November 30, 2010

ஒரிஜினல் எந்திரன்

பல வருஷங்களுக்கு முன்பேயே எந்திரனை உருவாகியவன் நான்.  என்ன, அதற்கு அப்போது அதற்கு நான் வைத்த பெயர் இயந்திரசாமி! இயந்திரசாமி ஜோக் வாராவாரம் தினமணி கதிரில் வெளியாயிற்று. அதன் ரசிகர்களில் ஒருவர் : “சோ” என்பது ஒரு விசேஷம். அவரும் ஒரு இயந்திரசாமி ஜோக் அனுப்பி இருந்தார். முதலில் என் ஜோக்குகளைப் பார்த்து வாருங்கள்.  கடைசியில் அவருடைய ஜோக்கைப் போடுகிறேன்.

November 25, 2010

ஆவியும் நானும் -கடுகு

செங்கற்பட்டு நகரத்திற்கே பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது.  எதன் மேல்? ஆவி ஜோசியத்தின் மீது! வீட்டுக்கு வீடு மீடியம், பிளான்சட் ஆவி ஜோதிடம் என்று. ,(அந்த ஆவிகள் சொன்ன ஜோசியம் எல்லாம் பேத்தல் என்பது வெளிப்பட்டுவிட சில மாதங்களாவது ஆகும் என்பதால் யாருக்கு சந்தேகமே வரவில்லை,)  ஆவி ஜோதிடப்பித்து பலரைப் பிடித்துக்கொண்டது. அவரவர் தங்கள் வீட்டு ஆவி ரொம்ப கெட்டிக்கார ஆவி; எதிர்காலத்தை நூறுக்கு நூறு சரியாகச் சொல்லும் என்று தங்கள் வீட்டு வளர்ப்புப் பிராணியைப் பற்றிப் பெருமை அடித்துக் கொள்கிற மாதிரி சொன்னார்கள்.
ஆமாம், எனக்கும் இந்த பைத்தியம் பிடித்தது.  ஆவி உலகின் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது ஆர்.கே.நாராயணன் எழுதிய `தி இங்கிலீஷ் டீச்சர்' நாவல் என்றும் சொல்வேன். அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் அந்த நாவலை எழுதினார் என்று கூறுவார்கள். இறந்து போன தன் மனைவியுடன் மீடியம் மூலமாகத் தொடர்பு கொள்வதாக
அந்த நாவலில்எழுதி இருந்தார்.
ஆர்.கே.நாராயணனுக்கு ஈ.எஸ்.பி. மீது நம்பிக்கை இருந்ததால் எனக்கும் கொஞ்சம் ஈடுபாடு ஏற்பட்டது. வேலையில்லாமல் ஊர் சுற்றி கொண்டிருந்த எனக்கு இந்த பித்து பிடித்ததும் ஆச்சரியமல்ல. ஒரு ’நல்ல’ ஆவியிடம் ஜோதிடம் கேட்ட போது  - அடுத்த வருடம் உனக்கு வேலை கிடைக்கும், ராய்ப்பூரில் ஒரு கார் நிறுவனத்தில் வேலை என்று சொல்லிற்று.. ராய்ப்பூரில் வேலைக்கு ஆர்டர் வரும் வரையில் (!) ஆவிகளுடன் பொழுதைப் போக்க நினைத்தேன்.
 ( குறிப்பு: இன்று வரை கார் கம்பனி வேலையும் கிடைக்கவில்லை; ராய்ப்பூரை நான் பார்க்கவு மில்லை!)

இந்த சமயத்தில் கிருஸ்துவக் கல்லூரி ஆசிரியருக்கும் இதில் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது. அவர் சற்று ஆழமாக இந்த ஆவி உலகம் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்பினார். அவர் எங்கள் தெருவிலேயே இருந்ததால் அவருடன் எனக்குப் பரிச்சயம் இருந்தது. ஆகவே என்னிடம்”வா.. நான் ஆராய்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன், எனக்கு நீ உதவியாக இரு. என்றார்.
அவர் . மிகவும் கெட்டிக்காரர். மிகவும் எளிமையானவர். பார்த்தாலே அவர் மீது மதிப்பு ஏற்படும். தாம்பரத்திலுள்ள கிருஸ்துவக் கல்லூரியில் லெக்சரராக இருந்தார். (பின்னால் இவர் பல பெரிய ஆராய்ச்சிகளை எல்லாம் செய்து, கரக்பூர் சென்று, நேஷனல் புரொபசர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். பிறகு அமெரிக்கா சென்று அங்கும் பல சிகரங்களைத் தொட்டார் என்று கேள்வி.)

சரி, விட்ட இடத்திலிருந்து வருகிறேன். ஒரு மீடியம் எங்களுக்கு அகப்பட்டான். சின்னப் பையன் தான். அவன் சரியான மீடியமா என்று பல சோதனைகளைச் செய்தோம். அவ்ற்றில் அவன் தேறினான்.
ஒரு பலகையில் பார்டர் மாதிரி  எல்லா ஆங்கில எழுத்துக்களையும்எழுதினோம். நடுவே ஒரு சின்ன கேரம் காயினை வைத்து அதைத் தொடச் சொன்னோம். நிசப்தமாக இருந்தோம். திடீரென்று அந்தப் பையன் காயை நகர்த்த ஆரம்பித்தான். குட்மார்னிங் என்றோம். அவன் g.o.o.d. m.o.r.n.i.n.g. என்று ஒவ்வொரு எழுத்தாகக் காட்டினான்,
”உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை வரலாறு என்ன? நாங்கள் ஜோசியம் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆவி உலகைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விரும்புகிறோம். எங்களுக்கு உதவ முடியுமா?” என்று கேட்டோம்.
”அப்படியா?... செய்கிறேன்.....”
“முதலில் உங்களைப்பற்றி எங்களுக்குத் தெரிய வேண்டுமே...” என்றோம்.
மீடியம் மளமளவென்று எழுத்துக்களின் மேல் கேரம் காயினை இங்கும் அங்கும் வேகமாய்  நகர்த்த , முடிந்த அளவு அவைகளைக் குறித்துக் கொண்டு வந்தேன்.
”என் பெயர் பாபுலால் .. நான் பெங்களூரில் பிஸினஸ் செய்து வந்தேன். ஒரு கார் விபத்தில் நான் இறந்து போனேன் ..”. என்று ஆரம்பித்தது.  நிறைய விஷயங்களைச் சொல்லியது  அந்த ஆவி . பக்கம் பக்கமாக பல விஷயங்களை மீடியம் சொல்ல நான் எழுதினேன்.  பத்து இருபது நாட்களில் சுமார் 50, 100 பக்கங்களுக்கு மேல் எழுதியிருப்பேன். 

ஆவியும் நானும் - ஆச்சரியமான பின்னூட்டம்!

’ ஆவியும் நானும்’ என்ற பதிவைப் பார்த்து விட்டு, திரு ஸ்ரீராம் (Rochester, New York)  நீண்ட பின்னூட்டம் போட்டிருந்தார். அது நீண்டதாகவும் அதே சமயம் ஆச்சரியமான தகவல் கொண்ட பின்னூட்டமாகவும் இருந்தது. ஆகவே அதைப் பதிவாகவே இங்கு போடுகிறேன்,
==============
உங்கள் ஆவியும் நானும் பதிவைப் பார்த்தேன். ரசித்தேன்; அதே சமயம் வியந்தேன்.காரணம் அதில் விவரித்த பல நிகழ்ச்சிகள் எங்கள் குடும்பத்திலும் அச்சு அசலாக நிகழ்ந்தன. உங்கள் ஆவி உலக ஆராய்ச்சி 1950 வாக்கில் என்றால்  எங்கள் வீட்டில் நடந்தவை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தவை.
மீடியம் என் சொந்த  சகோதரி. 12 வயதிலிருந்து 14 வயது வரை மீடியமாக இருந்தாள். பிறகு என் பேற்றோர்  அவளை ஊக்கப்படுத்தவில்லை. மீடியமாக இருப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள்.
விவரமாகக் கூறுகிறேன்.என் தந்தையின் சின்ன தம்பி, சுமார் 24 வயதில் ஒரு விபத்தில் காலமானார், எங்கள் குடும்பத்திற்கு  மிகப்பெரிய அதிர்ச்சி; சோகம்.
அந்த சமயத்தில் பிளான்சட் ஜோதிட மோகம பரவி இருந்தது, என் பாட்டிக்குத் தன் மகனுடன் மீடியம் மூலமாகப் பேசவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. என் ச்கோதரியை மீடிமாக இருக்கச் சொன்னார்கள். அவளுக்கு ஒன்றும் தெரியாத வயது, பிளான்செட் போர்ட் தயார் பண்ணி அவளை உட்கார வைத்தார்கள். எல்லாரும் மௌனமாகப் பிரார்த்தனை செய்தார்கள். அவளுடைய  கை மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒவ்வொரு ஆங்கில எழுத்தாகக் காண்பித்தது. என் சித்தப்பாவின் ஆவி தான் என்பதை பல கேள்வி- பதில் மூலம் உறுதி படுத்திக் கொண்டோம். எங்கள் மூதாதையர் பற்றி பாட்டி விசாரித்தாள். என் சகோதரி கொடுத்த பதில்கள் எங்களையெல்லாம் பிரமிக்க வைத்தன. அவளுக்கு தெரிய வாய்ப்பே இல்லாத விவரங்களையெல்லாம் சரியாகச் சொன்னாள்.
போர்டில் எழுத்துகளைக் காட்டி கொண்டிருந்தவள் சில நாட்கள் கழித்து பேப்பர். பேனா கேட்டாள். அதில் அவள் எழுத ஆரம்பித்தாள் ” என் பிள்ளை --------தான் பேசறான். இந்த சின்னப் பொண் பிறக்கிறதுக்கு முன்னே நடந்த விஷயங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது,” என்று என் பாட்டி உத்திரவாதமாகச் சொன்னாள்

November 20, 2010

பொன்மொழியை லேசாகத் திரித்தால்... கடுகு

Behind every great man stands a woman

ஒரு பொன்மொழியையோ, பழமொழியையோ லேசாகத் திரித்துச் சொல்வது ஒரு வித சாமர்த்தியமான நகைச்சுவை. இந்த வகையான நகைச்சுவைப் பதிவுகளை அவ்வப்போது போட எண்ணியுள்ளேன்.

மேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப் பொன்மொழி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு பிரபலமான மனிதனின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். அதாவது அவளுடைய ஆதரவும் ஊக்கமூட்டலும் அவளது கணவனுக்கு உறுதுணையாக உள்ளன என்பது இதன் கருத்து.

சரி, சில குயுக்தியான மாறுதல் வரிகளைப் பார்க்கலாம்.

* ஒவ்வொரு நல்ல மனிதனின் பின்னாலும் ஒரு நல்ல பெண்மணி இருக்கிறாள்- அப்பாடா என்று ஓய்ந்து போய்!

* ஒவ்வொரு முட்டாளின் பின்னாலும் ஒரு மகத்தான பெண் இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள் -- நல்லதாக ஒரு நகை உண்டா, நட்டு உண்டா என்று அழுது கொண்டு!

* ஒவ்வொரு வெற்றிகரமான ஹீரோவின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறார்; அவளுக்குப் பின்னால்?  அவருடைய மனைவி எரிச்சலுடன் இருக்கிறாள்!

* ஒவ்வொரு தோல்வியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றிகரமான ஆசாமியின் பின்னாலும் அவனுடைய மாமியார் இருக்கிறார், ஆச்சரியம் தாங்காமல்!

*பிரிட்டனின் பிரதமராக இருந்த மெக்மில்லனின் மனைவி லேடி டோரதி மெக்மில்லன் ஒரு சமயம் சொன்னார். ``எந்த ஒரு மனிதனும் வெற்றியாளனாக முடியாது- அவனுக்குப் பின்னால் அவன் மனைவியோ அல்லது அம்மாவோ இல்லாவிட்டால்! இரண்டு பேருமே இருந்து விட்டால் அவனுக்கு இரட்டை அதிர்ஷ்டம்தான்!''

* ஒவ்வொரு பிரபலமானவரின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். ...ஆனால் ஒவ்வொரு பிரபலமான பெண்மணியைப் பொறுத்தவரை ஒரு ஆண் அவளுக்கு முன்னே இருக்கிறான், பல சமயம் அவள் காலைத் தடுக்கி விட்டுக் கொண்டு!\\
===========\
ரவிபிரகாஷ்  அவர்கள் அனுப்பிய பின்னூட்டத்தை. முன்னூட்டமாகப் போட்டிருக்கிறேன்!.

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!

ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!

ராஜாமணி -- கேரக்டர்

ராஜாமணிக்குத் தெரியாத விஷயங்கள் எதுவும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவிலோ, கலைக்களஞ்சியங்களிலோ, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையிலோ  இதுவரை அச்சாகவில்லை. உண்மையில் உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் அவருக்கு அவ்வளவு தேர்ச்சியா என்று வியப்படையாதீர்கள்.  ராஜாமணி பேச ஆரம்பித்தால் அப்படித் தான் ஒரு பிரமை உங்களுக்கு உண்டாகும்! இலக்கியம், அரசியல், சினிமா, பக்தி,  ஜோசியம், பொருளாதாரம், கிசுகிசு,  விஞ்ஞானம், மருத்துவம் என்று எந்தத் துறையிலும் அவர் புகுந்து விளையாடுவார்.  
முப்பது வயது. நிறைய படித்துக் கொண்டிருப்பவர்.ஆதலால் சோடாபுட்டி கண்ணாடி! மழமழ வென்று வாரிவிடப்பட்ட கிராப்பு. மழமழ வென்று ஷேவ் செய்யப் பட்ட முகம். நல்ல சிகப்பு. பளிச் சென்ற வெள்ளை பாலிஸ்டர் ஸ்லாக், சரிகை வேஷ்டி, கையில் ஒரு புத்தகம், படித்த இடத்திற்கு அடையாளமாக அதன் நடுவே ஒரு விரலை விட்டுப் பிடித்துக்கொண்டிருக்கும் பாங்கு - இவை  ராஜாமணியை ஓரளவு விவரிக்கும்.
ஜப்பான் கம்பெனி ஒன்றில் பிரதிநிதி. குறைந்த வேலை. நிறைந்த சம்பளம். கல்யாண மார்க்கெட்டில் இருப்பவர்.
அதோ ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையிலிருந்து வெளியே வருகிறார். வாருங்கள் அவரைச் சந்திக்கலாம்.
"ஹலோ  ராஜாமணியா ... .என்ன நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறீங்க...?''
"நிறைய இல்லை. நாலு புஸ்தகம் தான். ஜென் புத்தீஸம், ஹோரரி அஸ்ட்ராலஜி, தொல்காப்பிய விளக்கம். அப்புறம் திருவரங்கன் உலா நாவல் ..''
"ஜோஸ்யத்தில் எப்போதிலிருந்து இன்ட்ரஸ்ட்? ...''

ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும்

                  ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும்
இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும்
முயன்ற வினை 
காட்டுவிப்பானும் இருவினைப்
பாசக்கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவனுண்டே
தில்லை அம்பலத்தே!


இவ்வுலகத்தினர் அனைவருக்கும் அமுது படைப்பவனும், மாயையில் அழுத்துவிப்பவனும், உலகை இயக்குபவனும், ஜீவாத்மாவின் வினைகளுகேற்ப அவர்களுக்கு உரிய பலனை வழங்கி ஆட்டுவிப்பவனும் ஒருவன் உண்டு
அவன் தில்லை அம்பலத்தே உள்ள ஐயன்

November 16, 2010

துவளாத மனத்தின் வெற்றி

ஃப்ரெட் ஸ்மித்தின் ( FRED SMITH) கதையைப் பாருங்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது புதிய தொழில் முயற்சி பற்றி ஒரு "தீஸிஸ்' எழுதினார்.
      "24 மணி நேரத்திற்குள் வினியோகம்' என்ற தலைப்பில்.
      இன்று ஒப்படைக்கப்பட்ட தபாலையோ, பார்சலையோ மறுநாளே நிச்சயமாக டெலிவரி செய்தால் அம்முயற்சிக்கு மகத்தான வரவேற்பு இருக்கும் என்கிற ரீதியில் எழுதித் தந்தார்.
      ஆசிரியர், ""உருப்படாத யோசனை. தனியே தபால் துறையை நடத்தலாம் என்கிறாய். சொந்தமாகப் பல ஊர்களில் அலுவலகங்கள் வேண்டும். விமானக் கம்பெனிகள் ஆயிரம் தொல்லைகள் கொடுக்கும். ஏகப்பட்ட முதலீடு தேவைப்படும். பெரிய பெரிய விமானக் கம்பெனிகள் போட்டிக்கு வந்தால் எதிர்த்து நிற்க முடியுமா?'' என்று கூறி ஸ்மித்தின் யோசனையை நிராகரித்து விட்டார்.
      ஸ்மித்திற்குத் தன் யோசனை மீதும் அது நிச்சயம் வெற்றியடையும் என்பதின் மீதும் அயராத நம்பிக்கை இருந்தது. படிப்பை முடித்த பிறகு தொழில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த போது, "24 மணி நேரத்தில் டெலிவரி' என்று உத்தரவாதத்துடன் "ஃபெடரல் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தை ஆரம்பித்தார்.
      அமெரிக்காவின் அரசு வங்கியின் (நமது ரிசர்வ் வங்கி மாதிரி) பணத்தை ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எடுத்துச் செல்ல, வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். (இதனால் வங்கிக்குக் கணிசமான செலவு மீதம் என்பதால் வங்கி இவருடன் ஒப்பந்தம் செய்து  கொண்டது.)
      ஃப்ரெட், இரண்டு விமானக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். சுமார் நாலு கோடி டாலரைக் கடனாக வாங்கி, ஒரு விமானத்தை வாங்கினார்.
      அப்போது (1971) அவருக்கு வயது 26. ஆனால் வங்கி ஒப்பந்தத்தை ஒரு சில காரணங்களுக்காக வாபஸ் வாங்கிக் கொண்டது.
      "நான் மூழ்கிப் போக மாட்டேன்' என்று சூளுரைத்து, தனது கம்பெனியை கடிதங்கள், பார்சல்கள் எடுத்துச் செல்லும் கூரியர் கம்பெனியாக ஆக்கினார். முதல் மூன்று வருடங்கள் திவால் ஆகிவிடும் போலிருந்தது. சிறிதும் தளராமல், கம்பெனியை நடத்தினார். தன் சொந்த சொத்தக்களை எல்லாம் விற்றார். கம்பெனி மெதுவாகத் தலை தூக்கியது.
      1983-ல் அதாவது 10 வருஷங்களுக்குள் சரித்திரம் படைத்து விட்டது. மிக குறுகிய காலத்தில் நூறு கோடி வருவாயைத் தொட்டது.
      இன்று "ஃபெடக்ஸ்' இல்லாவிட்டால் அமெரிக்காவே ஸ்தம்பித்து போய்விடும் என்றாகி விட்டது. ஃபெடக்ஸ், ஃப்ரெட் ஸ்மித்தின் வெற்றி மட்டுமல்ல. துவளாத மனத்தின் வெற்றியும் கூட.

November 11, 2010

FOOTPRINTS

             குறிப்பு: சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன்பு புத்தகசாலையில்  FOOTPRINTS  என்ற இந்த அற்புதமானப் பாடலை படித்து மெய்மறந்தேன். அப்போதே அதைத் தமிழ்ப் படுத்த முனைந்தேன். சுமாராக மொழிமாற்றம் செய்தேன். ’சாவி’க்கு அனுப்பினேன்.  முதல் பக்கத்தில் பிரசுரமாயிற்று.
           இப்போது மீண்டும் படிக்கும்போது இதை இன்னும் சிறப்பாக  மொழிபெயர்த்து இருக்கலாமே என்று தோன்றியது.  அதற்கு எனக்குத் திறமை இல்லை என்றும் உணர்ந்தேன்.
படிப்பவர்கள் முயற்சி செய்யலாம்.  திருத்தமும் கூறலாம்.
 =================================

FOOTPRINTS
By Margaret Fishback Powers

One night I dreamed a dream.
I was walking along the beach with my Lord.
Across the dark sky flashed scenes from my life.
For each scene,
I noticed two sets of footprints in the sand,
One belonging to me and
One to my Lord.

When the last scene of my life shot before me
I looked back at the footprints in the sand.
There was only one set of footprints.
I realized that this was at the lowest
And saddest times of my life.
This always bothered me
And I questioned the Lord
about my dilemma.

"Lord, You told me when I decided to follow You,
You would walk and talk with me all the way.
But I'm aware that during the most troublesome
Times of my life there is only one set of footprints.
I just don't understand why, when I need You most,
You leave me."

புள்ளிகள்” சாவி


ஒரு சமயம் சாவி அவர்கள் டில்லியில் என் வீட்டிற்கு வந்திருந்தார். ``சும்மா உங்களுடன் ஒரு வாரம் இருப்பதற்காகவும் உங்களுடன் பேசி என்னை `சார்ஜ்' பண்ணிக் கொள்வதற்காகவும் வந்தேன்'' என்றார்.
ஒரு வாரம் ஒரே அரட்டை. ஊருக்குக் கிளம்புகிற சமயம் அவரிடம் ஒரு பிளாஸ்டிக் பாயைக் காண்பித்தேன். அப்போதுதான் அத்தகைய பாய்கள் டில்லிக்கு வந்திருந்தன. ``ஆஹா... டிசைன் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறது'' என்று என்னிடம் பேசியபடியே பாயை நிதானமாகச் சுருட்ட ஆரம்பித்தார்.
``அகப்பட்டதைச் சுருட்டறது என்பது இதுதான். நல்ல பொருளைப் பார்த்தால் சுருட்டி விடுவேன்'' என்றார்.

திருக்குறளை எழுதியது நான்.-கடுகு

`திருக்குறள் எழுதியது நான்' என்ற தலைப்பைப் பார்த்ததும் `ரீல்' என்று எண்ணி விடாதீர்கள். விவரமாகச் சொல்கிறேன்.

 டில்லியில் வள்ளுவர் கழகம் என்ற அமைப்பை நாங்கள் சிலர் உருவாக்கினோம். அமைச்சராக இருந்த க.ராசாராம் அதன் தலைவர். அவர் முயற்சியில் டில்லியில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டது.
அந்தச் சிலையின் பீடத்தில் திருக்குறளை செதுக்கி வைக்க விரும்பினோம். சென்னையிலிருந்து செய்து கொண்டுவர நேரம் இல்லை. ஒரே இரவில் முடித்தாக வேண்டிய கட்டாயம். ஆகவே டில்லியில் உள்ளவர்களைப் பிடித்து இதைச் செய்ய முடிவு செய்தோம்.

அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதால் பீடத்தின் ஒரு பக்கத்தின் அளவுக்குப் பேப்பரில் குறளை  எழுதித்தர முடிவெடுத்தோம்.எனக்கு ஓரளவு லெட்டரிங் தெரியும் என்பதால் எனக்கு இந்த வேலை தரப்பட்டது. அவ்வளவு பெரிய அளவில் எழுதிப் பழக்கம் இல்லாததால் எனக்கு உதவி செய்தவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைமை இன்ஜினியர்! பேப்பரில் கோடுகள் போட்டு, எழுத்தின் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் விவரமாகச் சொன்னார். அதன்படி நான் எழுதிக் கொடுத்தேன்

 நான் பெரிய காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை கிரானைட் கல்லின் மீது ஒட்டி வைத்து, அதன் மேலேயே பொளிந்தார்கள். எல்லோரும் தமிழ் தெரியாதவர்கள். ஆகவே கூடவே இருந்து தவறு வராதபடி பார்த்துக் கொண்டு இருந்தேன்.

 டில்லி சென்றால், டில்லி தமிழ்ச் சங்கத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய திருவள்ளுவர் சிலையின் பீடத்தைப் பாருங்கள். சிலையின் பீடத்தில் சில திருக்குறள்கள் செதுக்கப்பட்டிருக்கும். என் கையெழுத்தில்!
.

November 10, 2010

உப்பும் மிளகும்

உப்பும் மிளகும்
அமெரிக்கவில் பிரசுரமாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித் தாளைப்
புரட்டினால் எல்லம் பிஸினஸ் செய்திகளாகவும் பங்கு மார்க்கெட்
நிலவரங்களும் மில்லியனும் பில்லியனுமாக இருக்கும்.
ஆகவே அமரிக்கன் லைப்ரரியில் அதன் கிட்டேயே போகமாட்டேன்.. இந்த செய்திதாளில் நிச்சயமாக எனக்குப் பிடித்த நகைச்சுவை அம்சமே இருக்காது .என்பது எனக்குத் தெரியும். ஆனால் மற்ற பகுதிகளுடன் தொடர்பில்லாத்த ஒரு பத்தி அவ்வப்போது வெளியாகிறது என்பது, ஒரு பழைய புத்தகத்தை நடைபாதைக் கடையில் வாங்கியபோதுதான் தெரிந்தது,
புத்தகத்தின் தலைப்பு: உப்பும் மிளகும்.  வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இந்த தலைப்பில் அவ்வப்போது பிரசுரமாகும் ஜோக்குகள்,ஒரு வரி சிரிப்புகள், நகைச்சுவைக் குட்டி பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. ஒரு பத்து ஆண்டுகளில் வந்தவற்றில் சிறந்தவற்றைப் போட்டிருந்தார்கள்: அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.

இரண்டு கையால் படம் போடலாம்

இரண்டு கையால்
படம் போடலாம்
ஒரு பெரிய கரும்பலகையின் முன் சற்றுத் தள்ளி நின்று கொண்டு இரண்டு கைகளிலும் சாக்பீஸை எடுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் போர்டில் பக்கத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வலது கையால் ஏதாவது (ஒரு கோலம் மாதிரி) டிசைன் போடுங்கள். அதே சமயம் இடது கையையும் போடுவதற்கு இயக்குங்கள். உங்கள் வலது கை போட்ட மாதிரி வளைவுகளையும் கோடுகளையும் இடது கையாலும் உங்களை அறியாமல் போட்டிருப்பீர்கள். இம்மாதிரி போட்டு பலரை வியக்கச் செய்திருக்கிறேன்.
உங்கள் வலது கை செய்வதை இடது கை எப்படியோ கண்டுபிடித்து அதே மாதிரி தானும் செய்கிறது.
நான் பேப்பரில் போட்ட படம். கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

November 06, 2010

பட்டப்பா - கேரக்டர்


பழைய கோணிப்பை பிஸினஸில் லட்ச லட்சமாகப் பணம் பண்ண முடியும் என்றால் யாரும் சாதாரணமாக நம்பமாட்டார்கள். ஆனால் பட்டப்பா லட்சாதிபதியானதே பழைய கோணி பிஸினஸில்தான். அவர் கோணிகளை ஆயிரம், பத்தாயிரக் கணக்ககில்தான் வாங்குவார்; விற்பார். சில சமயம் லட்சக்கணக்க்கில் வாங்கிப்போட்டு டிமாண்ட் வரும்போது விற்பார். பெரிய பணக்காரராகாவிட்டாலும் பழைய கோணி பட்டப்பா என்று பலர் (அவருக்குப் பின்னால்) குறிப்பிடுவார்கள். ஊரில் பெரிய மனுஷனாக இருக்கவேண்டும் என்ற காம்ப்ளெக்ஸ் உண்டு. அதன் காரணமாக உலகில் உள்ள எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார்-கோணிகள் நீங்கலாக!

வாட்ட சாட்டமான உயரம்; உடல் அமைப்பு. தலையில் முடியிருந்தாலும் உச்சியில் மட்டும் ஒரு வழுக்கை வட்டம். சில்க் ஸ்லாக். மூன்று பட்டனாவது திறந்திருக்கும். கழுத்தில் இரட்டை புலிப்பல் சங்கிலி. அகல சரிகைப் பட்டை வேஷ்டி, கவர்ச்சிகரமான குள்ள குண்டுத் தனம்- பட்டப்பா உடை விஷயத்தில் மட்டும் மாறுதல் செய்து கொண்டே இருப்பார்.

November 02, 2010

குறிப்புகள் இல்லாத குறுக்கெழுத்துப் போட்டி

இது ஒரு குறுக்கெழுத்துப் போட்டி. குறிப்புகள் கிடையாது. ஆங்கில எழுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட எண். தரப்பட்டு, கட்டங்களில் எண்கள் போடப்பட்டுள்ளன.. அகராதியின் உதவியுடன் பூர்த்தி செய்யலாம். ஒரே ஒரு வார்த்தைதான் சற்று பழக்கத்தில் இல்லாத வார்த்தை. முழுமையாகப் போட்டு முடித்தவர்கள், அந்த ஒரு கடின பதத்தை எழுதினால் போதும்.பாராட்டு கிடைக்கும்!