Showing posts with label கடுகு- சொந்தப் பிரதாபம். Show all posts
Showing posts with label கடுகு- சொந்தப் பிரதாபம். Show all posts

January 28, 2018

நான் ஏன் எழுதுகிறேன்?



சுய விசார கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது என்பதாலேயே அத்தகைய கேள்விகள் என் மனதில் தோன்றாதவாறு பார்த்துக் கொள்வேன்! உதாரணமாக, ’எனக்குஏன் முழுக்கைச் சட்டை பிடிக்கிறது’, ’நான் ஏன் இட்லிக்கு மிளகாய்ப் பொடியும், தோசைக்கு  சட்னியும் போட்டுக் கொள்கிறேன்’, ’பால் பேனாவை விட இங்க் பேனாதான் எனக்கு ஏன்  பிடிக்கிறது’ என்பது போன்ற பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியாது.  ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்று கேள்வி என் மனதில் இதுவரை தோன்றியதே இல்லை.
என்னைப் பார்த்துதான் பலர் "நீ ஏன் எழுதுகிறாய்? ஏன் எழுதுகிறாய்" என்றும், இதைவிட சலிப்புடனும் கேள்விகள் கேட்டி ருக்கிறார்கள். சமயத்திற்குத் தகுந்த மாதிரியும், ஆளுக்குத் தகுந்த மாதிரியும் பதில் சொல்லி இருக்கிறேன்.     இப்போது அந்த மாதிரியும் பண்ண முடியாது என்பதால், மாற்று விடையைக் குடைந்துப் பார்த்தேன். அதன் பலன் தான் இந்தக் கட்டுரை.  “நீங்கள் மண்டையைக் குடையாமல் இருந்திருக்கலாம். ’திருப்பரங் குன்றத்தில் சிரித்தால் திருத்தணியில் எதிரொலிக்கும்’ என்பார்கள். அதுபோல் நீங்கள் மண்டையைக் குடைந்து அது எங்கள் மண்டையில் எதிரொலித்து குடை குடையென்று குடையப் போகிறதோ? என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

December 09, 2009

இது என் ராஜ்ஜியம்!

நான் கடுகு. இது என் ராஜ்ஜியம்.

எனக்கு 77 வயது ஆகிறது ( ஆஹா, இது பெரிய சாதனைதான் என்று நீங்கள்
கேலியாகச் சொல்வது கேட்கிறது.)
குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என்று பல பத்திரிகைகளில் அகஸ்தியன், கடுகு என்ற பெயர்களிலும், வேறு பல புனைப் பெயர்களிலும் 40 ப்ளஸ் வருஷங்களாக எழுதி வ்ருகிறேன்.

அமரர் கல்கி அவர்களின் பக்தன்.
எழுத்தாளர் தேவன் அறக்கட்டளை எனக்கு விருது தந்து என்னைக் கௌரவப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய விளம்பர நிறுவனத்தில் காப்பிரைட்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.
என் எழுத்துகள் எட்டு புத்தகங்களாக வந்துள்ளன. கைவசம் இன்னும் மேட்டர் இருக்கிறது. பார்க்கலாம், யாராவது ஐயோ பாவம் பப்ளிஷர் அகப்படாமலா போவார்! நம்பிக்கைதானே வாழ்க்கை!
என் மனைவி கமலாவும், நானும் சுமார் ஒரு வருஷம் உழைத்து, நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்தில் 848 பக்க புத்தகமாக கணினியில் அடித்து, பேஜ்மேக்கரில் வடிவமைத்து 2006’ல் போட்டோம். (கமலாவும் கணினியில் புகுந்து விளையாடுவார்!) இப்போது -2009ல்- நான்காவது பதிப்பு வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)

தொடர்ந்து படியுங்கள். இன்சோம்னியா இருந்தால் பறந்து போய்விடும்!)