March 05, 2011

எம்.எல்.ஏ. ஏகாம்பரம் --கடுகு


*``தொகுதிப் பக்கமே வருவதில்லைன்னு குற்றம் சாட்டறாங்க. போன வருஷம் தொகுதியில் காலரா. அதற்கு முன்னே ஆறு மாசத்துக்கு முந்தி டெங்கு ஜுரம் பரவி இருந்தது. கொசுத்தொல்லை சமாளிக்க முடியலை. சுத்தமான குடிதண்ணீர் இல்லை. இப்படியிருக்கும் போது எப்படிய்யா  போக முடியும்?''

*``அரசியலில் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், `இவன் மாறாத கட்சி இல்லை' என்று என்னைப் பார்த்து ஏகடியம் பேசுகிறார்கள். லேபர் பார்ட்டி, டெமோக்ராட்ஸ் பார்ட்டி, டோரி பார்ட்டி போன்ற கட்சிகளில் எப்போதாவது சேர்ந்திருகிறேனா?''

*மாவட்டச் செயலாளர்: தொகுதி மக்கள் நிதி திரட்டி கார் வாங்கிக் கொடுக்கறதா இருக்காங்களாம்...''
ஏகாம்பரம்: ``அதுக்குப் பதிலா ஒரு ஆம்புன்ஸ் வாங்கிக் கொடுத்தா கோர்ட்டுக்குப் போய்வர வசதியா இருக்கும்.''

*``தொகுதி மக்களுக்காகச் செலவிட அரசு கொடுத்த பணத்தை என் மனைவி பிள்ளைகளுக்காகச் செலவிட்டு விட்டேன் என்று கூறுகிறாயே. என் மனைவி, மகன்கள் என்ற காரணத்தால் அவர்கள் தொகுதி மக்களாக இல்லாமல் போய் விடுவார்களா? இதுகூடவா உன் மரமண்டைக்குத் தெரியாது?''

*``அசெம்பிளியில் நான் பேசவில்லை என்று விவரம் புரியாமல்  குற்றம் சாட்டுகின்றனர் சிலர்! எம்.எல்.ஏ. சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுத்தவன் நான்தான். அலவன்ஸ் அதிகரிப்புக்கு முழங்கியவனும் நானே. இலவச பாஸ், டெலிபோன் என்று எத்தனையோ தடவை பேசி இருக்கிறேன்.''


*ஏகாம்பரம்:  டேய். உன்னோட அப்பாங்கற முறையில சொல்றேன், அரசியல்ல நீ நுழையறதைப் பத்தி சந்தோஷம்தான். ஒண்ணு மட்டும் நீ மறக்கக் கூடாது. நீ எது வேணாலும் செய். அதுக்கு முன்ஜாமீன் கிடைக்குமான்னு முதல்ல
நிச்சயப்படுத்திக்கோ. அப்புறம் செய்!''

*
ஏகாம்பரம்: டாக்டர்... இந்த நெஞ்சு வலி மூணு மாசம் கழிச்சு வந்தா நல்லா இருக்கும்.
டாக்டர்: அதென்ன மூணு மாசம் கணக்கு?
ஏகாம்பரம்: முன்ஜாமீன் கெடு 3 மாசத்தில முடிஞ்சிடறது.
*
``ஒரு பொதுத் தேர்தல்னா எவ்வளவு செலவாகிறது? இந்தச் செலவை நம் மக்கள்தான் சுமக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஒரு தரம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அவர் பத்து வருஷம் எம்.எல்.ஏ. என்று வைத்து விடலாம்.''
*
``குற்றப்பத்திரிகை ஆயிரம் பக்கம் கொடுத்திருக்காங்க. அதைப் படிச்சுக் காட்ட கோர்ட் ஏற்பாடு பண்ண வேண்டாமா? வகுப்பில் பின்தங்கியவன் என்பதால் என்னை இப்படி இன்சல்ட் செய்கிறார்களா?''

*
``தாலுகா ஆபீஸ் போகிறீர்கள். டீ செலவுக்கு பத்து ரூபாய் பியூனுக்குக் கொடுக்கிறீர்கள். அதன் பெயர் லஞ்சமா? அதே மாதிரிதான் தொண்டனான நான் ஐந்து லட்சம் இனாம் வாங்கினால் லஞ்சமா? அரசியலில் 64 கோடி, 133 கோடி என கோடிக் கணக்கில் பணம் புரளும் போது ஐந்து லட்சம் என்பது ஒரு பிசாத்துத் தொகை!''

6 comments:

 1. Election fever has caught you too! I think it will be rewarding to write speeches for various speakers! Of course, as a neutral personality, you can ghost write for both the ruling and opposition alliance partners!! - R. J.

  ReplyDelete
 2. இருப்பது ஒரு முதுகு. அதில் எப்படி பல பேரால் டின் காட்டமுடியும். பாவம் கஷ்டப்படுவார்கள். அந்த பாவம் எதற்கு>???!!! :)
  ஆகவே உங்கள் யோசனையைச் செயல்படுத்த இயலாதவனாக இருக்கிறேன்

  ReplyDelete
 3. Election fever has kindled you imagination. The queue would have already there at your residence to write up the election speech/manifesto. Kudos

  ReplyDelete
 4. அவர்கள் சுருட்டிய கோடிகளில் ஏதாவது ஒரு கோடி உங்களுக்குக் கிடைத்திருக்கும்! விட்டு விட்டீர்களே என்று தான் வருத்தம்! - ஜெ.

  ReplyDelete
 5. அலெக்சாண்டர் போப்பின் வைர வரிகளைப் படித்ததும், நிறைய கோயில்களில் ட்யூப் லைட்டை உபயம் செய்து, அதன் வெளிச்சத்தை மறைத்து ‘ இன்னார் உபயம் ‘ என்று எழுதியவற்றைப் படித்த ஞாபகம் வருகிறது! - ஜெ.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :