நண்பர் ராகுவுக்கு உலகில் ஒரே ஒரு ஆசை தான் உண்டு. அது, தம் பெயரை அடிக்கடி அச்சில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கதை, கட்டுரைகள், துணுக்குகள் எழுதிப் பார்த்தார். பிரசுரமாகவில்லை. "ஆசிரியருக்குக் கடிதம்' எழுதினார். பிரசுரமாகிவிட்டது. அதிலிருந்து எல்லாப் பத்திரிகைகளுக்கும் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார். ஒரு விஷயம் அகப்பட்டால் போதும் அதை வைத்துக் கொண்டே ஏழெட்டுப் பத்திரிகைகளுக்கு எழுதி விடுவார்.
சமீபத்தில், "ஓடுகிறாள் ஒரு பெண்' என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தார். அன்றிரவு அவர் எழுதித் தபாலில் போட்ட கடிதங்களைப் பார்க்கலாம்.
* "மாதர் மலர்' இதழ் ஆசிரியருக்கு
"ஓடுகிறாள் ஒரு பெண்' படத்தை உடனடியாகத் தடை செய்ய நீங்கள் குரல் எழுப்ப வேண்டும். வயலில் ஏர் உழும் காட்சியில், கதாநாயகன், "ஓடு கண்ணே ஒடு, ஒடு பெண்ணே ஓடு' என்று பாடிக் கொண்டே மாட்டை ஓட்டுகிறானே, அப்படியானால் பெண்கள் மாடுகளா?
"நவீன விவசாயி' ஆசிரியருக்கு
உலகில் பல நாடுகள் விவசாயத் துறையில் வெகுவாக முன்னேறி வருகின்றன. ஆனால் நாம் மட்டும் இன்னும் பின்தங்கி, கையில் கப்பரையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில், டிராக்டர் உழவு முறைகளைக் கேலி செய்யும் பிரசாரப் பாடல் ஒரு திரைப் படத்தில் இடம் பெற்றிருப்பது வருத்தத்துக்குரியது. "ஓடுகிறாள் ஒரு பெண்' என்ற படத்தில் கதாநாயகன் வயலில் ஏர் உழுது கொண்டே பாடும் பாடலில், ""டிராக்டர் வாங்கினவன் திண்டாடுகிறான், பம்பு போட்டவன் பதறுகிறான், மாடு கட்டி ஏர் உழுதவன் மகிழ்கிறான், ஏற்றம் போட்டு சால் இறைத்தவன் சிரிக்கிறான்' என்ற வரிகள் உள்ளன. சென்ஸôர் என்ன சார் செய்கிறார்கள்?
"ஜீவகாருண்ய மலர்' ஆசிரியருக்கு
வாயில்லாப் பிராணிகள் சினிமாவில் நடிக்கும்போது அவைகளை என்ன கொடுமைப்படுத்தினாலும் தங்கள் ஜீவகாருண்ய சங்கம் கண்டு கொள்ளாமல் இருக்குமா?
"ஓடுகிறாள் ஒரு பெண் என்ற படத்தில் வரும் நாயகன் ஏர் உழுகிறான். பிறகு மாட்டின் மேல் உட்கார்ந்து செல்கிறான். தன் வீட்டுக்கு. அக்காட்சியில் கூர்ந்து கவனித்தால் மாட்டின் கழுத்து நரம்புகள் புடைத்து மாடு அவதிப்படுவதைக் காணலாம். இதற்கு தக்க ந்டவ்டிக்கை எடுக்க வேண்டும், அதாவது கதாநாயகர்கள் குண்டாக இருப்பதற்கான் நடவடிக்கை அல்ல. அவர்கள் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்..
"தெய்வீக நெறி' ஆசிரியருக்கு
பக்தி இல்லாதவர்கள் திரைப்படம் எடுக்கட்டும் தவறில்லை. ஆனால் புராணங்களையும் இதிகாசங்களையும் அரைகுறையாகப் படித்தவர்கள் படுத்தும் பாட்டை என்னவென்று சொல்வது? சமீபத்தில் "ஓடுகிறாள் ஒரு பெண்' படத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கியம் எனக்கு ஏற்பட்டது. அதில் கதாநாயகன் ஏர் உழுதுவிட்டு மாட்டின் மேல் உட்கார்ந்து தன் வீட்டுக்குச் செல்கிறான் அப்போது, "கந்தனுக்கு மயில் வாகனம், எந்தனுக்கு நீ வாகனம்' என்கிறான். அப்படியானால் கதாநாயகன் தன்னைப் பரமசிவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானா? அல்லது பரமசிவனுடைய வாகனம் ரிஷபம் என்பதை மறைக்கப் பார்க்கிறானா? ஆத்திகர் மனம் புண்படும் இக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்.
"உழவன் பத்திரிகை' ஆசிரியருக்கு
"ஓடுகிறாள் ஒரு பெண்' படத்தில் கதாநாயகன் வயலில் ஏர் உழுமுன் ஏரை மாட்டுகிறான். ஆனால் கலப்பை முனை இல்லாத ஏராக அது இருக்கிறது. இந்தத் தவற்றைத் திருத்துவார்களா படத் தயாரிப்பாளர்கள்? இம்மாதிரி படங்களை எடுக்குமுன் உழவுத் துறை நிபுணர்களைக் கலந்தாலோசித்து இருக்க வேண்டும்,
ஒரே விஷயத்தை வைத்து அஞ்சாறு பதிவு தேத்தரவங்கள சொல்ற மாதிரி இருக்கு!
ReplyDeleteஇதுக்கு பேருதான் தில்லாலங்கடி
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநல்ல நகைச்சுவை.
மிகவும் ரசித்தேன்.
நன்றி ஐயா.