ஒரு முன்குறிப்பு:
வழக்கம்போல், பல வருஷங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை எழுதுகிறேன்.
எழுபதுகளில் என்னுடைய அன்றாடப் பணிகளில் ஒன்று ஏதாவது ஒரு புத்தகசாலைக்குப் போவது. அது என்னமோ புத்தகங்கள் மீது அப்படி ஒரு காதல். அப்படி ஒரு சமயம் டில்லி அமெரிக்கன் லைப்ரரிக்குப் போனபோது ஒரு நகைச்சுவைக் கதைத் தொகுப்பு என் கண்ணில் பட்டது. அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து வந்தேன். அதில் ஒருகதை நகைச்சுவையாகவும் வித்தியாசமாகவும் எழுதப்பட்டிருந்தது..’நான் ஒரு டிராகடர் சேல்ஸ்மேன்’ என்ற அந்தக் கதை 1925 வாக்கில் எழுதப்பட்டது. எழுதியவர் வில்லியம் ஹேஸ்லெட் அப்ஸன் ( William Hazlett Uspon - 26 September 1891- February 1975,). அவருடைய மற்ற கதைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. புத்தகசாலையில் அவர் எழுதிய புத்தகம் எதுவும் இல்லை. மனம் தளர்வேனா? : “எழுத்தாளர்கள் --யார் யார்” என்று தலையணை அளவு கனமானப் புத்தகத்தில் அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் தேடி எடுத்தேன், எனக்கு ஒரு யோசனை தோன்றியது,
அவருக்குக் கடிதம் எழுதி ஒன்றிரண்டு புத்தகங்களை அனுப்பும்படி கேட்டுப் பார்கலாமே என்று தோன்றியது. [அந்த (கற்) காலத்தில் அரை டாலர் விலையுள்ள புத்தகத்தை அமெரிக்காவிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றாலும், ரிசர்வ் வங்கி EXCHANGE CONTROL DEPARTMENTக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற்று, வரைவு ஓலை வாங்க வேண்டும். அவர்கள் ஆயிரம் கேள்வி கேட்பார்கள்].
இது மாதிரி, சில எழுத்தாளர்களுக்கு எழுதி, சில புத்தகங்களை வரைவழைத்து இருக்கிறேன். அப்சன் அவர்களுக்கும் எழுத நினைத்தேன். ஒரு வாரம் கழித்து அமெரிக்கன் புத்தகசாலைக்குப் போய் அவர் வீட்டு விலாசத்தை தேடிக் கண்டுபிடித்தேன். அப்போது மேஜை மீதிருந்த நியூ யார்க் டைம்ஸ் தினசரியைச் சும்மா புரட்டினேன். ஒரு மூலையில் இருந்த ‘காலமானார்’ பத்தியா என் கண்ணில் படவேண்டும்? சில தினங்களுக்கு முன்புதான் அப்ஸன் காலமானார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
அதன் பிறகு சுமார் 25 வருஷங்களுக்குப் பிறகு அப்ஸ்ன புத்தகம் ஒன்றை விலைக்கு வங்கினேன். பிறகு நார்த் கரோலினா சர்வகலாசாலை புத்தகசாலைகளில் ( டேவிஸ், லில்லி) அவர் எழுதிய பல புத்தகங்களைத் திகட்டத் திகட்டப் படித்தேன். சுமார் 100 கதைகள் படித்திருப்பேன். எல்லாம் கடித பாணி கதைகள்தான். தபால்கள் போய் சேரவும் வரவும் ஒன்றிரண்டு நாளாகி விடும். அதன்படி கதைகளை அமைக்க வேண்டும் .இதற்கு மிகவும் திறமை வேண்டும். The Saturday Evening Post- ல் அவர் கதைகள் பிரசுரமாயுள்ளன.
அவருடய கதாபாத்திரம் அலெக்ஸாண்டர் பாட்ஸ் ஒரு கில்லாடி சேல்ஸ்மேன்.
அவர் கதை ஒன்றை ’தமிழ்ப்படுத்தி’ தினமணி கதிருக்கு அனுப்பினேன். பிரசுரமாயிற்று. அதை இங்கு தருகிறேன்.
* * * *
------------
இந்திர விலாஸ் ஓட்டல்செங்கல்பட்டு
7.2.66
மானேஜர்,
விவசாயி டிராக்டர் கம்பெனி,
உழுவார்பேட், பெங்களூர்.
அன்புடையீர்,
வணக்கம்.
இப்படியும் அப்படியுமாகப் பார்த்ததில் இன்று இந்தியாவில் தயாராகும் டிராக்டர்களில் உங்கள் `விவசாயி'தான் சிறந்தது என்று கண்டுபிடித்துள்ளேன். ஆகவே, உங்கள் டிராக்டர் விற்பனைக்கு இந்த வட்டாரத்தில் சேல்ஸ்மேனாக என்னை நியமிக்க உங்களுக்கு முதல் சந்தர்ப்பம் தர விழைகிறேன்.
நான் ஒரு பிறவி சேல்ஸ்மேன். துறுதுறுப்பான மூளை; சாதுரியமான பேச்சு இருக்கிறது. வயது இருபத்தெட்டுதான்; களையான முகம்.
இயந்திர சாமான்களில் எனக்குப் பழக்கம் உண்டு. பாருங்கள், நான் தங்கியிருக்கும் ஓட்டலின் பெயரை! `இயந்திர' என்பதற்குக் கிட்டத்தட்ட நெருங்கிய பெயராக இல்லை? நான் டேராடூனில் ராணுவத்தில் இருந்த போது உங்கள் `விவசாயி' டிராக்டருடன் பழகியுள்ளேன்.
`விவசாயி'யின் சிறப்பை எடுத்துக் காட்டி ஏராளமாக விற்க முடியும். எப்போது வேலையை ஆரம்பிக்கலாம்?
அன்புடன்,
ஏ. கண்ணாமணி.
விவசாய டிராக்டர் கம்பெனி
----------------
பெங்களூர்.
10.2.66
அன்புள்ள திரு.கண்ணாமணிக்கு,
உங்கள் கடிதம். சேல்ஸ்மேன் வேலை எதுவும் தற்சமயம் காலியாக இல்லை. ஆனால் ஒரு மெக்கானிக் அவசரமாக தேவைப்படுகிறது. நீங்கள் விவசாயி டிராக்டருக்கு பரிச்சயமானவர் என்பதால் உங்களை மெக்கானிக்காக நியமிக்கிறோம். மாதம் ஐந்நூறு ரூபாயும் பிரயாணப் படியும் கொடுக்க நிச்சயித்துள்ளோம்.
உடனடியாக எங்கள் சேல்ஸ்மேன் திரு கல்லுளிமங்கனைச் சந்திக்கவும். அவர் அங்கே கஜேந்திர விலாசில் தங்கியிருக்கிறார். அவருடன் அரக்கோணம் சென்று, நாங்கள் அனுப்பியிருக்கும் விவசாயி டிராக்டரை ஓட்டிக் காண்பியுங்கள். திரு.ராஜதுரை என்பவர் ஆர்டர் கொடுத்திருந்தார். நமது சேல்ஸ்மேன் எல்லா விவரங்களையும் கூறுவார்.
இத்துடன் முன் பணமாக ரூபாய் இருநூறு அனுப்புகிறோம்.
இப்படிக்கு,
அசமஞ்சம்
சேல்ஸ் மானேஜர்
=============
செங்கல்பட்டு,
13.2.66.
அன்புள்ள சேல்ஸ் மானேஜருக்கு,
வணக்கம்.
உங்கள் கடிதம் கிடைத்தவுடன் திரு கே.மங்கனைப் பார்க்கச் சென்றேன். என்னைக் கேட்டால் நீங்கள் என்னை மெக்கானிக்காக நியமித்தது உங்கள் அதிர்ஷ்டம் என்பேன். மங்கனுக்கு டெங்கு ஜுரம். ஆஸ்பத்திரிக்குப் போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அவரை அட்மிட் செய்தேன். அவர் எனக்கு எல்லா விவரங்களையும் கூறினார்.
திரு ராஜதுரைக்கு ஏராளமான நஞ்சை, புஞ்சை நிலம் இருக்கிறது என்றும், சவுக்கு, மா, புளி தோப்புகள் ஏராளம் என்றும் கூறினார். நம் டிராக்டர் உதவியால், வெட்டிய மரங்களை `சா' மில்லுக்கு விரைவாகக் கொண்டு வர விருப்பமாம். ஒரு ரகசியம்: மரப்பலகைகள் விலை சரியப் போகின்றன. உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். பாவம்! பிழைத்துப் போகட்டும்!


