Showing posts with label தொச்சு. Show all posts
Showing posts with label தொச்சு. Show all posts

December 19, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் -- பாகம்-4

              
    அடுத்த இரண்டு நாள் பிரச்சனை இல்லாமல் கழிந்தது.
     வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு ஸ்டார்ட் செய்தேன். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்பது போல், ஓசைபடுத்தாமல் வேலை செய்தது.
     “கமலா…. வாஷிங் மெஷின் பரவாயில்லை. தெரியாமல் பாதி விலைக்கு கொடுத்துவிட்டார் போலிருக்கிறது, “என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னதை வாஷிங் மெஷின் கேட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ, தன்னைப் பற்றி குறைவாக நான் சொல்லிவிட்டேன் என்று நினைத்ததோ என்னவோ, சட்டென்று நாலைந்து தும்மல், ஐந்தாறு இருமல், மூன்று நான்கு ஹைஜம்ப் என்று செய்தது…” கமலாகமலா.. முதல்லே வாஷிங் மெஷினை நிறுத்துஅது என்னவோ ஸ்கிப்பிங் கயிறு இல்லாமலேயே குதிக்கிறது. கொஞ்சம் விட்டால் தவளை மாதிரி தத்தித் தத்தி ஹாலுக்கு வந்துவிடும்…” எந்த ஸ்பிரிங்கெல்லாம் உடைஞ்சிருக்கோ,, வெளியில்பாடியெல்லாம் காட்பாடியாக  இருந்ததே என்று பார்த்தேன். கொஞ்சம் துரு தானே என்று நினைச்சேன்….” இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே , காலிங்பெல் அடித்தது…” கமலா.. யாரோ யாரோ மணி அடிக்கிறாங்க.. இந்த வாஷிங்மெஷின் ஊரையே கூட்டிடும் போல இருக்கு.. நம்பியார் மாதிரி இன்னொரு வில்லனாக இருக்கும்..” என்றேன்.
     “ஏன் பயந்து சாகறீங்க? நான் போய் பார்க்கிறேன்என்று சொல்லிக் கொண்டே, கமலா போய், மெல்ல கதவைத் திறந்தாள்.
     ஒரு மாமி கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தாள். (எனக்கு நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது’)
     “நமஸ்காரம் மாமி.. நான் மேல் வீட்டிலே இருக்கிறேன்.. நீங்க புதுசா வந்திருக்கீங்களா?... என் பேர் பாமா சித்தி.. ஆமாம்மா.. இந்த சித்தி என் பேரோட எப்படியோ ஒட்டிண்டுத்துஎங்க குடும்பத்துலேயே நான் தான் கடைசிப் பொண்ணு. என் அக்கா பசங்க, சித்தி சித்தின்னு கூப்பிட்டு சித்தி என் பேரோட ஒட்டிக் கொண்டது. எல்லாருக்கும் நான் சித்தி.. எங்க ஆத்துக்காரர் கூட பாமா சித்தின்னு தான் கூப்பிடுவார்.. போகட்டும் .. உங்க பேர் என்ன?”
“      “என் பேரு கமலா…” என்றாள் கமலா..
       கீழே போனேன். தபால்காரர் நாலைந்து கவரைக் கொடுத்துட்டு, இந்த அட்ரஸ்க்கு வந்த கவர்இந்தாம்மா ,” என்று சொல்லி தபால்களைக் கமலாவிடம் கொடுத்தார்.
      ”ரொம்ப தாங்ஸ் பாமா சித்திஎன்றாள் கமலாபாமா சித்திக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.
      “ஆமாம் ..கமலா,, இந்தக் கவரில் ஒன்றுஅமுதம்பத்திரிகையிலிருந்து வந்திருக்கிறது. .. உன் ஆத்துக்காரர் அங்க வேலை செய்யறாரா?”
      “இல்லை சித்தி. அவர் கதை எழுதறவர்..”
       ”அப்படியா..ரொம்ப சந்தோஷம். கவர்லசெக் வந்திருக்குமாக்கும்’  என்று கேள்வியாக கேட்காமல், ஒரு யூகமாகச் சொன்னார்.
       ”ஆமாம்.. சித்தி..”
      “கமலாநான் கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே.. உன்னைப் பார்த்தால் என் அக்கா பேத்தி மாதிரி இருக்கிறதுஅதனால் உரிமையுடன் கேட்கிறேன்..”

December 07, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் - பாகம் -3

மறுநாள் காலை எழுந்ததும், கமலா சின்ன வேலைக் கொடுத்தாள். 
‘பழைய வீட்டுத் தோட்டத்தில் நாலு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை விட்டுவிட்டு வந்துவிட்டோம்.. போய் எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள். கல்லு மாதிரி இருக்கிற பக்கெட்.. என் பட்டுப் புடவையைப் போட்டு வாங்கின பக்கெட்” என்றாள்.
     “கமலா.. நீ பட்டுப்புடவை போட்டு வாங்கின பக்கெட்டாக இருந்தாலும் சரி, இல்லை, வைரத் தோட்டைப் போட்டு வாங்கின பக்கெட்டாக இருந்தாலும் சரி, அது மொத்தத்தில் பிளாஸ்டிக் பக்கெட்தான்” என்றேன்.
     ”நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை” என்று சொல்லியபடியே காலில் செருப்பை மாட்டிக் கொண்டாள். 
“என்ன கமலா… செருப்பு போட்டுண்டு கிளம்புறே… மார்னிங் வாக்கிங்கா? என்று கேட்டேன்.
     “வாக்கிங்தான். பழைய வீட்டு வரைக்கும் போய் பக்கெட்டை எடுத்துக் கொண்டு வரேன்.. உங்ககிட்ட சொல்லி, எதுக்கு ஆயிரம் பேச்சு வாங்கணும்” என்றாள். கமலா ‘பாவ்லா’ செய்பவள் அல்ல. போனாலும் போய்விடுவாள் என்று எனக்குத் தெரியும். எனக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் செய்வாள். உம்… நான் ஒரு வடிகட்டி. கமலா இதுவரை சொல்லிக் கொடுத்த ‘பாடங்களை’ நான் கற்றுத் தேர்ந்திருந்தால், இத்தனை வருஷத்தில் 30, 40 டிகிரி வாங்கியிருப்பேன்..!)
     ”கமலா.. நான் ஸ்கூட்டரில் போய் எடுத்து வந்து விடுகிறேன்… காந்திஜி நடை பயணம் போகிற மாதிரி கிளம்பிட்டே!..” என்று சொல்லியபடி ஆணியில் மாட்டியிருந்த ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு, மளமளவென்று படிக்கெட்டில் இறங்கினேன்
     முன்தினம்  ‘ஸ்கூட்டர்’ வைத்த ஈசானிய மூலையைத் தேடிப் போனேன். அங்கு போவதற்கு சில அடிகளுக்கு முன்னமேயே பெரிய ஷாக் ஏற்பட்டது. 

November 28, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் - பாகம்-2


    நம்பியார் “அடுத்து ஒரு சின்ன விஷயம்.. உங்கள் வீட்டு பால்கனியில் துணியை உலரப் போடும்போது நீளமான  துணியைப் போடாதீங்க..”
     “என்ன அப்படி ஏதாவது வாஸ்து சாஸ்திரம் இருக்கிறதா?.. .புரியலையே…”
     “ஒண்ணுமில்லை, சார். நீளமானத் துணியைப் போட்டால், அதன் நிழல் எங்கள் பால்கனியில் விழுகிறது. எங்கள் துணி உலராது… இதுக்கு முன்னே இருந்த முத்துராமனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட கைகலப்பே  ஏற்படற மாதிரி ஆகிவிட்டது… ஆனால் அந்த ஆளு மகா மோசம்… வேண்டுமென்றே ஜமக்காளம்,, பெட்ஷீட்  என்று, ஈரம் சொட்ட சொட்ட உலர்த்துவான்…. நான் என்ன லேசுப்பட்டவனா என்ன? அப்படியே இழுத்து, கீழே ஓடற சாக்கடையில் போட்டுவிடுவேன்… நான் நல்லவனுக்கு நல்லவன் 
வில்லனுக்கு  வில்லன்” என்றார்.
 ”நல்லவனாக இருக்கும்போது ‘நம்பியார்’ என்ற உங்கள் பெயரை ‘எம்ஜியார்’ என்று மாற்றிக் கொண்டு விடுவீர்களா?” என்று கேட்டு நானே ‘ஓ’ என்று சிரித்தேன்.

     நம்பியார், ஒரு மில்லி செகண்ட் சிரித்துவிட்டு, “நம்ப மாட்டீர்கள்.. உங்கள் வீட்டின் முன்னாள் சொந்தக்காரரின் மைத்துனன் பெயர் ராமச்சந்திரன். சரியான உதவாக்கரை. தினமும் அவனோட சண்டைதான்; நான் வில்லனாக இருக்கலாம்; அவன் வில்லனுக்கு வில்லன்.… வர்றேன் சார்… ஸ்கூட்டரை இப்பவே எடுத்துடுங்கோ, என்று சொல்லிவிட்டுப் போனார்.
     “என்ன தொச்சு…கேட்டியா, நம்பியார் சொன்னதை?” என்று லேசான கேலிக் குரலில் கேட்டேன்…
      நான் எதற்கு ’ரூட்’ போடுகிறேன் என்று கமலா (கற்பூர நாயகி!) ஊகித்துக் கொண்டே, “ஏதாவது ஆரம்பிக்காதீங்க. வாய் செத்தவன், தொச்சு… நீங்க எவ்வளவு முட்டினாலும் சரி, தேள் மாதிரி கொட்டினாலும் சரி, அத்திம்பேர் என்று வந்து வேலை செய்வான்…..சரி.. சரி. போய் ஸ்கூட்டரை எடுத்து வெச்சுட்டு வாங்க”என்றாள்.
     கீழே போனேன். வாட்ச்மேனைத் தேடினேன். காணவில்லை. அப்போது ஒரு வேலைக்காரி வாசலைப் பெருக்க வந்தாள்.
     “ஏம்மா இங்கே ஸ்கூட்டரை நிறுத்தறதுக்கு இடம் எங்கே இருக்குன்னு தெரியுமா?
     “இடம் இருந்தாதானே சொல்றதுக்கு. இங்கே நிறுத்தாதே, அங்கே நிறுத்தாதே என்று தெனமும் ஒரு சண்டை நடக்குது… புதுசா வந்திருக்கியா?.. இந்த ஏரியாவில் ஒரு அங்குல இடம் கூட இல்லை. எல்லாரும் ’பட்டா’ போட்டுக்கிட்டாங்க அவங்க ‘பட்டா’ போட்டுக்கிட்ட இடத்திலே செருப்பை விட்டாக்கூட ’பட்டா’ கத்தி எடுக்காத குறையாகச் சண்டைக்கு வந்துடுவாங்க… ஒண்ணு செய்யுங்க.. இப்படியே போய், காம்பவுண்ட் மூலையிலே நாலு குப்பைத் தொட்டி வெச்சிருக்கிற இடத்துல ஒரு பக்கமாக விட்டுடுங்க.. அங்கே யாரும் சொந்தம் கொண்டாட மாட்டாங்க.” என்றாள்.

     “நல்லா இரும்மா” என்று சொல்லியபடியே, ஸ்கூட்டரை ஸ்டாண்டிலிருந்து எடுத்து தள்ளிக் கொண்டுப் போனேன்.  குப்பைத் தொட்டி இருந்த இடத்தைக் என் கண்ணால் கண்டுபிடிப்பதற்குள், என் மூக்கு கண்டுபிடித்துவிட்டது. கூவம் தான் அபார்ட்மெண்டிற்கு வந்துவிட்டதோ, என்று  எண்ணும்படி தூக்கி அடித்தது துர்நாற்றம்.
     மூச்சு அடக்கிக் கொண்டு, ஸ்கூட்டரை அந்த இடத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து, மூச்சு பிளஸ் பெருமூச்சு விட்டேன்.

November 21, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மெண்ட்? -பாகம் 1

"அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென் ட்?"
‘ என்  மைத்துனன் தொச்சு  ஏதோ எவரெஸ்ட் சிகரத்தில் கொடியேற்றியது மாதிரி, பயங்கர  உற்சாகத்துடன் தன் அருமை அக்காவைப் பார்த்துக் கேட்டான்.
 கமலா, அதற்கு பதில் சொல்வதற்குள், பாலும் தெளிதேனும், பாகும் கலந்த குரலில் தொச்சுவின் அம்மாவும் என் மாமியாருமான பாசத்திலகம், “எப்படி இருக்குன்னு கேட்கணுமாடா?… இந்த  அபார்ட்மெண்ட்டை உங்க அத்திம்பேருக்காக, ஓடி ஓடி நீ தேடிக் கண்டுபிடிச்சிக் கொடுத்திருக்கியே. எப்படிடா அதில் குறை இருக்கும்? ரொம்ப நன்னா இருக்குடா… பாத்து பாத்து கட்டியிருக்காண்டா இந்த பில்டர். காற்றும் வெளிச்சமும் அபாரம். இரண்டெட்டில் கடை, கண்ணி, கொஞ்சம் தள்ளிப் போனால், பால் டிப்போ, பஸ் ஸ்டாப். போஸ்ட் ஆபீஸ் இருக்கு. சாதாரணமாக நீ யாருக்கு எது செய்தாலும் உயிரைவிட்டுச் செய்வே... அத்திம்பேருக்குன்னா கேட்கணுமா?”  என்று  பாராட்டுப் பத்திரம் படித்தார்.
     இந்த கடைசி வாக்கியத்தைச் சற்று உரக்கச் சொன்னாள் என் மாமியார்- எனக்கு தெளிவாகக், ’கேட்கணும்’ என்று. 
     மிருதங்கம் விட்டதும், கஞ்சிரக்காரர்  துவக்குவது மாதிரி, மாமியார் நிறுத்தியதும்,  தொச்சுவின் அருமை அக்கா ’தனி’யைத் தொடர்ந்தார். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும்  என்பதை நிதர்சனமாக்கியது அவளது ஆவர்த்தனம்..
     நான் உள் அறையில் அட்டைப் பெட்டிகளைத் திறந்து, என்னுடைய துணிகளையெல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தேன்.
     காலிங் பெல் அடித்தது. அப்படியே தூக்கிவாரிப் போட்டது. தீயணைப்பு வண்டிதான் வீட்டுக்குள் வந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன். காரணம், அந்த காலிங்பெல்லின் ஓசை  சாதரண ஓசையில்லை.   தீயணைப்பு வண்டி மணியின் ஓசை கெட்டது என்று சொல்லலாம்!
     ”என்னப்பா தொச்சு?” என்று அலறி  அடித்துக் கொண்டு வந்தேன்
“அத்திம்பேர், பயந்துட்டீங்களா? பெல்லை முதல்லே மாத்திடலாம்… இல்லை அத்திம்பேர். வீட்டை நமக்கு வித்தவரின் மனைவிக்குப் பாவம்  காது கேட்காது. அதுக்காக, ஓசை அதிகமாக இருக்கிற மணியை வெச்சிருக்கிறார்.. போகட்டும்.” என்றான், என்னை சமாதானப் படுத்தும் எண்ணத்துடன்
     “ தொச்சு, என்னவோ  ‘போகட்டும்’னு அசால்ட்டா சொல்றே?.. என் காது டிரம் கிழிஞ்சு போயிடும் போல் இருக்கு.. அப்படியே வயத்தைக் கலக்கிடுச்சு.. இவ்வளவு உரக்க அடிக்கிற மணியையா வெச்சுப்பாங்க..   மனு நீதிச் சோழன் மணியா இது? ஆளையே  அடிச்சுடும் போல இருக்கு…..இப்படி பயங்கரமா, நாலு ஜெட் பிளேன் வீட்டுக்குள்ளேயே பறக்கிற மாதிரி சப்தம் போட்டால், அவனவன் நம் மேல பாய்வாங்க., அபார்ட்மெண்ட்ல இருக்கிற குழந்தைகள் பயந்து அழுதாங்கன்னா என்ன ஆகிறது” என்றேன்,
“அதுவும் ராத்திரியிலே, அகால வேளையிலே அடிச்சா என்ன ஆகிறது?” என்று கேட்டார் என் மாமியார். இது ‘ நோகாமல் அடிக்கிறேன்;  ஓயாமல் அழு” பாணி தந்திர மந்திரம்!
 
   ”தொச்சு, இது அலாரம் மணி இல்லை. அலறும் மணி!” என்றேன்.
     சாதாரணமாக நான் சொல்லும் ஜோக்குகளைப் புரிந்து கொண்டு சிரிக்க தொச்சுவிற்கு குறைந்தபட்சம் அரைமணி நேரம் தேவைப்படும். அப்படி புரிந்து கொண்டால் , விளக்கெண்ணெய், வேப்பம்பூவும், பாகற்காயும் சேர்த்து அரைத்த துவையல் சாப்பிட்ட மாதிரி முகபாவத்துடன் சிரிப்பான். ஆனால், இந்த  ‘அலறும் மணி’ ஜோக்கிற்கு தொச்சு சிரித்த சிரிப்பு, அலாரத்தின் ஓசையைவிட சற்று அதிகமாகத்தான் இருந்தது!
     தொச்சு சொல்லித்தான் இந்த அடுக்குமாடி குடி இருப்பை  வாங்கினேன். ஆகவே அதில் குற்றம் கண்டுபிடிக்கமாட்டான். அதுமட்டுமல்ல, ‘எல்லாம் பிரமாதம்’ ‘அபாரம்’ ‘சூப்பர்’ என்று நாங்கள் சொல்லவேண்டும். என்றும் எதிர்பார்ப்பான்..
     “அத்திம்பேர்.. இந்த வீட்டுக்காரர் ரொம்ப முன் யோசனக்காரர் மட்டுமல்ல; ஒவ்வொன்றையும் யோசிச்சு யோசிச்சு செய்றவர்… இதோ பாருங்க, இங்க ஒரு கொக்கியை கதவருகில் போட்டு வைத்திருக்கிறார். எதுக்குத் தெரியுமா? பால் பாக்கெட் போட சின்ன பிளாஸ்டிக் கூடையை மாட்டறதுக்கு. கதவு கிரில்லில் பையைக் கட்டித் தொங்கவிடலாம்..பார்க்க சகிக்காது. அதுவும் போஸ்டாபீஸில், கோந்து போட்டு ஒட்டினப்புறம் கையைத் துடைச்சிக்க ஒரு துண்டு துணியை வைச்சிருப்பாங்க… அதுமாதிரி இருக்கும்.”
     “தொச்சு, வாப்பா, சமையல் அறையை கொஞ்சம் நிதானமாகப் பார்க்கலாம். வீடு வாங்கறதுக்கு முன்னே நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நம்ம வீடு, நாம்ப சமையலறைன்னு பார்க்கறது வேறு அனுபவம் இல்லையா?” என்றேன்.

April 27, 2015

ஸ்டார் டிவி. ஒழிக


என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. "மாப்பிள்ளை. இந்தாங்கோ கொஞ்சமா ஹார்லிக்ஸ் கலந்துண்டு வந்திருக்கேன் . மூளையைக் கசக்கிக்கொண்டு எழுதறதுக்குச் சக்தி வேண்டாமா?' என்று சொல்லி என் மாமியார் ஒரு டம்ளர் ஹார்லிக்ஸை என் முன் வைத்தாள்.
இதுவரை  என்னைப் பார்த்து நேரடியாகப் பேசி அறியாத (ஏன் ஏசியும் அறியாத, அதாவது நேரடியாக ஏசி அறியாத!) என் அருமை மாமியார்,. 1. மாப்பிள்ளை என்று கூப்பிட்டார், 2. ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார், 3. என்னை எழுத்தாளன் என்று அங்கீகரித்தார்.!! 

எத்தனை அதிசயங்களைப் படைத்தாய், இறைவா! இப்படி அதிசயங்களால் திக்குமுக்காடிப் போய் விட்டதால் தொச்சுவும் அவன் நால்வகைப் படைகளும் என் வீட்டுக்கு வந்து முகாமிட்டு இட்லி, தோசை சம்ஹாரம் செய்து கொண்டிருப்பதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை!
அந்த சமயம் என் மூளைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. என் மாமியார் மாறியதன் மர்மம் விளங்கியது. எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொச்சு வந்து விட்டுப் போனதிலிருந்து ஏற்பட்ட மாற்றம்! இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி என்ன நடந்தது?

என் அருமை மனைவி கமலாவும் அவளுடைய அருமை அம்மாவும், அதாவது என் மாமியாரும் மாவடு வாங்கப் போயிருந்தார்கள். மாவடு வாங்கப் போய் இவர்கள் மாங்காய் பார்டர் போட்ட புடவையை வாங்கி வந்துவிடப் போகிறார்களே (சாதாரணமாக அவள் அப்படிச் செய்வது வழக்கம்!) என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். தனிமையும் கவலையும் சேர்ந்து ரொம்ப போரடிக்கவே டிவியைப் போட்டேன். இதைவிட டி.வி. அதிகமாக போர் அடிக்காது என்ற அல்ப ஆசையுடன்!

March 18, 2015

எழுத நினைத்தால் எழுதலாம்


மாங்கு, மாங்கு என்று முந்நூறு பக்கத்தில் மாத நாவலுக்கு ஒரு கொலைக் கதையை எழுதி முடித்து விட்டேன். தலைப்பு என்ன வைப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.
பின்னால் யாரோ பெரிதாக ஏப்பம் விடும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தேன். என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சுதான். வயிற்றில் அடையாக இருக்கும்! அதனால்தான் ஏப்பம் சைரன் மாதிரி ஒலிக்கிறது.
தலைப்புக்குத் தவித்துக் கொண்டிருந்த அவஸ்தையில் தொச்சுவைக் கண்டதும் எரிச்சல்தான் வந்தது.
“தொச்சு... முக்கியமான விஷயம் எதுவும் இல்லை என்றால் அப்புறம் பேசலாம். இந்த நாவல் வேலை அவசரமா முடிக்கணும்'' என்றேன்.
“அத்திம்பேரே... ஸாரி... உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு வரலை. திடீரென்று ஒரு ஐடியா வந்தது. சொல்லிவிட்டுப் போகலாமே என்று வந்தேன்.''
“ஐடியா தேவையாக இருக்கிற போது உனக்குச் சொல்லி அனுப்பறேன். அப்படியே ஐடியாவில் ஊறின பரம்பரை... தொச்சு...  கொஞ்சம் என்னைச் சும்மா விடு'' என்றேன்.
"பரம்பரை' என்று நான் சொன்ன வார்த்தையைக் கேட்டுக் கமலா, “எங்க பரம்பரை ஒண்ணும் உங்க பரம்பரைக்குத் தாழ்ந்து போகவில்லை. உங்க பரம்பரை அழகு தெரியாதாக்கும்...'' என்று ஆரம்பித்தாள்.
“கமலா... எதுக்கு இப்படி நாக்குல நரம்பில்லாமல் பேசறே? அவரானால் மண்டையைக் கசக்கிக் கதை எழுதறார். உனக்குக் கதை எழுதத் தெரியுமா? இல்லை, உன் தம்பிக்குத்தான் கதை எழுதத் தெரியுமா...? கதை எழுதத் தெரிஞ்சவாளுக்கு இல்லாத ஐடியாவா உன் தம்பிக்கு வரப் போறது...?'' என்று என் மாமியார் என்னை மட்டம் தட்டும் அர்த்தத்தில் பேச, அருமைப் பெண்ணிற்கு எடுத்துக் கொடுத்தாற்போல் ஆகியது.

December 29, 2014

கமலா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்


ஒரு கணம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா, நிஜமா என்று புரியவில்லை. நிதர்சனமா, பிரமையா என்று தெரியவில்லை!

தொச்சு.. என் அருமை கமலாவின் அருமைத் தம்பி தொச்சு என் முன்னே கட்டுக்கட்டாய் ரூபாய் கட்டுகளை வைக்கிறான். "அத்திம்பேரே, இந்தாங்க பணம் என்கிறான்.

என்ன அதிசயம்? தொச்சு கை நீட்டி கொடுத்ததாக வரலாறே கிடையாது. வாங்கி வாங்கி சிவந்த கை அவனுடையது. அப்படிப்பட்டக் கறவை திலகம் எனக்கு - ஏமாந்த சோணகிரி சங்கத்தின் தலைவரான எனக்கு - பணத்தைக் கொடுக்கிறான்!

கமலா, பற்களுக்கு இடையில் முகமாகத் திகழ்கிறாள். கதவை ஒட்டி நின்று கொண்டிருந்த என் மாமியார்,  ஒலிம்பிக்கில்   தானே மெடல் வாங்கி வந்ததைப்போல் முகம் மலர்கிறார்!

`என்னப்பா இது' எங்கேயாவது லாட்டரி அடிச்சியா?'' என்று கேட்டேன்.

`காலத்துக்கும் தொச்சு உங்க கிட்டேயிருந்து பணம் வாங்கிக் கொண்டெ இருப்பான்னு நெனைச்சிங்களா!'' என்றான் உற்சாகமாக!

`அதில்லைடா... கொள்ளை அடிச்சுண்டு வந்தேயா, பிக்பாக்கெட் பண்ணிண்டு வந்தேயான்னு கேட்க மறந்துட்டார்.  ஒரு தத்துப் பித்து கதை எழுதி ரூபாய் சம்பாதிச்சா அது பெரிசு! மத்தவங்க நாயா அலைஞ்சு பேயா திரிஞ்சு சம்பாதிச்சா, அது கள்ள நோட்டு, பிக்பாக்கெட் பணம்!'' தொச்சுவின் உடன் பிறந்த சகோதரியின் பாகற்காய் + எட்டிக்காய் ஜூஸ்  வார்த்தைகள்!

"கமலா, நான் தொச்சுவைக் கேட்கறேன்; அவன் சொல்றான். நீ என்ன, நடுவில்?'' என்றேன்.

`பழங்காநத்தத்திலே நாம மனை வாங்கினோமே, ஞாபகமிருக்கா? அது பழங்காநத்தம் இல்லை. குப்பையெல்லாம் கொட்டிய பழங்கா நாத்தம்னு கூட நீங்களே சொல்வீங்களே!''

"அதுக்கு என்ன வந்தது?அதுல போட்ட பணத்திற்கு எப்போதோ எள்ளு போட்டாச்சே!''

"நீங்க போடுவீங்க,...ஆனால் அவனுக்கு மனசே சரியில்லை. நம்மால அத்திம்பேருக்கு நஷ்டமாயிடுத்தேன்னு வருத்தம்... வருத்தம்''.

"கமலா...சட்டுனு விஷயத்துக்கு வா. அந்த பிளாட்டை யார் தலையிலேயாவது கட்டிட்டானா?'' 

"கட்டறதா... பக்கத்திலே ஒரு இண்டஸ்ட்ரி வர்றது. அவங்களுக்குப் போகறதுக்கு வழி நம்ப பிளாட்தான். நல்ல விலை கொடுத்தான். நாம எப்பவோ பாதி பாதி பணத்தைப் போட்டு பத்தாயிரத்துக்கு வாங்கினோம். இப்போ எண்பதாயிரத்திற்குப் போயிருக்கு... உங்க பங்கு நாற்பதுதான் இது'' என்றான் தொச்சு.

"பரவாயில்லைப்பா...பிளாட் வாங்கி வித்தால் நல்ல லாபம் வரும்போல இருக்கே! ஆமாம்,.பாதி பாதி பணம் போட்டோம்னு சொன்னியே. உன் பங்கு 5000 ரூபாயை என் கிட்ட கடனாக வாங்கிண்டே இல்லயா? இதுவரை அந்த பணத்தைத் தரலையே?''

October 06, 2014

தொச்சு பகவான்



தொச்சுவை பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பல சமயம் -ஏன் ஒவ்வொரு சமயமும் என் மைத்துனன் தொச்சுவைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போடுவது சகஜம்தான். லேசான அதிர்ச்சி, கூடுதலான அதிர்ச்சி, அதிக அதிர்ச்சி என்று அதிர்ச்சியின் அளவில் மாறுதல் இருக்குமே தவிர, அதிர்ச்சி இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த சமயம் அவனைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி சற்று அதிகமானது.

    தொச்சு காவி உடையில் இருந்தான்! காவி வேட்டி, கிட்டத் தட்ட கணுக்கால் வரை நீண்ட ஜிப்பா, ஆயிரம் தான் அங்கச்சியைத் திட்டிக்கொண்டே இருந்தாலும், துறவியாக மாறக்கூடியவன் அவன் அல்லவே!

அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக்கொண்டு, “என்னப்பா இது புதிய கோலம்? உன்னை தொச்சுன்னு கூப்பிடவேண்டுமா அல்லது தொச்சு பகவான்னு கூப்பிட வேண்டுமா ....?  கமலா!  பார், யார் வந்திருக்கான்னு .... தொச்சு பகவான் வந்திருக்கிறார், பாத பூஜை பண்ணி உள்ளே “ஏள” பண்ணு என்றேன்.
    என் அருமை மாமியார் பின் தொடர, என் அருமை மனைவி கமலா, “தொச்சுவை பாதகன்னு சொல்லிக்கொண்டே இருப்பீங்க, திடீர்னு அவன் மேல் என்ன கரிசனம்? பகவான்னு சொல்றீங்க!'' என்று கேட்டுக் கொண்டே வந்தாள். தொச்சுவின் உடை அலங்காரத்தைப் பார்த்து, “என்னடா தொச்சு?.... இது என்ன வேஷம்? என்று கேட்டாள்.
    ”வேஷமும் இல்லே, கோஷமும் இல்லே. இது சும்மா ஒரு இது தான்.''
    ”என்னப்பா தொச்சு. டி வி. பேட்டியில் பதில் சொல்பவர்கள் போல், ஒரே இதுவா பேசறே?''
    ”உள்ளே வாடா, வந்தவனை வாசலிலேயே நிக்க வச்சுண்டு பேசற வழக்கத்தை எத்தனை வருஷமானாலும் விடமாட்டீங்களே!'' என்று கமலா தொச்சுவை வரவேற்றபடியே என்னையும் தூற்றினாள். சந்தடிசாக்கில் கந்தகப் பொடி வைப்பதில் கெட்டிக்காரி.
    ”அத்திம்பேர், இந்த டிரஸ்ஸைக் காவியாகப் பார்க்காதீங்க. இது கதர் துணி. சுதந்திரம் வந்து ஐம்பது வருஷம் ஆச்சு. காந்திஜி கதர் உடுத்தச் சொன்னார். ஆனால் நாம் காந்தியை மறந்து விட்டமாதிரி கதரையையும் மறக்க ஆரம்பிச்சுட்டோம் .... அதனாலே ....?''
    ”என்னப்பா, அதனால்'னு சொல்லி நிறுத்திட்டே? விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடருமா'' என்று கேட்டேன்.