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு பிரபலமான மனிதனின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். அதாவது அவளுடைய ஆதரவும் ஊக்கமூட்டலும் அவளது கணவனுக்கு உறுதுணையாக உள்ளன என்பது இதன் கருத்து.

சரி, சில குயுக்தியான மாறுதல் வரிகளைப் பார்க்கலாம்.

* ஒவ்வொரு நல்ல மனிதனின் பின்னாலும் ஒரு நல்ல பெண்மணி இருக்கிறாள்- அப்பாடா என்று ஓய்ந்து போய்!

* ஒவ்வொரு முட்டாளின் பின்னாலும் ஒரு மகத்தான பெண் இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள் -- நல்லதாக ஒரு நகை உண்டா, நட்டு உண்டா என்று அழுது கொண்டு!

* ஒவ்வொரு வெற்றிகரமான ஹீரோவின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறார்; அவளுக்குப் பின்னால்?  அவருடைய மனைவி எரிச்சலுடன் இருக்கிறாள்!

* ஒவ்வொரு தோல்வியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றிகரமான ஆசாமியின் பின்னாலும் அவனுடைய மாமியார் இருக்கிறார், ஆச்சரியம் தாங்காமல்!

*பிரிட்டனின் பிரதமராக இருந்த மெக்மில்லனின் மனைவி லேடி டோரதி மெக்மில்லன் ஒரு சமயம் சொன்னார். ``எந்த ஒரு மனிதனும் வெற்றியாளனாக முடியாது- அவனுக்குப் பின்னால் அவன் மனைவியோ அல்லது அம்மாவோ இல்லாவிட்டால்! இரண்டு பேருமே இருந்து விட்டால் அவனுக்கு இரட்டை அதிர்ஷ்டம்தான்!''

* ஒவ்வொரு பிரபலமானவரின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். ...ஆனால் ஒவ்வொரு பிரபலமான பெண்மணியைப் பொறுத்தவரை ஒரு ஆண் அவளுக்கு முன்னே இருக்கிறான், பல சமயம் அவள் காலைத் தடுக்கி விட்டுக் கொண்டு!\\
===========\
ரவிபிரகாஷ்  அவர்கள் அனுப்பிய பின்னூட்டத்தை. முன்னூட்டமாகப் போட்டிருக்கிறேன்!.

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!

ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!

October 12, 2010

தடை செய்யத் தடை ஏதுமில்லை -கடுகு


அவ்வப்போது சில புத்தகங்கள் அல்லது கட்டுரைகள் மீது தடை விதிக்கப் பட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோம். ஏன் தடை விதிக்கப்பட்டது என்று சில சமயம் காரணங்களும் தரப்படுகின்றன. அரசாங்கத்திற்குப் பிடிக்காத கட்டுரையையோ, கவிதையையோ தடை செய்வது கடினமான காரியமல்ல. ஆனால் அதற்கு ஒரு காரணம் அல்லது சப்பைக் கட்டுத் தேடுவதுதான் கஷ்டமான வேலையாகப் போய்விடும். சற்று யோசித்தால் இதையும் சுலபமாகச் செய்து விடலாம் என்று புரியும். எப்படி? இதோ ஒரு சாம்பிள்!

தடை உத்தரவு
தமிழ்நாட்டில் பல இடங்களில் கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டு வருகிறது.
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா
மலை மேல் ஏறி வா, மல்லிகைப் பூ கொண்டு வா

இப்பாடல் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது.  தடைக்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
.
இப்பாடல் நம்முடைய குழந்தைகளின் மனதில் தோல்வி மனப்பான்மையையும், கோழைத் தனத்தையும் வளர்ப்பதுடன் தைரியம், ஊக்கம், துணி ஆகியவைகளைக் குன்றச் செய்யும் என்பது தெளிவாகிறது.
`நிலா நிலா ஓடி வா' என்னும் போது நிலவுதான் தன்னிடம் வர வேண்டும் என்று குழந்தை கருதுமே தவிர, தான் நிலவிற்குச் செல்ல வேண்டும் என்று விஞ்ஞான மனப்பான்மையோ, அதற்கான துணிவோ வராது.