August 11, 2018

ரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை!

ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக  ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்?) தகவல் திரட்ட காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்குச் செல்ல, இரண்டு தடவை டெல்லி வந்து என் வீட்டில் தங்கினார். 

அவர் கையுடன் கொண்டு வந்திருந்த  200 பக்க பவுண்ட் நோட் புத்தகத்தில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், மெள்ள அதை எடுத்துப் பார்த்தேன். கிட்டதட்ட 200 பக்கமும் ஒரு நாவல் அளவு குறிப்புகள் வரிந்து தள்ளி இருந்தார்!
  ‘படகு வீடு' நாவலின் கடைசி அத்தியாயத்தில் முத்தாய்ப்பாக அவர் எழுதி முடித்து இருப்பது, ஒரு அற்புத இலக்கிய விருந்து என்பேன்.
*                       *                                  *


*                                       *                     *
x

படகு வீடு

பிரபஞ்சத்தினும் பெரிதானாற் போலவும் சொல்லிற்கு அப்பாற்பட்ட உணர்விலே ஒன்றுகிறது அவர் சிந்தை.
     அவர் குறளடிகளைத் தியானிக்கிறார்:"யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் பெறும்."
     அவர் கீதையின் திருவாசகத்தைத் தியானிக்கிறார்.; அவ்வுயிர்களிடத்தும் பகைமை இல்லாதவனாய், சினேகம், பூண்டவனாய், கருணையே உடையவனாய், எனது, நான் என்னும் எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும், சமமாய்க் கருதுபவனாய், பொறுமையுடையவனாய், எப்போதும் சந்தோஷமுடையவனாய் யோகத்தில் நாட்டமுடையவனாய் அடங்கிய  மனத்தினனாய், திடமான நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும்  புத்தியையும் அர்ப்பணம் செய்தவனாய் எவன் இருக்கிறானோ அவன் என் பக்தன்; எனக்கு பிரியமானவன்.
     அவர் பகவான் அரவிந்தரின் பொன் மொழிகளை தியானிக்கிறார்: “வாள் தன்னை ஆக்கச் சொல்லவில்லை. தன்னை உபயோகிப்பவனை தடுக்கவில்லை. நான் உடைந்து போனாலும், ஒதுக்கி வைக்கப்பட்டாலும் வருந்தவில்லை; ஆக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டு; உபயோகப்படுவதிலும் ஆனந்தமுண்டு; ஒதுக்கி வைக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டு அந்த சமமான ஆனந்தத்தை நீ கண்டுகொள்.”
     அவர் திருநாவுக்கரசரின் பாடலை தியானிக்கிறார்:”மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றி, சினமெனும் சரக்கை ஏற்றிச் செருகடல் ஓடும்போது மதமெனும் பாறை தாக்கி மறியும்போது அறிவவொண்ணாது உனையுன்னும் உணர்வை நல்காய். தான் என்பது அடங்கினால் சகலமும் அடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கே இருந்தாலும்  இருக்கலாம்.”
     
அவர் தியானித்துக் கொண்டே இருக்கிறார்.
விமானம் உயர உயர எழும்பிக்கொண்டே இருக்கிறது

===================
ரா.கி.ரங்கராஜனைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை முன்பே எழுதியுள்ளேன். பார்க்க விரும்புபவர்களுக்கு இதோ சுட்டி:  ரா.கி.ரங்கராஜன்

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி  

10 comments:

  1. நம் மனதே மேலே போகிறது!
    ரசித்து எழுதி இருக்கிறார்.-
    -பப்ளி

    ReplyDelete
  2. படகு வீடு புத்தகம் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் படிக்கவில்லை.

    ஒரு நாவலிலா இத்தகைய உன்னத கருத்துக்களோடு முடிவுரை எழுதியிருக்கிறார்? உன்னதமான கருத்துகள் பல நூற்களில் இருந்தாலும் வெகுஜனத்தைச் சேரும்படியாக அவற்றைப் பொருத்தமான இடத்தில் புகுத்தியிருக்கிறார்.

    காலையில், செருக்கு, அகங்காரம் பற்றிய தொகுப்பைப் படித்து ரசித்தேன். மனம்தான் கடைபிடிக்கணும்.

    ReplyDelete
  3. படகு வீடு ராகிராவின் மாஸ்டர் பீஸ்! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே படித்தது. பின்னர் மீள் வாசிப்புக்காகப் பலரிடம் கேட்டும் கிடைக்கலை. இதுவும் ஏ.எஸ்.ராகவனின் "மனிதன்" நாவலும் எத்தனை முறை படித்தாலும் அலுக்காத ஒன்று.

    ReplyDelete
  4. ஆன்மிகத்தில் மூழ்கிய கதாநாயகனை மீட்டுத் தன் பக்கம் திருப்பக் கதாநாயகி செய்த முயற்சிகள், அவன் உண்மையான தியானத்தில் மூழ்கி அதில் முழு மூச்சுடன் இறங்கி விட்டான் என்பது தெரிந்து கண்ணீரோடு விலகும் காட்சி எல்லாம் இன்னமும் கண் முன்னே நிற்கின்றன. ஓவியர் வர்ணம் அவர்கள் மிக அழகாகப் படம் வரைந்திருப்பார். புத்தகம் கிடைத்தால் மீள் வாசிப்புச் செய்யலாம். ஆனால் கடைகளில் கூட இல்லை என்கின்றனர். :(

    ReplyDelete
  5. மனிதன் நாவலும் என்னிடம் இல்லை. படகு வீடு
    பள்ளி நாட்களில் வந்ததோ.
    இத்தகைய தத்துவார்த்தமான சிந்தனை மனசில் ஏறி இருக்காது.
    மனம் பின்னோக்கிப் போய்விட்டது. மிக நன்றி சார்.

    ReplyDelete
  6. நான் படகு வீடு நாவல் நூலகத்தில் எடுத்து படித்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. ரா.கி.ரா.வின் முத்தாய்ப்பு சிறப்பானது. அவர் லைட்ஸ் ஆன் என்னும் சினிமா செய்திகள் எழுதிய பொழுதும் அது தொடர்ந்தது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் முத்தாய்ப்பு வைப்பார்.

    ReplyDelete
  8. படகு வீடு எப்போதோ படித்தது. ரா.க.ரா.வின் முத்தாய்ப்பு சிறப்புதான். அது அவர் லைட்ஸ் ஆன் என்னும் சினிமா செய்திகள் எழுதிய பொழுதும் தொடர்ந்தது ஒரு சிறப்பு.


    ReplyDelete
  9. ரா.கி.ரா. எழுதிய ஆங்கில நாவல்களின் மொழி பெயர்ப்பை படித்து விட்டுதான் அந்த நாவலாசிரியர்களின் மற்ற படைப்புகளை படித்தேன்.
    அவருக்கிருந்த திறமைக்கு ரெககினேஷன் குறேவோ என்று தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. திருத்தம்: ரெககினேஷன் குறைவோ என்று வாசிக்கவும்

      Delete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!