November 28, 2011

எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் -கடுகு

"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்."-  இப்ப்டி ஒருதலைப்பில் ஒரு நகைச்சுவைக் கதை வேண்டும் என்று கல்கியிலிருந்து ஒரு சமயம் கேட்டார்கள்.  அப்போது எழுதி அனுப்பிய  கதை
 =====================

"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்.
 இந்த வாக்கியத்தைச் சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார்  ஜோதிடப்புலி, ஆரூட சிங்கம், நியூமராலஜி நரி, கைரேகைக் கரடியான மூலைக்கொத்தளம் மன்னாரு ஜோதிடர்.
பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு அவருக்கு முன்பு அமர்ந்திருந்த அஷ்டபுஜத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
நூற்றியொரு ரூபாய் கொடுத்து ஆரூடம் கேட்க வந்திருந்தார். ஒரு வாக்கியம் மட்டும் சொல்லிவிட்டுச் சும்மா இருக்கிறாரோ ஜோதிடர் என்று யோசித்தபடியே இருக்க, ஜோதிடரின் ஒரு சிஷ்யகோடி, "அவ்வளவுதான்! இனிமேல் ஒண்ணும் வாக்குலே வராது. சுவாமி மௌனத்தில் போய்விட்டார்" என்றார்.
ஆறு மாதம் காத்திருந்து அப்பாயிண்மென்ட் வாங்கி, சிபாரிசு பிடித்து நூற்றியொரு ரூபாய் கொடுத்து- அல்லது அழுது- ஜோதிடம் கேட்க வந்தால் ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டால் எப்படி? அட்சர லட்சம் என்பது மாதிரி அல்லவா இருக்கிறது!
திடீரென்று அஷ்டபுஜத்துக்குச் சந்தேகம் வந்தது. `எட்டுக்கு மேல் வேண்டாம்' என்று சொன்னாரா, ஏட்டுக்கு மேல்  வேண்டாம் என்று சொன்னாரா என்று சந்தேகம் தோன்றியது. காரணம் அஷ்டபுஜம் சாதாரண கான்ஸ்டபிள். அதுவும் கொத்தவால் சாவடி, சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் இல்லாமல்-- `வறண்ட' பிரதேசமான பெசன்ட் நகர் பகுதியில் டியூட்டி! விரைவில் `ஏட்டு' ஆகப் பிரமோஷன் வரக்கூடும். `அதற்கு மேல் பிரமோஷன் வந்தால் விட்டுவிடு' என்று ஜோதிடர் சொல்கிறாரா? சப் இன்ஸ்பெக்டர் மாதிரி உத்தியோகத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதால் சொல்கிறாரா? - புரியவில்லை.
வீட்டுக்கு வந்தார். சடாரென்று அவர் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. வீட்டு நம்பர் ஒன்பது! ஆகா! எட்டுக்கு மேல் உள்ள நம்பர் வீடு... அதனால்தான் நமக்கு அதிர்ஷ்டம் இல்லையோ!
வீட்டுக்குள் நுழைந்ததும் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினார். அப்போது அவரது ஜேபியிலிருந்து ஒரு லாட்டரிச் சீட்டு விழுந்தது. "ஹூம், நாமும் லாட்டரி டிக்கட் வாங்கிட்டுதான் இருக்கோம். ஒரு தபா கூட பரிசு விழுறதில்லை' என்று தமக்குள் சொல்லிக் கொண்டே சீட்டை எடுத்துப் பார்த்தார். `99999' என்ற எண் சீட்டு அது. ஒன்பது என்றால் அதிர்ஷ்டம் என்று ரேஸ் பிரியர்கள், சீட்டுப் பிரியர்கள் போன்ற பல `சூது விற்பன்னர்கள்' சொல்லி இருந்ததால் இந்த சீட்டை வாங்கியிருந்தார். அஷ்டபுஜம் என்ற தமது பெயரைக் கூட நவமணி, நவரத்தினசாமி என்று மாற்றிக் கொள்ளலாமா என்று சில சமயம் யோசித்தும் இருக்கிறார்!
=          =                     =
"என்னங்க... எந்திரிங்க.. தந்திகாரு வந்திருக்காரு இன்னமோ தந்தியாம்" என்று சொல்லிக் கொண்டே அஷ்டபுஜத்தின் மனைவி அவரை எழுப்பினாள்.
"தந்தியா.. இன்னாட இது?" என்று கேட்டபடியே தமது வயதான உறவுக்காரர்கள் எல்லாரையும் மனசில் வீடியோ போட்டு பார்த்தார்.
தந்தியை வாங்கிப் பிரித்தார். அடுத்த செகண்ட் தமது ஐம்பத்தெட்டு இன்ச் தொப்பையைத் துக்கிக் கொண்டு `ஹையா' என்று குரல் கொடுத்தபடியே குதித்தார் -இருந்த இடத்திலேயே.
"என்னங்க.. இன்னா ஆச்சு உங்களுக்கு.. அடி மாரியாத்தா.. உனக்கு கூழு வாக்கறேன்... இவருக்கு என்னவோ கிலி புடிச்சிக்கிச்சே" என்று அம்புஜம் அலறினாள்.
"அடியே ஒப்பாரி வெக்காதே. அய்யா இனிமே பாரி. வாரி வாரி வழங்கப் போற பாரி.. தந்தி இன்னாத் தெரியுமா? உல்டா பிரதேஷ் லாட்டரியிலே எனக்கு - மனசை தெகிரியமா வெச்சுக்கோ-  எனக்கு ஐம்பது லச்சம் வுயுந்திருக்குது.. ஐம்பது லட்சம் அம்புஜம்...
"என்னது அம்பது லட்சமா?.. சரியாப் பாருங்க அம்பதா ஒம்பதா? அவசரத்திலே 41 லச்சம் போயிடப் போவுது யார் வீட்டு பிள்ளை இல்லாத சொத்து?"
மறுநாள் தமிழ் தினசரிகள் எட்டுக்காலம் தலைப்பில் "ஏழை போலீஸ்காரருக்கு ஐம்பது லட்சம் பரிசு" என்று பல ஆச்சரியக்குறிகள் பின்தொடரச் செய்தி வெளியிட்டிருந்தன. அதன் பிறகுதான் அஷ்டபுஜத்திற்குத் தனக்கு அடித்த அபார அதிர்ஷ்டம் உறுதியாயிற்று. அந்த `யோகம்' அடிச்ச பிறகு பேரையும் நவரத்தினசாமின்னு மாற்ற முடிவு செய்தார் அஷ்டபுஜம்.
செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி பத்திரிகையில் அறிவிப்புக் கொடுத்து நவரத்னசாமி ஆனார்- முன்னாள் போலீஸ்காரரும் இன்னாள் லட்சாதிபதியுமான முன்னாள் அஷ்டபுஜம்!
=                  =                        =
பெயரை மாற்றிக் கொண்ட வேளை அதிர்ஷ்ட தினமாக அமைந்தது.
அவர் இருந்த வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய பாக்டரியை ஏற்படுத்தப் போவதாக அரசாங்க அறிவிப்பு வந்ததால், மனைகள் விலை சடசடவென்று ஏறத் தொடங்கின. பம்பாயிலிருந்து வந்த ஒரு சேட், நவரத்னசாமியுடன் பார்ட்னராகச் சேர்ந்து அவர் வீட்டு மனையில் ஒரு நட்சத்திர ஓட்டலைக் கட்ட முன் வந்தார்.
"இந்த மனை சின்னதாச்சே எப்படிங்க சேட் ஓட்டல் கட்ட முடியும்" என்று ந.சாமி கேட்டார்.
"ஒசரமாக் கட்டிப்பிட்டாப்  போச்சு. மேலே ஒரு ரிவால்விங் ரெஸ்ட்ராண்ட் சும்மா ஏழெட்டு மாடி கட்டிப்பிடலாம். நல்லா பிசினஸ் ஆவும். மெயின் ரோடுல உங்க வீடு இருக்கிறதும் அதிர்ஷ்டம்" -- சேட் போட்ட சோப்பில் நவரத்தினசாமி கரைந்து போனார்.
லாட்டரிப் பணம் செங்கல்லாகவும் சிமெண்ட்டாகவும் இரும்பாகவும் மாறி அவரது வீடு இருந்த இடத்தில் கட்டடம் எழும்ப ஆரம்பித்தது.
"சேட்.. இன்ஜினியரு சொல்றாரு எட்டு மாடி கட்டறதாக.. எனக்கு எட்டு ஆவுறதில்லை` ஒன்பதாகக் கட்டிப்பிடலாம்."
”சரி.. செஞ்சுடலாம்.”
"
கடைசி மாடியின் ரூஃபிங் போட ஜல்லியும் சிமெண்ட்டும் டன் டன்னாக மேலே ஏறிக் கொண்டிருந்தன.
திடீரென்று ஸெண்டரிங் பலகைகள் சரிய, ரூஃப் டாப்பில் இருந்த கலவைகள் மளமளவென்று விழ, அந்த அதிர்ச்சி வேகம் தாளாமல் கட்டடமே ஒரு கண் இமைக்கும் நேரத்தில் ஏகப்பட்ட சடபுட சப்தத்துடன் கன்னா பின்னாவென்று குப்பலாக இடிந்து விழுந்தது!
இன்ஜினீயர் கட்டடம் `நிக்குமா' என்று பார்க்காமல் நமக்கு எவ்வளவு `நிக்கும்' என்று மட்டும் கணக்குப் பார்த்ததில் வந்த வினை.
ஒன்பதாவது மாடியே கட்டடத்திற்கு வினையாக வந்தது. நவரத்னசாமியின் லாட்டரிப் பரிசுப் பணம் நிமிஷத்தில் தவிடு பொடியாகியது!
ஈரத் துணியைத் தலையில் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த நவரத்னசாமியின் காதில் அசரீரிக் குரல் கேட்டது. "எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்."
அடாடா! மன்னாரு எவ்வளவு பெரிய ஜோசியர். எட்டாவது மாடிக்கு மேல் கட்டாதே என்று அவர் சூசகமாகச் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் போனோமே என்று நவரத்னசாமி எட்டுக் கட்டைக் குரலில் ஒப்பாரி வைக்க ஆரம்பித்ததார்!

( தயவு செய்து பின்னூட்டம் போட்டு என்னைக் கிழிக்காதீர்கள்!)

November 16, 2011

கமலாவும் தங்கவேட்டையும் -கடுகு

கேட்டை, மூட்டை, செவ்வாய் ஆகிய மூன்றின் கலவையான என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சு - (ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்...... இந்த கே.மூ.செ அடைமொழிகள் என் அருமை மனைவியைக் குறிக்காது; அவளின் தம்பி தொச்சுவைக் குறிக்கும்! )-  என் வீட்டுக்கு வந்த போது என் இடது கண், இடது தோள், இடது காது, இடது கை, இடது பக்கம் இருக்கும் இதயம் எல்லாமே ஆயிரம் வாலா சரவெடியாய்ப் படபடத்தன!

கமலாவை நான் கல்யாணம் பண்ணிக் கொண்டபோது, சீதனமாக நிறையக் கொடுத்தார்கள். அத்தோடு இலவச இணைப்பாக தொச்சுவையும் சேர்த்துக் கொடுத்து விட்டார்கள். அவன் பின்னாளில் அங்கச்சியைக் கல்யாணம் செய்து கொண்டு தனியாகப் போய்விட்டாலும், அவ்வப்போது என் வீட்டிற்கு வந்து தன் தொப்பை, கைப்பை இரண்டையும் நிரப்பிக் கொள்வான். தாய்ப்பாசமே உருவான என் மாமியாரும், சகோதர பாசத்தை உருக்கி வடிவமைக்கப்பட்ட என் மனைவி கமலாவும்,  தொச்சு வரவேற்பு கமிட்டி என்ற நிரந்தர அமைப்பை நிறுவி, அவனுக்கு ராஜோபசாரங்கள் செய்வது பற்றி விவரமாகக் கூறினால், அது அபசாரம் ஆகிவிடும்.
சரி விஷயத்துக்கு வருகிறேன். “தொச்சு, என்னப்பா சமாசாரம்?” என்று கேட்டேன்.
“தொச்சுவா? வா... வா!” என்று மதுரை மணியின் ‘கந்தா வா... வா’ பாணியில் கமலாவும் மாமியாரும் அவனை வரவேற்றார்கள்.
“அத்திம்பேர்... ஒரு பிரமாதமான ஐடியாவோட வந்திருக்கேன்!”
“ஓஹோ...ஐடியா ஓட, நீ மட்டும் தனியா வந்திருக்கியா?” என்றேன் குதர்க்கமாக.
“கொன்னுட்டீங்க அத்திம்பேர்! எப்படித்தான் சட் சட்னு இப்படிப் புகுந்து விளையாடறீங்களோ!”
‘பெரிதாக அஸ்திவாரம் போடுகிறான்; சுதாரி!’ என்று உள்ளுணர்வு சொல்லியது. அதன் காரணமாக, வயிற்றில் புளி கரைத்தது. இப்படி புளி கரைக்கும் உணர்வு, பின்னால் என் பணம் கரையப்போகிறது என்பதற்கான அறிகுறி!
“வீட்டுக்கு வந்தவனை ‘வாடா உட்காரு! ஒரு கப் காபி சாப்பிடறியா?’ என்று கேட்க வேண்டாம்... இப்படி மட்டம் தட்டிப் பேசாமல் இருக்கலாம்” என்று நொடித்தாள் கமலா.
“காபிக்கு என்ன அவசரம் அத்திம்பேர்? உங்களுக்குத் ‘தங்கப் பானை’ தெரியும்தானே?”

“தங்கைப் பானை, அக்கா பானை... ஒரு மண்ணும் தெரியாது!” என்றேன்.
“சொல்லுடா... டி.வி.நிகழ்ச்சி ‘தங்கப்பானை’ தானே, நம்ம ஜிகினாஸ்ரீ நடத்தற நிகழ்ச்சிதானேடா? இப்ப என்ன அதுக்கு?” என்றாள் கமலா.
“அதேதான்! அதுக்கு எழுதிப் போட்டேன். வருகிற வாரம் வரச்சொல்லி இருக்காங்க. போட்டியிலே கலந்துக்கச் சொல்லியிருக்காங்க.  நீ, அத்திம்பேர்,அங்கச்சி  மூணு பேரும் போட்டிக்குப் போயிட்டு வாங்க...!”
“நான் எதுக்கு? இதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க போய் பரிசு, பணம் எல்லாம் ஜெயிச்சுண்டு வாங்க...!” என்றேன்.
“ஜெயிச்சுண்டு  வந்து அப்படியே இவர்கிட்ட கொண்டு வந்து கொடுத்தால், அக்காவுக்குப் பொங்கல், தீபாவளி, மதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, காஃபிடேன்னு பாத்து பாத்து அனுப்புவார். ....குழந்தை வேலை மெனக்கெட்டு பதிவு பண்ணிட்டு வந்து கூப்பிடறான். இவர்   ஆயிரம் பிகு பண்றார்!”
“விடுக்கா...! அத்திம்பேர் வரலைன்னா அவரை டிஸ்டர்ப் பண்ணாதே! நீ, அங்கச்சி, நான் மூணு பேரும் போகலாம். நீதான் லீடர்!”
“சரிடா! பரிசு கிடைச்சா சந்தோஷம். இல்லாவிட்டாலும் டி.வி.யில நாம வந்ததே சந்தோஷம்னு இருந்துட்டா போச்சு...!”
“ஆனா, ஒரே ஒரு பிரச்னைக்கா!”
“என்னது?”
“டி.வி.ஷோவுக்கு வர்ற ரெண்டு பெண்களும் ஒரே மாதிரி புடவை கட்டிண்டு வரணுமாம்...”
இதைத் தொடர்ந்து என்னென்ன வசனங்கள் வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, வருமுன் காப்போனாக, “அதுக்கென்ன... இரண்டு புடவை வாங்கிட்டா போச்சு!” என்றேன்.
கமலா முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம்! தொச்சுவின் முகத்தில் பத்தாயிரம் வாட் பிரகாசம்! என் மாமியார் முகத்திலோ, அரசியல் கட்சியின் மாநாட்டுப் பந்தல் போல் ஒளி வெள்ளம்!
“வாங்கறது வாங்கறோம். பட்டுப்புடவையாவே வாங்கிடலாம்! டி.வி. ஷோவுக்கு எடுப்பா இருக்கும். சரி தொச்சு...பரிசு கிடைத்தால், முதல் பரிசாக எவ்வளவு கிடைக்கும்?”
“டீமுக்கு ஒரு லட்சம் பரிசு ! நிகழ்ச்சி 100-வது நிகழ்ச்சியாம். அதனால பரிசு இன்னும் அதிகமாகக்கூட இருக்கும்கிறாங்க! சரி அக்கா, அங்கச்சியை எப்ப வரச் சொல்லட்டும்? புடவை வாங்கணுமே?” என்று கேட்டான் தொச்சு. சந்தடி சாக்கில் கந்தகப் பொடி வைப்பதில் மன்னன்!
“மத்தியானமே வரச் சொல்லேண்டா...!”
புடவைக் கடையில் கமலாவும் அங்கச்சியும் ஒரே மாதிரி இரண்டு பட்டுப் புடவை வாங்குவதற்குள் படுத்திய பாட்டை விவரிக்கலாம் என்றால், மூன்று மெகா சீரியல்களை ஒரே சமயத்தில் பார்ப்பது போன்று அழுகை அழுகையாக வருகிறது. ஆகவே தவிர்க்கிறேன்.

November 11, 2011

சில அரசியல் ஜோக்குகள்

 உலகில் சர்வாதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாமல் போய் விடலாம். ஆனால் அவர்களைப் பற்றி ஜோக்குகள் இல்லாமல் போகாது. (  ஒரு நகைச்சுவைப் புத்தகத்தைப் படித்தேன். எல்லாம் சர்வாதிகாரிகள் பற்றிய ஜோக்குகள்தான், கிட்டதட்ட 500 இருந்தன!)

ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர்  ஏதோ சிந்தனையில் இருந்தவர்,. சட்டென்று, “ குப்பை..குப்பை” என்றார்.. அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்:
``இதோ பாருங்கோ, நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்ராயம் தெரிவிப்பது தவறு.''
*
ஒரு  அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. ``இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்'' கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.'
*
ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. ``என்ன விலை?'' என்று கேட்டார். ``விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை'' என்று கடைக்காரர் குழைந்தார்.
``சேச்சே... இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்'' என்றார்.
கடைக்காரர் உடனே, ``சரி, இதன் விலை இரண்டு ரூபாய்'' என்றார்.
சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, ``அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடு'' என்றார்.
*
ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள்.
``என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?''
``ஆமாம்.''
``நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்' என்ற ஜோக்கும்...''
``ஆமாம். என்னுடையதுதான்.''
``இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?''
``அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை'' என்றார் அந்த முதியவர்.
*
சர்வாதிகாரிக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. ``இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்'' என்று உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
சர்வாதிகாரியின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்.
அவரைப் பார்த்து சர்வாதிகாரி, ``என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?'' என்று கேட்டார்.
``பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.''
``அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்'' என்றார்.
``ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது'' என்றார் ஜோக் எழுத்தாளர்.
*
பயில்வான் போன்று இருந்த  ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, ``ஏ... என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?'' என்று கேட்டான்.
``நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?'' என்று கர்ஜித்தான் பயில்வான்.
``அதுதானே.கேட்டேன்.. ஆமா,.. எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்...'' என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான்.
*
பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ``அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்...'' என்றாள்.
ஒரு மாணவன், ``டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே'' என்றான்.
டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, ``இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அதுபோல் கடவுளும் கற்பனைதான்'' என்றார்.