June 20, 2014

கமலா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்


 அரசு  செலவில், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் தயவில், எழுத்தாளன் என்ற முறையில் கிடைத்தது பல சுற்றுலா இடங்களுக்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டினார்கள். ஒரு வார ஓசிப் பயணம். தமிழ்நாட்டுச்  செல்வங்களைக்  “கண்டுகளிக்க  வாருங்கள்'' என்று அவர்கள்  எழுதிய கடிதத்தை எங்களில்  பலர்  "உண்டு களிக்க வாருங்கள்' என்று படித்திருக்க வேண்டும். அரசாங்க உத்தரவாக அதை  எண்ணிசிலர்  பயணத்திற்குச்  சில  நாட்கள் முன்பிருந்தே  உண்ணாவிரதம் இருந்து  தங்களைத்  "தயார்' படுத்திக்  கொண்டு  வந்திருந்தார்கள்!

ஒரு வாரம் போனதே தெரியவில்லை. பயணத்தை முடித்துக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பி காலிங்  பெல்லை அழுத்திய போது, சுற்றுலாவில் ஏற்பட்ட சந்தோஷம், உற்சாகம், நிம்மதி எல்லாம் ரேஷன் கடை பாமாயில் போல மாயமாய்ப் போய் விட்டன. காரணம், என் வீட்டு ஹாலில், என் அருமை மைத்துனன் தொச்சு...!

கஷ்டங்கள் தனியே வராது. தொச்சு வந்தாலும் அப்படித்தான். போனஸாக அவன் மனைவி கீச்சுக்குரல் அங்கச்சியையும் பசங்களில் ஒரு நாலைந்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வருவான். ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையுடன் தொல்லை தருவார்கள்! அதுதான் தொச்சு குடும்பத்தின் ஸ்பெஷாலிடி!

இது 3-டி படம். கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கவும்.
போதாததற்கு வீடு முழுவதும் மிளகாய் வறுத்த நெடி. மூக்கை உண்டு இல்லை என்று பண்ணியது. ஒரே எரிச்சல் ஏற்பட்டது.

கமலா தலை கலைந்து முகமெல்லாம் வியர்த்து ஹாலுக்கு வந்தாள். வலது கை விரல்களில் ஏதோ மாவு ஏகமாக ஒட்டிக் கொண்டிருந்தது. (பவுடரை முகத்தில்தான் அப்பிக் கொள்வாள். கையில் அப்பிக் கொள்ளமாட்டாளே...?)

வாங்கோ... எப்படியிருந்தது டூர்...? நாளைக்குத்தானே வரணும் நீங்க...'' என்றாள்

ஆமாம்.... இதென்ன கையெல்லாம்...? வீடு ஏதோ மிளகாய்ப் பொடி ஃபாக்டரி மாதிரி இருக்கிறது.. சமையலறையில் எண்ணெய் காயற வாசனை... கைமுறுக்கு பண்ணிண்டு இருக்கீங்களா?'' என்று கேட்டேன்.

பாத்தியா அக்கா... இதுதான் அத்திம்பேர் என்கிறது. என்ன சூட்சுமம்! எப்படி கரெக்டா சொன்னார் பாரு'' என்றான் தொச்சு.

பின்கட்டு முழுவதும் வேஷ்டிகளை விரித்து அதன் மீது அங்கச்சியும் என் மாமியாரும் கைமுறுக்கைச் சுற்றி, பரப்பிருந்தார்கள்.

கமலா... ஏதாவது கைமுறுக்கு, மிளகாய்ப் பொடி கான்டிராக்ட் எடுத்து இருக்கியா...? அமெரிக்கா, ரஷ்யான்னு ஏற்றுமதி செய்யப் போறியா..? சே.. சே, இது என்ன வீடு!'' என்று கோபமாகக் கத்தினேன்.


அந்தச்
சமயம், என் மாமியார், “ஏண்டி கமலா.. நான் படிச்சுப் படிச்சு சொன்னேன். அவர் வந்தப்புறம் ஒரு வார்த்தை கேட்டுண்டு ஆரம்பின்னு... இப்போ நீதானே கேட்டுக்கறே?. என்னமோ நாலு காசு வரும்னுதானே பண்ணறே... ஒவ்வொரு பொம்மனாட்டி மாதிரி, சினிமா டிராமான்னு போனால் ஏன் இப்படிப் பேச்சு வாங்கப் போறே?'' என்றாள்.

நீ சும்மா இரு அம்மா... அத்திம்பேருக்கு விவரமாகச் சொன்னால்தானே புரியும்...”? இந்தாங்க அத்திம்பேரே... இந்த கைமுறுக்கைச் சாப்பிட்டுப் பாருங்க'' என்று தொச்சு கொடுத்தான்.

வாங்க... அத்திம்பேர்.. சின்னதாக ரவா லாடு இந்தாங்க'' என்று கீ.கு. அங்கச்சி கூறி இரண்டு லட்டைக் கொடுத்தாள்.

அந்தச் சமயம் தொச்சுவின் வானரங்கள், “அம்மா... எனக்கும்மா லட்டு...'' என்று கத்திக் கொண்டே அவள் மேல் பாய --

தொச்சு, அவர்களை ஒரு கொத்தாகப் பிடித்து, பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு, பளார், பளார் என்று அவர்களின் முதுகில் சாத்தி, “லட்டு வேணுமா லட்டு... கழுத்தை முறிச்சுப் போடுவேன்'' என்று கத்தினான். தொச்சுவின் பிள்ளைகளுக்கு எக்ஸ்ட்ரா வயிறு மட்டுமல்ல எக்ஸ்ட்ரா குரலும் உண்டு. ஆகவே அவை இரண்டு இரண்டு  குரலில் ஒப்பாரி வைக்கத் துவங்கின!

தொச்சுவின் கோபத்திற்கு முன் என் கோபம் ரேஷன் கடை பாமாயில் போல மாயமாய் மறைந்து விட்டது. (அது என்ன வார்த்தைக்கு வார்த்தை. ரேஷன் கடை பாமாயில் என்று கேட்கிறீர்களா? பத்து பதினைந்து வருட நெருக்கம் ஆயிற்றே! பாமாயில் பிடிக்காதவர்களும் இலக்கிய ரசிகர்களும் 'பகலவனைக் கண்ட பனி போல்' என்று மாற்றிப் படித்துக் கொள்ளட்டும்!)

தொச்சு... விடப்பா... பசங்கதான் கேட்கும். நீயும் நானுமா கேட்கப் போறோம். ஆனால் ஒண்ணுப்பா... டூர் போனேனே... வந்தவங்க சில பேர் உடம்பே வயிறாக வந்திருந்தாங்க. எழுந்தால் காப்பி, உட்கார்ந்தால் டிபன். பாவம் டூரிஸ்ட் ஆபீசர் மனதுக்குள்ளே அலுத்துக் கொண்டு, கொடுத்துக் கொண்டே இருந்தார். தொச்சு... இப்படி வா.. உனக்காக என்ன வாங்கிண்டு வந்திருக்கேன் பார்... சுங்கடிப் புடவை. மதுரையில் வாங்கினேன்'' என்று பையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன், அவனைச் சாந்தப்படுத்த.

"புடைவையா? எனக்கா?' என்று தொச்சு கேட்கவில்லை. இலவசம் என்றால் அவனுக்குப் பரவசம். வாங்கிக் கொண்டான்.

அத்திம்பேரே.. உங்க மனசு யாருக்கு வரும்...? அத்திம்பேருக்கு விஷயத்தைச் சொல்லு அக்கா,'' என்றான், மேஜை மேலிருந்த ரவா லட்டிலிருந்து ஒரு பாதியை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டே.

நானா சொல்ல மாட்டேன் என்கிறேன்? அவர்தான் வந்ததும் வராததுமா நரசிம்மாவதாரமா இருக்கிறாரே...''

அக்கா.. அதையெல்லாம் விடு.. விஷயத்திற்கு வா.''

ஒண்ணுமில்லை. கைமுறுக்கு, ரவா லாடு, இட்லி மிளகாய்ப் பொடி இதெல்லாம் மொத்தமா யாருக்கோ தேவை. தொச்சுகிட்டே பேச்சுவாக்கில் சொல்லியிருக்காங்க. கணக்கு பண்ணிப் பார்த்திருக்கான். நாமே செஞ்சால் இரண்டு நாள் வேலை 1000 ரூபாய்க்கு மேல நிக்கறது. அதனால் தானே பண்ணித் தர்றதா ஒத்துண்டுட்டான். சாமான் எல்லாம் மொத்தமாக வாங்கினால் இன்னும் நிக்கும்.'' என்றாள் கமலா.

நிற்கவாவது நிற்கட்டும் உட்காரவாவது உட்காரட்டும்... ஆனால் வீட்டில் வெச்சுண்டு, வீடு முழுவதும் புகையும், நெடியும் சூழந்து கொண்டு.. இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை... இந்தத் தடவை சரி. இனிமேல் முறுக்கும் வேண்டாம். கிறுக்கும் வேண்டாம்.'' என்றேன் கண்டிப்பாக.

அத்திம்பேர்... நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட். உங்க வாயிலே ரவா லாடுதான் போடணும்'' என்று சொல்லியபடியே மற்றொரு பாதி லட்டைத் தன் வாயில் போட்டுக் கொண்டான் தொச்சு!ஒரு வாரம் கழித்து தொச்சு வந்தான். “இந்தா அக்கா, 600 ரூபாய்... லாபத்திலே உன் பங்கு'' என்று கொடுத்தான்.

பரவாயில்லைப்பா... இந்த முறுக்கிலே இவ்வளவு பணம் இருக்கிறதா!'' என்று கேட்டேன்.

நமக்கு இத்தனை நாளாகத் தெரியலை, அத்திம்பேர். அதனால என் பிஸினஸை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, இந்த ஸ்நாக்ஸ் வியாபாரத்தைப் பெரிய அளவிலே செய்யலாம்னு நெனைச்சுண்டு இருக்கேன்... பேச்சுவாக்கிலே நாலு பேர்கிட்டே சொன்னேன். அவன் அவன் 100, 200 என்று ஆர்டர் கொடுக்கிறான்.''

செய்... ஆதாயம் இருக்குன்னா செய்... இடம் வேணுமே'' என்றேன், - அதாவது என் வீட்டில் இடம் இல்லை என்பதைச் சூசகமாகத் தெரிவிக்க!

அத்திம்பேர்... திருவல்லிக்கேணியில் ஒரு இடம் பாத்திருக்கேன்... அங்கதான் "கமலா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்' ஆரம்பிக்கப் போறேன்.''

கமலா பேர் எதுக்கப்பா...?''

கை முறுக்கு பதம் அக்காவுக்குத்தான் தெரியும்... நாம் ஈக்வல் பார்ட்னர்ஸ் 5000 ரூபாய் போடறோம். லாபத்தில் பாதிப் பாதி'' என்றான் தொச்சு -- 600 ரூபாயைக் கொடுத்ததால் தனக்குப் பெரிய அந்தஸ்து கிடைத்துவிட்டது போல எண்ணிக் கொண்டு.

கமலா பெயரை வைச்சால் பணம் கொடுத்துடுவேன்னு நினைச்சியா? ஒண்ணும் நடக்காது.''

'தொச்சு.. என்னைக் கண்டால் மட்டுமில்லை, என் பேரைக் கேட்டாலும் எரிச்சல் வரும்னு சொன்னேனே, கேட்டியா... வேணும்னா அவர் அக்கா பேரை வைக்கிறேன்னு சொல்லு. தலையை அடகு வெச்சாவது பணம் கொடுத்து விடுவார்... அவ்வளவு பிரியம்.. அவர் தன் அக்கா மேல வெச்சா அது பாசம், நீ உன் அக்கா மேல வெச்சா அது மோசம்... போடா... பைத்தியக்காரா'' என்று சொல்லியபடியே கமலா பொல பொலவென்று கண்ணீர் விட ஆரம்பித்தாள். கமலா சினிமாவில் நடித்தால் அழுகைக் காட்சியில் கிளஸரினே தேவைப்படாது!

ஐயாயிரம் ரூபாய் கொடுக்காவிட்டால், இந்த முறுக்கு மேன்யுஃபேக்சரிங் தொழிற்சாலையை என் வீட்டிலேயே நிரந்தரமாக வைத்துக் கொண்டு விடுவார்களோ என்ற பயம் எனக்கு ஏற்பட்டது.

கமலா... இது என்ன சதா மூக்கு உறிஞ்சல்? பார்ட்னர்ஷிப்பெல்லாம் "ஹார்ட்ஷிப்'பில் போய் விடும். பணம் போட்டால் ஆச்சா? முறுக்கு கொஞ்சம் சுற்றணும்னு நாளைக்குப் பேச்சு வரும்... அப்புறம்... நான் ஒரு பிரபல எழுத்தாளன்... முறுக்கு வியாபாரம் பண்ணினால், முறுக்கை மெல்லும் போது ஊரார் என் பெயரையும் மெல்லுவார்கள்'' என்றேன்.

பணம் என்னிடமிருந்து பெயரக்கூடும் என்ற அறிகுறி தென்படவே தொச்சு முகமலர்ச்சியுடன், “அத்திம்பேர்... நீங்க சொல்றதும் சரிதான். பணம் கொடுங்கோ. ஒரே மாசத்திலே திருப்பிக் கொடுத்துடறேன். உங்க பேரே இதில் வராது'' என்றான்.

கடன் என்ற பெயரில் லஞ்சம் கேட்கிறானா? அப்போதுதான் என் பெயர் வெளியே வராதபடி பார்த்துக் கொள்வானோ! இது ஒருவித பிளாக் மெயிலா?

தொச்சு... பணம் வாங்கிக்கோ... நியாயமான வட்டியும் கொடுத்துடு. இது வியாபாரத்திற்கு வாங்கற பணம். அதனால் வட்டி கொடுத்தால் தப்பில்லை'' என்று என் மாமியார் சொன்னாள். (நான் நிச்சயம் பணம் கொடுத்து விடுவேன் என்று மூக்கில் வியர்த்திருக்க வேண்டும்.)

ஒரே மாசத்திலே திருப்பிடுவேன் அத்திம்பேர்...'' என்றான்.

இதோ பார், அம்மா சொன்னாப் போல ஒண்ணாம் தேதி, ஒண்ணாம் தேதி கரெக்டா வட்டி கொடுத்துடு'' -- இது கமலா!

ஒரே மாதத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போகிறபோது ஒண்ணாம் தேதி, ஒண்ணாம் தேதி என்று எப்படி இரண்டு தரம் வரும்? வராது என்பது மட்டுமல்ல, தொச்சுவிடம் கொடுத்த பணமும் வராது; வட்டியும் வராது என்பதும் எனக்குத் தெரியும்.

"சரி' என்றேன் "ரி' க்குப்பதில் "னி'யை மனத்தில் நறநறவென்று உச்சரித்துக் கொண்டே!"கமலா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ்' என்ற புதிய போர்டு மாட்டப்பட்ட அந்த பதினேழாம் நூற்றாண்டு திருவல்லிக்கேணி கட்டடத்தில் தொச்சு கடையைத் துவங்கினான். அங்கச்சி புதுப் பட்டுப் புடவை சரசரக்க வரவேற்றாள். தொச்சு சரிகைக் கரை வேட்டி, சில்க் ஜிப்பாவுடன் பரபரப்புடன் இருந்தான். அவனது பிரஜைகள் "லட்டும்மா, சீடைம்மா?என்று பறந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றைத் தொச்சு ஆத்திரத்துடன் பிடித்து, “சீடையா வேண்டும். பீடை!  பழுத்துடும் தாடை.. பிஞ்சிடும் குடைக்காம்பு'' என்று சொல்லிக் காதைத் திருகினான். (தொச்சு டி.ராஜேந்தரின் விசிறி இல்லை. இருந்தாலும் சமயத்தில் இப்படி மோனையுடன் பேசுவான். முக்கியமாக கோபம் வரும் போது!)

நான் கொடுத்த பணத்தில் பெரும் பகுதி புடவை, வேஷ்டிக்கே சரியாகப் போயிருக்கும் என்று தோன்றியது.

தொச்சு பிரமாதப்படுத்திட்டியே. உன் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் ஓஹோன்னு போகப் போறது பாரேன்! ஆல் தி பெஸ்ட்!'' என்றேன்.அடுத்த 2, 3 வாரங்கள் தினமும் ஏதாவது பட்சணம் "கமலா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்'ஸிலிருந்து வந்து கொண்டிருந்தது. “அத்திம்பேர்... மூணு மாமி, மூணு ஷிஃப்ட்லே கை முறுக்கு சுத்தறாங்க. டெய்லி எண்ணெய் மட்டும் இரண்டு டின் ஆகிறது... எல்லாம் அக்கா கை முறுக்கு பக்குவம்தான்'' என்றான்.

மூன்றாவது வாரம். “அத்திம்பேர்... கணக்குப் பார்த்தேன். நல்ல லாபம் தேறும் போல இருக்கு... ஆனால் எண்ணெய் வாங்கப் பணம் புரட்டியாகணும். ஆரம்பம் பாருங்க... பணம் கொஞ்சம் "டைட்'டாக இருக்கு'' என்றான். புதுமுக நடிகரைப் போல் உணர்ச்சியில்லாத முகபாவத்துடன்ஓஹோ'' என்றேன்.

அன்றுதான், என் இரண்டு நாவல்களை வெளியிட்ட பத்திரிகைகளிலிருந்து ஆறாயிரம் ரூபாய் வந்திருந்தது. கமலாவுக்கு அது தெரியும். ஆகவே அவள் சூடாக ஒரு லேசர் பார்வை பார்த்தாள். அவள் பேச ஆரம்பிக்கு முன், “தொச்சு... என்கிட்டே பணம், கிணம் கேட்காதே. ஒரு மாசத்திலே தர்றேன்னு நீ சொன்னபடி தந்துடு.. உன் வியாபாரம் உன் பொறுப்பு'' என்றேன்.

சரி. அத்திம்பேர்... வடிவேலுகிட்ட வாங்கிக்கறேன்.. மூணு வட்டி கேட்பான். இருந்தாலும் அவனை விட்டால் வழியில்லை... அடேடே... முதல் முதல்லே தேங்காய் போளி போட்டேன். இந்தாங்க... வரேன் அக்கா'' என்று சொல்லி விட்டுப் போனான் தொச்சு.

அடுத்த கணம் - அல்லது கணத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் கழிவதற்குள் கமலா, “ஏன் பணத்தை ஊருக்கு அனுப்பறதா உத்தேசமா? பாராஞ்சி வீட்டுக்கு ஓடு மாத்தணும்னு உங்கம்மா எழுதியிருந்தாளே... அதுக்கு அழுதாகணுமா? எலியும் பெருச்சாளியும் குரூப் டான்ஸ் ஆடிண்டிருக்கிற வீடு. வெள்ளை ஏன் அடிக்கிறீங்க? ஸ்னொசெம், ஆயில் டிஸ்டெம்பர் ஏதாவது அடிக்கலாமே, அந்த சேற்று சுவருக்கு... என்ன நான் கத்திண்டு இருக்கேன். பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்? நீ கத்திண்டே இரு... நான் ஊருக்குப் பணத்தை அனுப்பறேன்.
அப்படின்னு சொல்றீங்களா?'' என்று பொரிந்து தள்ளினாள்.

கமலா... உன் தம்பிக்கே பணத்தைக் கொடுத்துண்டு இருக்கணும். கோவில் யானைக்குப் போடறது போல அவன் எனக்கு 70 எம். எம் நாமத்தைப் போட்டுண்டே இருக்கணும். அதுதானே உங்களுக்குச் சந்தோஷம்'' என்றேன். உங்களுக்கு என்று சொன்னதுக்குக் காரணம், கதவுக்குப் பின்னால் என் மாமியார் தென்பட்டதுதான்!

என் மாமியார் ஒரு கம்ப்யூட்டர். சட்டென்று வெர்ட்-பிராசஸரில் ஒரு புதிய நிஷ்டூர ஃபைலைத் திறந்து, நான் சொன்னதற்குப் பதிலைச் சொன்னாள்:

கமலா... உங்களுக்காம்... சொல்றாரு... இதில் என் தலை ஏன் உருளணும்?... இப்ப போய் வடிவேலுவோ ஏதோ தடிவேலுவோ எவன்கிட்டியோ மூணு வட்டிக்கு வாங்கறவன், கடை ஆரம்பிக்கறதுக்கு முன்னே அங்கேயே வாங்கிண்டு இருந்தால், இப்படி நான் நடுவுலே பேச்சு எதுக்கு வாங்கப் போறேன்? மாசா மாசம் வர்ற வட்டிக்கு ஆசைப்பட்டுக் கொடுத்துட்டு, இப்ப எரிஞ்சு விழுந்தால்...? எலியோ பெருச்சாளியோ, வௌவாலோ, பாம்புப் புற்றோ எது இருந்தாலும் பூர்வீகச் சொத்துன்னா பூர்வீகச் சொத்துதான். பெத்த தாய்தானே எழுதியிருக்கிறாள். அனுப்பிட்டு போகட்டுமே. ஏன் நீ குறுக்கே நிக்கறே... வாங்கிக் கட்டிக்கறே?'' என்றாள். நிஷ்டூரமாகப் பேசுவதில் என் மாமியார் டிப்ளமா, டிகிரி, டாக்டர் பட்டம் எல்லாம் ஒரே சமயத்தில் வாங்கியவள்!

யார் என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பணத்தை அனுப்பத்தான் போறேன்'' என்றேன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு.

கமலாவும் என் மாமியாரும் சதாம் ஹுசைனைப் போல் யுத்தகளத்திலிருந்து வாபஸ் பெற்றார்கள்.

நானும் சூட்டோடு சூடாய் அம்மாவுக்குப் பணத்தை அனுப்பினேன்.

கடை ஆரம்பித்துச் சரியாக ஒரு மாதம் ஆயிற்று.

என்ன கமலா... உன் தம்பியண்டானைக் காணோம்... முதலையும் காணோம்... வட்டியையும் காணோம். சீடைதான் வட்டியா?'' என்றேன்.

அந்த சமயம் தொச்சு, ஒரு அட்டகாசமான குரலில், “ஹல்லோ அத்திம்பேர்... இந்தாங்க... கோதுமை அல்வா... முதல் மாசம் நிறைவு விழா...'' என்று சொல்லி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான்.

அத்தோடு, “இது வாய்க்கு ஸ்வீட்டு... உங்க மனசை ஸ்வீட்டாக்கறதுக்கு இந்தாங்க நீங்க கொடுத்த பணம், வட்டியோடு'' என்று கொடுத்தான். பணத்தை வாங்கி மேஜை மேல் வைத்தேன்.

எண்ணிப் பாருங்க... அத்திம்பேர்... அக்கா... சூடா அரை கப் காப்பி கொடு'' என்று வழக்கத்தை விட உரிமையாகக் கேட்டான்.

எதுக்கப்பா எண்ணணும்... எல்லாம் சரியாக இருக்கும்.''

எண்ணுங்களேன்'' என்றான்.

எண்ணினேன். “என்னப்பா, ஏழாயிரம் ரூபாய் இருக்கு. ஐந்தாயிரம்தானே கொடுத்தேன்.''

மீதி வட்டி, அத்திம்பேர்.... இல்லை, இல்லை! இது லாபத்திலே பங்குன்னு சொன்னால்தான் சரி. அத்திம்பேர், இந்த ஸ்நாக்ஸ் வியாபாரத்திலே தம்பிடிக்குத்  தம்பிடி லாபம் இருக்கும்னு நானே நினைக்கலே. வடிவேலுகிட்ட வாங்கின பணத்தையும் திருப்பிக் கொடுத்துட்டேன். எல்லாம் நீங்க நல்ல மனசோடு 5000 ரூபாய் கடன் கொடுத்த வேளைதான்'' என்றான்.

என் காதுகளை நம்ப முடியவில்லை. கண்களை நம்ப முடியவில்லை, தொச்சுவிடம் கொடுத்த பணம் வட்டியுடன் திரும்பி வந்து விட்டதா?

அந்தச் சமயம் ஜன்னல் வழியாக தபால்காரர் வீசிய கார்டு ஹாலில் வந்து விழுந்தது.

எடுத்துப் பார்த்தேன்.

காப்பியுடன் வந்த கமலா, “கார்டா... ஊரிலிருந்து உங்க அம்மாவாக இருக்கும்'' என்றாள்.

என்னாவாம்?'' என்று கேட்டாள்.

கடிதத்தைப் படிக்கும்போதே உடலில் மின்சாரம் பாய்ந்தது.

அடப் பாவமே'' என்றேன்.

என்ன... என்ன ஆச்சு?'' என்று கேட்டாள்.

வெள்ளையெல்லாம் அடிச்சு முடிச்சுட்ட அடுத்த நாள் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியதாம். காற்றும் புயலும் வீசித்தாம். வீடு அப்படியே பொல பொலவென்று சரிஞ்சு போயிட்டுதாம். அந்த சமயத்தில் அம்மா கோவிலுக்குப் போயிருந்ததாலே தப்பிச்சாளாம்...'' என்றேன்.

பெருமாள்தான் காப்பாத்தினார்'' என்றாள் கமலா. ஒரே சமயத்தில் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் பாவனையுடன், ’தொச்சு  கேட்டான், அவனுக்குக் கொடுக்கலை, இந்த திரேதாயுகத்துப் "பாராஞ்சி' வீட்டுக்குச் செலவழிக்கப் பணத்தை கொடுத்த அசடே' என்ற பாவம் - இரண்டும் கமலா முகத்தில் தெரிந்தன. "தொச்சுவுக்குக் கொடுத்து லாபம் சம்பாதிக்கத் தெரியாத அசமஞ்சமே' என்ற இளக்காரப் பார்வையால் எனக்குச் சூடு போட்டாள்!

ஆண்டவா தொச்சுவுக்குப் பணம் கொடுத்தாலும் நஷ்டம்; கொடுக்காவிட்டாலும் நஷ்டமா!


15 comments:

 1. தொச்சுவிடமிருந்து வட்டியுடன் பணம் திரும்பி வந்துவிட்டதா? என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்...

  ReplyDelete
 2. ஐயையோ, ஆத்தை ரிபேர் பண்ணிட்டு வெள்ளை அடிக்கக்கூடாதோ! ஆமாம், அது என்ன 'பாராஞ்ஜி' வீடு? - ஜெ.

  ReplyDelete
 3. <>
  இதை எங்க அம்மா கிட்ட முதலிலேயே சொல்லி இருக்கலாமே!!

  <>
  சோளிங்கர் ஊருக்கு அருகில் உள்ள அழகான சிறிய கிராமம்: பாராஞ்சி
  -கடுகு

  ReplyDelete
 4. << shamimanvar--தொச்சுவிடமிருந்து வட்டியுடன் பணம் திரும்பி வந்துவிட்டதா? என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்...>>>
  என் மீது சந்தேகம் இருந்தால் தொச்சுவிடம் ஒரு லட்சம் கொடுத்துப் பாருங்கள்!!!
  -கடுகு

  ReplyDelete
 5. நிஜமாகவே பணம் திரும்ப வந்துவிட்டதா?

  ReplyDelete
 6. Seems mami is 'pizhinjing' ribbon pakoda and not making kai murukku!

  ReplyDelete
 7. The artist did the sketch after mami had finished Kai Murukku and was making Ribbon.. Kadugu

  ReplyDelete
 8. Niinga sollavae illaiyae!! (Suddenly the Tamil typing icon is missing from my google laptop and I don't know how to down load it from google web store! Will check with my son!)

  ReplyDelete
 9. Y0u can download the Tamil software from NHM.in
  link: http://software.nhm.in/products/writer

  ReplyDelete
 10. நன்றி! இது கூகிள் லாப்டாப் என்பதால், ஹார்ட் டிஸ்க் கிடையாது, சாFட் வேர் பதிவிறக்கம் செய்ய முடியது. கூகிள் மூலம் க்ளௌடில் தான் வாங்க வேண்டும். கூகிள் ட்ரான்ஸ்லிடரேட் - தமிழ் என்பதை டவ்ன்லோட் செய்ய முடிந்தது. - ஜெ.

  ReplyDelete
 11. ரெம்ப நல்ல நகைசுவை கதை, வரிக்கு வரி ரசித்தேன் ஐயா....

  ReplyDelete
 12. எதிர்பாராத திருப்பம்...பணம் அதுவும் தொச்சுவிடம் கொடுத்த பணம் வட்டியோடு திரும்பக்கிடைத்தது.!

  ReplyDelete
 13. இன்று முதல் வருகை! இனி தொடர்வேன்! கலகலவென்று சிறப்பாக செல்கிறது கதை! கடைசியில் எதிர்பாரா திருப்பம் அருமை! நன்றி!

  ReplyDelete
 14. Lovely.I enjoyed your way of writing Language.Thochu is a remember able brother in law..Wonderful .
  Regards,
  K.Ragavan

  ReplyDelete
 15. ஹா... ஹா..

  கொடுத்தாலும் நஷ்டம் கொடுக்கவில்லையெனிலும் நஷ்டம்...

  கஷ்டம் தான்.

  ரசித்தேன்.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!