தனியாளாக நம்மால் எத்தனை பதிவுகள் எழுதி, தட்டச்சு செய்து,
பதிவாகப் போட முடியும் என்று ஒரு கணம்கூட யோசிக்கவில்லை; தயங்கவும் இல்லை. காரணம், “தம்பி, நீ எழுது” என்று, கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு சொன்ன (அல்லது ஆசீர்வதித்த) கல்கி அவர்கள் என்னை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை என்னிடமிருந்து தான்! ஏன், இன்றும், பத்து ஆண்டுகள் பதிவுகள் எழுதிய பிறகும், அவர் மீது உள்ள நம்பிக்கை ஒரு சத விகிதம் கூட குறையவில்லை. அவர் என் குருநாதர் என்று நான் கூறிக் கொண்டால் எனக்குப் பெருமை ஏற்படலாம். ஆனால், அவருடைய சீடன் நான் என்பதால் அவருடைய திறமைக்கும், புகழுக்கும் எவ்வித ஏற்றமும் இல்லை.
கிட்டத்தட்ட 630 பதிவுகள் போட்டுள்ளேன். இது பெரிது அல்ல. இந்த சமயத்தில் ஒரு தகவலைச் சொல்ல மனம் விழைகிறது. என் வலைப்பூவின் தலைப்பு ஓவியங்கள் (Masthead) எல்லாவற்றையும் நானே வடிவமைத்துள்ளேன். வலைப்பூ இல்லாவிட்டால் இவ்வளவு படங்களை (சுமாராக) உருவாக்கவும், பதிவு எழுதுவதற்காகப் பல புத்தகங்களைப் படித்திருக்கவும் மாட்டேன். வலைப்பூ என்னுடைய உந்து சக்தியாக விளங்கி வருகிறது.
இவை எல்லாவற்றையும் விட என் வலைப்பூவைப் படிக்கும் உங்களில் பலர் எழுதிய பாராட்டுகளும் ‘சபாஷ்’களும்
வைட்டமின் மாத்திரைகளாகச் செயல் பட்டுள்ளன. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது என் மனதில் மகிழ்ச்சியை விட அதிகமாக நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறது. வார்த்தை ஜாலத்திற்காக இப்படி எழுதவில்லை. அப்படி எழுதினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
அனைவருக்கும் நன்றி. முக்கியமாய் எழுத்தாளர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. அவர் தான் பதிவுகள் எழுதும்படி முதன் முதலில் (அன்புக்) கட்டளை இட்டார்.
அனைவருக்கும் வணக்கம்.
-- கடுகு


