May 27, 2011

ஆகா! புத்தகங்கள்!

ஆகா! புத்தகங்கள்!

புத்தகங்களைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு புத்தகம்  A PASSION FOR BOOKS,
HEROLD ROBNOWITZ மற்றும் ROB KAPLAN ஆகியவர்களால் தொகுக்கப்பட்ட புத்தகம். சில வருஷங்களுக்கு முன்பு வாங்கினேன். 1999ம் வருடம் பிரசுரமான புத்தகம். இந்தப் புத்தகத்தில் உள்ள எல்லா கட்டுரைகளும் லட்டுதான்.
ஒருசில கட்டுரைகளின் தலைப்பை மட்டும் தருகிறேன்.
* பழைய புத்தகக் கடையில்
* என் லைப்ரரி இடம் மாறியபோது
* புத்தக வியாபாரம் துவங்குவது எப்படி
* பிரசுரகர்த்தர்களால் நிராகரிக்கப்பட்ட 10 சிறந்த புத்தகங்கள்
* புத்தகங்களைக் கடன் தருதல்
* வாங்கிச் சென்ற புத்தகத்தை நண்பன் திருப்பித் தந்தது பற்றி...
* கடன் வாங்கிச் சென்ற புத்தகமே, வருக.
* பொது நூலகத்தை எப்படி அமைப்பது?
* சாமுவேல் பில்ஸ் புத்தகசாலை
* பழைய புத்தகங்கள் தரும் சுகம்
* புத்தகப் பைத்தியம்
* அமெரிக்க கேரக்டரை உருவாக்கிய 10 புத்தகங்கள்
* புத்தகங்கள் சேகரித்தல்
* புத்தகங்கள் வெறுமனே சொல்லவில்லை பைத்தியம் என்று
* ஆத்மாவின் ஒளிரல்கள்
* எப்படி வாசிப்பு என் வாழ்க்கையை மாற்றி விட்டது
* சாமர்செட் மாமின் 10 சிறந்த நாவல்கள்
* புத்தகங்களை அக்கறையில்லாமல் வைத்துக் கொள்வது எப்படி?
* இருபதாம் நூற்றாண்டின் 100 சிறந்த நாவல்கள்

பதிப்பாசிரியர்களின் அறிமுக உரையும் அபாரமாக உள்ளது. தமிழில் ஒரு பதிவாகவேப் போடத் தகுதி உடையது.

இப்புத்தகத்திற்கு ரே பிராட்பரி (RAY BRADBURY)  என்ற எழுத்தாளர் முன்னுரை எழுதியுள்ளார். அதை தமிழாக்கம் செய்து தருகிறேன். ரே பிராட்பரி 400 புத்தகங்கள் எழுதியுள்ளார். புத்தகப் பித்தர். இவரைப் பற்றி மேலும் நிறைய விவரங்கள்   விக்கிபீடியாவில் உள்ளன.
 இனி பிராட்பரியின் முன்னுரை: (என் மொழிபெயர்ப்பு சுமாராகத்தான் இருக்கும்! ("தெரிந்தது தானே” - அசரீரி!)
=              =                  =
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் வருடம் ஃபாரன்ஹீட் 451 என்ற என்னுடைய நாவலை  எழுதி முடித்தேன். அதற்கு சில  ஓவியஙகளை என் நண்பரும் ஓவியருமான ரீஜா முக்ரைனியிடம் போட்டுத் தரச் சொன்னேன். நாவலுக்கு ஏற்ற மாதிரியும் அதே சமயம் வித்தியாசமான படமாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன். அவர் வரைந்திருந்த சில ஸ்கெட்சுகளைப் பார்த்து நானே ஒரு புதிய ஐடியா தயார் பண்ணினேன்.  ( DON QUIXOTE  என்று வீரர், கவசங்களை (எஃகுக் கவசங்களுக்குப் பதிலாக. நியூஸ் பேப்பரில் செய்யப்பட்ட கவசங்களை) தரித்துக் கொண்டு, எரிந்து கொண்டிருக்கும் புத்தகக் குவியலின் மீது நிற்பது மாதிரி படம் வரையச் சொன்னேன். அது நிஜ கதாபாத்திரம் அல்ல. அந்த வீரன் உண்மையிலேயே நான்தான்! என் சரித்திரமே புத்தகங்கள்தான்! அதைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. அதனால்தான் இங்கே உங்கள் முன்னே இருக்கிறேன் - முன்னுரையாக!
என் வாழ்க்கையில் பங்கு பெற்ற பெண்கள் யாவரும் லைப்ரரி நிர்வாகிகள், ஆங்கில ஆசிரியர்கள் அல்லது புத்தக விற்பனையாளர்கள். அவர்கள் டால்ஸ்டாய் பற்றியோ பேசவோ, ஹென்றி ஜேம்ஸ் பற்றி எடுத்துரைக்கவோ தெரியாதவர்களாக இருக்கலாம். அதனால் என்ன?
 வாழ்க்கை முழுவதும் நான் நாடியதெல்லாம்.கல்வி அறிவைதான். என் மனைவி மார்கயூலிட்டைக் கூட ஃபைலர்ஸ் பிரதர்ஸ் என்ற அபாரமான புத்தகக் கடையில்தான் 1946ல் சந்தித்தேன். இந்த புத்தகக் கடை சான்பிரான்சிஸ்கோ பெர்ஷிங் ஸ்கொயரில் உள்ளது. என்னைத் திருமணம் செய்து கொண்ட போது  அவள் ஏழைமையுடன் வாழும் விரதத்தை எடுத்துக் கொண்டாள்!  ’மாதாகோவில் மூஞ்சூறைப் போன்ற ஏழ்மையுடன் நாங்கள் வெனிஸில் குடித்தனம் வைத்தோம். ஹாட் டாக், சுமாரான ஒயின் இவைகளுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டபடியே. நான் என் இலக்கிய ராக்கெட்டுகளை நிலவை நோக்கி செலுத்தினேன். அவை நிலவை அடையவில்லை. ஆனால் எப்படியோ செவ்வாய்க் கிரகத்தைத் தொட்டு விட்டன.
இதற்கிடையில் பத்து சென்டுகளுக்கும் இருபது சென்டுகளுக்கும் கிடைத்த பல நல்ல புத்தகங்களை வாங்கி சேர்த்தேன். ஷேக்ஸ்பியர், ஸ்டீன்பெக், பெர்னார்ட் ஷா ஆகியவர்களின் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைத்ததைப் பெரிய புதையல்களாகக் கருதினேன்.
நான் லாஸ் ஏஞ்சலிஸ் ஹைஸ்கூலில் தேடினேன். கல்லூரி போவதைப் பற்றி கனவு கூடக் காண முடியாத நிலைமையில், என் சிறுகதை டீச்சர் ஜேனட் ஜான்சனையும், யீட்ஸ், கீட்ஸ், ஷெல்லி போன்றவர்கள் புத்தகங்களையும்தான் என் நினைவில் சுமந்து ஹைஸ்கூலை விட்டு வந்தேன். என் இரண்டாவது நாவல்SOMETHING WALKED THIS WAY. இதை  இவர்களுக்குத்தான் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

ஒரு புத்தகசாலை என் வாழ்க்கையில் மகத்தான பாதிப்பை ஏற்படுத்தும் அமைப்பு என்பதை ஃபாரன்ஹீட் 451 என்னும் என் முதல் நாவலில் எடுத்துரைத்துள்ளேன். என் கார் ஷெட்டில் உட்கார்ந்து எழுதுவது முடியாத காரியமாகப் போய் விட்டது. என் பெண்கள் அவ்வப்போது பின்னால் இருந்த ஜன்னலைத் தட்டி என்னை விளையாடக் கூப்பிடுவார்கள். அவர்களுடன் விளையாடப் போவேன். இதனால் எழுதுவதும் வருவாயும் சற்றுக் குறைந்து போனது.
லாஸ் ஏஞ்ஜலீஸ் கல்லூரியின் லைப்ரரி பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது அதன் கீழ்த்தளத்தில் டைப்ரைட்டர்களின் ஓசை கேட்டது. அங்கு போய்ப் பார்த்தேன். டைப் செய்ய வசதிகளுடன் அறை இருந்தது. அரை மணி நேரத்திற்கு பதது சென்ட் கட்டணம். மூச்சு விடாமல் டைப் செய்ய வசதியாகப் போய் விட்டது. அரை மணி ஆனதும் மெஷின் வேலை செய்யாது. ஓடிப் போய் பணம் கொண்டு வந்து போட வேண்டும். ஒன்பது நாளில் நான் ஃபாரன்ஹீட் 451 நாவலை எழுதி முடித்தேன். இதற்கான செலவு ஒன்பது டாலர் எண்பது சென்ட்கள்.
அந்த இடத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், டைப் அடிக்காத சமயங்களில் மேலே புத்தகசாலை ஷெல்ஃப்களில் கண்ணில் பட்ட புத்தகங்களை எல்லாம் படிக்க முடியும். அழகான வாக்கியங்கள் கண்ணில் பட்டால் என் கதாபாத்திரம் யாராவது பேசும் வாக்கியங்களில் சேர்த்து விடுவேன். புத்தகசாலை ஒரு சிறந்த பிரவச மருத்துவமனை மாதிரி ஆகி விட்டது. என் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த மருத்துவமனையில் ஏழ்மையில் பிறந்த என் `புத்தகக் குழந்தை' இப்போது தேசத்தின் பல பள்ளி புத்தக அலமாரிகளில் இடம் பெற்றிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நான் பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று ஏராளமாக- வேறு எவரும் எழுதாத அளவுக்கு எழுதினேன்.
ஒரு கவிதையில் எமிலி டிக்கின்ஸன் என் தாய் என்றும் (எட்கார் ஆலன்) போ என் தந்தை என்றும், எச்.ஜி.வெல்ஸ், (ஜுல்ஸ்) வெர்ன் என் மாமாக்கள் என்றும் எழுதியுள்ளேன். ஒரு கதையில்,  சார்லஸ் டிக்கன்ஸ் தன்னுடைய `எ டேல் ஆஃப் டு சிட்டீஸ்' நாவலை என் தாத்தாவின் போர்டிங் ஹவுஸில் 1926 ஆண்டு எழுதி முடிக்க உதவினேன் என்று என்னுடைய பன்னிரண்டாவது வயதில் விவரித்துள்ளேன்.
`லாஸ்ட் ரைட்ஸ்' என்ற சமீபத்திய கதையில் நான் ஒரு கால யந்திரத்தைக் கண்டுபிடித்தேன். (என் அபிமான எழுத்தாளர்களின் இறுதிக் காலத்திற்குச் சென்று அவர்களுக்கு இலக்கிய எதிர்காலத்திற்கு நம்பிக்கையை ஊட்டுவதற்காக).
எழுத்தாளர் மெல்விலின் கடைசிக் கணங்களில் அவரைச் சந்தித்து பல காலம் கவனிப்பாரின்றி இருந்த அவருடைய புத்தகங்களின் புதிய பதிப்புகளை --1930, 1954 மற்றும் 1999 ஆண்டுகளில் வெளிவந்த பதிப்புகளைக் காண்பித்து அவர் இறவாப் புகழுக்கு உத்தரவாதம் அளித்தேன்.
”ஹெர்மன், கண்களைத் திறந்து பாருங்கள். உங்கள் புத்தகத்தின் முதல் வரியைப் படியுங்கள். 1939ம் ஆண்டு வந்துள்ள மறுபதிப்பு” என்று மெல்லிய குரலில் சொன்னேன். ஹெர்மன் படித்துப் பார்த்தார். `என்னை கீழ் மேல் என்று கூப்பிடு' என்று சொல்லியபடியே உயிர் நீத்தார்.
பிறகு நான் (எட்கார் ஆலன்) போவைப் பார்த்து, `டேல்ஸ் ஆஃப் மிஸ்டரி அண்ட் இமேஜினேஷன்' புத்தகத்தைக் கொடுத்தேன். பாரிஸுக்குச் சென்று (ஆஸ்கார்) ஒயில்டிற்கு விடை கொடுத்து விட்டு வந்தேன்.
எல்லாம் என் கற்பனை!
ஆக இதுதான் என் வாழ்க்கை. புத்தகங்களை முகர்ந்து- ஆஹா, அவைகளின் வாசனையே வாசனை - படித்து, காதலித்து, நினைவில் நிறுத்திய வாழ்க்கை!
எகிப்தியர்கள் இறந்து போனதும் தங்கள் அபிமான வளர்ப்பு பூனையின் உடலையும் தங்களது உடலுடன் வைத்துப் பாடம் பண்ணி வைக்கச் சொல்வார்களாம்.

எல்லாம் நல்லபடி போனால், என் இறுதிப் பயணத்தில் என் ’வளர்ப்பு’கள் என்னுடன் இருந்து,  என்னை அழைத்துச் செல்லும் !

ஷேக்ஸ்பியர் எனக்குத் தலைப் புறமாகவும், போப் ஒரு முழங்கை அருகிலும், கீட்ஸ் மற்றொரு முழங்கை அருகிலும் ஷா என் பாதங்கள் அருகிலும் அமர்ந்து இருபார்கள்.  நான் போக வேண்டிய நெடிய பயணத்திற்கு நல்ல துணையாக இருப்பார்கள்!    - RAY BRADBURY

4 comments:

 1. // ஒரு கவிதையில் எமிலி டிக்கின்ஸன் என் தாய் என்றும் (எட்கார் ஆலன்) போ என் தந்தை என்றும், எச்.ஜி.வெல்ஸ், (ஜுல்ஸ்) வெர்ன் என் மாமாக்கள் என்றும் எழுதியுள்ளேன்.//

  இது நம் நாட்டு தியாகராஜ ஸ்வாமிகளின் ராம லக்குமனர்களின் உறவு மாதிரியல்லவா !!


  // பிறகு நான் (எட்கார் ஆலன்) போவைப் பார்த்து, `டேல்ஸ் ஆஃப் மிஸ்டரி அண்ட் இமேஜினேஷன்' புத்தகத்தைக் கொடுத்தேன். பாரிஸுக்குச் சென்று (ஆஸ்கார்) ஒயில்டிற்கு விடை கொடுத்து விட்டு வந்தேன்.
  எல்லாம் என் கற்பனை!
  ஆக இதுதான் என் வாழ்க்கை. புத்தகங்களை முகர்ந்து- ஆஹா, அவைகளின் வாசனையே வாசனை - படித்து, காதலித்து, நினைவில் நிறுத்திய வாழ்க்கை! //


  நான் படித்த உடநே எனக்கு BHILAI Steel Plant Main Library வாசனை

  ஆஹா ஆஹா

  ReplyDelete
 2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  இதைப் படிக்கும்போது, வாழ்ந்தால் இப்படித்தான் புத்தகங்களுடன் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது.

  அருமையான பகிர்வு.

  மனம் நிறைந்த நன்றிகள்.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 3. மிக்க நன்றி.
  “சுவர்க்கம் என்பது புத்தகங்கள் நிறைந்தது என்பது என் கணிப்பு” என்று ஒரு எழுத்தாளர் கூறியிருக்கிறார்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் .........