March 18, 2015

எழுத நினைத்தால் எழுதலாம்


மாங்கு, மாங்கு என்று முந்நூறு பக்கத்தில் மாத நாவலுக்கு ஒரு கொலைக் கதையை எழுதி முடித்து விட்டேன். தலைப்பு என்ன வைப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.
பின்னால் யாரோ பெரிதாக ஏப்பம் விடும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தேன். என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சுதான். வயிற்றில் அடையாக இருக்கும்! அதனால்தான் ஏப்பம் சைரன் மாதிரி ஒலிக்கிறது.
தலைப்புக்குத் தவித்துக் கொண்டிருந்த அவஸ்தையில் தொச்சுவைக் கண்டதும் எரிச்சல்தான் வந்தது.
“தொச்சு... முக்கியமான விஷயம் எதுவும் இல்லை என்றால் அப்புறம் பேசலாம். இந்த நாவல் வேலை அவசரமா முடிக்கணும்'' என்றேன்.
“அத்திம்பேரே... ஸாரி... உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு வரலை. திடீரென்று ஒரு ஐடியா வந்தது. சொல்லிவிட்டுப் போகலாமே என்று வந்தேன்.''
“ஐடியா தேவையாக இருக்கிற போது உனக்குச் சொல்லி அனுப்பறேன். அப்படியே ஐடியாவில் ஊறின பரம்பரை... தொச்சு...  கொஞ்சம் என்னைச் சும்மா விடு'' என்றேன்.
"பரம்பரை' என்று நான் சொன்ன வார்த்தையைக் கேட்டுக் கமலா, “எங்க பரம்பரை ஒண்ணும் உங்க பரம்பரைக்குத் தாழ்ந்து போகவில்லை. உங்க பரம்பரை அழகு தெரியாதாக்கும்...'' என்று ஆரம்பித்தாள்.
“கமலா... எதுக்கு இப்படி நாக்குல நரம்பில்லாமல் பேசறே? அவரானால் மண்டையைக் கசக்கிக் கதை எழுதறார். உனக்குக் கதை எழுதத் தெரியுமா? இல்லை, உன் தம்பிக்குத்தான் கதை எழுதத் தெரியுமா...? கதை எழுதத் தெரிஞ்சவாளுக்கு இல்லாத ஐடியாவா உன் தம்பிக்கு வரப் போறது...?'' என்று என் மாமியார் என்னை மட்டம் தட்டும் அர்த்தத்தில் பேச, அருமைப் பெண்ணிற்கு எடுத்துக் கொடுத்தாற்போல் ஆகியது.
உடனே கமலா, “போம்மா, பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தவன் கிட்டச் சொன்ன கதையாக, அவருடைய கதை எழுதற திறமையை என்கிட்டச் சொல்லாதே. மூர்மார்கெட்டிலே போய் 1930ம் வருஷத்து நாவல்களை வாங்கிண்டு வந்து பரண் பூரா அடுக்கி வெச்சிருக்காரே அந்த ஐடியா யாருக்கு வரும்? இரண்டு நாலைப் படிச்சுக் கலந்து, பிசைந்து ஒரூ புது நாவல் உருவாக்குகிற திறமை யாருக்கு வரும்? வெளியில் சொன்னால் வெட்கக் கேடு...'' என்றாள் கமலா.
“போறும் கமலா... உங்க பரம்பரை - நியூட்டன் பரம்பரை, ஐன்ஸ்டீன் பரம்பரை. ஒரு வார்த்தை சொன்னால் அதை வெச்சுண்டு ஒரு மகாபாரதமே எழுதிடுவே நீ...'' என்று கத்தினேன்.
“அக்கா.. நீ உள்ளே போ.. அத்திம்பேர் என்னைத்தானே சொன்னார். உனக்கு ஏன் உறைக்கிறது? அத்திம்பேர் மனசு எனக்குத் தெரியும். அவர் எனக்குச் செஞ்சிருக்கிற உதவிகளுக்கு நான் ஏழு ஜென்மத்துக்கு நன்றியோட இருக்கணும்'' என்றான் தொச்சு.
தொச்சு ஒரு பாம்பா அல்லது பழுதா? என்று தெரியவில்லை. இருந்தாலும் அவன் ஐஸ் வைத்தது எனக்குப் பிடித்துத்தான் இருந்தது.
“இல்லை... தொச்சு... நான் நாவல் பிரச்னையில் இருந்ததால, உன் மேல அனாவசியாமா "சள்"ளுனு விழுந்தேன்... போகட்டும். என்ன ஐடியா... சொல்லு'' என்றேன்.
“சொல்றேன் அத்திம்பேர். அவன் அவன் ஷேர் மார்க்கெட்லே நூறைப் போட்டு ஆயிரம் வார்றான். தோலில் காரே பூரேன்னு கோட்டுத் தைச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி நூறு ரூபாய் சரக்கிற்கு நூறு டாலர் பார்க்கிறான். நீங்க என்னடான்னா இராப்பகலா யோசனை பண்ணி, கை விரல் தேயற மாதிரி எழுதி, ஆயிரம், இரண்டாயிரம் கூடப் பண்ண முடியாம தவிக்கிறீங்க...''
“தொச்சு... நீ சொல்றது உண்மைதான். ஆனால் ஒவ்வொருத்தரால் ஒண்ணு ஒண்ணு தான் செய்ய முடியும். அரிசி வியாபாரம் பண்றவன் எண்ணெய் வியாபாரம் பண்ணால் நஷ்டமாயிடும். ஏன்னா, ஒவ்வொரு வியாபாரத்திலேயும் ஆயிரம் நெளிவு, சுளிவு இருக்கு.''
“ஐயோ ஐயோ... பிரமாதமாகச் சொன்னீங்க அத்திம்பேர்.. இந்த மூளை, இந்த யோசனை எல்லாம் யாருக்கு வரும்?... அக்கா இரண்டு கப் காப்பி கொண்டு வா... எனக்குச் சர்க்கரை போடாதே'' என்றான். சந்தடிசாக்கில் கந்தகப் பொடி வைக்கும் தொச்சு!
“அத்திம்பேரே... உங்க பலம் எழுத்து. அதை வெச்சண்டே பணம் குவிக்கலாம் இராப்பகலாக் கண்முழிச்சு எழுதாமலேயே! அதுக்குப் பிரமாதமான ஐடியா தோணித்து. நேத்து ராத்திரி அச்சாபீஸ்ல உட்கார்ந்திருந்தப்ப'' என்றான்.
“என்ன அச்சாபீஸ்....? என்ன ஐடியா?'' என்றேன்.
அந்தச் சமயம் கமலா இரண்டு கப் காப்பியுடன் வந்து, “தொச்சு.. ஒரு அச்சாபீஸ் பார்ட்னர் ஷிப்ல எடுத்திருக்கான். போன வாரம் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிண்டு போகலாம்னு வந்தான். நீங்க இல்லை. "நான் அத்திம்பேர் ஆசீர்வாதமாக ஐந்நூறு ரூபாய் வெச்சுக்கடா' என்று கொடுத்தேன். ஒரு வாரமாகச் சொல்லணும் சொல்லணும்னு பாக்கறேன். நீங்க நாவல் எழுதற மும்முரத்தில் இருக்கிறப்பத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு இருந்துட்டேன்.'' என்றாள்.
என் அக்காவிற்கு எப்போதோ கொடுத்த இருபத்தைந்து ரூபாய் கைமாற்று இன்னும் திரும்பி வரவில்லை என்று 250 லிருந்து 257வது தடவையாக (தினமும் ஒரு தடவை) குத்திக்காட்டினால் மட்டும் அது என்னைத் தொந்தரவு செய்வதாகாது!  தொச்சுவுக்கு ஐந்நூறு ரூபாயைக் கொடுத்ததைச் சொல்வதற்கு மட்டும் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாதே என்ற கரிசனம்! நான் “அப்படியா'' என்று கூறுவதோடு நிறுத்திக் கொண்டேன். மேலே ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலும் மகாபாரதம் - பாகம் இரண்டு ஆரம்பமாயிருக்கும்!
“சரி, என்ன ஐடியா, அதைச் சொல்லு!'' என்று கேட்டேன்.
“அத்திம்பேரே.. உங்க லைன்லேயே நீங்க பணம் பண்ணலாம். எப்படின்னு கேட்கறீங்களா? "கதை எழுதுவது எப்படி?', என்கிற மாதிரி ஒரு தபால் பயிற்சிப் பள்ளியை ஆரம்பியுங்க...''
“சரிதான் தொச்சு... ஆனால் கதை எழுதறது ஒரு வித்தை; கதை எழுதறது எப்படின்னு எழுதறது வேற மாதிரி வித்தை...''
“அத்திம்பேரே... கரெக்டுதான். அதுக்கும் ஒரு ஐடியா வெச்சிருக்கேன். இப்படி போனைத் தள்ளுங்க...'' என்று சொல்லிய தொச்சு, ஒரு அழுக்கு டைரியை எடுத்து, ஏதோ டெலிபோன் நம்பரைப் பார்த்து, போனில் மளமளவென்று பட்டன்களை அழுத்தினான். சுமார் பத்துப் பதினைந்து பட்டன்களை அவன் அழுத்த அழுத்த, என் ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது! எங்கேயோ வெளிநாட்டுக்குப் போன் பண்ணுகிறான். பில் எவ்வளவு ஏறப் போகிறதோ! கடவுளே!
“ஹல்லோ.. ஹல்லோ... யாரு ஸ்ரீதரா... என்ன எப்படி இருக்கே. . எங்களையெல்லாம் ஞாபகம் வைச்சிருக்கியா? அமெரிக்கா போய்ட்டால் பெரிய மனுஷனாயிடுவே... போகட்டும்; போன வருஷம் ஜானா மூலமா சுண்டைக்காய் வற்றல் கொடுத்து அனுப்பினேனே, எப்படி இருந்தது? ஒரு கால் போட்டு, "தாங்கஸ்' கூடச் சொல்லலையே... சரி, போகட்டும். ஒரு ஹெல்ப் வேண்டும்.. அத்திம்பேர் இல்லை, அகஸ்தியன்... ஒரு கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் ஆரம்பிக்கிறார். "எழுதுவது எப்படி'ன்னு... அங்க அமெரிக்காவில் "ஹௌ டு ரைட்' அப்படின்னு நிறைய புக்ஸ் இருக்குமே... அந்த மாதிரி புஸ்தகங்களை பத்து, இருபதை ஒரே அமுக்கா அமுக்கி அனுப்பிடு. அப்புறம் இந்த மாதிரி கதை எழுதறதுக்கு ஸ்கூல் நடத்தறவங்களைப் பார்த்து, பாடங்கள் ஒரு செட் வாங்கி அனுப்பு... என்ன? அப்புறம் அங்கச்சிக்கு முத்து வாங்கி அனுப்பறேன்னு சொன்னியே, என்ன ஆச்சு? உனக்காக வேப்பம்பூ திரட்டி உலர்த்தி வெச்சிருக்கா... ரஸம் பண்ணினால் தூக்கி அடிக்கும்... இங்கே எல்லாரும் சௌக்கியம்.. ஒரு வாரத்தில் புஸ்தகம் வந்து சேரணும்...'' என்று சொல்லி போனை வைத்தான். நான் பெருமூச்சு விட்டேன்.
“அத்திம்பேர், இந்த ஸ்ரீதர் சரியான தொணதொணப்பு ஆசாமி... சட்னு விஷயத்தைக் கேட்டுக்க வேண்டியதுதானே.. அத்திம்பேர், அவன் அனுப்புற புஸ்தகத்தை எல்லாம் படிச்சு 20, 25 பாடம் தமிழில் எழுதுங்க. பாடமாக வர்றதை அப்படியே மொழி பெயர்த்துடுங்க... மத்ததை நான் பாத்துக்கறேன்... வர்றேன் அக்கா.. என்னது இன்னொரு அடையா, வேண்டாம்! இப்ப டயம் இல்லை.. சரி உன் மனசு எதுக்குக் கஷ்டப்படணும், ஒரு டப்பாவில போட்டுக் கொடு. ஏகப்பட்டதை வெச்சுடாதே. அஞ்சோ, ஆறோ வை போதும்.. என்று சொல்லி விட்டுப் பறந்தான் - டப்பைவை வாங்கிக் கொண்டுதான்!

தொச்சுவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து ஸ்ரீதரும் ஒரு பெரிய புஸ்தகக் கட்டை பார்ஸலில் அனுப்பியிருந்தான். (அடுத்த தடவை அவன் பெண்டாட்டி பசங்களுடன் வரும் போது எவ்வளவு செலவை என் தலைமேல் வைக்கப் போகிறானோ!)
புஸ்தகங்களில் லட்டு லட்டாகக் கட்டுரைகள் இருந்தன. பாடங்கள் ரொம்பப் பிரமாதமாக இருந்தன. ஒரு கணம் தொச்சுவை மனத்திற்குள் பாராட்டினேன்.
பரீட்சைக்குப் படிப்பது போல் இராப் பகலாகப் படித்தேன். (“இப்படி விடிய விடியப் படித்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்... பாலைச் சுண்டக் காய்ச்சியிருக்கேன். ஒரு தம்ளர் சாப்பிடுங்கோ'' - என் மனைவி.)
படித்த சூட்டோடு இருபது பாடங்களையும் எழுதி முடித்தேன்.
நடுநடுவே இந்தப் பிரயாசையெல்லாம் ஏதாவது பலன் தருமா என்ற சந்தேகம் தலையைத் தூக்கிக் கொண்டிருந்தது.
“அத்திம்பேர்... பாடம் எல்லாம் தயார் பண்ணிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். நான் நாலு நாளைக்கு ஒரு தரம் வந்து அக்காகிட்ட விசாரித்துக் கொண்டுதான் இருந்தேன். உங்களைத் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு உங்க ரூம் பக்கமே வரவில்லை... எப்படி வந்திருக்கு பாடம் எல்லாம்?''
“நல்லாத்தான் வந்திருக்கு தொச்சு.. ஆனால் இதில் ஆதாயம் இருக்குமான்னுதான் தெரியலை...''
“பேசப்படாது அத்திம்பேர். நானும் ஒரு மாசம் சும்மாவா இருந்தேன்? நிறைய சர்வே செய்தேன். விளம்பர டிசைன் கூடத் தயார் பண்ணிட்டேன். நாலு பத்திரிகையில் விளம்பரம் பண்ணினால் குறைஞ்சது ஆயிரம் பேராவது சேருவாங்க. ஐந்நூறு ரூபாய் பீஸ்.
“ஐந்நூறு ரொம்ப ஜாஸ்தியா இருக்கே.''
“பாருங்களேன், நீங்க மணியார்டர் கையெழுத்துப் போடறதுக்கே ஒரு ஆளை வேலைக்கு வெச்சுக்கணும்.''
“தொச்சு... இவ்வளவு நீ சிரமம் எடுத்துக்கறே... இதில் உனக்கு எவ்வளவு பங்குன்னு இப்பவே நிச்சயம் பண்ணிட்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கும்...''
“அத்திம்பேர்... இன்னிக்குத் தொச்சுன்னு ஒருத்தன் இருக்கான் என்றால் அது உங்களுடைய ஆதரவால்தான். ஆசீர்வாதத்தால்தான். உங்ககிட்ட நான் சாப்பிட்டதற்கு ஏழு ஜன்மத்திற்கும் உழைக்கணும்.. இதில வர்ற லாபம் மொத்தம் உங்களுடையதுதான். நீங்களே இஷ்டப்பட்டு எது கொடுத்தாலும் சரி... என் பிரஸ்ஸில் பாடங்களை அச்சடித்தால் பிஸினஸ் வருதே, அதுவே போதும்...'' என்றான் தொச்சு.
முதன் முதலாக எனக்குத் தொச்சுவின் மீது ஒரு அலாதிப் பாசம் பிறந்தது. பாவம். நல்லவன்தான். ஏதோ ஒரு சமயம் 5, 10 வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் இருந்திருப்பான். தொச்சுவுக்கு நல்ல மனசு.
தொச்சு தடபுடலாக விளம்பர டிசைன் தயார் பண்ணிக் கொண்டு வந்தான்.
“அத்திம்பேர், பாடங்கள் எல்லாம் கம்போஸ் ஆயிட்டுது. - புரூஃப் பார்த்துக் கொடுத்துடுங்கோ.. ஒரு மூச்சிலே அடிச்சுக் கொடுத்துடறேன். முதல்ல ஐயாயிரம் காப்பி அடிச்சுடறேன், ஒவ்வொரு பாடத்தையும்.'' என்றான்.
“ஐயாயிரமா... ரொம்ப ஜாஸ்தியாக இருக்கும் போல இருக்குதே.. அவ்வளவு ஸ்டூடண்ட்ஸ் சேருவாங்களா?''
“அத்திம்பேர்... அச்சடிக்கும் போது ஒரு வருஷத்துக்கு வர்ற மாதிரி பிரிண்ட் பண்ணிக்கறது லாபம்... ஏன்னா கம்போஸிங் செலவுதான் எப்பவும் அதிகம். பிரிண்டிங் சார்ஜ் எப்பவுமே கம்மிதான்.''
“சரிப்பா... தொச்சு.. செய்.. ஆமாம்... இத அச்சடிக்கறதுக்குப் பணம்...''
“பேப்பருக்குப் பணம் கொடுத்துடுங்கோ. பிரிண்டிங் சார்ஜுக்குப் பின்னால் வாங்கிக்கறேன். பல்லார்பூர் வாங்கட்டுமா, சேஷசாயி வாங்கட்டுமா?'' என்று கேட்டான்.
“இதெல்லாம் உன் டிபார்ட்மெண்ட்.. உன் இஷ்டப்படி வாங்கு.. சரி, பேப்பருக்கு எவ்வளவு பணம் வேணும்?''
“நாலு விளம்பரம் போடணும். அதுக்குப் பத்தாயிரம் ரூபாய்... பேப்பருக்கு.. ஒரு "லாட்'டாக வாங்கிவிட்டால் சீப்பாயிடும். அதுக்கு ஒரு பத்தாயிரம் கொடுங்க. பாடங்களை அனுப்ப கவர் தயார் பண்ணனும். அதுக்கு ஒரு இரண்டாயிரம். பிளாக் செலவு 2000...'' ஒரு குத்து மதிப்பாக 25,000 கொடுங்க'' என்றான்.
குத்து மதிப்பைக் கேட்டதும் என் அடி வயிற்றில் குத்து விட்டது போலிருந்தது!
“என்ன தொச்சு... ரொம்ப ஜாஸ்தியாக இருக்குதே...''
“அத்திம்பேர் மூணே மாசத்தில் வசூல் ஆயிடும்.. என்ன அக்கா காப்பியா... வேண்டாம். வெறும் மோர் கொடு.. காப்பி கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் பி.பி. இருக்கு'' என்றான் தொச்சு.
“இப்படி பேயா அலைஞ்சு நாயா ஓடினால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? ஊருக்கு உழைக்கிறதே உன் ராசி'' என்று அக்காக்காரி அன்புடன் அலுத்துக் கொண்டாள்.
நான் பாங்க் அக்கவுண்டிலிருந்து வழித்து எடுத்து 25,000 ரூபாயைத் தொச்சுவிடம் கொடுத்தேன்.

“என்ன கமலா தொச்சுவைக் காணமே... பணம் வாங்கிக் கொண்டு போய் இருபது நாளாச்சு. பாடத்தையும் காணோம். விளம்பரத்தையும் காணோம்.''

“தொச்சு, உங்க பணத்தை ஒண்ணும் முழுங்கிட மாட்டான். உங்க வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் அவன் வீட்டில் சோறு பொங்கிடுமா...? பத்து இடம் போய் பிஸினஸ் பிடிச்சால் தானே...''
இந்தச் சமயம் தொச்சு பிரத்யட்சமானான். “என்ன அத்திம்பேர்... தொச்சு பணத்தைச் சுருட்டிண்டு அப்ஸ்காண்ட் ஆயிட்டான்னு நெனைச்சுட்டீங்களா? பாருங்க, பாடங்களை. ஒரு செட் கொண்டு வந்திருக்கிறேன்,'' என்று கூறி ரஜினி ஸ்டைலில் ஒரு பேக்கட்டை மேஜை மேல் போட்டான்! பிரித்தேன் -
எதிரே கட்டுக் கட்டாகப் பாடங்கள். ஒருகணம் அவை யாவும் ரூபாய் நோட்டுக்களாகத் தோற்றமளித்தன.
''தொச்சு... மன்னன்பா நீ... சரி எப்ப பேப்பர்ல விளம்பரம் போடப் போறே?''
“வர்ற வாரம். அதுக்குப் பணம் தேவை. இப்ப ஒரு த்ரீ கொடுங்க'' என்றான். (இங்கிலீஷில் கேட்டால் அது கடன் இல்லையோ!)
கொடுத்தேன்.
இரண்டு நாள் கழித்து பேப்பரைப் பார்த்த போது அதில் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பிரபல எழுத்தாளர் ஒருவர் "கதை எழுதுவது எப்படி' என்ற தபால் பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்திருப்பதாகச் செய்தி. தவிர அரைப் பக்க விளம்பரம் வேறு. அந்த எழுத்தாளர் (என்னை விடப் பிரபலமானவர்) எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்துக் கட்டணம் நூறு ரூபாய்தான் வைத்திருந்தார். விளம்பரத்தில் அவர் இதுவரை எழுதியுள்ள பத்து நாவல்களின் பெயர்களையும் பிரசுரமான புத்தகங்களின் பட்டியலையும் வெளியிட்டிருந்தார்கள். போதாததற்கு அவர் இதுவரை பெற்ற விருதுகள், பட்டங்கள், பரிசுகள் ஆகியவற்றின் விவரங்களையும் தடபுடலாகப் போட்டிருந்தார்கள்.
படிக்கப் படிக்க என் காலின் கீழ்  தரை சரசரவென்று கீழே போய்க் கொண்டிருந்தது.
அந்தச் சமயம் தொச்சு, "'அத்திம்பேர் மோசம் போய்ட்டோம்... இந்தப் பாவி மனுஷன் இப்பவா ஸ்கூலை ஆரம்பிக்கணும்? பீûஸக் கூட அடிமட்டத்திலே வெச்சிருக்கான்...'' என்று கூறிக் கொண்டே வந்தான்.
“தொச்சு. அவர் பிரபல எழுத்தாளர். நானே அவர் ஸ்கூலில் சேர்ந்தால் நிறையக் கத்துக்கலாம்.. போகட்டும். பாடங்கள் அச்சடிச்ச செலவோட போகட்டும். விளம்பரம் கிளம்பரம் வேண்டாம் நீ பிரிண்ட் பண்ணின சார்ஜ÷க்கு இந்தப் பாடத்தை எல்லாம் பழைய பேப்பருக்குப் போட்டு எடுத்துக்க. மீதியை நான் கொடுத்துடறேன்... இனிமேல் உனக்கு ஏதாவது ஐடியா வந்தால் என் எதிரிகிட்ட போய்ச் சொல்லு'' என்று பாதி கேலியாகவும் பாதி கோபமாகவும் சொன்னேன்.
முதன் முறையாக என் மாமியார், என் மனைவி கமலா, தொச்சு மூவரும் என் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசாமல் ‘கம்'மென்று இருந்தார்கள்!

3 comments:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!