ஒரு முன்குறிப்பு:
வழக்கம்போல், பல வருஷங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை எழுதுகிறேன்.
எழுபதுகளில் என்னுடைய அன்றாடப் பணிகளில் ஒன்று ஏதாவது ஒரு புத்தகசாலைக்குப் போவது. அது என்னமோ புத்தகங்கள் மீது அப்படி ஒரு காதல். அப்படி ஒரு சமயம் டில்லி அமெரிக்கன் லைப்ரரிக்குப் போனபோது ஒரு நகைச்சுவைக் கதைத் தொகுப்பு என் கண்ணில் பட்டது. அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து வந்தேன். அதில் ஒருகதை நகைச்சுவையாகவும் வித்தியாசமாகவும் எழுதப்பட்டிருந்தது..’நான் ஒரு டிராகடர் சேல்ஸ்மேன்’ என்ற அந்தக் கதை 1925 வாக்கில் எழுதப்பட்டது. எழுதியவர் வில்லியம் ஹேஸ்லெட் அப்ஸன் ( William Hazlett Uspon - 26 September 1891- February 1975,). அவருடைய மற்ற கதைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. புத்தகசாலையில் அவர் எழுதிய புத்தகம் எதுவும் இல்லை. மனம் தளர்வேனா? : “எழுத்தாளர்கள் --யார் யார்” என்று தலையணை அளவு கனமானப் புத்தகத்தில் அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் தேடி எடுத்தேன், எனக்கு ஒரு யோசனை தோன்றியது,
அவருக்குக் கடிதம் எழுதி ஒன்றிரண்டு புத்தகங்களை அனுப்பும்படி கேட்டுப் பார்கலாமே என்று தோன்றியது. [அந்த (கற்) காலத்தில் அரை டாலர் விலையுள்ள புத்தகத்தை அமெரிக்காவிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றாலும், ரிசர்வ் வங்கி EXCHANGE CONTROL DEPARTMENTக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற்று, வரைவு ஓலை வாங்க வேண்டும். அவர்கள் ஆயிரம் கேள்வி கேட்பார்கள்].
இது மாதிரி, சில எழுத்தாளர்களுக்கு எழுதி, சில புத்தகங்களை வரைவழைத்து இருக்கிறேன். அப்சன் அவர்களுக்கும் எழுத நினைத்தேன். ஒரு வாரம் கழித்து அமெரிக்கன் புத்தகசாலைக்குப் போய் அவர் வீட்டு விலாசத்தை தேடிக் கண்டுபிடித்தேன். அப்போது மேஜை மீதிருந்த நியூ யார்க் டைம்ஸ் தினசரியைச் சும்மா புரட்டினேன். ஒரு மூலையில் இருந்த ‘காலமானார்’ பத்தியா என் கண்ணில் படவேண்டும்? சில தினங்களுக்கு முன்புதான் அப்ஸன் காலமானார் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
அதன் பிறகு சுமார் 25 வருஷங்களுக்குப் பிறகு அப்ஸ்ன புத்தகம் ஒன்றை விலைக்கு வங்கினேன். பிறகு நார்த் கரோலினா சர்வகலாசாலை புத்தகசாலைகளில் ( டேவிஸ், லில்லி) அவர் எழுதிய பல புத்தகங்களைத் திகட்டத் திகட்டப் படித்தேன். சுமார் 100 கதைகள் படித்திருப்பேன். எல்லாம் கடித பாணி கதைகள்தான். தபால்கள் போய் சேரவும் வரவும் ஒன்றிரண்டு நாளாகி விடும். அதன்படி கதைகளை அமைக்க வேண்டும் .இதற்கு மிகவும் திறமை வேண்டும். The Saturday Evening Post- ல் அவர் கதைகள் பிரசுரமாயுள்ளன.
அவருடய கதாபாத்திரம் அலெக்ஸாண்டர் பாட்ஸ் ஒரு கில்லாடி சேல்ஸ்மேன்.
அவர் கதை ஒன்றை ’தமிழ்ப்படுத்தி’ தினமணி கதிருக்கு அனுப்பினேன். பிரசுரமாயிற்று. அதை இங்கு தருகிறேன்.
* * * *
------------
இந்திர விலாஸ் ஓட்டல்
செங்கல்பட்டு
7.2.66
மானேஜர்,
விவசாயி டிராக்டர் கம்பெனி,
உழுவார்பேட், பெங்களூர்.
அன்புடையீர்,
வணக்கம்.
இப்படியும் அப்படியுமாகப் பார்த்ததில் இன்று இந்தியாவில் தயாராகும் டிராக்டர்களில் உங்கள் `விவசாயி'தான் சிறந்தது என்று கண்டுபிடித்துள்ளேன். ஆகவே, உங்கள் டிராக்டர் விற்பனைக்கு இந்த வட்டாரத்தில் சேல்ஸ்மேனாக என்னை நியமிக்க உங்களுக்கு முதல் சந்தர்ப்பம் தர விழைகிறேன்.
நான் ஒரு பிறவி சேல்ஸ்மேன். துறுதுறுப்பான மூளை; சாதுரியமான பேச்சு இருக்கிறது. வயது இருபத்தெட்டுதான்; களையான முகம்.
இயந்திர சாமான்களில் எனக்குப் பழக்கம் உண்டு. பாருங்கள், நான் தங்கியிருக்கும் ஓட்டலின் பெயரை! `இயந்திர' என்பதற்குக் கிட்டத்தட்ட நெருங்கிய பெயராக இல்லை? நான் டேராடூனில் ராணுவத்தில் இருந்த போது உங்கள் `விவசாயி' டிராக்டருடன் பழகியுள்ளேன்.
`விவசாயி'யின் சிறப்பை எடுத்துக் காட்டி ஏராளமாக விற்க முடியும். எப்போது வேலையை ஆரம்பிக்கலாம்?
அன்புடன்,
ஏ. கண்ணாமணி.
விவசாய டிராக்டர் கம்பெனி
----------------
பெங்களூர்.
10.2.66
அன்புள்ள திரு.கண்ணாமணிக்கு,
உங்கள் கடிதம். சேல்ஸ்மேன் வேலை எதுவும் தற்சமயம் காலியாக இல்லை. ஆனால் ஒரு மெக்கானிக் அவசரமாக தேவைப்படுகிறது. நீங்கள் விவசாயி டிராக்டருக்கு பரிச்சயமானவர் என்பதால் உங்களை மெக்கானிக்காக நியமிக்கிறோம். மாதம் ஐந்நூறு ரூபாயும் பிரயாணப் படியும் கொடுக்க நிச்சயித்துள்ளோம்.
உடனடியாக எங்கள் சேல்ஸ்மேன் திரு கல்லுளிமங்கனைச் சந்திக்கவும். அவர் அங்கே கஜேந்திர விலாசில் தங்கியிருக்கிறார். அவருடன் அரக்கோணம் சென்று, நாங்கள் அனுப்பியிருக்கும் விவசாயி டிராக்டரை ஓட்டிக் காண்பியுங்கள். திரு.ராஜதுரை என்பவர் ஆர்டர் கொடுத்திருந்தார். நமது சேல்ஸ்மேன் எல்லா விவரங்களையும் கூறுவார்.
இத்துடன் முன் பணமாக ரூபாய் இருநூறு அனுப்புகிறோம்.
இப்படிக்கு,
அசமஞ்சம்
சேல்ஸ் மானேஜர்
=============
செங்கல்பட்டு,
13.2.66.
அன்புள்ள சேல்ஸ் மானேஜருக்கு,
வணக்கம்.
உங்கள் கடிதம் கிடைத்தவுடன் திரு கே.மங்கனைப் பார்க்கச் சென்றேன். என்னைக் கேட்டால் நீங்கள் என்னை மெக்கானிக்காக நியமித்தது உங்கள் அதிர்ஷ்டம் என்பேன். மங்கனுக்கு டெங்கு ஜுரம். ஆஸ்பத்திரிக்குப் போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அவரை அட்மிட் செய்தேன். அவர் எனக்கு எல்லா விவரங்களையும் கூறினார்.
திரு ராஜதுரைக்கு ஏராளமான நஞ்சை, புஞ்சை நிலம் இருக்கிறது என்றும், சவுக்கு, மா, புளி தோப்புகள் ஏராளம் என்றும் கூறினார். நம் டிராக்டர் உதவியால், வெட்டிய மரங்களை `சா' மில்லுக்கு விரைவாகக் கொண்டு வர விருப்பமாம். ஒரு ரகசியம்: மரப்பலகைகள் விலை சரியப் போகின்றன. உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். பாவம்! பிழைத்துப் போகட்டும்!
அரக்கோணத்திற்குப் பக்கத்தில் உள்ள ஊற்றுக்காடு கிராமத்திற்கு டிராக்டரை ஓட்டிக் கொண்டு வந்து, ராஜதுரைக்கு டெமான்ஸ்டிரேட் செய்து காட்ட மங்கன் ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
`மிஸ்டர் மங்கன்! நீங்கள் கவலைப்படாமல் இங்கு இருங்கள். நான் போய் நம் டிராக்டரின் சிறப்பை எடுத்துக் காட்டி, எப்படியாவது அதை அவர் தலையில் கட்டி விடுகிறேன்' என்று தைரியம் கொடுத்தேன்.
ஒருசந்தேகம்: நம் `விவசாயி' சேற்றுப் பாதையில் போகுமா? ஏனெனில் ஊற்றுக்காடு ஒரு சேற்றுக்காடு.
அன்புடன்,
ஏ.கண்ணாமணி.
---------
சேல்ஸ்மேன் டயரி
தேதி: 14.2.66
இடம்: பீமா கேப்.
எழுதியது: ஏ.கண்ணாமணி.
அரக்கோணத்திற்குக் காலை பத்து மணிக்கு ஒரு மாதிரி வந்து சேர்ந்தேன். அந்தப் பாடாவதி பஸ் படுத்திய பாட்டைப் பற்றி எழுதி, உங்களைப் போரடிக்க விரும்பவில்லை. (நான் பிறவிசேல்ஸ்மேன். ஆதலால் எனக்குத் தெரியும், பிஸினஸ் காரர்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் காசு என்று!) இறங்கியவுடன் ஊற்றுக்காடுக்கு எப்படிப் போவது என்பதை விசாரித்துக் கொண்டேன். டவுனிலிருந்து இரண்டு மைலில் இருக்கிறது. போகிற வழி பயங்கரச் சேற்றுப் பாதை. (ஊரில் குடிக்கத் தண்ணீர் இல்லை. ஆனால் சேற்றுக்கு யார் தண்ணீர் கொட்டுவார்களோ தெரியவில்லை. எனக்குச் சுறுசுறுப்பான மூளை இருப்பதால் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்ய முடிகிறது.)
பீம விலாசில் ஓர் அறை எடுத்துக் கொண்டேன். அறை என்றால் பெரிய ஸுட் அல்ல. சின்ன `ர'வும் அதற்குப் பொருந்தும். அரை தான்; அவ்வளவு சின்னது. (எனக்கு ஒரு பிரின்சிபல் உண்டு; கம்பெனிப் பணத்தை `தாம் தூம்' செய்யக் கூடாது.)
பிறகு ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றேன். கூட்ஸ் `சைடிங்'கில் நம் `விவசாயி' நளினமாக நின்று கொண்டிருந்தாள். (இயந்திரங்களும் பெண்களும் அழகு பிம்பங்கள் என்பது என் கருத்து. மேலும் நான் பிறவி சேல்ஸ்மேன் மட்டுமல்ல; பிறவிப் பிரம்மச்சாரியும் கூட.)
ஆகா! நம் விவசாயி அழகுக்கு முன்ஆயிரம் சினிமா நட்சத்திரங்கள் வந்தாலும் உறை போடக் காணாது. என்ன அழகு! என்ன பளபளப்பு! என்ன கம்பீரம்! அப்படியே கட்டித் தழுவிக் கொள்ளலாமா என்கிற ஆசை ஏற்பட்டது. உண்மையைச் சொல்கிறேன். இந்த `விவசாயி' டிராக்டருக்கு நான் மெகானிக் என்பதை எண்ணும் போதே என் இதயமே பூரித்துப் புளங்காகிதம் அடைகிறது!
குறிப்பு: முன்பு என் கடிதத்தில் குறிப்பிட்டது போல் நான் ஒரு காலத்தில் யந்திரங்களை விற்பனை செய்தது உண்மைதான். நான் விற்ற பொருள்களில் மிகப் பெரியது ஸ்க்ரூ டிவைர்தான். இருந்தும் இந்தப் பிரம்மாண்ட `விவசாயி'யும் எனக்கு ஒத்துப் போகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கூட்ஸ் ஷெட்டில் உள்ள போர்ட்டர்களுக்கு நாஷ்டா, டீ என்று கொஞ்சம் செலவு செய்து டிராக்டரை டெலிவரி வாங்கிக் கொண்டேன். பெட்ரோல், எண்ணெய் வாங்கி வர ஆளை அனுப்பினேன். அவர்கள் வருவதற்குள் துரைராஜுவைப் பார்த்து விட்டு வரச் சென்றேன்.
குறிப்பு: டிராக்டர் வாங்குவதாகசச் சொன்னவர் ராஜதுரை இல்லை! துரைராஜு. திரு.கே.மங்கன் டிங்குக் காய்ச்சல் வேகத்தில் பெயரை மாற்றி சொல்லி விட்டார் போலிருக்கிறது. மேலும் துரைராஜு டிராக்டர் வாங்க விருப்பம் தெரிவித்ததையும் ஒப்புக் கொள்ளவில்லை.
அவரிடம் `விவசாயி'யைப் பற்றிச் சொன்னதும், அவர் `அ. ஆ.' என்று சிரித்தார். நான் `இ. இ.' என்று இளித்து விட்டு விவசாயியின் பெருமையை சரமாரியாகப் பொழிந்தேன். (நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறேன்.)
"கண்ணு, நீ சும்மா பேசி என்னா லாபம்? முன்னமேயே ஒரு பய வந்தான். `அட, உன் டிராக்டரு நம் சேற்று ரோட்டிலே மரக்கட்டைகளை இஸ்தார முடியாது'ன்னு சொல்லி அனுப்பினேன். (குறிப்பு: அவர் சொல்லும் போது நாம் கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், கொருக்குப் பேட்டை ரிக் ஷா ஸ்டாண்டில் இருப்பது போல் தோன்றும்.) ”அதனாலே கண்ணு, நீபோய் வா... புரிஞ்சுதா... கண்ணு?" என்று டயலாக் விட்டார்.
குறிப்பு: என்னடா நம் பெயர் கண்ணாமணி என்று தெரிந்து, கண்ணு என்று கூறுகிறாரோ என்று ஒரு கணம் நினைத்தேன். எனக்குக் கூரிய மூளை இருப்பதால் விஷயம் விளங்கி விட்டது. இந்த வாத்தியார் பாஷையில் `கண்ணு' ரொம்ப சகஜம் என்பது.
அவர் “போ” என்றாலும் நான் கல்லுளி மங்கன் மாதிரி நம் சேல்ஸ்மேனைக் குறிப்பிடவில்லை) நின்று கொண்டிருந்தேன்.
"கண்ணு, அந்தச் சேற்று ரோடில் உன் டிராக்டர் அழுந்தி அம்போன்னு பூடும். ஆளுங்க தூக்கியாரச்சியே முழங்காலுக்குப் பொதைஞ்சு பூடுது!"
"நீ இன்னா சார் சொல்றே, உங்க மரம், கட்டை அல்லாத்தையும் டிராக்டர் வண்டியிலே போட்டு அரக்கோணம் கூட்ஸ் ஷெட்டுக்குக் கொண்டாரணும். நான் செய்யறேன். நீ பாரு. சார்" (குறிப்பு: நான் பிறவி சேல்ஸ்மேன். ஆகவே சட்டென்று நான் வாத்தியார் பாஷைக்குத் தாவி விட்டேன். இதனால் தான் எங்கள் தாத்தா சொல்வார், பையன் படுசுட்டி, என்று)
"கண்ணு, நீ இன்னா கொழந்தை கணக்கா பேசறே? ஒரு சின்ன டிரக்கை வாங்கி வேலையிலே உட்டேன். அது இன்னா ஆச்சு? பொதைஞ்சு கிடக்குது! அதை வெளியே எடுக்கக்கூட முடியலே. நீ போய் வா கண்ணு!"
"அவ்வளவுதானே! உங்க டிரக்கை நம்ப விவசாயி மூலமா வெளியே கொண்டாரேன். நீ வா சார், என்னோட ஒரு ட்ரையல் பாரு. சாயங்காலம் மூணு மணிக்கு வா சார்!" என்றேன்.
"இப்பவே கிளம்பு!" என்றார். எனக்கு பகீரென்று ஆகி விட்டது. "மத்தியானம் பார்க்கலாமே" என்றேன். "என்னா கண்ணு, எனக்கு மத்தியானம் வேற வேலை இல்லைன்னு நெனைப்பா?... வர்றதா இருந்தா இப்பவே வா!" என்றார்.
"ஓ.கே." என்றேன்.
(குறிப்பு: சாயங்காலம் 3 மணிக்கு என்று ஏன் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்க வேண்டும். என் முதல் கடிதத்தில் குறிப்பிட்டபடி விவசாயி டிராக்டருடன் எனக்கு பழக்கம் உண்டு என்பது உண்மைதான். ராணுவத்தில் எங்கள் `ப்ளடூனில்' இந்த டிராக்டர் ஒன்று இருந்தது. ஆனால் ராணுவத்தில் நான் சமையல்காரனாக பணி புரிந்ததால் ’விவசாயி’யை ஓட்டியதில்லை.)
* *
ரயில்வே ஷெட்டில் நின்று கொண்டிருந்த `விவசாயி'யில் க்ளட்ச், கியர் எல்லாம் காரில் இருப்பது போல் இருக்கவே எனக்கு ஒரு தைரியம்.
ஆகவே, துரைராஜுவை என் பக்கத்தில் `குந்திக்க'ச் சொன்னேன். (மன்னிக்க! அவர் அருகில் இருக்கவே `குந்திக்க' என்று எழுதி விட்டேன். `உட்கார' என்று திருத்திக் கொள்ளவும்.)
நான் ஏறி உட்கார்ந்தேன். டிராக்டர் எஞ்சினை ஸ்டார்ட் செய்தேன். ஆகா! ’விவசாயி’யின் உறுமலே உறுமல்! இரண்டு நிமிஷத்திலே 50, 60 பேர் கூடி விட்டார்கள். வியப்பு, ஆச்சரியம் எல்லாம் அவர்கள் முகத்தில் தெரிந்தன. எனக்குப் பெருமை! குஷியாகக் கியரை மாற்றி, ஆக்ஸிலரேட்டரை முடுக்கினேன்.
குறிப்பு: உங்கள், அதாவது நம் கம்பெனித் தலைமை இஞ்சினியரிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள். ஆக்ஸிலேட்டர் இவ்வளவு அழுத்தமாக இருப்பது சௌகரியமாக இல்லை.
கிளட்சை மெதுவாக விட்டேன். முன்னே ஓட்டிப் போகத்தான் எண்ணம். என்ன ஆயிற்று தெரியுமா? கடகடவென்று சப்தம் போட்டுக் கொண்டு பின் பக்கம் போய்க் கொண்டிருந்தது.
அந்தப் பக்கம் அடுக்கி வைத்திருந்த நாலைந்து பார்சல்களைக் கீழே உருட்டி விட்டது. நல்ல காலம், இன்னும் ஓர் அடி பின்னால் போயிருந்தால், நம் விவசாயியே சாய்ந்திருக்கும்.
கீழே விழுந்த பார்சல்கள் சடசடவென்று முறிகிற சத்தத்தையும் மிஞ்சியது துரைராஜுவின் அலறல். நான் சிறிதும் நிதானம் இழக்கவில்லை. (எங்கள் வீட்டின் வாசலில் தான் தெருக்குழாய் இருந்தது. தினமும் அங்கே பெண்கள் சண்டை போடுவதை நான் கேட்டிருந்ததால் `கூச்சல் புரூப்' ஆகி விட்டேன்.)
என் மூளை எலக்ட்ரானிக் இயந்திரம் மாதிரி. சட்டென்று எஞ்சினை ஆஃப் செய்து பிரேக்கை அழுத்தினேன். (அந்தச் சமயம் பார்த்துதானா துரைராஜுவும் பிரேக்கின் மேல் காலை வைக்க வேண்டும்? நான் அழுத்திய வேகத்தில் அவர் கட்டை விரல் நசுங்கியது. மனுஷன் கத்து கத்து என்று கத்தினார். கொஞ்சம் திட்டினார். (ஒரு பிரபல கம்பெனியின் சேல்ஸ்மேன் ரிபோர்ட் இது; ஆகவே அவரது திட்டுகளை ரிகார்டு செய்யாமல் விடுகிறேன்.)
“வேண்டுமென்றேதான் ரிவர்சில் சென்றேன்” என்று சொன்னேன், திரும்பவும் ஸ்டார்ட் செய்தேன். கியரை மாற்றி விட்டேன். ஆகவே முன் பக்கமாகச் சென்றது. குலுங்கிக் கொண்டே அது ஆடிய ஆட்டத்தில் என் முதுகு எலும்பு சீட்டில் மோதி வலி கொடுத்தது. (நம் சீப் எஞ்சினீயரிடம் சொல்லுங்கள். சீட்டில் இன்னும் நிறைய ஸ்பிரிங் மெத்தை வைப்பது நல்லது. நான் சொன்னதாகக் கூறுங்கள்.)
அரக்கோணம் மக்கள் ரொம்பப் பரிதாபத்திற்கு உரியவர்கள். இது வரை இத்தனை அழகான டிராக்டரையே அவர்கள் பார்த்ததில்லை போல் இருக்கிறது. கூட்டம் கூட்டமாக நின்று பார்த்தனர். (எந்தச் சந்தர்ப்பத்திலும் ’விவசாயி’க்கு விளம்பரம் வாங்கித் தரும் எண்ணத்திலேயே இருக்கிறேன். ஆகவே முன் பக்கம் ’விவசாயி’ என்ற டிரேட் மார்க்கைச் சுற்றிப் பூமாலை ஒன்று வாங்கிப் போட்டு வைத்தேன்.)
சிறிது தூரம் சென்றிருக்க மாட்டோம். ஒரே புகை நாற்றம். எங்கேயோ ஏதோ கருகிப் போகிறது என்று என் மூக்கு உணர்ந்து கொண்டது. லேசாகப் புகை வருவதை என் கூரிய கண்கள் கண்டுபிடித்து விட்டன.
"ரேடியேடரில் தண்ணீர் இல்லையா, கண்ணு" என்றார் துரைராஜு.
திறந்து பார்க்கிறேன். உண்மைதான். தண்ணீர் ஊற்றவில்லை. ஆகவேதான் மிஷின் சூடாகப் போய்விட்டது.
சட்டென்று அங்கிருந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு வாளி தண்ணீர் கேட்டேன். நான் மட்டும் சுறுசுறுப்பாக இதைச் செய்யாமல் இருந்தால், ’விவசாயி’க்குப் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும்.
தண்ணீர் குடித்ததும், பஞ்ச கல்யாணி மாதிரி துள்ளிக் குதித்து ஓடியது. `துள்ளாத மனமும் துள்ளும்' என்ற பாட்டைப் பாடினேன். எப்படியாவது துரைராஜுவுக்குத் திருப்தி ஏற்பட்டு, நம் டிராக்டரை வாங்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
"கண்ணு, பின்னாலே பார்! நடுரோட்டிலே எப்படித் தண்ணீர் பொங்குது" என்றதும் திரும்பிப் பார்த்தேன். `அரக்கோணத்திலா இவ்வளவு தண்ணீர் ஊற்று மாதிரிப் பொங்கி வருகிறதே' என்று எனக்கு ஆச்சரியம்! ஏழெட்டு அடி உயரத்திற்குக் கம்பம் மாதிரி தண்ணீர் பொங்கிக் கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் காமிரா கொண்டு வரவில்லையே என்று நான் வருந்தினேன்.
யாரோ கத்தினார்கள். நெருப்பணைக்கும் குழாயின் மூடியை யாரோ எடுத்து விட்டதாகக் கத்தினார்கள். பல தெருக்களில் இப்படிப் பெரிய குழாய்களை வைத்திருப்பார்கள் அல்லவா? அதன் மூடியைக் காணோமாம்; அதுதான் தண்ணீர் பீச்சி அடிக்கிறதாம்!
"நல்ல வேடிக்கை!" என்று சிரித்தேன். துரைராஜுவும் சிரித்தார்.
ஒரு மீசைக்கார ஆசாமி வந்து பாய்ந்தான். `'`என்னய்யா. மாட்டு வண்டியா ஓட்டறே? மூடியை உன் டிராக்டர் இடிச்சுக் கழட்டித் தள்ளிடிச்சு. அப்புறம் அதன் மேலே வண்டியை வேற ஓட்டி நசுக்கிட்டியே?" - அவர் இவ்வளவு நிதானமாகச் சொல்லவில்லை. ரிப்போர்ட்டில் எழுதும் போது நாகரிகமாக எழுத வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
ஜனங்கள் `ஓ'வென்று கத்திக் கொண்டிருந்தனர். "மூடியைத் தேடு, துணியைப் போட்டு அடை!" என்று கத்திக் கொண்டிருந்தார்கள். பல குழந்தைகள் அந்தத் தண்ணீரில் குதித்து விளையாடிக் குளித்தன. ஒரு போலீஸ்காரர் வந்து என் பெயரைக் கேட்டார். நான் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அகில உலக பிரசித்தி பெற்ற ’விவசாயியி’ன் சீஃப் அஸிஸ்டெண்ட் சேல்ஸ்மேன் என்று கூறிவிட்டேன். கவர்மெண்டு ரிகார்டுகளில் நம் ’விவசாயி’யின் பெயர் போனால் ஒரு விளம்பரம் தானே? எப்படி என் ஐடியா?
துரைராஜு `உம்'மென்று உட்கார்ந்து வந்தார். "நான்தான் எல்லாக் குழப்பத்திற்குமே காரணம் என்று நினைத்தாரோ என்னவோ, அதுவும் நியாயம்தான் என்று எனக்குப் பட்டது. (இப்படி மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்று நான் சட்டென்று கண்டு பிடித்து விடுவேன். அதனால்தான் நான் நல்ல சேல்ஸ்மேனாக இருக்கிறேன்.) அவரைக் குஷிப்படுத்தலாம் என்று சிலஜோக்குகளைச் சொன்னேன். நாகேஷ் மாதிரி பேசிக் காட்டினேன். ஒன்றும் பலனில்லை. டிராக்டர் போட்ட சத்தத்தில் அவர் காதில் ஒன்றுமே விழவில்லை.
இதற்குள் ஊற்றுக்காடு தோப்பு வந்து விட்டது. தெனாலிராமன் கதையில் சலவைத் தொழிலாளியைக் கழுத்து வரை புதைத்து வைத்த கதை தெரியுமா? (நான் ஏழாம் வகுப்பில் படித்த நியூ காரனேஷன் ரீடரில் படம் கூடப் போட்டிருந்தது.) அது மாதிரி ஒரு சின்ன டிரக் தோப்புக்கருகில் ஒரு சேற்றில் நித்தம் நின்று தவம் செய்து கொண்டிருந்தது. தோப்பு வழியும் ஒரே சேறு. இந்தக் கிராமமே சேறுதான்.
"இந்தச் சேற்றில் உன் ஜம்பம் பலிக்குமா கண்ணு?" என்று துரைராஜு கேட்டார்.
"கவலைப்பட வேண்டாம்" என்று தைரியம் கொடுத்தேன். டிராக்டரிலிருந்து பெரிய இரும்புச் சங்கிலியை எடுத்தேன். ஒரு முனையை சேற்றில் நின்று கொண்டிருந்த டிரக்கில் மாட்டி விட்டு, மற்றொரு முனையை நம் டிராக்டரில் மாட்டினேன்.
"சார், ஐம்பது எண்ணுங்கள். உங்கள் டிரக்கை வெளியே கொண்டு வந்து விடுகிறேன்" என்றேன்.
ஸ்டண்ட் சினிமாக்களில் குதிரை மேல் தாவுவது போல் ஒரே தாவாக விவசாயியின் சீட்டில் ஏறி உட்கார்ந்தேன். ஸ்டார்ட் செய்தேன். `சக், சக்' என்று மழலை மொழிந்து கொண்டு டிராக்டர் முன்னேற, துரைராஜும் தோப்பிலிருந்த ஆட்களும் `ஓ' வென்று கத்த ஆரம்பித்தனர். நான் சட்டென்று விஷயத்தைப் புரிந்து கொண்டேன். டிராக்டர் ஓசையை அவர்கள் கூச்சல் மிஞ்சியதால் ஏதோ ஏற்பட்டு விட்டது என்று கண்டு கொண்டேன். நான் டிரக்கின் ரேடியேட்டரில் சங்கிலியை மாட்டியிருந்தேன். அது மட்டமான டிரக். ஆகவே ரேடியேட்டர் மொத்தமாக கழன்று வந்து விட்டது. (டிரக்தான் பாதிக்கு மேல் புதைந்து விட்டதே, எப்படி பம்பரில் மாட்டுவது.)
அடுத்த பத்து நிமிஷத்தை துரைராஜுவை சமாதானப்படுத்துவதில் கழித்தேன். பிறகு, அவரே சேற்றில் தோள் வரை கையை விட்டுப் பம்பரில் சங்கிலியை மாட்டினார்.
திரும்பவும் டிராக்டரைக் கிளம்பினேன். உற்சாகமான கூச்சலுக்கிடையில் டிராக்டர் முன்னேற, டிரக் சேற்றிலிருந்து வெளியில் வந்தது. ஒரே கரகோஷம்; கை தட்டல். எனக்கும் மகிழ்ச்சி.
என் ஈவனிங் ஹாட்டை எடுத்து வீசி ஆட்டினேன் உற்சாகமாக.
சில நிமிஷங்கள் சென்றிருக்கும். டிராக்டர் நகர்ந்தது.
விவசாயி இடதுசாரியோ என்னவோ, அது தானாக இடது பக்கம் சென்றது. விளைவு என்ன? வெளியே வந்த டிரக் மறுபடியும் சேற்றை நோக்கித் திரும்பி, மறுபடியும் புதைந்து விட்டது. இருந்தும் நான் மனம் தளரவில்லை. (`வைரமுடைய நெஞ்சு வேண்டும்' என்று பாரதியார் பாடிய கவிதை எனக்குத் தெரியும்.) விவசாயியை மேலும் முடுக்கி விட்டேன். ஜல்லிக்கட்டுக் காளை மாதிரி அது சுகமாக உறுமிக் கொண்டே முன்னேற டிரக் சேற்றையெல்லாம் வழித்துக் கொண்டு வந்தது. ஒற்றைக் கால்வாயை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
எனக்குக் குஷி. அதை விடத் துரை ராஜுக்கு அதிகக் குஷி.
"கண்ணு, நீ பெரிய ஆளு!" என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்தார்.
அப்போது எதிரே ஒரு கிணறு - மொட்டைக் கிணறு தென்பட்டது. ஒரு நிமிஷம் இருந்திருந்தால் ஒரு ’விவசாயி’, ஒரு சாதுரியமான சேல்ஸ்மேன் ஆகிய இருவரையும் நம் கம்பெனி இழந்திருக்கும்! யோசிக்காமல் சட்டென்று முடிவெடுத்தேன். (இம்மாதிரி சமயத்தில் யோசித்தால் கால தாமதம் ஆகி விடும்.) சட்டென்று ர்வர்ஸ் கியரைப் போட்டேன். `கியர் பாக்ஸ்' சடசடவென்று முறிந்தது. அத்துடன் டிராக்டரும் நின்றது. (கியர் பாக்ஸ் வேண்டுமானால் மாற்றிக் கொள்ள முடியும். ’விவசாயி’ போயிருந்தால்?)
துரைராஜு `கண்ணு கண்ணு' என்று சொல்லிப் படு உற்சாகமாகப் பாராட்டியதையெல்லாம் இரண்டு காரணத்திற்காக எழுதவில்லை. ஒன்று தன்னடக்கம். இரண்டு, இதை எழுதும் போது இரவு மணி பன்னிரெண்டு ஆகி விட்டது. தூக்கம் வந்து விட்டது. ஆகவே என் செலவு விவரங்களை மட்டும் இத்துடன் எழுதுகிறேன். கைச் செலவுக்கு இருநூறு ரூபாய் டி.எம்.ஓ. அனுப்புங்கள். குட் நைட்!
--கனவிலும் நனவிலும் கம்பெனிக்காகப் பாடுபடும் சேல்ஸ் மேன்,
கண்ணாமணி.
---------------
செலவு விபரம்
செங்கல்பட்டு, அரக்கோணம் பஸ் செலவு, வழியில் சோடா, டிபன் வகையறா 14.20
அரக்கோணம் கூட்ஸ் ஷெட்டில் சில்லறைச் செலவு 16.00
பெட்ரோல் எண்ணெய் 49.15
கூலி ஆட்களுக்கு பக்ஷிஸ் 12.00
50 டஜன் கோழி முட்டை (டஜன் ரூ 4 வீதம்) 200.00
(குறிப்பு: டிராக்டர் பின் பக்கம் போன போது சில பார்சலைத் தள்ளி உடைத்து விட்டதல்லவா? அதில் முட்டைகள் இருந்தனவாம்!)
காம்பவுண்ட் சுவரின் பகுதியைப் புதுப்பிக்க 295.00
(குறிப்பு: தெருவில் தண்ணீர் ஓடிக் கலாட்டாவாகிக் கொண்டிருந்த போது, கலவரத்தில் டிராக்டரை ஒரு காம்பவுண்ட் சுவரில் மோதி விட்டேன். அதை என் ரிப்போர்ட்டில் குறிப்பிட மறந்து விட்டேன்.)
துரைராஜுவின் டிரக் ரேடியேட்டரைச் சரி செய்ய 82.00
ஆக மொத்தம் ......... நீங்களே கூட்டிக் கொள்ளுங்கள்! (கணக்கில் நான் வீக்!)
என் ஹோட்டல் விவரம் எல்லாம் பின்னால் எழுதுகிறேன்.
டைரி - 2
தேதி 15-2-66
இடம்: பீம விலாஸ்
ரிப்போர்ட் எழுதுவது: கண்ணாமணி
நேற்று விட்ட இடத்திலிருந்து இந்த ரிப்போர்ட்டைத் தொடங்குகிறேன். பாவி துரைராஜு நம் டிராக்டரைப் புகழ்ந்தாரே தவிர, வாங்குவதைப் பற்றி மூச்சு விடவில்லை. ஒரு விதத்தில் அவர் மூச்சு விடாமல் இருப்பதே நல்லது என்று சொல்வேன். ஏனெனில் ஒரே மூக்குப் பொடி நெடி .
"என்ன சார், ஒரு ஆர்டர் பாரத்தில் கையெழுத்துப் போடுங்களேன்!" என்றேன் நான்.
அப்போது சட்டென்று கையை உதறினார் துரைராஜு. `காச்மூச்' என டீக்கடை கிராமபோன் மாதிரி, கத்தினார். இரண்டு நிமிஷம் எனக்கே ஒன்றும் புரியவில்லை!
அப்புறம் விஷயம் தெரிந்தது. தன் டிரக்கின் பானெட்டில் சங்கிலியை மாட்டச் சேற்றில் கையை விட்டாரே அப்போது அவர் தம்முடைய வைர மோதிரத்தை சேற்றில் விட்டுவிட்டார் போலிருக்கிறது. ஒரே கோபம். என் மேல் பாய வந்தார். நல்ல காலம். நாலைந்து பேர் அவரைப் பிடித்துத் தடுத்தார்கள்.
சற்று முன்தான் `கண்ணு' என்று கொஞ்சியவரா இப்படிக் `கொன்னு' போட வருகிறார் என்று நினைத்து வியந்தேன்.
எனக்கு மூளையில் பளிச்சென்று தெரிந்தது. இப்போது டிராக்டர் வாங்கும்படி கேட்டது நல்லதல்ல என்று!
அவரைச் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார்கள். அப்புறம் சேற்றில் எல்லாருமாக இறங்கி மோதிரத்தைத் தேடத் துவங்கினர். சேறு படு சேறாயிற்று.
இதற்குள் இருட்டத் துவங்கியது. நல்ல காலம், யாரோ ஒருவர் கையில் மோதிரம் அகப்பட்டது. துரைராஜுவுக்கு ஒரே இளிப்பு!
என்னைக் கவனிக்காமலேயே வீடு திரும்பி விட்டார். சரி, விட்டுப் பிடிக்கலாம் என்று நானும் சும்மா இருந்து விட்டேன். டிராக்டரை ஓட்டலுக்கு ஓட்டி வந்து இரவு ரிப்போர்ட்டை எழுதினேன்.
இன்று காலை துரைராஜுவைப் பார்க்கப் போனேன். அதாவது, கிளம்பினேன். அப்போது ஒரு நபர் என்னைத் தேடி வந்தார்.
"நேற்று உங்கள் விவசாயி டிராக்டரின் திறமையைக் கண்டேன். எனக்குப் பிடித்து விட்டது. டிராக்டரை என் தோப்பில் கொண்டு வந்து விடுங்கள். நான் அதன் விலையைக் கொடுத்து விடுகிறேன்" என்றார்.
"என்ன சார், தர்மசங்கடமா இருக்கிறதே? இது துரைராஜுவுக்காக வந்த டிராக்டர். அவர் `எனக்கு வேண்டாம்' என்று நிச்சயமாகச் சொல்லி விட்டால் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்றேன். (எனக்கு நாணயம் முக்கியம்; அதனால்தான் பிறவி சேல்ஸ்மேனாகத் திகழ்கிறேன்.)
"அவருக்கு ஏன் முதல் சான்ஸ்? எனக்காக விவசாயியைக் கொண்டு வருவதாகத் தானே மிஸ்டர் மங்கன் சொல்லியிருந்தார்? நான்தான் அவர் தங்குவதற்குக் கூட இடம் கொடுத்தேன்!" என்றார்.
"அப்படியே? உங்கள் பெயர் என்ன? " என்று கேட்டேன்.
"என் பெயர் ராஜதுரை!" என்றார்.
என் எலக்ட்ரானிக் மூளை சட்டென்று விஷயத்தைப் புரிந்து கொண்டது. இவருக்காகத்தான் விவசாயியை நான் ஓட்டி வந்திருக்கிறேன். இந்தப் பெயரைத் துரைராஜுவுடன் குழப்பி விட்டேன். ஒரேஊரில் ஒரு தொழிலில் இப்படி இரண்டு பேர் இருக்கக் கூடாது என்பதற்குச் சட்டம் கிடையாதா?
நேரம், காசு என்பது எனக்குத் தெரியும். பழைய கதையை மறந்து விட்டு விவசாயியை அவருக்கு விற்று விட்டேன்.
அவர் கொடுத்த செக்கை இத்துடன் அனுப்புகிறேன். இன்னும் ஒரு வாரம் தங்கி மேலும் டிராக்டர் ஏதாவது விற்க முடியுமா என்று பார்க்கப் போகிறேன்.
இப்படிக்கு,
கண்ணாமணி.
தந்தி
உங்கள் 14.2.66 தேதியிட்ட ரிப்போர்ட் - உங்களை வேலையிலிருந்து நீக்கி விட்டோம். டிராக்டர் கிட்டேயே போகக் கூடாது. தொட்டால் சட்டப்படி குற்றமாகும். உங்கள் செலவு விவரங்கள் நிராகரிக்கப்பட்டன.
-சேல்ஸ் மானேஜர்
விவசாயி டிராக்டர் கம்பெனி.
தந்தி
உங்கள் தந்தி... என் இரண்டாவது ரிப்போர்ட் வரும் வரை காத்திருக்கவும். ராஜதுரைக்கு டிராக்டரை விற்று விட்டேன். இரண்டு டிராக்டருக்கு ஆர்டர் கிடைத்திருக்கிறது. `டிராக்டர் வாரம்' ஏற்பாடு செய்திருக்கிறேன். புளியந்தோப்பில் டிராக்டரின் பெருமை குறித்து லெக்சர் அடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆஸ்பத்திரி லாட்டரியில் முதல் பரிசு விவசாயி என்று அறிவிக்கச் செய்திருக்கிறேன். புரொடக் ஷன் மானேஜரிடம் சொல்லவும்; விவசாயி உற்பத்தி அதிகப்படுத்த வேண்டும். ரிப்போர்ட் தபாலில் வருகிறது.
-கண்ணாமணி.
தந்தி
நேற்று தாங்கள் அனுப்பிய தந்தி - நீங்கள் இனி சர்வீஸ் மெக்கானிக் அல்ல - ஏரியா சேல்ஸ்மேன் - சம்பளம் நாலாயிரத்து ஐநூறு ரூபாய். கடிதம் வருகிறது.
சேல்ஸ் மானேஜர்,
விவசாயி டிராக்டர் கம்பெனி.
@@@@@@@@
From 1925 till this time no major changes. it somewhat remembering my computer service/sales job.tractor can be replace by P4 computers/servers.
ReplyDeleteThis is excellent and humorous. The comments you gave in between the story is highlight.
ReplyDeleteIts humorous. The comments you gave in between the story makes more enjoyable.
ReplyDeleteTerrific Stuff Mr. Agasthiyan. Keep them Coming... Did you say your Translation is average? - Ramesh B
ReplyDeleteThank you Mr B Ramesh. I will try to fulfill your wishes. I have scores and scores of subjects to write.Writing is no problem But keying them takes lot of time. Hence I am not able to increase the frequency of the postings,
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநல்ல நகைச்சுவை.
மிகவும் ரசித்தேன்.
நன்றி ஐயா.
I have a copy of The fabulous saga of Alexander Botts & the Earthworm Tractor. This is the first of the many stories to hv featured in saturday evening post which ran for two decades. Your translation has been excellent. I am a fan of yours. I like yr கமலா, தொச்சு stories very much. i hv a copy of yr book as well. i wud be interested in buying other books (mostly humour) u hv written. Can u pls tell me how to get it.
ReplyDeleteBharath Kumar
To Mr Barath Kumar, Thank you for your comments. You may write me your email address and I will send you the list of my books. Vikatan has published one book of mine: Kamala kalayaname vaibogame
ReplyDeleteI felt like reading a thriller...
ReplyDelete