August 30, 2010

ஜெயம் - கேரக்டர்

லிப்ஸ்டிக் முதல் ராட்சஸ டீசல் இஞ்சின்வரை ஏகப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் பெரிய பம்பாய்க் கம்பெனியின் டில்லிப் பிரதிநிதி திருவாளர் ஜெயம். சீஃப் ரெஸிடன்ட் எக்ஸிக்யூட்டிவ்' என்ற அட்டகாசமான பெயராக இருந்தாலும் அவர் செய்வது, சர்க்கார் அலுவலகத்தில் அவரது கம்பெனி சம்பந்தப்பட்ட ஃபைல்களை வேகமாக நகர்த்தி வெற்றிகரமான முடிவிற்கு கொண்டுவரும் லியாசன் அதிகாரி வேலைதான். மகாராணி பாக் என்ற இடத்தில் ஒரு பெரிய மாளிகை. ஆபீஸ் கம் கெஸ்ட் ஹவுஸ். மூன்று கார்கள். நான்கு டெலிபோன்கள். டெலக்ஸ். உதவி மானேஜர், டைப்பிஸ்ட் என்று ஏழெட்டு பேர்.
பம்பரத்திற்கு மறு பெயர் ஜெயம் என்று சொல்லும்படி எப்போதும் படு பிஸி. டெலிபோனில் யார் யாரையோ `பிடித்து'ப் பேசிக் கொண்டிருப்பார். பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றொரு டெலிபோன் அலறும். "யார்... அடடே! வர்மாஜி, குட்மார்னிங்... கார் தானே? அப்பவே அனுப்பிட்டேனே.. இரண்டு நாள் என்ன, மூணுநாள் கூட வெச்சுகிட்டு அனுப்புங்க. நான் எங்கே ஸார் கலியாணத்திற்கு வருகிறது. சரி, கட்டாயம் இரண்டு நிமிஷம் தலையைக் காட்டுவேன். ஓ.கே.....''

தமிழ் முத்து - தன்னேர் இல்லாத தமிழ்

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேர் இல்லாத தமிழ்!
                                            -   தண்டியலங்காரம்

 உலகின் இருளைப் போக்கக்கூடியவை இரண்டு.:
1. சூரியன்
2.. நிகரில்லாத தமிழ் மொழி

August 26, 2010

இறவா வரம் பெற்ற பாடல் -- கடுகு

எனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவர்: ராபர்ட் ஃபுல்ஜும். (ROBERT FULGHUM). தன் பெயரை  இப்படி  உச்சரிப்பதுதான் சரி என்று ஒரு புத்தகத்தில் இவர் எழுதி இருக்கிறார்,
சின்னச் சின்ன கட்டுரைகள்; லேசான நகைச்சுவை. அழகான ஆங்கில நடை. எல்லாவற்றிற்கும் மேலாக அலட்டல் இல்லாமல் உண்மையான தகவல்கள். இவை இவருடைய கட்டுரைகளின் சிறப்பு. இவர் எழுதிய பல புத்தகங்கள் என் புத்தக அலமாரியையும் என் உள்lளத்தையும் நிறைத்துள்ளன.
இட் வாஸ் ஆன் ஃபயர் வென் ஐ லே டவுன் ஆன் இட்: (IT WAS ON  FIRE WHEN I LAY DOWN ON IT) . என்ற புத்தகத்திலிருந்து ஒரு சுவையான கட்டுரையை மொழிமாற்றித் தருகிறேன்.
+    *          *                 *               *
ஜான் பியர் பாண்ட் வழ்க்கையில் எதிலும் ஜெயிக்க முடியவில்லை. தோல்வியாளனாகவே இறந்து போனார். வாஷிங்டனில் ஒரு சாதாரண குமாஸ்தாவாகப் பணியாற்றிய இவர், எண்பத்தோராவது வயதில், மனதை தளரச் செய்யும் பல தோல்விகளைச் சந்தித்த, பரிதாபத்திற்குரிய மனிதனாக 1866 -ல் காலமானார்.
அவருடைய வாழ்க்கை என்னவோ நல்லபடியாகத்தான் துவங்கியது. அவரது பாட்டனார் துவக்கிய யேல் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். ஆர்வத்துடன் ஆசிரியர் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்,
பள்ளி ஆசிரியராக அவரால் வெற்றி பெற முடியவில்லை. மாணவர்களிடம் கண்டிப்பாக நடந்துகொள்ளத் தெரியாதே காரணம். ஆகவே பியர்பான்ட் வக்கீல் தொழிலுக்குப் போக விரும்பினார்.
பாவம்.  அங்கேயும் அவர் தோல்வியைத்தான் தழுவினார், வக்கீலாக அவரால் சிறப்பாகச் செயல்படமுடியவில்லை. கட்சிக்காரர்களீடம் மென்மையாகவும் நிறையவிட்டுக் கொடுத்தும் பழகியது மட்டுமல்ல. தன்னிடம் வரும் கேஸ்கள் நீதிக்குப் புறம்பானவையா என்றெல்லாம் அலசிப் பார்த்துவிட்டுதான் ஏற்றுக்கொண்டது காரணம்.. அதிக வருவாய் வரக்கூடிய கேஸ்களையும் இப்படி சோதிப்பார்.

August 24, 2010

புள்ளிகள் : பீட்டர் உஸ்டினாவ்

பீட்டர்  உஸ்டினாவின் சிலேடை

சில நாட்களுக்கு முன்பு நடிகர் பீட்டர் உஸ்டினாவை பற்றி எழுதி இருந்தேன். பீட்டர் உஸ்டினாவின் ஒரு சுவையான சிலேடையையும் நகைச்சுவை துணுக்கையும் ரசிக்க வாருங்கள்.

1.    நியூயார்க் பப்ளிக் லைப்ரரி மிகப் பிரமாண்டமான கட்டடத்தில் இருக்கிறது. அந்த கட்டடத்தின் வெளியே இரண்டு பக்கங்களில் உயரமான பீடங்களில் சிங்கம் படுத்திருப்பது போல் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் வெளியே படிக்கட்டுகளிலும் மேடைகளிலும் பலர் உட்கார்ந்துபடித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் சுவாரசியமாக அரட்டை (கடலை?) அடித்துக் கொண்டிருப்பார்கள். ( ஒரு சமயம்) அங்கு இருந்த ஒரு தமிழ் அதிகாரி என்னை சில பகுதிககளுக்கு அழைத்து சென்றார்.)
இரண்டு சிங்கங்களுக்கு இடையே பலர்  படிப்பதைக் குறிப்பிட்டு, பீட்டர் உஸ்டினாவ் சிலேடையாக எழுதினார்: இது தான்' ரீடிங்க் பிட்வீன் தி லைன்ஸ் ' (Reading between the lions/lines) என்பதோ. என்று!

2    உஸ்டினாவிற்கு பிரிட்டிஷ் அரசு 1990-ம்  வருஷம்  KNIGHT  பட்டத்தை அளித்துக் கௌரவித்தது.
ராணியால் இந்த பட்டம் தரப்படும். அதற்கு முன்பு உஸ்டினாவிற்கு அரசுத்துறை ஒருகடிதம் போட்டிருந்தது. அதில் சில விவரங்களைக் கேட்டிருந்தார்கள்.
அதில் ஒரு கேள்வி:
பரிசு வாங்கும் போது ராணியின் முன்பு மண்டியிடுவது முறை. உங்களால் மண்டி இட இயலுமா?   ( ஆம், /  இல்லை) .
”இதற்கு என்ன பதில் எழுதுவது என்று தனக்குத் தெரியவில்லை” என்றார் உஸ்டினாவ் தன் நண்பரிடம்.
“ ஆம் அல்லது இல்லை - இதில் ஏதாவது ஒன்றை டிக் செய்து விடுங்கள்.” என்றார் நண்பர்.
“ இல்லை. இதில் இரண்டு சாய்ஸ் தான் இருக்கிறது.  மூன்று இருக்க வேண்டும். என்னால் மண்டி இட முடியும் ஆனால் மண்டி இட்ட பிறகு எழுந்திருக்கதான் முடியாது. அதை எப்படி குறிப்பிடுவேன்/”? ” என்று கேட்டார் உஸ்டினாவ்.

August 22, 2010

When things go wrong


YOU MUSTN'T QUIT

When things go wrong, as they sometimes will,
When the road you're trudging seems all uphill,
When the funds are low and debts are high
And you want to smile, but you have to sigh, 
When care is pressing you down a bit,
Rest! if you must -- but never quit.

Life is queer, with its twists and turns 
As everyone of us sometimes learns,
And many a  failure turns about
When he might have won if he'd stuck it out;
Stick to your task, though the pace seems slow --
You may succeed with one more blow.

Success is failure turned inside out --
The silver tint of the clouds of doubt --
And you never can tell how close you are,
It may be near when  it seems afar;
So stick to the fight when you're  hardest hit --
It's when things seems worst that YOU MUSTN'T QUIT!
                                       -- Author Unknown 
From: Poems that touch the heart .
Complied by A L Alexander
 

August 18, 2010

சுலப சமையல்: மைசூர்ப்பாகு செய்வது எப்படி? - கடுகு

 வணக்கம்..இங்கு தரப்பட்டுள்ள குறிப்பைப் பார்த்து மைசூர்ப்பாகு செய்து உங்கள் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்!

கணவரிடம் முதலில் சொல்லவேண்டியது:
“இதோ பாருங்கள். நான் மைசூர்ப்பாகு செய்யப் போகிறேன். உங்கள் புத்திர காமேஷ்டிகளை எல்லாம் அரை மணி நேரம் பார்த்துக் கொண்டிருங்கள்” என்று  சொல்லுங்கள்.

பிறகு மேல் பரணில் இருக்கும் அலுமினிய டப்பாவைச் சிரமப்பட்டு கீழே இறக்கித் திறவுங்கள். அது சீயக்காய் பொடி டப்பாவாக  இருக்கும், அதைத் தூக்கி வைத்து விட்டு பிளாஸ்டிக் டப்பாவை எடுக்கவும். “ஏய்..ராஜி, சமையல் அறைக்கு யாரும் வரக்கூடாது. வந்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன்” என்று கதவருகில் நிற்கும் ராஜியைப் பார்த்துக் கத்துங்கள்.

பழைய நியூஸ் பேப்பரைப் பிரித்துப் போட்டுக் கடலை மாவைச் சலிக்க...,,,  ஒரு நிமிஷம்..இருங்கள்  .  “அடே ராம்ஜி! போய் மாடி வீட்டு மாமியிடமிருந்து மாவு சல்லடை வாங்கி வா” என்று சொல்லவும். இதற்கிடையில் வனஸ்பதி டப்பாவில் நெய் குறைவாக இருப்பதைப் பார்க்கவும்.
“உங்களைத் தானே? கோடிக் கடைக்குப் போய்  அரைக் கிலோ வனஸ்பதி வாங்கி வாருங்கள்” என்று கணவரிடம் ஆர்டர் கொடுக்கவும்.

குட்டிக் கதை

என் பதிவு ஒன்றிற்குப் பதிவர் ரவிபிரகாஷ் அவர்கள் அனுப்பிய பின்னூட்டம்:

உமி என்றதும் எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு பணக்காரன் தன் சொத்துக்களை தனது நான்கு மகன்களுக்கும் பிரச்சனை இல்லாமல் உயில் எழுதி வைப்பதற்கு, ஓர் உத்தியைக் கையாண்டான். மேஜை மீது உமி, கரி, மண், எலும்பு ஆகியவற்றை வைத்து ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளச் சொன்னான். அப்படியே எடுத்துக் கொண்டார்கள்.
உமி எடுத்தவனுக்கு பயிர் நிலத்தையும், கரி எடுத்தவனுக்கு தங்கம், வைர நகைகளையும், மண் எடுத்தவனுக்கு வீட்டையும், எலும்பு எடுத்தவனுக்குக் கால்நடைகளையும் எழுதி வைத்தான்.
அதாவது, 'சொத்துக்கு நீங்கள் இப்படி அடித்துக் கொள்கிறீர்களே, அவற்றின் கடைசி கதி இதுதான்' என்று சொல்லாமல் உணர்த்தினான் அவன்.

புள்ளிகள்: நேரு

  நேரு பிரதம மந்திரியாக இருந்த போது,  இந்திரா காந்தியின் கணவரான ஃபிரோஸ் காந்தி எம். பி, யாக இருந்தார். துடிப்பான எம். பி. அவர்.
அந்த சமயம் சேட் ராமகிருஷ்ண டால்மியா என்பவர் ஏதோ ஒரு காரணத்திற்காக கைது செய்யப் பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். டால்மியா பெரும் பணக்காரர்.
    பாராளுமன்றத்தில் இது பற்றி ஃபிரோஸ் காந்தி ஒரு கேள்வி கேட்டார்.” டால்மியாவிற்கும் அவருக்கு ஜாமீன் கொடுத்தவருக்கும் உள்ள உறவு என்ன?”
    நேரு உடனே எழுந்து இந்த கேள்வியைக் கேட்டவருக்கும் பதில் அளித்தவருக்கும் உள்ள உறவு என்னவோ அதே உறவுதான் என்று குறும்பாகச் சொன்னார்.
( டால்மியாவுக்கு அவருடைய  மாப்பிள்ளை ஜாமீன் கொடுத்ததை  இப்படி நேரு சொன்னார்!)

August 13, 2010

புள்ளிகள்: : ஜீனா லோல்லா பிரிகிடா

டில்லியில் நடை பெரும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு ஒவ்வொரு சமயமும் எனக்கு பிரஸ் பாஸ் கிடைக்கும். அது மட்டுமல்ல திரைப்பட நிகழ்ச்சிகள் பத்திரிகையாளர் கூட்டம் ஆகியவற்றிற்கும் அழைப்புகள் வரும்,. ஒரு சர்வதேச திரைப்படவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ஹாலிவுட் நடிகை  ஜீனா லோல்லா பிரிகிடா.  கவர்ச்சிக் கன்னி என்ற பெயர் பெற்றவர்.
டில்லியிலுள்ள சாஸ்திரி பவனில் பத்திரிகையாளர் கூட்டம். அப்பொழுது ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஐ. கே. குஜரால். அவரே பத்திரிகையாளர் கூட்டம் நடந்த ஹாலுக்குள்   நுழைய முடியாத அளவுக்குக் கூட்டம். (பாதி பேர் சாஸ்திரி பவனில் உள்ள அமைச்சகத்து அலுவலர்கள்.)
ஜீனா வரும்போதே கவர்ச்சியும் ஃபிரெஞ்சு சென்டும் தூக்கி அடித்தன. நாலு சம்பிரதாயமான வார்த்தைகளைப் பேசிய பிறகு குஜ்ரால் நிருபர்கள் கேள்வி கேட்கலாம் என்றார்.  இந்த மாதிரி நிருபர் கூட்டங்களில் பலர் கேள்விகள் கேட்க முந்துவார்கள். பெரும்பாலான கேள்விகள் என்னவோ அபத்தமாகவே இருக்கும். இரண்டு மூன்று நிருபர்கள் கேள்வி கேட்ட பிறகு. அதாவது சப்தம் அடங்கிய பிறகு நான் எழுந்து ஒரு கேள்வி கேட்டேன். ”ஜீனா .... உங்கள் பெயர் இத்தாலி மொழி அகராதியில் இடம் பெற்றிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ”மேடுகளும் பள்ளங்களும் ( Hills and Vales)  உள்ள ( Landscape ) அழகானப் பிரதேசம்" என்று  பொருளாமே?” என்று கேட்டேன்.  (என்ன பொருள் என்பது இப்போது சரியாக நினைவில் இல்லை.)

 உடனே அமைச்சர் குஜ்ரால் என்னைப் பார்த்துக் கையை ஆட்டி "நோ... நோ. ப்ளீஸ்" என்று சொன்னார். அத்துடன்  "நெக்ஸ்ட்" என்றும் சொல்லிவிட்டார். ஜீனாவோ  அவரைப் பார்த்து ”எதற்கு ’நோ’ சொல்கிறீர்கள்?. அவருடைய கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து ”இந்தக் கேள்வி கேட்டதற்கு உங்களுக்கு நன்றி  உங்கள் கேள்வியில் ஒரு தவறு இருக்கிறது. என் பெயர் இத்தாலி மொழி அகராதியில் இல்லை. ஃபிரெஞ்சு மொழி அகராதியில் தான் உள்ளது.. இது எனக்கு ஃபிரெஞ்சு மக்கள் அளித்த மிகப் பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன்” என்றார்.. பலத்த கை தட்டல். 
     நிருபர் கூட்டம் முடிந்த பிறகு அறிமுகமில்லாத பலர் என்னிடம் வந்து கைகுலுக்கிப் பாராட்டினார்கள்.. ஜீனா கை குலுக்கி இருந்தால் இன்னும் உச்சி குளிர்ந்து போயிருப்பேன். ஹூம்....!

கிருஷ் -- கேரக்டர்

கிருஷ்ணசாமி என்ற பெயர் கர்நாடகமாக இருகிகிறது
என்று அதை நசுக்கி `கிருஷ்' என்று ஆக்கிக் கொண்டிருக்கும் கேரக்டரைச் சந்திக்க வேண்டுமானால் காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் திருவல்லிக்கேணியில் உள்ள லட்சுமி லாட்ஜின் மூன்றாவது மாடியில் உள்ள கோடி அறையில் சந்திக்கலாம். அதன் பிறகு அவன் ஆபீஸ், சினிமா கிளப், `தீர்த்தம்' என்று போய் ரூமிற்குத் திரும்ப நேரமாகும்! பல இரவுகள் கிளப்பிலேயே தங்கிவிடுவான்.
கிருஷ் ரொம்ப ரொம்ப நல்ல ஆசாமி. நாற்பத்திரண்டைத் தாண்டிய கட்டைப் பிரம்மச்சாரி. ஒரு பெரிய மருந்துக் கம்பெனியில் சேல்ஸ் மானேஜர். வேலையில் அசகாய சூரன். லெட்டர்களுக்குப் பதில் `டிக்டேட்' பண்ணினால் யாரும் கை வைக்க முடியாது! அபார ஞாபக சக்தி. எந்த மாட்டை எப்படிக் கறக்கவேண்டும் என்று தெரிந்தவன். கை நிறைய சம்பளம். மாங்காடு காமாட்சியின் மேல் எவ்வளவு பக்தியோ அவ்வளவு பக்தி `ஜானி வாக்கர் ரெட் லேபிள்' புட்டி மீதும்! தன் சகோதரியின் குழந்தைகளுக்குத் துணி மணி என்று தாரளமாகப் பணம் செலவு செய்வான்; அதே சமயம் ரம்மியிலும் நிறைய பணத்தைக் கரைப்பான். ஊர் கவலைகளைத் தன் தலையில் போட்டுக்கொள்ளும் கவலை இல்லாத மனிதன் இவன்! ("வாழ்க்கையை ஒரு மோர்க்குழம்பாக ஆக்கக் கூடாது. அது அதற்கு ஒரு கம்பார்ட்மெண்ட் பண்ணி வைத்திருக்கிறேன்.'')

கோளறு பதிகம்,-10:

பாடல்-10:
தேனமர்பொழில் கொளாலை விளைசெந்நல்துன்னி
      வளர் செம்பொனெங்கும் நிகழ
நான் முகன் ஆதியாய பிரமாபுரத்து
      மறைஞானஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
      நலியாத வண்ணமுரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்களில் வானில்
      அரசாள்வர்ஆணை நமதே.

தேன் அமர் பொழில் கொள் ஆலை - தேன் நிரம்பிய மலர்கள் நிரம்பிய சோலைகளும் கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு நோக்கினும் கரும்பாலைகளும்

விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ - செந்நெல் எங்கும் மிகுதியாக விளைந்து சிவந்த பொன்னைப் போல் திகழ இருக்கும்

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து - நான்முகனாகிய பிரம்மனை முதலாகக் கொண்டு எல்லாத் தேவர்களும் நிலையாகத் தங்கியிருக்கும் பிரமாபுரமாகிய சீர்காழியின்

மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் - தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த

ஆன சொல் மாலை ஓதும் - சிறந்த இந்தச் சொல்மாலையை ஓதுகின்ற

அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே - அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி. 
                                  ********************************************

August 09, 2010

பாரதி ராஜாவும் நானும்.-- கடுகு

”ஹலோ பாரதிராஜா.. எப்படி இருக்கீங்க?’
“அடேடே.. நீங்களா?  உங்களுக்கு நான் போன் பண்ணேனே நேற்று கூட..”
---  இப்படித்தான் கட்டுரையை ஆரம்பிக்க ஆசை. ஆனால் பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பது என் கொள்கையாதலால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பாரதிராஜாவை ஒரே ஒரு தரம்தான் சந்தித்து இருக்கிறேன். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறேன். (“அப்படியா, இதை வைத்துக் கொண்டு பத்து பதிவு எழுதிவிட மாட்டீர்களா” என்று பலர் சொல்லக்கூடும். இல்லை, ஒரு பதிவு தான் எழுதப் போகிறேன்.)
*                *                      *
            ஒரு சமயம் டில்லியிலிருந்து சென்னை வந்திருந்தபோது வழக்கம்போல் ஆசிரியர் சாவி அவர்களை\ச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் ‘சாவி பதில்கள்” எழுதி கொண்டிருந்தார்.
“இந்தாங்க  ஏழு, எட்டு கேள்வி கார்டுகள். பதில் என்ன எழுதலாம் என்று பாருங்கள்” என்றார்.
கேள்விகளில் ஒன்று, அப்போது  பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்த  ‘வேதம் புதிது’ படத்தைப் பற்றி இருந்தது. இதுதான் கேள்வி: ”பாரதிராஜா, தன் வேதம் புதிது படத்தில் நமது வேதங்களைத் தாக்கி சில வசனங்களை சேர்த்திருக்கிறாராமே?
   சாவியிடம் கேள்வியை படித்துவிட்டு, நான் சொன்னேன், “படம் தயாரிப்பில் இருக்கிறது.. இந்த சமயத்தில் எப்படி கருத்துக் கூறமுடியும்?  பாரதிராஜா நமது வேதங்களைத் தாக்ககூடியவர் அல்ல. அப்படியே அவர் தாக்கி இருந்தாலும் கவலை வேண்டாம். நமது வேதங்களைச் சுலபமாக யாராலும் அழித்துவிட முடியாது.” என்கிற ரீதியில் சொன்னேன். நீங்கள் சொல்வது சரிதான். அப்படியே எழுதிவிடுகிறேன்.” என்று சொல்லியபடியே அதை எழுதிவிட்டார்.  இரண்டு தினங்களுக்குப் பிறகு சாவி இதழ் வெளியானவுடன், பாரதிராஜா இதைப் பார்த்திருக்கிறார். உடனே சாவி அவர்களுக்குப் போன் பண்ணி ”என்ன சார்,.கேள்வி பதில் பகுதியில் இப்படி எழுதி இருக்கிறீர்களே... வேதம் புதிது படத்தில் நான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லையே,,” என்பது மாதிரி சற்று வருத்தத்துடன் கேட்டிருக்கிறார்..

புள்ளிகள் ---பாட்டா


HOUSEHOLD NAME? FOOTHOLD NAME?
 பாட்டா காலணி நிறுவனத்தின் விற்பணை நிலையங்கள்  உலகின் பல பாகங்களில் உள்ளன.  செக்கோஸ்லாவியாவில்  பாட்டா  1894-ல்  துவங்கியது 
ஒரு சமயம் அதன் தலைவராகஇருந்த தாமஸ் (தாமஸ்?) பாட்டா இந்தியா வந்திருந்தார், அவர் சென்னைக்கு வந்த போது ஹிந்து நிருபர் அவரிடம் : உங்கள் பாட்டா நிறுவனம் இந்தியாவாவில் ஒரு ‘ஹவுஸ்ஹோல்ட்:  (household ) பெயராகிவிட்டதே...” என்று ஆரம்பித்தார். பாட்டா உடனே ’ இல்லை..இல்லை..ஹவுஸ்ஹோல்ட் பெயர் ( Household Name)   இல்லை. கால் பதித்த பெயர் (Foothold  Name)" என்று குறும்பாகச் சொன்னார்.

பிரார்த்தனை


இந்த வலைப்பூவை  என்னைப் போன்ற இளஞர்கள் மட்டுமல்ல,  வயது முதிர்ந்தவர்களும் படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.  பின்னவர்களுக்காக ஒரு பாடல்.

 Prayer

Lord, Thou  knowest better than I know myself that I am growing older, and will someday be old.
     Keep from me from the fatal habit of thinking I must say something on every subject and on every occasion.
     Release me  from  the craving to straighten out everybody's affairs.
     Make me thoughtful but not moody; helpful but not bossy. With my vast store of wisdom it seems a pity not to use it at all, but Thou knowest, Lord, that I want a few friends at the end.
     Keep my mind from the recital of endless details; give me wings to get to the point.
    Seal my lips on my aches and pains; they are increasing, and love of rehearsing them is becoming sweeter as the years go by.
    I  dare not ask for grace enough to enjoy the tales of others pains,but help me to endure them with  patience. I dare not ask, either, for improved memory; and lessening  cocksureness when my memory seems to clash with the memory of others.
   Teach me  the glorious lesson occasionally I may be mistaken.
      Keep me reasonably sweet. I do not want to be a saint -- some of them are hard to  live with.  But a sour old person is one of the crowning works of the devil,
     Give me ability to see good things in unexpected places, and talents in unexpected people. And give me, O Lord, the grace to tell them, so. Amen.  - Anonymous


from : The Chance of a Lifetime" -- Ed. by Eva and Barbara Greene --1966 

August 05, 2010

புள்ளிகள்: வானதி திருநாவுக்கரசு

“நான் மட்டும்  படிச்சவன்!:
தினமணி கதிர் சார்பில் 1972-ம் வருஷம் ஆசிரியர் சாவி எனக்காக ஒரு வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்தார். கீதா கார்டன்  ஹோட்டலில் (தற்சமயம் காஞ்சி ஹோட்டல்) நடந்த அந்த நிகழ்ச்சியில் நான் எழுதிய “சொல்லடி சிவசக்தி: நாவலை வெளியிட வானதி திருநாவுக்கரசு முன்வந்தார், அமைச்சர் ராஜாராம் தலைமையில் கி,வா,ஜ வெளியிட டைரக்டர் ஸ்ரீதர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் சுந்தா, தமிழ்வாணன், ஆகியோரும் கலந்து கொண்டு 
பேசினார்கள். வானதி திருநாவுக்கரசு பேச வேண்டியதை எழுதி எடுத்துக்கொண்டு வந்து படித்தார்,
விழா முடிந்ததும்  எல்லரும் கிளம்பிப்போகும் சமயம் சாவியிடம்  வானதி திருநாவுக்கரசு  ” இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எல்லாரும் பேசினீர்கள்..என்ன பிரயோசனம்.. இத்தனை பேரில் நான் ஒருத்தன் தான் ‘படிச்சவன்’ என்ற பெயரைத்தட்டிகொண்டு போய்விட்டேன்!” என்று சொல்லி கலகலப்பை ஏற்படுத்தினார்!
சாவி,  “போட்டிங்களே சரியான போடு. வருகிற வார  தினமணி கதிரில். இதை ஒரு ‘பாக்ஸ் மேட்டராகப் போட்டு விடுகிறேன்” என்றார்..

============ 
பால ஹனுமான் எழுதிய பின்னூட்டம்:
:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சில துறைகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.
வானதி திருநாவுக்கரசு தமது புத்தக வெளியீடுகள் மூலம் சிறந்த தொண்டை ஆற்றி வருகிறார் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம். அதனால் புத்தக பதிப்புத் துறையில் சிறந்து விளங்கும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க சிபாரிசு செய்திருப்பதாகவும், திருநாவுக்கரசு வாழ்க்கைக் குறிப்புகள் வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள். எந்தக் காரியத்தை துவங்குவது என்றாலும் திருநாவுக்கரசு, காஞ்சி மகானின் ஆசி இல்லாமல் துவங்கியது இல்லை.
அதனால், தனது வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கடிதத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்று மகானைச் சந்தித்தார். ஒரு பழத் தட்டில் பூக்களுடன் இந்தக் கடிதத்தையும் வைத்து மகான் முன் சமர்ப்பித்தார்.
விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லி, ஜனாதிபதியின் அனுமதிக்காக லிஸ்ட் டெல்லி போயிருக்கிறது என்று முடித்தார்.
மகான் அக்கடிதத்தை அவரே எடுத்துப் படித்தார். 'அவா வேற தர்ராளாமா ? நாமதான் ஏற்கனவே உனக்கு 'சமய இலக்கிய பிரச்சார மணி' னு பட்டம் தந்தாச்சே" என்று சொல்லி அக்கடிதத்தைப் பழத் தட்டிலேயே போட்டுவிட்டார். உடனே தன் உதவியாளரை அழைத்து ஒரு சால்வையைக் கொண்டு வரச் சொல்லி, அதை வானதி திருநாவுக்கரசுக்கு அணிவிக்கச் செய்தார். அத்துடன் நில்லாது, தன் மார்பில் இருந்த பவளமாலையைக் கழற்றி வானதியாருக்கு அணிவிக்கச் செய்தார். 
மகானே பட்டம் கொடுத்த பிறகு.....வேறு பட்டம் எதுவும் தேவை இல்லை தானே ? அதேபோல் இன்று வரை பாண்டிச்சேரி பல்கலைக்கழக பட்டம் அவருக்கு வரவே இல்லை.

நான் அலபாமக்காரன்

சில வருஷங்ககளுக்கு முன்பு அமெரிக்காவில் ஆர்லாண்டோவில் உள்ள டிஸ்னிலாண்டிற்குப் போயிருந்தேன். அப்போது ‘ யூனிவர்ஸல் ஸ்டூடியோஸ்’ என்ற பிரம்மாண்ட தீம் பார்க்கிற்குச் சென்றேன். சினிமா சம்பந்தமாக  பல நூறு விஷயங்கள் இருந்தன. பத்து மணி நேரத்திற்கும் அதிகமாகப் பார்த்தும் பலவற்றைப் பார்க்க முடியவில்லை.
      அதில் ஹிட்ச்காக் அரங்கம் ஒன்று இருந்தது, ஹிட்ச்காக்  சம்பந்தமான புகைப் படங்கள், தகவல்கள் மட்டுமல்ல, ஹிட்ச்காக் படத்தின் ஒரு காட்சியை  ஷூட் பண்ணிக் காண்பிக்க ஒரு சின்ன செட்டையும் போட்டு வைத்திருந்தார்கள்.  ஒரு உயரமான கட்டிடம். தூரத்தில் சுதந்திர தேவியின் சிலை.. காமிரா.சின்ன லிஃப்ட், விளக்குகள் எல்லாம் இருந்தன, அப்போது ஒரு அறிவிப்பு வந்தது.” இப்போது ஒரு திகில் காட்சியைப் படம் பிடித்துக் காண்பிக்கப் போகிறோம். இந்த உயரமான கட்டடத்தின் மேலே இருந்து ஒருவர் கீழே பல நூறு அடி விழப்போகிறதை. படம் பிடிக்கப் போகிறோம்.  இரண்டு நிமிஷப் படம் ... இதில் கைகால்களை உதறிக் கொண்டேஅலறியபடி  கீழே விழுபவராக நடிக்க ஒருவர் தேவை.. அவரை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்:
சட்டென்று யாரும் முன்வரவில்லை. இரண்டு மூன்று நிமிஷங்களுக்குப் பிறகு ஒரு இளைஞன் ”நான் நடிக்கிறேன்” என்று முன் வந்தார். அவரை  அறிமுகப்படுத்தி கொள்ளச் சொன்னார்கள்.
அவர் மேடை ஏறி “ எல்லாருக்கும் வணக்கம். என் பெயர் ராபர்ட்.. நான் சிறந்த மாநிலமான அலபாமாவிலிருந்து வருகிறேன். I COME FROM THE GREAT STATE OF ALABAMA!) ’என்று கம்பீரமாகச் சொன்னார்.. அவருக்கு தன் மாநிலத்தின் மீது அவ்வளவு பற்று!  அமெரிக்காவில் அலபாமா என்றால் சற்று இளக்காரம் தானாம்.
அப்படி அவர்  சொன்னதைக் கேட்டதும் என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
நாம் எப்போதாவது  “தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்” என்பதற்குப் பதில் “ பெருமை வாய்ந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி இருக்கிறோமா?  ..
யோசித்துப் பார்ப்போம்..

பின் குறிப்பு: சரி, அந்த திகில் காட்சியை எப்படிப் படம் பிடித்தார்கள்?
ஒரு சிறிய ஸ்டூலின்மேல் மல்லாந்து படுக்கச் சொன்னார்கள்.கை காலை
உதறிக் கொண்டே அலறுவது மாதிரி நடிக்கச் சொன்னார்கள்.  லிஃப்டில் காமிராமேன் உட்கார்ந்ததும், டைரக்டர் ஸ்டார்ட் சொன்னார். இரண்டு பிரம்மாண்டமான ஃபேன்களை ஓடவிட்டார்கள். லிஃப்ட் விர்ரென்று 20,30 அடி உயரம் மேலே சென்றது. அவ்வளவுதான் ஷூட்டிங்.
       உடனே படத்தைப் போட்டுக் காண்பித்தார்கள். மியூசிக்கையும் சேர்த்து இருந்தார்கள். அலபாமாக்காரர் குளோஸ் என்று பயப்படும் அளவுக்கு திகில் காட்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவர் அரை அங்குலம் கூட கீழே விழவில்லை!

கோளறு பதிகம், -9: கொத்தலர்

பாடல்- 9
கொத்தலர் குழலி யோடு விசயற்கு நல்கு
      குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
      திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு - கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு
விசயற்கு நல்கு - விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக
குணமாய வேட விகிர்தன் - இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவன்
மத்தமும் - கங்கை என்னும் நீரையும்
மதியும் - பிறை நிலவினையும்
நாகம் - பாம்பினையும்
முடிமேலணிந்து - தன் திருமுடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே - பௌத்தரையும் சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்

August 01, 2010

கமலாவும் எருமை மாடும்.. - முன்னுரை

தேவன் எழுதிய ஸ்ரீமான் சுதர்சனம் என்ற நாவலில் குடவாசல் என்ற மைத்துனன் கேரக்டர் அட்டகாசமாக உருவாக்கி இருப்பார்.. அந்த கேரக்டரின் பாதிப்பால் நான்  கமலா கதைகளை எழுதத் துவங்கிய போது என் மைத்துனன் தொச்சு என்ற கேரக்டரை  உருவாக்கினேன்  ’ மைத்துனன்
அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்த சாபம்’ என்று நான் சொல்லும் அளவுக்கு அவனால் நான் படும் பாட்டைக் கதைகளில் எழுதினேன். அந்தக் கதைகள் ஓரளவு (தன்னடக்கமே  நீ வாழ்க!),  நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த சீரீஸிலிருந்து ஒரு கதையை இங்கு தருகிறேன்.

கார்கில் சிறப்பு இதழ் ஒன்றை கல்கி வெளியிட்ட போது ஒரு ‘தொச்சு’ கதையை என்னிடம் கேட்டார்கள். அத்துடன் ’கார்கில் சம்பந்தமான கதையாக  இருக்கட்டும்’ என்றும் எழுதி இருந்தார்கள். ஆக கதையில் தொச்சு, கார்கில் போர், நகைச்சுவை இவை மூன்றும் இருக்க வேண்டும்.  என்ன செய்வது என்று தெரியாமல் மண்டையைக் குடைந்து கொண்டிருந்த போது, என் அருமை மனைவி கமலா “ அப்போ பிடிச்சு. கத்திண்டு இருக்கேன்... காதிலே விழுந்தால்தானே! எருமை மாட்டு முதுகில் மழை பெய்ஞ்சாகூட கொஞ்சம் சிலிர்த்துக்கும்...  உங்களுக்கு  எருமை மாட்டைவிட தடிமனான தோல்., அதனாலேதான்...” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே “ஆஹா ஐடியா வந்திரிச்சு: என்று பாட ஆரம்பித்தேன்.
“ கமலா..உன்  திட்டுமழையில் ஒரு ஐடியா துளிர் விட்டு விட்டது. கல்கிக்கு ஒரு எருமை கதை ரெடி” என்றேன்.  ( நமக்குள் இருக்கட்டும். அவள் அர்ச்சனையை நிறுத்துவதற்காக அப்போது ரீல் விட்டேன்.  அப்புறம் நிஜமாகவே எருமை மாட்டுக் கதை உருவாகிவிட்டது!).
இதோ அந்த கதை - தனிப் பதிவாக!

கமலாவும் எருமை மாடும் - கடுகு

  பொழுது விடிந்தால் சில வீடுகளில் டீவி போடுவார்கள்; சில வீடுகளில் ரேடியோ போடுவார்கள்;  வேறு சில வீடுகளில் ’சுப்ரபாதம்' போடுவார்கள். ஆனால் என் வீட்டில் விடிந்ததும் போடப்படுவது சண்டை!
    ஆமாம். தினந்தோறும் எங்கள் வீட்டுப் பால்காரர் வேதாசலத்துடன் கமலா-- அதாவது என் அருமை மனைவி -- ஒரு பத்து நிமிஷம் சண்டை போடுவாள். "என்னடா, கடன்காரா பாலா இது? இல்லை பாலாறா, புழலேரியா, செம்பரம்பாக்கமா? வர வர பாலில் ஒரே தண்ணி... அடுத்த மாதத்திலிருந்து நிறுத்திடப் போறேன்'' என்று கத்துவாள்.

 வருஷம் 365 நாள் -- லீப் வருஷத்தில் 366 நாள் -- இதே ராகம், இதே பல்லவி.
    இரண்டு வருஷமாகத்தான் வேதாசலம் பால் ஊற்றுகிறான். அதற்கு முன் அவனுடைய அப்பா தணிகாசலம் பால் ஊற்றி வந்தார். அவரிடமும் கமலா இதே பாட்டு. ஆனால் சாஹித்தியத்தில் சிற்சில வார்த்தைகள் மாறியிருக்கும். "என்னடா, கடன்காரா' என்று சொல்ல மாட்டாள். "என்னங்க, தணிகாசலம்" என்று சொல்வாள்!
    கமலா எவ்வளவு கத்தியும், எருமை மாடு முதுகின் மேல் தண்ணீர் பட்டது மாதிரி, எதுவும் அவன் மனத்தில் ஒட்டாது. பார்க்கப் போனால், அப்படி கமலா கத்தாவிட்டால், "அம்மாவுக்கு என்ன உடம்போ?'' என்று யோசிப்பான். கமலா கத்துவதைக் கேட்டுக் கேட்டு என் காது மரத்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஒரு காது வழியாகப் புகுந்து ,அதே காது வழியாக வெளியே போய்விடும்! ஆனால், அன்று என் போதாத வேளை, ஒரு காது வழியாகப் போன அவளது கத்தல் மற்றொரு காது வழியாக வெளியே போகுமுன் என் மூளையை லேசாகத் தாக்கி விட்டுச் சென்றது.
    பால்காரர் சென்றதும், கமலாவிடம் கேட்டேன். "ஏன் கமலா, தினமும் இந்த பால்காரரோட சண்டை போடறது, எத்தனை வருஷம் ’கன்னித் தீவு' மாதிரி தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது?''
    "நான் சண்டைக்காரி. அதுதான் சண்டை போடறேன். நீங்க ஆம்பிளையா, லட்சணமா, "ஏண்டா, இப்படி பண்றேன்"னு ஒரு வார்த்தை கேட்டா அவனுக்குக் கொஞ்சம் உறைக்கும்...''
    "நான் சொன்னால் உறைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. என் வாழ்க்கையில் நான் நிதர்சனமாகக் கண்ட உண்மை.''

மூன்று சிலேடைகள்--கண்ணதாசன் சொன்னது

தையலுக்கு உதவும்!

ஒரு புலவரின் மனைவி ஒரு நாள் வடை செய்தார். புலவரும் மனைவியும் சாப்பிட்ட பிறகு சில வடைகள் மிகுதியாக இருந்தன.
மறுநாள் காலை  புலவரின் மனைவி,  அந்த வடைகளை புலவரிடம் சாப்பிடக் கொடுத்தார். முந்தைய தினம் செய்த வடை என்பதாலும் கோடை காலம் என்பதாலும் வடைகள் ஊசிப் போயிருந்தன.
புலவர் வடையை பிய்த்தார். ஊசிய வடையாக இருந்ததால் உள்ளே இருந்து நூல் நூலாக வந்தது.
“இந்தா, வடை. ஊசிப் போய்விட்டது” என்று சொல்லியபடியே மனைவியிடம் அவற்றைக் கொடுக்க வந்தார்.
”ஊசிப் போய்விட்டால் குப்பையில் போடுங்கள். ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள்?” என்று சற்று கோபமாகக் கேட்டாள்.
புலவர் சாவதானமாகச் சொன்னார். “வடை ஊசிப் போனதால், நூல் வந்தது. ஊசியும், நூலும்  இருப்பதால் அவை தையலுக்கு உபயோகப்படுமே என்று உன்னிடத்தில் கொடுத்தேன்” என்றார்!

மூன்று சிலேடைகளைக் கவனியுங்கள்.
தையல் = தைப்பது, பெண்மணி
ஊசி = துணி தைக்கும் ஊசி, உணவுப் பொருள் கெட்டுவிடுவது
நூல் = வடையிலிருந்து வரும் இழை, தைக்கும் நூல்