ராஜாஜியும் நானும் என்று தலைப்புப் போட ஆசைதான். ஆனால் அது எனக்கே அடுக்காது. எப்போது கல்கியின் பக்தனாக ஆனேனோ, அப்போதே நான் ராஜாஜி பக்தன்; எம்.எஸ். பக்தன்;. பாரதியார் பக்தன்; தமிழ் இசையின் பக்தன்... இத்யாதி.
ஐம்பதுகளில் ராஜாஜி அடிக்கடி சென்னை லட்சுமிபுரம் யங்மென்ஸ் அசோசியேஷனில் பேசுவார். அவருக்கு மட்டும் ஒரு நாற்காலி இருக்கும். மற்ற எல்லோரும் தரை மகாராஜாக்கள் தான். பி.ஸி.ஜி. தடுப்பூசிக்கு எதிராக அவர் நிகழ்த்திய உரைகள் அபாரம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்!
செங்கற்பட்டுக்காரனாக இருந்தாலும் ராஜாஜி எங்கு பேசினாலும் அங்குதான் இருப்பேன். பாட்டுக் கச்சேரி கேட்பது போல் ரசிப்பேன்.
இந்த சமயம் செங்கற்பட்டில் நாங்கள் சேவா சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினோம். கல்கியின் அரவணைப்பு எங்களுக்குக் கிடைத்தது.
செங்கற்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ராஜாஜி அப்போது முதல்வர். `கல்கி' மூலமாக அவருடைய சம்மதத்தைப் பெற்றோம்.
அந்தக் காலத்தில் எந்த பொதுக் கூட்டத்திலும் ஒரு வரவேற்புப் பத்திரம் படிக்கப்படும். உள்ளூர் பள்ளியின் தமிழ் வித்துவான் எழுதிக் கொடுப்பதை அச்சடித்துக் கண்ணாடி போட்டு, மேடையில் படித்து விட்டுக் கொடுப்போம். அது என்னவோ சேவா சங்கத்தின் தலைவருக்கு என் மீது தனிப் பாசம் இருந்தது. ஆகவே வாழ்த்துப் பத்திரத்தை படிக்கும் பணியை எனக்குக் கொடுத்தார்.
ராஜாஜியின் அருகில் நின்று கொண்டு, அப்படியே வளைந்து நெளிந்து பவ்யமாகப் படித்தேன். கரடுமுரடான தமிழ். இருந்தாலும் நிறுத்தி நிதானமாகப் படித்தேன். இன்னும் சில நிமிடங்கள் ராஜாஜியின் அருகிலேயே நிற்க முடியுமே!
படித்துக் கொடுத்தேன். ராஜாஜி வாங்கிக் கொண்டார்.
அதன்பின் பலர் பேசிய பிறகு, ராஜாஜி தன் உரையைத் துவக்கினார். ஐம்பது வருஷங்கள் ஆகிவிட்டாலும் அவரது உரையின் முதல் சில வரிகள் அப்படியே நினைவில் உள்ளன.
``இந்தக் காலத்தில் வரவேற்புப் பத்திரங்கள் எழுதுவதை ஒரு கலையாக செய்து விட்டார்கள் என்றால் இப்போது அதை வாசித்துக் கொடுப்பதையும் ஒரு கலையாக ஆக்கி விட்டார்கள்'' என்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்தபடியே பேசத் துவங்கினார். (அவர் என்னைப் பார்த்தார் என்பது என் கற்பனையாகக் கூட இருக்கும்!)
அதன் பிறகு இன்னொரு வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. வாய்ப்பா அது! யாருக்குமே கிடைக்காத அரிய பரிசு என்றுதான் சொல்வேன்.