(ஒரு சமயம், நகைச்சுவை
மலரைத் தயாரித்துத் தரும்படி ‘கல்கி’என்னைக் கேட்டுக் கொண்ட போது, பிரபல நகைச்சுவை
எழுத்தாளர் பாக்கியம். ராமசாமியிடம் ஒரு ’அப்புசாமி கதை' கேட்டேன். "ஆகட்டும்
பார்க்கலாம்' என்று பாக்கியம் ராமசாமி சொன்னார். இதழ் அச்சுக்குப் போகும் தினம் வரை
கதை வராததால் நானே, பாக்கியம் ராமசாமியின் பாணியில் ஒரு அப்புசாமி கதையை எழுதிவிட்டேன்.)
விளம்பர மாடல்
அப்புசாமி
மரவட்டை மாதிரி நன்றாகச் சுருட்டி படுத்துக்
கொண்டு விடிகாலைத் தூக்கத்தை ரசித்துக் கொண்டிருந்தார் அப்புசாமி. அபாரமான கனவு.
ராத்திரி வெகுநேரம் வரை தெருவோர விளக்கின் கீழ்
அவருடைய நண்பர்கள் ரசகுண்டுவும் பீமாராவும் தாங்கள் பார்த்த விட்டலாசார்யா படத்தை அப்புசாமிக்குக்
காட்சி காட்சியாக விவரித்திருந்தார்கள்.
“தாத்தா, நீ ஜெயமாலினியின் அட்டகாசமான டான்ஸைப்
பார்த்திருந்தால் ஸும்மா கிர்ரிங் ஆயிருப்பே'' என்றான் ரசம்.
“டேய் அவரேனு ஹாகே ஆகுவதில்லை. அவரு தும்ப வயசானவரு''
என்றான் பீமா.
“யாருடா கெயம்...? நீ கெயம், ஒன் தாத்தா கெயம்...
அந்தத் தாத்தாவுக்குத் தாத்தா கெயம்... வாயை வாஷிங் சோடா போட்டுக் கழுவு. அய்யாவா கெயம்?...
வூடு கட்டிடுவேன்'' என்று பீமாராவின் மேல் பாய்ந்தார்.
“தாத்தா... பீமாவை வுடு. கதையைக் கேளு. ஒரு சீன்லே
ஜெயமாலினி பயங்கர மழையிலே மாட்டிக்கிறா... அடாடா...''
“ஏய், ரசம்... நீனு ஏனாதரு ஹேளி அவரிகே வயித்தெரிச்சலைக்
கிளப்பாதே. அவரெல்லி சினிமா, சினிமாகே ஹோகுத்தாரே? பாட்டி தான் ஃபுல் கண்ட்ரோல் நல்லி
இட்டித்தாரே...''
“போடா குண்ரோல்! கண்ட்ரோலாம் ஒண்ணாம்... மேலே
கதையைச் சொல்லுடா...''
“தாத்தா மீதிக் கதை நாளைக்கி ராத்திரி தான்.
ருக்மணி திட்டும்...'' என்று ரசகுண்டு சொல்ல, கூட்டம் கலைந்தது.
