August 01, 2018

கல்கி, என் கணவர்



 கல்கி அவர்களின் துணைவியார் திருமதி ருக்மிணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பல வருஷங்களுக்கு முன்பு ’குமுதம்’ 8-12-1966 இதழில், குடும்ப நிகழ்ச்சிகள் சிலவற்றை  நினைவு கூர்ந்தார்.
  
1924 ல் எங்கள் கல்யாணம் நடைபெற்றது. சம்பிரதாயமாகப் ’பெண்’ பார்ப்பதற்குஇவர்’ வரவில்லை. இவருடைய அண்ணாதான் நிச்சயதார்த்தம் செய்துவிட்டுப் போனார். கல்கியைப் பொறுத்தவரை இதை அவரது இரண்டாவது கல்யாணம் என்று வேடிக்கையாகச் சொல்லலாம். 

முதலில் இவருக்கு ஓரிடத்தில் கல்யாணம் நிச்சயமாகி,.... நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டது. ஆனால் கல்யாணம் நின்றுபோய்விட்டது… அந்தப் பெண்ணின் அப்பா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். மாப்பிள்ளையைப் பற்றி விவரமாக விசாரித்ததில், இவர் காந்திக் கட்சியை சேர்ந்தவர் என்று அறிந்ததும், பெண்ணைக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை ......
     *                           *                          *
     நவசக்தி பத்திரிகையில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரிடம அப்போது இவர் வேலை பார்த்து வந்தார். சம்பளம் ஐம்பது ரூபாய். பழைய மாம்பலத்தில் முதன் முதலில் தனிக் குடித்தனம் வைத்தோம். ரொம்பவும் சிக்கனமாகவே இருப்பார். ராயப்பேட்டையிலுள்ள காரியாலயத்திற்கு மாம்பலத்திலிருந்து நடந்தே செல்வார். அப்போது  அவருடைய லட்சியம் எப்படியேனும் பாடுபட்டு உழைத்து 100 ரூபாய் சம்பளத்திற்கு உயர்ந்துவிட வேண்டும் என்பதே. திரு.வி.க.விடம் இவர் பக்தி விசுவாசம் உடையவர். நவசக்தியை விட்டு விலகும் போது, இவரைப் பிரிய திரு.வி.க.வுக்கு மனமே இல்லை. “எப்போது வேண்டுமானாலும் நீ திரும்பி வரலாம். உன்னுடைய இடம் காலியாகவே இருக்கும்,என்று பெருந்தன்மையுடனும், அன்புடனும் விடை கொடுத்தார்.
     நவசக்தியில் இருக்கும்போதே இவர் சம்பளத்தை ரூபாய் அறுபதாக உயர்த்தினார்கள். வேறு சிலர் இவரை வைத்துத் தனியாகப் பத்திரிகை  ஆரம்பிக்க வேண்டுமென்று முன்வந்தனர். இன்னும் பத்து ரூபாய் அதிகச் சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். என்னிடம் இந்த விவரங்களைச் சொன்னார் கல்கி. நான் இதற்கு சம்மதிக்கவில்லை. திரு.வி.க விடமே வேலையில் நீடிக்க வேண்டுமென்று சொன்னேன். அப்போது, “வயதில் சிறியவளாக இருந்தாலும் நீ விவேகத்துடன் பேசுகிறாய்.  சாதாரணமாகப் பெண் பிள்ளைகள் பத்து ரூபாய் அதிகம் வருவதென்றால், அதையே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அப்படி இல்லாமல் நீ நல்ல யோசனையே வெளியிடுகிறாய். உன்னுடைய எண்ணம் என்ன என்று அறியக் கேட்டேனே தவிர நானும் விலகப் போவதில்லை,என்றார்.................
    *                              *                                     *

     எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ராஜாஜி வைக்கும் பெயரே நிலைத்து விடுகிறது. 1933ல் ஆனந்தி வஸந்த ருதுவில் பிறந்தாள். ஆகவே இவர் குழந்தைக்கு  ‘வஸந்தி’, என்று பெயர் சூட்ட வேண்டுமென்று விரும்பினார். குழந்தை அதிகமாக அழாமல் சாந்தமாகத் தூங்குவாள். ஆகையால், ‘சாந்திஎன்று பெயர் வைக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால் ராஜாஜி சூட்டிய பெயர்ஆனந்தி.’
 1935’ல் திரு. ராஜேந்திர பிரசாத்தின் சென்னை விஜயத்தின் போது குமாரன் பிறந்தான். அதன் ஞாபகமாக அவனுக்கு, ‘ராஜேந்திரன்என்று பெயர் வைத்தோம். ஆனால் பூணூல் கல்யாணத்தின் போது ராஜேந்திரனுக்குச் சூட்டிய பெயர்,  ‘ராஜ கோபால சர்மா,
ஆனந்திக்குத் தலைச்சன் பெண் குழந்தை பிறந்தபோது டில்லியிலிருந்து வந்த வாழ்த்துச் செய்தியில்,  “ஆனந்திக்கும் கவுரிக்கும் என் ஆசி,என்று ராஜாஜி முன்கூட்டியே பேத்திக்கு நாமகரணம் செய்து விட்டார். எங்கள் யோசனைக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.  .
     டி.கே.சி. சென்னை வரும்போதெல்லாம் எங்கள் வீட்டில் விருந்துண்டு மகிழ்வார். புளிப்பே இல்லாத மோரில் சிறிது சர்க்கரையைக் கலந்து, அமுத பானமாக உட்கொள்வார். “மகா விஷ்ணுவை விட, நான் பாக்கியசாலி. இந்த ருக்மிணி அம்மாள் கொடுக்கிற மோரை அந்த பகவான் சாப்பிட்டிருந்தால் பாற்கடலை விட்டு  எழுந்து இவ்வளவு ருசியுள்ள மோர்க்கடலை நாடி அல்லவா போயிருப்பார்.,என்று ரசிகமணி, கல்கியிடம் வேடிக்கையாகச் சொல்வார்.
     நாட்டுப் பணியில் காட்டிய அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் வீட்டுப் பராமரிப்பிலும் அவர் காட்டினார். வீட்டிற்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து தருவார். குழந்தைகள் படிப்பிலும் வளர்ச்சியிலும் ஓயாமல் சிரத்தை காட்டுவார். மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் ஆனந்திக்கு நாட்டியம் கற்பிக்க ஏற்பாடு செய்தார். விஞ்ஞானப் படிப்பின் அவசியத்தை உணர்ந்து ராஜேந்திரனை பி.பார்ம் படிக்க ஊக்கமளித்தார். வீட்டில் என்னைத் தவிர அவருக்கு யாரும் பரிமாறக் கூடாது. சிறிது கூட கீழே சிந்தாமல் சாப்பிடுவார். குழந்தைகளைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டுதான் உணவு அருந்துவார். 
     குழந்தைகளிடம் ஒருவன் எவ்வளவு ஆசை வைக்கலாம் என்று இவரைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பரிட்சை முறைகளும், பாடத் திட்டங்களும் இளம் உள்ளங்களை வெகுவாகப் பாதிக்கின்றன என்பதே இவர் கருத்து. ஆகவே எங்கள் வீட்டில் குழந்தைகள் பரீட்சைக்குப் போகும் போது, “மார்க்கு வாங்காவிட்டால் கவலையில்லை. அதையே எண்ணிக் கவலைப்படாதீர்கள்”  என்று உற்சாகப்படுத்தி அனுப்பிவைப்பார். குழந்தைகளுக்கும் புரிகிற மாதிரி எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் இவர். ஆனந்திக்கும்,  ராஜேந்திரனுக்கும் பலமுறை தாம் எழுத வேண்டிய சரித்திர கதைகளை விஸ்தாரமாக விளக்கிக் கூறுவார். அவர்களுக்கும் புரிந்திருக்கிறதா என்று அறிந்த பின்னரே எழுத ஆரம்பிப்பார்.
     பேத்தி கவுரியிடம் அவருக்கு உள்ள வாஞ்சையை வார்த்தைகளில் விளக்கிச் சொல்லவே முடியாது.  “கவுரிக் கண்மணி,என்று தான் கூப்பிடுவார். துருதுருவென்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கவுரி, ஒரு சமயம் அந்த வாரத்திற்கென்று எழுதப்பட்டிருந்த “பொன்னியின் செல்வன்,” கையெழுத்துப் பிரதியை தரதரவென்று கிழித்துப் போட்டுவிட்டாள். சற்றும் கோபப்படாமல் இவர் உடனே மீண்டும் அதை எழுதினார். எந்தத் தினசரியைப் படிக்காமல் இவர் வேலைகளைத் தொடங்க மாட்டாரோ, அந்தப் பத்திரிகையையே ஒரு நாள் அவள் கிழித்துப் போட்டுவிட்டாள். பாவம், தாத்தா, பொறுமையாக எல்லாத் துண்டுகளையும் ஒன்று சேர்த்துவைத்துப் படித்துதான் அன்றைய செய்திகளைத் தெரிந்து கொண்டார்.
     *                             *                         *
     திரு.வி. என். குமாரசாமியிடம் சிலகாலம் இவர் ஆசனங்கள் கற்றுப் பழகி வந்தார். பத்து நிமிஷம் வரை சிரசாசனம் செய்வார். ஒருநாள் சிரசாசனம் பழகிக் கொண்டிருக்கும் போது இரண்டு நிமிடத்திலேயே ஆசனத்திலிருந்து இறங்கிவிட்டார். அருகில் நின்று கடிகாரத்துடன் நேரம் கணித்துவரும் ராஜேந்திரன் பதட்டத்துடன், “என்ன என்ன!” என்று விசாரிக்கத் தொடங்கிவிட்டான். இவர் நிதானமாக,  “:ஆசனத்தினால் ஒன்றும் கெடுதலில்லை. சிரசாசனம் செய்யும்போது புதிய புதிய கற்பனைகள் உதயமாகின்றன. இந்த சேந்தன் அமுதனை ராஜாவாகப் பண்ணிவிட்டாலென்ன என்கிற ஐடியா இப்போதுதான் தோன்றியது. அப்படியே எழுதிவிடுகிறேன்.,என்று எழுத்க் கிளம்பிவிட்டார். பொன்னியின்  செல்வனில் சேந்தன் அமுதன் அரச பதவி அடைந்தது இப்படித்தான்!
     பொதுக் கூட்டங்களில் இவர் நகைச்சுவையுடன் சமயோசி தமாகப் பேசுவதை சிலாகித்துப் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானே கண்ட நிகழ்ச்சி ஒன்று; குற்றாலத்தில் இருந்தபோது, திருநெல்வேலியில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள டி.கே.சி யும் இவரும் சென்றபோது என்னையும் அழைத்துப் போயிருந்தார்கள். கூட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த மாலைகள் பேச்சாளர்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு. புஷ்பவனம் என்ற பெயர் கொண்ட பெண்மணி உட்பட, சில பேச்சாளர்களுக்கு மாலை கிடைக்கவில்லை. பின்னர் பேச எழுந்த கல்கி, பேச்சிடையில், “வேறு சிலருக்கு மாலை போடவில்லையென்றால், குறையாக இருக்கும். புஷ்பவனத்திற்கு அந்தக் குறை இருக்க முடியாது. அவர் பெயரே புஷ்பவனம்.! அவர்களுக்குப் புதிதாக நாம் எந்த மாலைச் சூட்டிக் கவுரவம் அளித்துவிட முடியும்?என்று கேட்டதும் கூட்டத்தில் எழுந்த கரகோஷம் ஓய நெடுநேரமாயிற்று!   

2 comments:

  1. கல்கி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    ஆக, சேந்தன் அமுதனை அரசனாக்க கல்கி அவர்கள் தலைகீழாக நின்றிருக்கிறார் என்று சொல்லுங்கள்;)

    ReplyDelete
  2. AnonymousAugust 10, 2018 at 3:59 PM
    அன்புடையீர்.
    பின்னூட்டங்கள் ஏனோ வருவதில்லை. இது ஒன்று தப்பி வந்திருக்கிறது.
    என்ன பிரச்னை என்று தெரியவில்லை. - கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!