July 31, 2013

ஆ,, அமெரிக்கா!

ஆ, அமெரிக்கா - PREAMBLE

அமெரிக்காவிற்கு நாலைந்து தடவைக்கு மேல் போய் வந்திருக்கிறேன். அங்கு பல புதிய அனுபவங்கள்   ஏற்பட்டுள்ளன. மனித நேய அனுபவங்களையும், நாம் பார்த்துக் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் பார்த்து வியந்திருக்கிறேன். அமெரிக்காவில் பல கசப்பான விஷயங்களைச் செய்தி தாள்கள் மூலமும் டி.வி.மூலமும் அறிந்திருக்கிறேன்.
அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பியதும் அமெரிக்க அனுபவங்களை ஒன்றிரண்டு தடவை உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன். அதன்  பிறகு   யாரிடமும் விரிவாகச் சொல்வதை நிறுத்திக்கொண்டேன்..  காரணம் அவற்றைக் கேட்கும் ஆர்வம் பலரிடம் இருப்பதில்லை. “ பெரிசா அமெரிக்கா போய்வந்துட்டாராம். வாய் ஓயாமல் துதி பாடறார்” என்று (பொறாமை கலந்த) ரகசியப் பின்னூட்டம்   போடுவார்கள்! “அமெரிக்கா  போய் வர்றவங்களுக்கு  நம்ம ஊரைப் பற்றி மட்டமாகப் பேசறது ஒரு ஃபாஷன்:” என்ற கருத்துக் குத்துகளும் வரும். யாரும் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். வேறு சிலர் வேறு மாதிரி மூக்கில் குத்துவார்கள். நம்மைப் பேச விடாமல், “அதெல்லாம் இருக்கட்டும்..,நீ  நயாகரா பார்த்துவிட்டு வந்தாயா?”  என்று கேட்பார்கள். “ பார்க்கவில்லைஎன்று நீங்கள் சொன்னால், “ போ.. என்ன அமெரிக்கா போய்விட்டு வந்தாயோ, நயாகரா  பார்க்காமல்!” என்று அலுத்துக் கொள்வார்கள். “ஆர்லேண்டோ போய் டிஸ்னி லாண்ட் பார்த்து விட்டு வந்தேன்” என்று சொன்னால், “ அப்படியே பக்கத்தில்(?) இருக்கிற  ஹாலிவுட்டைப் போய் பார்த்திருக்கலாமே.  (அமெரிக்கா தேச வரைபடத்தில் ஆர்லேண்டோவிலிருந்து மூன்று  அங்குலம் தள்ளி  ஹாலிவுட் இருப்பதால், பக்கத்தில் இருப்பதாக அவர் ஐடியா! உண்மையில் 2500 மைல் தூரம்!)

July 25, 2013

எழுத்தாளர் லக்ஷ்மி

பல வருஷங்களுக்கு முன்பு பிரபல எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களை சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்த சமயம் பேட்டி கண்டேன். அந்த பேட்டிக் கட்டுரையை இங்கு தருகிறேன்.

“சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கு என்னைப் பாராட்டியதற்கு நன்றி.   என்னைப் பொருத்த வரைக்கும் இந்த பாராட்டு என் பெரிய பாட்டிக்குத்தான் சேர வேண்டும் என்பேன்.
விவரமாகச் சொன்னால்தான் புரியும்.. என் பெரிய பாட்டி லக்ஷ்மி, ஒன்பது வயதில் கல்யாணம்ஆகி, ஆறு மாதத்திலேயே கைம்பெண் ஆனவள். அவளுக்கு விதவைக் கோலம் போட்டு, வீட்டின் பின் கட்டில் போட்டு விட்டார்கள். அழகு  என்றால் அத்தனை அழகு, அவளுக்கு இப்படி ஒரு அநீதி இழைக்கபட்டதே என்று எனக்கு ஏகப்பட்ட வருத்தம், கோபம். அவளுக்கு என்னால் ஆனதைச் செய்யவேண்டும் என்று ஒரு துடிப்பு ஏற்பட்டது. நான் சிறுமி. என்ன செய்ய முடியும்? முதன் முதலில் கதை எழுத ஆரம்பித்தபோது அவள் பெயரைப் புனைபெயராக வைத்துக் கொண்டேன். துரதிர்ஷ்டக்காரி, அமங்கலி என்றேல்லாம் முத்திரைக் குத்தப்பட்ட அவள் பெயர் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு அறிமுகமான பெயர் என்பது மட்டுமல்ல, இன்று தேசிய அளவில் பரிசு பெற்ற பெயராகவும் அமைந்து விட்டது. என் பெரிய பாட்டியின் பெயரை வைத்துக் கொண்டதால்தான் இத்தனை பெரிய அங்கீகாரம் எனக்குக் கிட்டியது என்று நம்புகிறேன். அது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பரிசுப் பணம் பத்தாயிரம் கிடப்பது மகிழ்ச்சி தரக்கூடியதுதான் என்கிறீர்கல். ஆம். ஆனால்.பிரமாதமான மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. முதன்முதலில் கதை எழுதி, ஏழு ரூபாய் சன்மானம் பெற்றபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடு எதுவுமே இல்லை!

ஏற்காத கதைக்குப் பணம்.
ஒரு வேடிக்கைத் தெரியுமா? என் முதல் கதையைப் படிக்காமலேயே,  பிரசுரத்திற்கு ஏற்றுகொள்ளாமலேயே எஸ்.எஸ்.வாசன் சன்மானம் தந்திருக்கிறார்.

July 22, 2013

அன்புடையீர்!


அன்புடையீர்,
வணக்கம். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அடுத்த பதிவு
3,4 நாள் கழித்து வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

-கடுகு

July 15, 2013

நாலு விஷயம்

1.விமானப் பய(ண)ம்
இப்போதெல்லாம் விமானப் பயணம் என்பது டவுன் பஸ்ஸில் போவது போல் ஆகிவிட்டது. பெட்டி எடுத்துப்  போனால் லக்கேஜ். .முன்பெல்லாம்  பயணத்தின் போது   சாப்பிட  ஏதாவது கொடுப்பார்கள். எல்லாம் மலையேறி போய் விட்டது.

நாடு விட்டு நாடு போகும் விமானங்களில் சாப்பாடு கொடுக்கிறர்கள். பதிலுக்கு லக்கேஜில் கை வைத்து விடுகிறார்கள்.இந்தியாவிலிருந்து அமெரிக்கா போகும் விமானங்களில் இரண்டு பெட்டி எடுத்துப் போகலாம்: பெட்டி எடை 25 கிலோ இருக்கலாம். அது அந்தக் காலம். இப்போது ஒரு பெட்டிதான். அதுவும் 23 கிலோதான்.இதற்கு மேல் போனால் கூடுதல் கட்டணம்.
விமான கம்பெனியின்   வழிமுறையை மற்ற கம்பெனிகளும் பின்பற்றினால் என்ன  ஆகும் என்று  சிரிப்புப் படம்  ஒன்றை WALL STREET JOURNAL  தினசரியில்  போட்டிருந்தார்கள். அதை இங்கு தருகிறேன்.2.  ANAGRAMS - SANGARAM -அனக்ராம்
அனக்ராம் என்பது என்ன என்று உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
ஒரு வார்த்தையின் எழுத்துக்களை மாற்றிப் போட்டு இன்னொரு வார்த்தையை உருவாக்குவதுதான் அனக்ராம்.

July 07, 2013

ஒரு 'கை' செய்த மாயம்

ஒரு 'கை'  செய்த மாயம்.
இதற்கு முன் வந்த இரண்டு பதிவுகளில் ‘மாயம்’ இடம் பெற்றது. அந்த மாயம் பதிவுகள் எழுதியபோது ஏற்பட்ட மாயத்தைப் பற்றி கூறப்போகிறேன்
ஒரு உரை செய்த மாயம்’ எழுதத் துவங்குமுன் எப்போதோ படித்த ஒரு தகவல் அரைகுறையாக நினைவுக்கு வந்தது. அது ஒரு எழுத்தாளனின் புத்தகம் பற்றியது. ஒரு பிரமுகர் பேச்சுவாக்கில் அந்தப் புத்தகத்தைப் பற்றி பாராட்டாக ஒரு வரி சொன்னார். அது லாட்டிரி பரிசு மாதிரி அமைந்து விட்டது. அந்த புத்தகம் நிறைய விற்க ஆரம்பித்தது. அந்தத் துணுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது நினைவுக்கே வரவில்லை.
ஆறாம் ஜார்ஜ் தனது உரையில் “அந்த சர்வ வல்லமை பொருந்திய கை  நமக்கு வழிகாட்டித் துணை புரியட்டும்"  (May That  Almighty Hand guide and uphold us all" ) என்ற வரிகளுடன் முடித்தார்.


அந்த கரம் எனக்கு உதவி புரிந்தது.   நேரம் கிடைக்கும்போது படிக்கலாம் என்று எண்ணி   A DICTIONARY OF THOUGHTS என்ற புத்தகத்தை நான் எப்போதோ என்  கணினியில் டவுன்லோட் செய்திருந்தேன்,  ஆனால் அதை மேலெழுந்தவாரியாகக்கூடப் பார்க்கவில்லை. ( இதுமாதிரி நிறையப் புத்தகங்கள் நான் படிப்பதற்காகக் கியூவில் காத்துக் கொண்டிருக்கின்றன.)
அந்தப் புத்தகத்தை திறந்தேன். முதல் பக்கத்தில் (ஆம், முதல் பக்கத்தில்!) இருந்த ஒரு பொன்மொழி கண்ணில் பட்டது. உரை செய்த மாயம் பதிவிற்கு, எந்த மாதிரி பொன்மொழி இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நான் எண்ணினேனோ  அந்த மாதிரி, 100 சத விகிதம் பொருத்தமான பொன்மொழி கண்ணில் பட்டது PLINY என்பவர் எழுதியது. A DICTIONARY OF THOUGHTS வெளியான வருஷம்: 1908! கடவுளின் கரம் எனக்கு அந்த வரிகளைக் காட்டிக் கொடுத்தது. பதிவிற்குச் சிகரமாக அது அமைந்து விட்டது, அந்த முதல் பக்கத்தின் படத்தை இங்கு போட்டுள்ளேன்.

அடுத்து இன்னொரு மாயம்!