June 30, 2010

பையாகுட்டி -- கேரக்டர்

காஞ்சீபுரம் பாசஞ்சர், காட்டாங்கொளத்தூர் ஸ்டேஷனிலிருந்து புறப்படும் சமயம், திறந்த கோட்டுப் பறக்க, வேட்டியை டப்பா கட்டு கட்டியபடி ஓடி வந்து தொத்திக் கொள்ளும் ஆசாமி தான் திருவாளர் பையாகுட்டி. பெயருக்கு ஏற்றார்ப் போல் சிறிய கச்சலான ஆசாமி தான் பையாகுட்டி. ஒருகையில் எல். ஜி. பெருங்காயப் பை, மற்றொரு கையில்  குடை, ரிடையரான பிறகு ஒரு தனியார் கம்பெனியில் "மாடு' போல் உழைக்கும் ஜீவன்.
அந்த வண்டியில் பையாகுட்டி ஏறியதும் கலகலப்பு ஏற்படும். "வாய்யா பையாகுட்டி.... அக்சப்டென்ஸ் என்ன?'' என்று யாராவது கேட்பார்கள்.
 ஆம், பையாகுட்டியின் வாழ்க்கையில் ரேஸ், ரம்மி, குறுக்கெழுத்துப் போட்டி, ஐரிஷ் ஸ்வீப் ஸ்டேக்ஸ், நியூயார்க் காட்டன் ஆகியவைகள் தான் முக்கிய பங்கு பெற்றிருந்தன!
வாய் ஓயாமல் பேசுவார் பையாகுட்டி. "ஏண்டா ராமு, ராத்திரி உன்னை, த்ரீ மெயிலில் காணோம்? ஒரு கை குறைஞ்சுதுன்னு  ஒரு பாசஞ்ஜரைப் போட்டுக் கொண்டோம். பாவிக்கு என்னமா ஆடித்துத் தெரியுமா கை! எல்லாரையும் துரத்தித் துரத்தி அடிச்சான். இத்தனைக்கும் "பிரும்மச்சாரி'யும் "பத்து'வும் எவ்வளவு திருட்டு ஆட்டம் ஆட முடியுமோ அவ்வளவு ஆடினார்கள். பெரிய கல்லுளிமங்கனப்பா அவன். எல்லாரையும் சுருட்டி பைக்குள்ளே போட்டுக் கொண்டான்.

கோளறு பதிகம்-2 - உருவளர்

பாடல்: 2
உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து
      உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
      திசைதெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து - அழகில் சிறந்த சிவந்த மேனியின் மேல் ஒளிவீசும் திருநீற்றினை அணிந்து கொண்டு

உமையொடும் வெள்ளை விடை மேல் - உமையன்னையுடன் வெள்ளை எருதின் மேல் ஏறி

முருகலர் கொன்றை - தேன் நிறைந்து மலர்ந்த அழகிய கொன்றைப் பூவினையும்

திங்கள் - நிலவையும்

முடிமேல் அணிந்து - திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதால்

திருமகள் - செல்வத்திற்கு அதிபதியான திருமகள்

கலையதூர்தி - கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்

செயமாது - வெற்றிக்கு அதிபதியான மலைமகள்

பூமி - நிலமகள்

திசை தெய்வமான பலவும் - எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அடியவர்களுக்கு மிக நல்லவை. மிக மிக நல்லவை. நன்மையை அன்றி மற்றவற்றைத் தாரா. ( நெதி = செல்வம்)

June 26, 2010

கமலாவும் காரும் -- கடுகு

   என் அருமை மனைவி கமலாவுக்கு எந்த வேளையில் அந்த யோசனை தோன்றியதோ எனக்குத் தெரியாது. (தெரியாது என்றா சொன்னேன்? தப்பு, தப்பு, அவளுக்கு அந்த ஐடியா தோன்றிய வேளை, எனக்குப் போதாத வேளை!)
    சூடாகக் காப்பியைக் கொடுத்தபடியே  (சூடான காப்பி என்பது எனக்கு அவள் வைக்கும் ஐஸ்!) கமலா கேட்டாள்.
    ""எப்போ காரை வாங்கப் போகிறீங்க?''
    ""அநியாய விலை விக்கிறது, கீரை கெட்ட கேட்டுக்கு இவ்வளவு கிராக்கியா?'' என்றேன். சமயத்தில் இப்படி அரை குறையாகக் காதில் விழுந்தது போல் நான் பாவிப்பது உண்டு.
    ""நான் காரைச் சொன்னால், நீங்க கீரையைச் சொல்றீங்க. அதுவே உங்க அக்கா...''
    ""இதோ பார், கமலா. இனிமேல் எங்க அக்காவுக்கு ஒரு ரிப்பன் கூட வாங்கிக் கொடுக்கலை. அவளுக்கு வாங்கிக் கொடுத்தால், உங்கிட்டே வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்குது... என்ன கேட்ட? கார் வாங்கணும்னா?.. இதென்ன புதுசா?... இத்தனை நாளாக எதிர்வீட்டு மைதிலி கண்ணன் புடவை வாங்கினால், நீ வாங்குவே. அடுத்த வீட்டு மல்லிகா மோகன், பிளாஸ்டிக் டப்பா வாங்கினால் நீ வாங்குவே. மூணாவது வீட்டு ஜானகி சந்துரு எவர்சில்வர் பாத்திரம் வாங்கினால், நீயும் வாங்குவே. கோடி வீட்டு சுதா மூர்த்தி, நகைச் சீட்டுக் கட்டினால், நீயும் கட்டுவே. இந்த நாலு பேர்லே யார் கார் வாங்கியிருக்கா, சொல்லு. அவங்களை ஒரு கை பார்த்துவிட்டு வருகிறேன்'' என்றேன்.
    ""நன்னாயிருக்குதே நீங்க சொல்றது? ஏன் என்னைப் பார்த்து தான் அவங்க ஏதாவது வாங்கட்டுமே. "மிஸஸ் கமலா கடுகு கார் வாங்கியிருக்கா, நாமும் வாங்கலாம்' என்று அவங்க சொன்னால் என்ன தப்பு?''

புருஷோத்தம் கௌசிக்

பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.
 மத்திய அமச்சரவையில் விமானத் துறை அமைச்சராக புருஷோத்தம் கௌசிக் என்பவர் இருந்தார்.  இவர் ஒரு நாள் விடிகாலை ஸ்டேட்ஸ்மென் தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார். ஸ்டேட்ஸ்மெனில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் `புகார் பெட்டி' கடிதங்கள் வெளியாகும். அதில் ஒரு கடிதத்தில்l இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயணி ஒருவர் தனக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் எழுதியிருந்தார்.

கௌசிக் உடனே ஸ்டேட்ஸ்மென் ஆபீசுக்குப் போன் செய்து அந்தக் கடிதம் எழுதியவரின் விலாசத்தைக் கேட்டார். அந்த விடிகாலை வேளையில் பணியில் இருந்த ஒரு உதவி ஆசிரியர் அங்குமிங்கும் தேடி குறிப்பிட்ட கடிதத்தைக் கண்டுபிடித்து விவரங்களைக் கொடுத்தார்.

கௌசிக் உடனே காரை எடுத்துக் கொண்டு (டில்லியில் பட்டேல் நகரில் இருந்த) அந்தப் பயணியின் வீட்டுக்கே   போய் கதவைத் தட்டினார்.

கோளறு பதிகம்-1: என்பொடு

பாடல் 1:
என்பொடு கொம்பா டாமை இவைமார் பிலங்க
      எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டோ டாறும்
      உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க         \
எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்
ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்
ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்
பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்
ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்
உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.

June 23, 2010

How Old Are You?

  வயது ஒரு வரம்பல்ல. 
     ராஜாஜி, 'சக்கரவர்த்தி திருமக'னைதனது  75 வது வயதில் எழுதினார்.
     ஜியார்ஜ் பர்ன்ஸ் என்ற அமெரிக்க நகைச்சுவை நடிகர், லண்டனில் தனது 100-வது பிறந்த தினத்தன்று நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த  பிக்கடல்லியில் அரங்கத்தை பதிவு செய்து வைத்திருந்தார். ( துரதிர்ஷ்டம் அதற்கு  சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு காலமாகிவிட்டார்.)
   வில் டூரண்ட் , பதினோரு  தொகுதி புத்தகத்தை (STORY OF CIVILISATION) எழுதி முடித்தபோது அவருக்கு வயது 90. 
    அமெரிக்காவின் பிபல செயின் ஸ்டோரா ன ’கே- மார்ட்’டை,  எச்.எச். க்ரெஸ்கே 1962-ல் துவக்கியபோது அவருக்கு வயது 95. ( இன்று  அதற்குக் கிளைகள் 1300 க்கு மேல் உள்ளன!)

 How Old Are You?
Age is a quality of mind.
If you have left your dreams behind,
If hope is cold,
If you no longer look ahead 
If your ambitions’ fires are dead –
Then you are old.

But if from life you take the best,
And if in life you keep the jest,
If love you hold;
No matter how the years go by,
No matter how birthdays fly –
You are not old.
                  -  H.S. Fritsch

இன்னும் கொஞ்சம் - SWIFTIES

*நேசன்.எழுதியது: . கடிகாரம் வாங்கிய நேரமே சரியில்லை என அலுத்துக் கொண்டான்,மணி!

* kggouthaman .எழுதியது.. ”தேங்காயைத் துருவித் தாங்க என்று கேட்டுகிட்டே இருக்கேன், அதைச் செய்யாம அங்கே நீங்க கடுகு படிச்சி சிரிச்சுகிட்டே இருக்கீங்களே”  என்று வெடித்தாள் என் மனைவி. 

?????   எழுதியவை:
*      ஏன் சரியாக வேலை செய்யவில்லை என்றதற்கு, கொல்லத்துக்காரர் பூசி மெழுகி பதில் சொன்னார்,

*         காட்டுப்பாக்கதில் உள்ள வங்கி கிளையில் தன்  பிள்ளை வேலை பார்ப்பதாக  வனத்துறை அதிகாரி சொன்னார்,

* பள்ளி  நாடகத்தில்  அனுமார் வேஷத்திற்கு கிட்டு என்ற வால் பையனைப் போட்டார் ஆசிரியர்..

*    ”வடை ஊசிப் போயிருக்கிறது”  என்றார் தையல்காரர்.

*  ”யாராவது வாலாட்டினால் ஒரு  போடு போடுவேன்”    என்று அடித்துச் சொன்னான்.

*   போர்வீரனைப் பார்த்து  வாள் வாள் என்று கத்தினார் தளபதி.

*   கண் தானம் பற்றி கட்டுரை எழுதத் தெரியாமல் விழித்தான்

* பீமன் படத்தில் கதையே இல்லை என்றான் அவன்.

-----------------------.
 சில ஆங்கில  TOM SWIFTIES  இங்கு தருகிறேன்.
.
* "I collect fairy tales," said Tom grimly.
*  All his attempts to open a Juice shop ended  fruitlessly.  
* " I do not care for his past nor for his future" Tom said tensely.

June 20, 2010

தாடித் தாத்தா - கேரக்டர்

மூன்றே தெருக்கள் கொண்ட கிராமத்தின் நடுத்தெருவில், கூரை வேய்ந்த வீட்டின், மழமழவென்று மெழுகப்பட்ட திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்தான் தாடித் தாத்தா. இவர் கிராமத்தின் உயிர் நாடி. ஒரு காலத்தில் பிரைமரி ஸ்கூல் வாத்தியாராக இருந்து ஓய்வு பெற்றவர். ஆதலால் "கல்விமான்'!
ஊரின் தனிநபர் பஞ்சாயத்து (ஒன் மேன் ட்ரிப்யூனல்). நாடி ஜோஸ்யர், நாட்டு வைத்தியர், அரசியல் அறிஞர், பகுதி நேர போஸ்ட்மாஸ்டர், தெருக்கூத்து வாத்தியார் - எல்லாம் இவரே. ஊரில் இவருக்குத் தெரியாமல் அல்லது இவரது ஆலோசனை இன்றி ஒரு காரியமும் நடக்காது.
"யாரு ... பச்சையா போவறது. இப்படி வா ... இந்த தபால் பையைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. ரன்னர் வருவான்.ஆமாம்... ராத்திரி இன்னா களத்து மேட்டிலே தகராறு. மறுபடியும் மருதாசலம் தண்ணி போட்டு விட்டு வந்துட்டானா? எத்தினி தபா சொல்லியிருக்கேன்! அவனுக்குப் புரிஞ்சாதானே. நம்ம வைத்திய  சாஸ்திரங்கள்ளே சுத்தமாகப் போட்டிருக்குது...
” சேத்திரமது  துமியளவும் தவிர்த்திடு. நேத்திரமது நேய மாகும். சாத்திரம் கூறும் சத்தியமதை பாத்திரமே நீ அறிவாய், பாத்திரு, புன்னைவன நாயகனே'' என்று கல்லுளி சித்தர் பாடலே  பாடியிருக்காரு.  இதெல்லாம் யாரு படிக்கிறாங்க.  "சின்னிம்மா' பாட்டு பாடறாங்க, பட்டணம் தான் "போவலாமடி பொம்பளை'ன்னு ... ஹும், யாரைச்சொல்லியும் பயனில்லை. குரு ஓட்டம் போய் சனி வூட்டை வுட்டு நகந்தாத்தான் வெசாழ தசை வருது. அது இருக்குதே இன்னும் இரண்டு மண்டலத்துக்கு மேலே ....''

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

 ஒரு சமயம் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ரயில்வே அமைச்சராக இருந்தார்.
ரயில்வே அமைச்சகத்தின் பல மாடிக் கட்டடமான  `ரயில் பவனில்'  இவரது அலுவலகம். இங்கு பல பணியாளர்கள் மிகவும் தாமதமாக வருவதைக் கவனித்த அவர், ஒரு சுற்றறிக்கையை அனுப்பச் செய்தார்- அனைவரும் ஆபீசுக்கு தாமதமாக வருவதை நிறுத்த வேண்டும் என்று. இந்தச் சுற்றறிக்கை வந்ததும் நிலைமை சீரடைந்தது.  இத்தோடு இது மாதிரி எத்தனை சர்க்குலர் பார்த்திருப்போம் என்று கமெண்ட் அடித்த பணியாளர்கள் நாலைந்து வாரங்களில் பழைய குருடி ஆகி விட்டார்கள். பார்த்தார் ஜார்ஜ்.
ஒரு நாள் காலை  என்ன செய்தார் தெரியுமா?

June 17, 2010

உமி பிளஸ் அவல்

அன்புடையீர்...!

வணக்கம்.
1. உமி பிளஸ் அவல்
என் பதிவுகளில் தப்பித் தவறி சிற்சில நல்ல பகுதிகளை நான் தெரிந்தோ தெரியாமலேயோ போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளைப் பாராட்டிப் பின்னூட்டம் போடுகிறீர்கள். மிக்க நன்றி.
             நகைச்சுவையிலும் பல அபூர்வ உண்மைகளும் வாழ்க்கைக்கு உதவக்கூடிய பாடங்களும்  உள்ளன. என் பதிவுகளில் நல்ல நகைச்சுவை இருக்கும். (இது பற்றி கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்தி!) மனதை தொடக்கூடிய, மனிதனை உயர்த்தக்கூடிய விஷயங்களும் இருக்கும்.
உங்கள் மனதைத் தொட்ட, நெகிழச் செய்த அல்லது எண்ணங்களை மேம்படுத்த செய்த பதிவுகளை நீங்கள் படித்தால் மட்டும் போதாது. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள். இப்படி நல்ல விஷயங்களைச் சொன்னால் அவர்களுக்கு வேறு எந்த நல்ல புத்திமதிகளையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இம்மாதிரி சின்னச் சின்ன சம்பவங்கள், கருத்துக்கள் அவர்கள் மனதில் அவர்களை யறியாமலேயே பதிந்து அவர்களிடம் உன்னதப் பண்புகளைத் தானாகவே வளர்க்கும்.
             இது ஏதோ ஒப்புக்குக் கூறும் யோசனை அல்ல. என் பேத்திக்கு இது மாதிரி எத்தனையோ விஷயங்களையும் பொன்மொழிகளையும் கூறி வருகிறேன். அவை   அவளை - வயது 12 - பல விதத்திலும் அழகாகச் செதுக்கி வருவதைப் பார்க்கிறேன். பல பண்புகள் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே அல்லது நிர்ப்பந்தப்படுத்தாமலேயே அவளுக்குள்ளே விதைக்கப்பட்டு வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன்.
      இதை ஜம்பப் புகழ்ச்சியாகக் கருதாதீர்கள்.
     என் பதிவுகளில் உமி அதிகமிருக்கும். எப்போதாவது அவல் கிடைக்கக் கூடும். அதை ரசித்து, ருசித்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள்.
அடுத்து ....

நாலு பேரு சொன்னாங்க!

ரவி பிரகாஷ் ---சுரேஷ் கண்ணன் -டோண்டு ராகவன் எழுதியவை 

1.ரவி பிரகாஷ் எழுதியது:  ” நகைச்சுவையும் நானும்” பதிவிற்கு வந்த பின்னூட்டம்

          கட்டுரை அபாரம்! ரா.கி.ரா-வின் எ.க.எ. போன்று எ.ந.க.எ. என்று நீங்கள் ஒரு புத்தகமே போடலாம்! நிற்க. மறைந்த மகரம் அவர்களும், அவரின் புதல்வர் மார்க்கபந்து அவர்களும் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். மகரம் சொன்ன ஒரு தமாஷை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 
         தீண்டாமை ஒழிப்பு, கள்ளுண்ணாமை போன்ற காந்தியின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரபல எழுத்தாளர்களிடம் சிறுகதை கேட்டு ஒரு புத்தகமாகத் தொகுத்தார் மகரம். காந்தி கொள்கைகளுக்குப் பொருத்தமாக, மறைந்த எழுத்தாளர்கள் சிலர் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த சிறுகதைகளையும் இந்தத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டார். புதிதாகக் கதை எழுதித் தந்தவர்களில் ராஜாஜியும் ஒருவர்.
          புத்தகம் தயாரானதும், மரியாதை நிமித்தமாக ஒரு பிரதியுடன் சென்று ராஜாஜியைச் சந்தித்தார் மகரம். ராஜாஜி புத்தகத்தை வாங்கி, முதல் சில பக்கங்களைப் புரட்டி, முதல் கதையை மட்டும் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டார். "ஐயா! உங்கள் கதை வந்திருக்கிறதே... பார்க்கவில்லையா?" என்று மகரம் கேட்க, "என் கதையா? இதில் இல்லையே?" என்று சொல்லியிருக்கிறார் ராஜாஜி. அவருக்குத் தன் கதையைத்தான் முதல் கதையாக வெளியிட்டிருப்பார்கள் என்கிற எண்ணம்.
      மகரம் அந்தப் புத்தகத்தில் ஐந்தாவதாகவோ, ஆறாவதாகவோ வெளியாகியிருந்த ராஜாஜியின் கதைப் பக்கத்தைப் பிரித்துக் காண்பிக்க, "நடுவுல போட்டுட்டீங்களா என் கதையை?" என்று ஒருவித சலிப்புக் குரலில் கேட்டிருக்கிறார் ராஜாஜி.

June 15, 2010

உள்ளே இருக்கும் பொன்

சிக்கன் ஸூப் ஃபார் த ஸோல்   (Chicken soup for  the Soul)  என்ற  புத்தகத்தில் ஜேக் கான்ஃபீல்ட் ( Jack Canfield)  எழுதியுள்ள  கோல்டன் புத்தா என்ற கட்டுரையைப் படித்து நெகிழ்ந்து போனேன். அந்தக் கட்டுரையை சுருக்கி த் தருகிறேன். ( கூடுதல் தகவலையும் சேர்த்து.) 
---------------- 
1988'ம் ஆண்டு என் மனைவியும் நானும் ஹாங்காங்கில் ஒரு மகா நாட்டில் கலந்து கொள்ள வந்தோம்.  அப்படியே தாய்லாந்திற்கும் ஒரு சுற்றுலா பயணமாகச் சென்றோம்
    பாங்காக்கில் உள்ள புத்தர் கோவில்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். எங்களுடன் ஒரு மொழிபெயர்ப்பாளர் வந்தார்.  அங்கு பல கோவில்களைப் பார்த்தோம்.  பெரும்பாலான கோவில்கள் பற்றிய விவரங்கள் கனவு போல மறந்து விட்டாலும், ஒரு கோவில் எங்கள் நினைவிலும் மனதிலும் ஆழமாக பதிந்துவிட்டது. பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது.
     அந்தக் கோவிலின் பெயர் தங்க புத்தர் ஆலயம். அது சிறிய கோயில். சுமார் 30 அடிக்கு 40 அடிதான் இருக்கும். உள்ளே நுழைந்ததும் அப்படியே பிரமித்துப் போய்விட்டோம். அங்கிருந்த புத்தர் சிலையைப் பார்த்தோம். எவ்வளவு பிரம்மாண்டமான சிலை! சொக்கத் தங்கம்! என்னமாய் தகத்தாயமாய் ஜொலித்தது, பத்தரை அடி உயர தங்கச்சிலை. பத்தரை மாற்றுத் தங்கம். சாலிட் கோல்ட்! இரண்டரை டன் எடையாம்.  மொழிப்பெயர்ப்பாளர் சொன்ன தகவல்.
அதன் மதிப்பு உத்தேசமாக சொன்னால் 300 மில்லியன் டாலர் இருக்கலாம்.! புத்தரின் கம்பீரமான சிலை. மெலிதான புன்முறுவலுடன் கருணையுடன் நோக்கும் பொலிவின் அழகை எப்படி விவரிப்பேன்!

June 12, 2010

குந்தன்மல் சௌகார் -கேரக்டர்

"நகைகளின் பெயரில் கடன் கொடுக்கப்படும்'  என்று எழுதப்பட்ட போர்டு தொங்கும், அந்த எட்டடிக்கு எட்டடி சின்னக் கடையின் கல்லாவின் முன் சப்பணம் கட்டி உட்கார்ந்துகொண்டு, எதிரே இருக்கும் பளபளக்கும் தராசில் இரண்டொரு வெள்ளி நகைகளை நிறுத்துக் கொண்டிருக்கும் நபர்தான் குந்தன்மல் சௌகார். அந்த சின்ன ஊரின் ஒரே லேவாதேவிக்காரர்.
பளிச்சென்று வெள்ளை மல் வேட்டி, வெள்ளை ஜிப்பா, பிரிமணை மாதிரி முறுக்கப்பட்டு தலையில் கட்டப்பட்டுள்ள வெள்ளை முண்டாசு, இவைகளுக்கு "மேட்ச்" ஆவது போன்ற வெள்ளை "தொங்கு' மீசை! வாழ் நாள் முழுவதும் வெள்ளையப்பருடனும் வெள்ளி நகைகளுடனுமே கழித்து விட்டதால் இப்படி வெள்ளையாகக் காட்சி அளிக்கிறாரோ!.
"என்ன சௌகாரே,  நீங்க என்ன மல் துணியைப் பீஸ் கணக்கில் வாங்கிடுவீங்களா? முண்டாசிலிருந்து திண்டு வரை ஒரே மல் தானா?'' என்று கேட்டால், "ஸுத்தம் ஸோறு போடும். நமக்கு எதுக்கப்பா ஆடம்பரம்? நம்ப பேரே என்னா தெரியுமா? குந்தன்மல்''  என்பார்.  "ஸர்ரி... ஸர்ரி... என்னா கையிலே, வெள்ளி கொலுஸா? இப்பத்தானே மூட்டுக்கினு போனே, மல்லாக்கொட்டை வித்தேன்னு சொல்லி.... சரி, அம்பது ரூபாய் வாங்கிட்டு போ.... அரே கோன் ஹை.... இஸ்கோ பச்சாஸ் ருப்யா தேதோ'' --தன் உதவியாளருடன் மட்டும் இந்தியில் தான் பேசுவார்.

கற்றது கை மண்- தமிழ் முத்து

கற்றது கை மண் அளவு் கல்லாதது உலகு அளவு என்று
கற்ற கலை மடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும் பந்தயம் கூற வேண்டாம், புலவீர்
எறும்பும் தன் கையால் எண் சாண்
                                                            -ஔவையார்
 :
கலைமடந்தை ஓதுகிறாள் - கலைவாணியே இன்னும் படித்துக்கொண்டிருக்கிறாள்
எண் சாண் - எறும்பும் அதன் கையால் எட்டு ஜாண்

June 09, 2010

சுயசரிதமும் நானும்- கடுகு

நான் ஒரு நாள் என் சுயசரிதையை எழுதப் போகிறேன் என்று என் அருமை மனைவி கமலாவிடம் சொன்னேன்.

``நல்ல காரியம்தான். ரொம்பப் பேர் சுயசரித்திரம் என்ற பெயரில் ஏகமாகக் கற்பனைகளைக் கலந்து எழுதுவார்கள். அந்தக் கவலை உங்கள் புத்தகத்தைப் பற்றி எனக்கு துளிக்கூட சந்தேகம் கிடையாது. ஏனென்றால் உங்களுக்குத் தான் கற்பனை வறட்சியாயிற்றே'' என்று சொன்னாள். அதோடு விட்டாளா? எங்கோ படித்த ஜோக் நினைவுக்கு வர, ”சுய சரித்திரம் எழுதுங்கோ.  முதல்ல கதாநாயகனை மாத்திட்டா சூப்பராக இருக்கும்" என்றாள்!

அவள் சொன்னால் சொல்லட்டும் என்று துணிந்து செயலில் இறங்கினேன். என் அகராதியில் `பின்வாங்குதல்' என்ற பதமே கிடையாது. (பார்க்கப் போனால் இன்னும் உண்மை பேசுதல், வாங்கிய கடனை திருப்பித் தருதல் போன்ற எத்தனையோ ஆயிரம் வார்த்தைகள் கிடையாது.)

``சரி, என்ன தலைப்பு?'' என்று அவளை யோசனை கேட்டேன்.

புள்ளிகள்: புரபசர் மது தந்தவதே

புரபசர் மது தந்தவதே ஒரு எளிமையான அரசியல்வாதி இவர். (  அவர் ந்யூக்ளியர் ஃபிஸிக்ஸ் பேராசிரியராக இருந்தவர்,) மது தந்தவதே ரயில்வே அமைச்சராக சில காலம் இருந்தார். அப்போது ஏதோ ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி ஒரு ஃபைல் அவர் பார்வைக்கு வந்தது. ஒரு கிளார்க் நீண்ட குறிப்பை எழுதி இருந்தார். அந்த பைல் ஒவ்வொரு மேலதிகாரி வழியாக (செக் ஷன் ஆபீசர், டெபுடி டைரக்டர், டைரக்டர் என்று) பல படிகளைக் கடந்து அமைச்சரின் பார்வைக்குப் போயிற்று. எல்லாரும் ஒரு மூலையில் தங்கள் இனிஷியலை மட்டும் போட்டு விட்டு மேலே அமைச்சருக்கு அனுப்பியிருந்தார்கள்.

மது தந்தவதேக்கு அந்த ஃபைலில் ஒரு சந்தேகம் வந்தது. கடைசியாக அந்த ஃபைலைப் பார்த்து அனுப்பிய அதிகாரியை அழைத்து சந்தேகத்தைக் கேட்டார் அவர். ``அதுவா...வந்து..  இதோ விசாரித்துச் சொல்கிறேன்...'' என்று மழுப்பினார்.  பார்த்தார் மது தந்தவதே. நேரே செக் ஷனுக்கு போன் பண்ணி குறிப்பிட்ட கிளார்க்கை அழைத்தார். இந்த பைலைக் குறிப்பிட்டு, ``ஒன்றிரண்டு சந்தேகம் இருக்கிறது. உடனே என் அறைக்கு வர முடியுமா?'' என்று கேட்டார். குமாஸ்தாவுக்குத் தலைகால் புரியவில்லை. கூடவே பயமும் ஏற்பட்டது.  அமைச்சரின் அறைக்குப் போனார். மது தந்தவதே தன் சந்தேகங்களைக் கேட்டார் . குமாஸ்தாவும் உரிய விளக்கங்களையும், விவரங்களையும் சொன்னார்.

மது தந்தவதே அவரிடம், ``ரொம்ப தேங்க்ஸ். இனிமேல் இந்த ஃபைலை மேலதிகாரிகள் வழியாக அனுப்பத் தேவையில்லை. உங்கள் குறிப்புடன் என்னிடம் நேராக வந்து கொடுங்கள்'' என்று சொல்லி விட்டார்!

அம்பிகிராம்ஸ் (Ambigrams ) - சில படங்கள்.

படங்களைத் தலை கீழாகவும் திருப்பிப் பாருங்கள்.

 தாடி மன்னரா? அல்லது குதிரையா?


இது FAITH . திருப்பிப்
பார்த்தால் HOPE என்று இருக்கும்
.

June 06, 2010

கமலாவுடன் சென்ற கல்யாணம் - கடுகு

நண்பர் சாரநாதன் அன்று என் வீட்டிற்கு வந்திருந்தார். பொதுவாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.

''... ஆமாம். கிட்டா வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தாயா? ஏதோ கலாட்டா என்று கேள்விப்பட்டேனே...'' என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா'' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, என் அருமை மனைவி கமலா, ""என்ன ஒண்ணுமில்லையா... அது பெரிய கதையாச்சே'' என்றாள்.

"என்னப்பா! அந்தக் கதையை எனக்குச் சொல்லக் கூடாதா?'' என்று சாரு கேட்க,

"நீதான் சொல்லேன் கமலா'' என்றேன்.

கமலா, "நீங்கதான் கோர்வையாகச் சொல்வீங்க... ஒரு விஷயத்தையும் விடாமல் கச்சிதமாய் சொல்வீங்க... எனக்கு நடுநடுவில் மறந்து போய்விடும்'' என்றாள்.

புள்ளிகள்: மொரார்ஜி

1977'ல் ஜனதா கட்சி மகத்தான வெற்றி பெற்றது. மொரார்ஜி தேசாய் பிரதமர்

பதவியை ஏற்றார். அந்த சமயம் சாவி அவர்கள் டில்லிக்கு வந்து பலரைப் பேட்டி கண்டார். மொரார்ஜி பதவி ஏற்ற மறுதினம் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பிரதமரின் அறையில் அவரைப் பேட்டி கண்டோம். தினமணி கதிர் இதழை மொரார்ஜியிடம் சாவி கொடுத்தார். அட்டையில் மொரார்ஜியின் கார்ட்டூன் ஒன்று இருந்தது. (தாணு போட்டது என்பது நினைவு.) அந்தப் படத்தைப் பார்த்ததும் மொரார்ஜி தேசாய் லேசாகத் தலையை ஆட்டியபடியே சாவியிடம் கேட்டார்: ``உங்கள் ஆர்ட்டிஸ்ட் எந்த செஞ்சுரியில் இருக்கிறார்? இந்த கார்ட்டூனில் என் கையில் ஒரு கைத்தடியை வரைந்திருக்கிறாரே... நான் கைத்தடியைத் தூக்கி எறிந்து எத்தனையோ வருஷங்கள் ஆகின்றன'' என்றார். ``அப்படியா'' என்று தலையை ஆட்டினோம்.

பேட்டி முடிந்து வெளியே வந்ததும் சாவி பரபரத்தார். ``இன்றைக்கு அடுத்த வார அட்டை அச்சுக்குப் போகும். அதை நிறுத்தி விட்டு மாற்றச் சொல்லணும்'' என்றார். வீட்டுக்கு வந்ததும் சென்னைக்கு போன் செய்து, உதவி ஆசிரியரிடம் பேசினார்.

நூல் வியாபார கணக்கில் சிக்கல் -- மேலும் சில ஸ்விஃப்டிகள்

சில நாட்களுக்கு இந்த வார்த்தை விளயாட்டுக்கு எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தேன்.

திரு ரவிபிரகாஷ் அனுப்பியவை. (http://vikatandiary.blogspot.com/

 ”என் மாமியார் பத்மினி ஆடாத ஆட்டமா!” என்றாள் மருமகள் ஜானு.

“எனக்கு ஆத்திரம் வந்துதோ, அவ்ளோதான்..!” - சீறினாள் நாகலட்சுமி.

”இந்த மாவு சரியா அரைபடவே இல்லே!” - சலித்துக்கொண்டாள் பத்மா.

“நீ கொடுக்கிற பத்து ரூபாய்க்கு நைலான் நூலா வாங்கித் தைக்க முடியும்?” - குத்தலாகக் கேட்டான் டெய்லர் மணி.

கூப்பிடக் கூப்பிட சட்டையே செய்யாமல் போய்விட்டான் டெய்லர் தண்டபாணி.

”இந்த ரப்பர் பந்தை ரெண்டு ரூபாய்க்குத் தர முடியுமான்னுதானே கேட்டேன்? அதுக்கு ஏன் இப்படி மேலும் கீழும் எகிறிக் குதிக்கிறீங்க?”

“ஆட்டிறைச்சி கிலோ 120-க்கும் கம்மி கிடையாதுங்க!” - வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொன்னார் கசாப்புக் கடைக்காரர்.

அன்னை சமாதியில் மெழுகுவத்தி ஏற்றி வைத்து வணங்கியபோது, அவள் உள்ளம் நெகிழ்ச்சியில் உருகிக் கரைந்தது.
“வெளியே போடா நாயே!” என வள்ளென்று விழுந்தார் எஜமானர்.

( மேலும் வரும்,)

June 03, 2010

சித்ராலயா கோபுவும் நானும் - கடுகு

டைரக்டர் ஸ்ரீதரைப் பற்றி நான் எழுதிய பதிவில் சித்ராலயா கோபுவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

கோபுவும் நானும் நண்பர்கள் மட்டும் அல்ல மேடை நகைச் சுவை நிகழ்ச்சிகளை நடத்தி பெயர் பெற்ற லாரல் - ஹார்டிக்கள் (அல்லது கவுண்டமணி - செந்தில்கள்). இது பற்றி பின்னால் சொல்லுகிறேன்.
    கோபு-ஸ்ரீதர்-நான் மூவரும் செங்கல்பட்டில் படித்தவர்கள். பள்ளி நாடகங்களில் ஒன்றாக நடித்தவர்கள்.

கோபு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருதம் படித்தார். நாங்கள் தமிழ். (நமக்குள் இருக்கட்டும். கோபு சமஸ்கிருதம் படித்ததால் அவர் அதில் புலமை அடைந்தவர் என்று எண்ணிவிடாதீர்கள். சமஸ்கிருதம் படித்ததால் அவர் தமிழ் படிக்கவில்லை.  அவ்வளவுதான்.  இன்றைக்கும் அவருக்கு பெரிய ’ற’ சின்ன ’ர’ தகராறுதான்.

சில சமயம் கோபுவை நான் கலாட்டா பண்ணியிருக்கிறேன். ”நீ என்ன கதை, வசன கர்த்தா? பெரிய ’ற’ சின்ன ’ர’ வித்தியாசம் தெரியாதவன் நீ” என்று.  அதற்கு கோபு என்ன சொல்லுவார் தெரியுமா,

”தெரியாவிட்டால் என்ன, நான் எழுதறது வசனம். மேடையில் பேசும்போது பெரிய ’ற’ சின்ன ’ர’ வித்தியாசம் எதுவும் கிடையாது” என்பார்.
 *               *                    *
கோபுவின் அப்பா எங்கள் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். அவருடய சித்தப்பாவும் ஆசிரியர். அதனால் என்ன லாபம்? பரீட்சையில் வரக்கூடிய  கேள்விகள் என்று அவர் அப்பா சொன்னதை நைசாக எங்களுக்குக் கோபு  சொல்லிவிடுவார்,    இது  எப்படியோ கோபுவின் அப்பாவுக்கு மூக்கில் வியர்த்துவிட்டது,

கொங்குதேர் வாழ்க்கை

கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி
 காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ,  நீயறியும் பூவே.

-இறையனார்.


உரை
பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே அழகிய சிறகுகளையும் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!