January 20, 2020

கைதியின் கடைசிக் கடிதம்

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.


 

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.

என் அன்புள்ள.....‘என் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளைஅப்படியே இக்கடிதத்தில் எழுதுகிறேன். என் கைகளில் விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் என் கையில் இல்லாமல் என் எண்ணங்களுக்கு போடப்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
எங்களைப் போன்றவர்களுக்கு உலகில் இரண்டே இரண்டு `சாய்ஸ்'தான் உள்ளன. மேலும் மேலும் மேன்மை பெறுவது; அல்லது பின்தங்கிப் போவது. இதற்கு இடைப்பட்ட நிலை கிடையாது. கடவுளை நெருங்குவதற்காக கடினமான பணிகளைச் செய்தவர்களுக்கும் இதுதான் நிலைமை. இடையில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்படி ஒரு ராணுவம் வெற்றிப் பாதையில் செல்லும் போது பல தோல்விகளைக் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறதோ அது போல்தான்! ஆகவே நம்பிக்கை இழந்து விட்டு, எடுத்த பணியை கைவிடக் கூடாது. மாறாக மேலும் நெஞ்சுரத்துடன் செயல்பட்டு நம் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.
நீ கடவுளை நேசி. உன் அண்டையில் உள்ளவர்களை நேசி. இந்த இரண்டு விதிகளில் எல்லாமே அடங்கியுள்ளன.
 நாட்டில் அநீதி தலை விரித்து ஆடினால்    நாமும்  அப்படியே அநீதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாகி விடும். ஆகவேதான் நான் உண்மையை அப்படியே கூற வேண்டும் என்று உறுதியாக உள்ளேன். இதன் விளைவாக என் உயிரையே இழக்க வேண்டியிருந்தாலும் கவலையில்லை. ஆட்சியாளர்கள், நிர்ப்பந்தப்படுத்தும் சத்தியப் பிரமாணத்தை நான் எடுத்துக் கொண்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க என்னால் இயலாது.
அன்புள்ள மனைவியே, உன் துயரத்திற்கும் எரிச்சலுக்கும் காரணமான காரியங்களை நான் ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னிக்கவும். நம் ஊரில் உள்ள எவரையாவது புண்படுத்தியிருந்தாலோ எரிச்சலடையச் செய்திருந்தாலோ என்னை மன்னிக்கும்படி அவர்களிடம் சொல்லவும். என்னைப் பொறுத்த வரை நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்...''
*                          *                                *
இதுசிறையிலிருந்து , உயர்ந்த  கொள்கை பிடிப்புள்ள கைதி தன் மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதம். .

1943’ம் ஆண்டு பெர்லின் சிறையிலிருந்து ஆஸ்திரியாவைச் சேர்ந்த சிறிய விவசாயி. ப்ரான்ஸ் ஜகர்ஸ்டேட்டர் தன் மனைவிக்கு, தான் இறப்பதற்கு சில மணி நேரம் இருந்த போது எழுதியது.  ஆம், அடுத்த சில மணியில் அவரது தலை துண்டிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஜகர்ஸ்டேட்டர் அதிகம் படிக்காத எளிய மனிதன். மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன். கிராமத்து மாதாகோவிலின் கேர்-டேக்கர். இரண்டாவது உலகப் போர் நடந்த சமயம், ஹிட்லரின் ராணுவத்திற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். இவரையும் ராணுவத்தில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது.  பலர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லைஹிட்லரின் உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார். ”இந்தப் போர் நியாயமற்றது; கொடூரமானது” என்று உறுதியாக நம்பினார். `ராணுவ உத்தரவுகளை கீழ்ப்படிவேன்' என்ற சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள அவரது மனம் சம்மதிக்கவில்லை. ஆகவே `ராணுவத்தில் சேர முடியாது' என்பதை, விளைவுகளுக்கு அஞ்சாமல் அவர் நெஞ்சுரத்துடன் கூறிவிட்டார்.
இப்படி அவர் மறுத்ததற்கு மரண தண்டனைதான் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும்.  எதிபார்த்தபடி அவர் சிறைப்படுத்தப் பட்டார். பல மாதம் சிறையில் இருந்தார். 1943-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி அவர் பெர்லின் சிறையின் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது தலை துண்டிக்கப்பட்டது. இந்தக் கடிதம் 8-ம் தேதி இரவு அவர் எழுதியது,
     இரண்டாவது உலகப் போரில் அழிந்து போனவைகளுக்கு கணக்கே இல்லை.   இருந்தும் வியப்புக்குரிய விஷயம் ஜகர்ஸ்டேட்டரின் கடைசிக் கடிதம் இவைகளில் எதிலும் சிக்காமல் பத்திரமாக அவருடைய மனைவியை அடைந்ததுதான்.
     உயிரைத் திரணமாக மதித்து, தான் நம்பியதை உறுதியாகக் கடைப்பிடித்து, நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன் ராணுவ அதிகாரிகளிடம், ``முடியாது!'' என்று கூறிய அவர் ஒரு அசாதாரண மனிதர்.

செயின்ட் ரீடிட்கண்ட் என்ற சிறிய கிராமத்தின் சர்ச்சின் இடுகாட்டில் அவரது சமாதி உள்ளது.

போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவுச் சின்னத்தில், போரில் இறந்தவர்களின் பெயருடன் ஜகர்ஸ்டேட்டரின் பெயரையும், மாதாகோவிலின் பாதிரியார் அதில் சேர்த்துப் பொறிக்கச் செய்தார்.


       அன்றாடம் நம் வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத பல `சத்தியப் பிரமாணங்கள்' எடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலாவது நாம் ஜகர்ஸ்டேட்டராக துணிவுடன் இருப்போமே!
(Franz Jägerstätter பற்றிய விவரங்கள் விக்கி பீடியாவில் வந்துள்ளது.)

இது ஒரு மீள் பதிவு. புதிதாக வந்திருக்கும் நேயர்களுக்காக!