June 29, 2014

அன்புடையீர்

அன்புடையீர்,

வணக்கம். தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக  வரும்.

பதிவுக்குக் கட்டுரைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். தட்டச்சு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.

-அன்புடன் கடுகு

June 20, 2014

கமலா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்


 அரசு  செலவில், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் தயவில், எழுத்தாளன் என்ற முறையில் கிடைத்தது பல சுற்றுலா இடங்களுக்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டினார்கள். ஒரு வார ஓசிப் பயணம். தமிழ்நாட்டுச்  செல்வங்களைக்  “கண்டுகளிக்க  வாருங்கள்'' என்று அவர்கள்  எழுதிய கடிதத்தை எங்களில்  பலர்  "உண்டு களிக்க வாருங்கள்' என்று படித்திருக்க வேண்டும். அரசாங்க உத்தரவாக அதை  எண்ணிசிலர்  பயணத்திற்குச்  சில  நாட்கள் முன்பிருந்தே  உண்ணாவிரதம் இருந்து  தங்களைத்  "தயார்' படுத்திக்  கொண்டு  வந்திருந்தார்கள்!

ஒரு வாரம் போனதே தெரியவில்லை. பயணத்தை முடித்துக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பி காலிங்  பெல்லை அழுத்திய போது, சுற்றுலாவில் ஏற்பட்ட சந்தோஷம், உற்சாகம், நிம்மதி எல்லாம் ரேஷன் கடை பாமாயில் போல மாயமாய்ப் போய் விட்டன. காரணம், என் வீட்டு ஹாலில், என் அருமை மைத்துனன் தொச்சு...!

கஷ்டங்கள் தனியே வராது. தொச்சு வந்தாலும் அப்படித்தான். போனஸாக அவன் மனைவி கீச்சுக்குரல் அங்கச்சியையும் பசங்களில் ஒரு நாலைந்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வருவான். ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையுடன் தொல்லை தருவார்கள்! அதுதான் தொச்சு குடும்பத்தின் ஸ்பெஷாலிடி!

இது 3-டி படம். கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கவும்.
போதாததற்கு வீடு முழுவதும் மிளகாய் வறுத்த நெடி. மூக்கை உண்டு இல்லை என்று பண்ணியது. ஒரே எரிச்சல் ஏற்பட்டது.

கமலா தலை கலைந்து முகமெல்லாம் வியர்த்து ஹாலுக்கு வந்தாள். வலது கை விரல்களில் ஏதோ மாவு ஏகமாக ஒட்டிக் கொண்டிருந்தது. (பவுடரை முகத்தில்தான் அப்பிக் கொள்வாள். கையில் அப்பிக் கொள்ளமாட்டாளே...?)

வாங்கோ... எப்படியிருந்தது டூர்...? நாளைக்குத்தானே வரணும் நீங்க...'' என்றாள்

ஆமாம்.... இதென்ன கையெல்லாம்...? வீடு ஏதோ மிளகாய்ப் பொடி ஃபாக்டரி மாதிரி இருக்கிறது.. சமையலறையில் எண்ணெய் காயற வாசனை... கைமுறுக்கு பண்ணிண்டு இருக்கீங்களா?'' என்று கேட்டேன்.

June 11, 2014

தானே ஏற்றுக் கொண்ட எளிமை


சிறிய துவக்க உரை
ஒரு சமயம் கல்கத்தா போயிருந்தேன். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போவது என் வழக்கம். கல்கத்தாவில் ‘நியூ மார்க்கெட்’ ரொம்பப் பழமையானது என்றும் அங்குள்ள காலேஜ் வீதி  பழைய புத்தகங்களின் சொர்க்கம் என்றும் என் அலுவலக வங்காள நண்பர் சொல்லி இருந்ததால், கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாக அங்கு சென்றேன்.
அங்கு எனக்கு கிடைத்த  ஒரு புத்தகம்   PETER'S QUOTATIONS. லாரன்ஸ் பீட்டர் என்பவரால் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட அபாரமானப் பொன்மொழிகள் புத்தகம். அவர் ஒரு தொகுப்பாளர் என்றுதான் நினைத்திருந்தேன்  சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் பழையப் புத்தக் சந்தைகளில் அவர் எழுதிய ஒன்றிரண்டு புத்தகங்கள் கண்ணில் பட்டன,

சமீபத்தில் அவர் எழுதிய  ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’  என்றபுத்தகத்தை பற்றிய ஒரு துணுக்கைப் படிக்க நேர்ந்தது, அவர் ஒரு பிரபல எழுத்தாளர் என்பது எனக்கு அது வரைத் தெரியாது . அதனால் அவர் புத்தகங்களைப் படிக்க, லைப்ரரியில் தேடினேன்.
1979-ல் பிரசுரமான PETER'S PEOPLE  என்ற புத்தகம் கிடைத்தது. அதில் தனது ’தி பீட்டர்ஸ் பிரின்சிபள்’ புத்தகத்தின் வெற்றிக்குப் பிறகு  அவர் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டார்  என்பதை ஒரு   கட்டுரையில்  விவரித்து இருந்தார். கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. அதைச் சற்று சுருக்கி (சுமார்)  தமிழில் தருகிறேன்.
அத்துடன் அந்த குறிப்பிட்ட துணுக்கையும் கடைசியில் தருகிறேன்.

நானே ஏற்று கொண்ட எளிமை - லாரன்ஸ் பீட்டர்
என் குழந்தைப் பருவம் மிகுந்த ஏழ்மை மிக்கது. பின்னால் நான் படித்து வேலைக்குச் சேர்ந்த பிறகு படிப்படியாக, மெதுவாக என் வாழ்க்கைத்தரம் உயர ஆரம்பித்தது.   பிறகு 1969-ல் நான் எழுதிய PETER PRINCIPLE என்ற புத்தகம் மிகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் காரணமாக என் வாழ்க்கைத் தரத்தை ஓரளவு உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை ஒரு அவநம்பிக்கையுடன்தான் அணுகினேன்.
வசதிமிக்க என் உறவினர்களில் பலர் தங்கள் செலவினங்களை மிதமிஞ்சி  அதிகப் படுத்திக் கொள்வதையும்,   தேவையற்ற அந்தஸ்துகளையும் பொறுப்புகளையும் ஏற்று, சிக்கல்கள் நிறைந்த  வாழ்க்கையில் அகப்பட்டுக் கொண்டிருப்பதையும் என் மனவி IRENE-ம் நானும் பார்த்துள்ளோம். அது மட்டுமல்ல,   இப்படி வாங்கப்பட்டப் பொருள்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும்,  தங்கள் காலத்தையும், சக்தியையும் அவர்கள் செலவழிப்பதையும் கவனித்துள்ளோம். அவர்கள் பல பொருள்கள் வாங்கினார்கள் என்பதைவிட பல பொருள்கள் அவர்களை வாங்கிவிட்டன என்பதே சரி!