June 06, 2010

புள்ளிகள்: மொரார்ஜி

1977'ல் ஜனதா கட்சி மகத்தான வெற்றி பெற்றது. மொரார்ஜி தேசாய் பிரதமர்

பதவியை ஏற்றார். அந்த சமயம் சாவி அவர்கள் டில்லிக்கு வந்து பலரைப் பேட்டி கண்டார். மொரார்ஜி பதவி ஏற்ற மறுதினம் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பிரதமரின் அறையில் அவரைப் பேட்டி கண்டோம். தினமணி கதிர் இதழை மொரார்ஜியிடம் சாவி கொடுத்தார். அட்டையில் மொரார்ஜியின் கார்ட்டூன் ஒன்று இருந்தது. (தாணு போட்டது என்பது நினைவு.) அந்தப் படத்தைப் பார்த்ததும் மொரார்ஜி தேசாய் லேசாகத் தலையை ஆட்டியபடியே சாவியிடம் கேட்டார்: ``உங்கள் ஆர்ட்டிஸ்ட் எந்த செஞ்சுரியில் இருக்கிறார்? இந்த கார்ட்டூனில் என் கையில் ஒரு கைத்தடியை வரைந்திருக்கிறாரே... நான் கைத்தடியைத் தூக்கி எறிந்து எத்தனையோ வருஷங்கள் ஆகின்றன'' என்றார். ``அப்படியா'' என்று தலையை ஆட்டினோம்.

பேட்டி முடிந்து வெளியே வந்ததும் சாவி பரபரத்தார். ``இன்றைக்கு அடுத்த வார அட்டை அச்சுக்குப் போகும். அதை நிறுத்தி விட்டு மாற்றச் சொல்லணும்'' என்றார். வீட்டுக்கு வந்ததும் சென்னைக்கு போன் செய்து, உதவி ஆசிரியரிடம் பேசினார்.
``அட்டையில் ஒரு மூலையில் கார்ட்டூன் போடணும். மொரார்ஜி தேசாய் தன் கைத்தடியைத் தூக்கி எறிவது மாதிரி இருக்க வேண்டும். ’எனக்கு   எதுக்குக் கைத்தடி?’ என்று பலூன் வாசகம் இருக்கட்டும். இந்தப் படத்தை உடனே ஆர்ட்டிஸ்டிடம் கேட்டு வாங்கி அட்டை லே அவுட்டில் சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அதன்படியே செய்யப்பட்டு முதல் காபி தயாரானதும் கூரியரில் டில்லிக்கு அனுப்பி வைத்தார் உதவி ஆசிரியர். அந்த பிரதியை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தோம். அங்கு ஒரு ஆபீசரிடம் மொரார்ஜியிடம் `கதிரை'க் காட்டும்படி சொன்னோம்.

சாவியின் சுறுசுறுப்புக்கு இது ஒரு சின்ன சாம்பிள்!

1 comment:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    இப்போதான் ரவி சார் வலைப்பூவில் சாவி அவர்கள் பற்றி, படித்தேன். இங்கேயும் அவரைப் பற்றி, அருமையான பகிர்வு.

    சாவி அவர்கள் போல Extraordinary Leadership Qualities உள்ளவங்க அவங்க கூட இருப்பவங்களையும் inspire செய்திருப்பாங்க. நம்மையும் அறியாமல் அந்த சிறப்பு குண நலன்கள் நம்மிடம் பதிந்து விடும். அந்த வகையில் அவர் கூடவே இருந்து பணியாற்றி, சிறப்படைந்திருக்கிறீர்கள்.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!