July 27, 2012

ஜி பி ஓ வாழ்க்கை, –4 : எங்கே போயிருக்கும்


ஒரு ரிஜிஸ்டர்ட் தபால் கணக்கில் குறைந்த கவலையில் இரவு தூங்காமல் கழிந்தது. அதே சமயம் ஏதேதோ பயங்கர ’கனவுகள்’(?) வந்ததால் மனதில் அமைதியில்லை.
மறு நாள் ரயிலைப் பிடித்து, பீச் ஸ்டேஷனை அடைந்து, ஜி.பி.ஓ விற்குள் எப்படி நுழைந்தேன் என்பதெல்லாம் தெரியாது. “எங்களுக்கு  வந்த பையில் கூடுதலாக ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கிறது என்ற தகவல் அறிய கவலையுடனும் ஆர்வத்துடனும் செக் ஷனுக்குள் சென்றேன்.”
ஹெட்கிளார்க் இருந்தார் என்னைப் பார்த்ததும் “இன்னும் ஒரு மெஸேஜும் வரவில்லையேப்பா. கவலைப்படாதே வந்து விடும். ஒரு தபால் அதிகமாக இருந்தால் அவர்களுக்கும் தலைவலி.... முதலில் ஒரு தபால் குறைந்த விவரங்களை, எரர் புக்கிலே ( ERROR BOOK) ஒரு குறிப்பு எழுதி பி..பி..எம்.முக்கு அனுப்பு.  (பி பி எம் = பிரெஸிடென்ஸி போஸ்ட் மாஸ்டர்.)

நானே என்மேல் குற்றப் பத்திரிகைத் தயாரித்து அனுப்ப வேண்டும். எழுதினேன். அனுப்பினேன்.. அரை மணி நேரம் கழித்து பி.பி.எம்-இன் பியூன் எரர் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். அதில் “தவறுக்கான காரணமானவரிடம் விளக்கம் வாங்கி அனுப்பவும்” என்று எழுதி இருந்தார். விளக்கம்?  என்ன சொல்வது?  ஒரு தபால் எப்படி குறைந்தது என்று தெரிந்தால், இப்படி ஏன் எரர் புத்தகத்தில் குறிப்பு எழுதப் போகிறேன்?.
ஜி.பி.ஓ.வில் வேறு ஒரு செக் ஷனில் செங்கல்பட்டிலிருந்து வரும் ஒரு சீனியர் இருந்தார். அவருடன் லேசான பழக்கம்தான் இருந்தது. அவரிடம் போய் விவரங்களைச் சொன்னேன். அவரிடம் சொல்லும் போது என் குரலிலும் முகத்திலும் பயம் இருந்தது
”ஒண்ணும் கவலைப்படாதே. ஒரு மண்ணும் ஆகாது.  தானாக மெஸேஜ் வரும். ஆர்.எம்.எஸ்.காரரிடம் போயிருக்கும். அவனால் உடனே மெஸேஜ் அனுப்ப முடியாது.  அவன்  குறிப்பு எழுதி தபால் பையில்போட்டு அனுப்புவான். அவனுக்கு இது மாதிரி தினமும் நடந்து கொண்டுதான் இருக்கும்..உன் விளக்கத்தை இரண்டு நாள் கழித்து அனுப்பலாம், நான் எழுதித் தருகிறேன்” என்று தைரியம் கொடுத்தார். 

தபால் பைகள் வர வர கூடவே இருந்து பிரித்துப் பார்த்தேன். விஜயவாடா ஆர்.எ.ம்.எஸ். பையில் ஒரு கவர் இருந்தது. பிரித்தேன். அதில் உள்ளே ஒரு ஓலை மாதிரி நீளமான குறிப்பு இருந்தது. தலைப்பில் ’எரர் எக்ஸ்ட்ரேக்ட்’ (ERROR EXTRACT) என்று எழுதி இருந்தது. ’ஒரு ரிஜிஸ்டர் தபால் லிஸ்டில் எழுதப்படாமல் கூடுதலாக வந்து விட்டது. புதிய லிஸ்ட் போட்டு அனுப்பவும்’ என்பதைப் படித்தேன். ஹெட் கிளார்க் “பாத்தியா நான் சொன்னேனே. தபால் அகப்பட்டு விட்டது, போ, இனிமேல் ஜாக்கிரதையாக வேலை செய்” என்றார்.
எல்லாம் இந்த நம்பர் ஸ்லிப்பு ஒட்டும் போது ஏற்பட்ட சிறிய அலட்சியத்தால் வந்த வினை. ஸ்லிப்பு ஒட்டுவதற்கு விரலில் பசையை எடுத்துத் தடவும்போது சற்று அதிகப்படியாக பசையையோ அல்லது கைவிரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் பசையையோ கவரின்மீது எங்கேயாவது கவனக்குறைவாக தீற்றியிருப்பார்கள். அதன் காரணமாக அந்தக் கவரின் மேலே வைக்கப்படும் கவருடன் அது ஒட்டிக்கொண்டு விட்டது (இரட்டைப் பிறவிபோல!) இதனால் பட்டியல் போடும்போது அது கண்ணில் படாமல் டிமிக்கிக் கொடுத்து விட்டுப் போய்விட்டது.

July 21, 2012

ஜி பி ஓ வாழ்க்கை-3ஜி பி ஓ வாழ்க்கை-1:http://kadugu-agasthian.blogspot.com/2012/02/blog-post_06.html
ஜி பி ஓ வாழ்க்கை-2: http://kadugu-agasthian.blogspot.com/2012/04/2.html

ஜி பி ஓ வாழ்க்கை முதல் இரண்டு பகுதிகளைப் படிக்காதவர்கள் மேலே தரப்பட்டுள்ள சுட்டியைக் கிள்ளிவிடவும். இப்போது ஜி பி ஓ வாழ்க்கை-3 தொடருகிறது:

ரிஜிஸ்ட்ரேஷன் செக் ஷனில் பத்திலிருந்து ஆறு ட்யூடியில் வருவதற்கு எவரும் தயங்கும் ஒரு சீட்: இன்ஷூரன்ஸ் தபால் சீட்.
இன்ஷூரன்ஸ்  தபால்களைப் பட்டியல் போட்டு பையில் போட்டு சீல் வைத்து அனுப்புவது முக்கியமான வேலை.
அதே மாதிரி  இன்ஷூரன்ஸ் தபால்கள் வரும் பைகளை திறந்து சரியாக எல்லாம் வந்திருக்கின்றனவா என்று சரிபார்த்து பீட் வாரியாகப் பிரித்து தபால்காரர்களிடம் கொடுத்து கையெழுத்து வாங்க வேண்டும்.
இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட கவர்களில் உள்ளே பணம் வைக்கப்பட்டிருக்கும். (இன்று இப்படி பணம் அனுப்புவது குறைந்துதான் போயிருக்கும்.) இத்தகைய ஒரு கவர் கணக்கில் தவறிவிட்டால் ஆபத்துதான். தவற வாய்ப்பில்லை என்றாலும் தவறக்கூடும் என்பதே அச்சுறுத்தும்

இதெல்லாம் எனக்குத் தெரியாது என்பதால் முதல் நாளே இன்ஷூரன்ஸ் செக் ஷனில் போட்ட போது எந்த விதத் தயக்கமும் இல்லாமல் அந்த சீட்டுக்குப் போனேன். தனியாக, கூண்டு மாதிரி கம்பி வலை போட்ட அறையில் வேலை செய்ய வேண்டும் சட்டென்று அறைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி யில்லை .(ஆகவே அங்கிருந்து இன்ஷூரன்ஸ் தபால் மட்டுமல்ல, நாற்காலி கூட திருடு போகாது.)
ஜாக்கிரதையா நிதானமா வேலை செய்யப்பா. கவரில் பெரிய பெரிய தொகை 100, 200 (!) என்று இருக்கும். கவர் கணக்கில் வராவிட்டால் நம்ம தலையில் தான் பழி விழும், அபராதம் விழும்.. கவரில் ஒரு டாக்குமெண்ட் இருந்தாலும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதாக இருக்கும்.”-  ஹெட்கிளார்க் சொன்னார்.
’10-6’ ட்யூட்டி என்பதால் தெம்பாக கூண்டுக்குள் புகுந்தேன். ”வேலையில் புலி. அதனால் தான் கூண்டுக்குள் என்னை அனுப்பிவிட்டார்கள்என்று இன்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அன்று இருந்த மன நிலையே வேறு.

பொறுப்புள்ள வேலையே தவிர சுமை அதிகம் இல்லாத வேலை.  

அன்புடையீர்

ஒரு ஜோக்:
  ஒருத்தர் டாக்டரிடம் போனார்.” டாக்டர், எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. எப்பவும் அசதியாக இருக்கிறது” என்றார். டாக்டர் அவரை நன்கு பரிசோதித்துப் பார்த்தார். எல்லா டெஸ்ட்டும் பண்ணினார். கடைசியில் அவர் சொன்னார்: “ உங்களுக்கு ஒரு உடம்பும் இல்லை.. உங்களிடம் இருப்பது  மித மிஞ்சிய சோம்பேறித்தனம்தான்” என்றார்.
”அப்பபடியா சொல்றீங்க டாக்டர்?.. அப்ப ஒண்ணு செய்யுங்க.. இந்த வியாதிக்கு மெடிக்கல் பாஷையில் ஏதாவது பெரிய வார்த்தையாகச் சொல்லுங்கள். என் மனைவியிடம் சொல்லி விடுவேன்...அது போதும்: என்றார்.
“சரி.. உமக்கு  வந்திருப்பது  ”எக்ஸ்மிலோனோட்ரோஃபி” என்றார்.
“தாங்க் யூ, டக்டர்..தாங்க் யூ, டக்டர்..: என்று சந்தோஷமாக் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனார்
ஜோக் இத்துடன் முடிந்து விட்டது!


ஒரு அறிவிப்பு:
இந்த ப்ளாக்கின் வாசகர்களுக்கு  அடுத்த பதிவு போட சற்று தாமதமாகிறது. எனக்கு ”எக்ஸ்மிலோனோட்ரோஃபி” இருப்பதே காரணம். விரைவில் ஒன்றிரண்டு நாளில் குணமடைந்து விடுவேன். அப்போது புதிய பதிவு வரும்
அது வரை இந்த புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள்.


July 14, 2012

பெசன்ட் நகர் ஒலிம்பிக்ஸ்


சிங்கப்பூரில் தேள் கொட்டினால் பெசன்ட் நகரில் நெறிகட்டுமா? என்ற கேள்வியை என்னிடம் யாராவது கேட்டால், "நிச்சயமாக, சந்தேகமில்லாமல் கொட்டும்' என்பேன். இது அனுபவ பூர்வமாக நான் அறிந்த உண்மை. இந்த உண்மைக் (கண்ணீர்) கதையை உங்களிடம் சொல்லாவிடில் என் துக்கம் தீராது.

காலையில் நான் பேப்பரை எடுத்தால் போதும், அது ஒரு ரிமோட் கண்ட்ரோல் மாதிரி வேலை செய்து உடனே என் அருமை மனைவி கமலாவைக் கத்தச் செய்து விடும்! அடுத்த கணம், அதைக் கீழே வைத்து விட்டு உள்ளே போய், "என்ன கமலா, மிக்ஸி சுவிட்சைப் போடணுமா?'' என்று கேட்டால் கத்தல் கொஞ்சம் குறையும்.
அப்படித்தான் அன்றொரு நாள் -- (பஞ்சாங்கத்தைப் பார்க்க வேண்டும், அன்று எட்டுக் கிரகங்கள் ஒன்று கூடி இருந்தனவா என்று!) -- நான் பேப்பரை எடுக்க, கமலா ஹை-ஃபியாக (அல்லது ஹை-பிசாசாக) மாறி "ஏன்னா... உங்களைத்தான். என்னதான் பேப்பரிலே இருக்குமோ! கத்தறது காதில் விழுந்தால்தானே'' என்று கத்தினாள். அதைத் தொடர்ந்து "நாசமாய்ப் போக'' என்று சபித்தாள். யாருக்கு 'ஆசீர்வாதம்' வழங்குகிறாள் என்று யோசித்துக் கொண்டே சமையலறைப் பக்கம் சென்றேன். என்னை எத்தனையோ விதமாகத் திட்டியிருந்தாலும், 'நாசமாய்ப் போக' என்று திட்டமாட்டாள். காரணம், அவளுக்கு என் மேல் அளவு கடந்த ஆசை!
"என்ன கமலா, யாரைத் திட்டறே?''
"யாரையாவது கீரையாவது... எல்லாம் எதிர் வீட்டுப் பசங்களைத்தான்... கிரிக்கெட் ஆடறாங்களாம்... நம்ப வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைச்சுடுத்தூங்க... பெரிய விளையாட்டு வீரர்கள்னு நினைப்பு...'' என்றாள் நிஷ்டூரமாக.
"போகட்டும் கமலா, ஐந்து ரூபாய் கண்ணாடி'' என்றேன்.
"இன்னிக்கு உடைச்சாங்க அம்பது ரூபாய் கண்ணாடியை... நாளைக்கு அம்பதாயிரம் ரூபாய் கண்ணாடி...''
மைசூர் மகாராஜா மாளிகையில் கூட ஐம்பதாயிரம் ரூபாய் கண்ணாடி இருக்குமா? என்று சந்தேகம். இந்த மாதிரி சந்தேகங்களை நான் சந்தேகங்களாகவே வைத்திருப்பது வழக்கம்!
"பசங்கதானே...போகட்டும் விடு. விளையாட்டிலே இருக்கிற ஆர்வத்திற்கு நாம் ஊக்கப்படுத்தணும். இப்போ சிங்கப்பூர் ஒலிம்பிக் கேம்ஸ்லே பாரு சின்ன சின்ன நாடெல்லாம் எப்படி பிரமாதப்படுத்தறது...''
நான் முடிக்கவில்லை. காரணம், பெட்ரூமிலிருந்து வந்த "டமால்' ஓசை. அதைத் தொடர்ந்து சலிங், சலிங் என்று கண்ணாடிகள் உடையும் ஓசை!
"நாசமா...'' என்று ஆரம்பித்தவன், சட்டென்று நாவை அடக்கிக் கொண்டு பெட்ரூமிற்குப் போய்ப் பார்த்தேன். முறிந்த காதலர்களின் இதயம் போல நூறு சுக்கல்களாகக் கண்ணாடி உடைந்திருந்தது. வெளியே சில சிறுவர்கள் பி.டி. உஷாவை மிஞ்சும் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்! எனக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது.

July 08, 2012

கருத்தும் அழகு; ஆங்கில நடையும் அழகு

ஆஹா ஜோசஃப் அடிஸன்!
 நான்  கால்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆங்கில பாட புத்தகத்தில் ஜோசப் அடிஸன் என்பவர்  ’ஸ்பெக்டேடர்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை  இடம் பெற்றிருந்தது.  அடிஸன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று  புரொபசர் கூறியது தான் இன்று நினைவில் இருக்கிறது,  பரீட்சைக்காகப் படித்தனாலோ என்னவோ அடிஸனின் கட்டுரையை அவ்வளவாக ரசிக்கவில்லை. அவரது ஆங்கில நடையைக்கூட நான் ரசித்ததாக நினைவில்லை. அந்த கட்டுரையில் வந்த ஒரே ஒரு வார்த்தைதான் நான் புதிதாகக் கற்றுக் கொண்ட வார்த்தை என்பதால் அவர் பெயரை மறக்கவில்லை. அந்த வார்த்தை:  INSTINCT!

அதன் பிறகு பல வருஷங்களுக்குப் பிறகு அவரது ஒரு சில கட்டுரைகளைப் படித்தேன். ஒரு சமயம்,  பல கட்டுரைகளிலிருந்து அழகான வாசகங்களை தொகுத்துப் போடப்பட்டப் புத்தகத்தில் ஒரு பாரா கண்ணில் பட்டது. அது அடிஸன் எழுதியது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் உள்ள கல்லறைகளைப் பற்றி  அவர் எழுதியிருந்தார். கருத்தழகும் நடையழகும் என்னைக் கவர்ந்து விட்டது. என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். சமீபத்தில் அந்த பாரா கண்ணில் பட்டது. அதைத் தமிழ் படுத்தி ‘பிளாக்’கில் போட விரும்பினேன்.  1711 வாக்கில் வெளியான ஸ்பெக்டேட்டர் பத்திரிகையின் இதழ்களை கூகுளில் பார்க்க முடிந்தது.

அடிஸனின், குறிப்பிட்ட பாராவைக் கீழே தமிழில் தந்திருக்கிறேன். அடிஸன் அளவு நான் திறமைசாலி இல்லை என்பதால்  மொழிபெயர்ப்பு சுமார்தான்.
====================
சீரிய மனிதர்களின் கல்லறைகளைப் பார்க்கும்போது, எல்லா வித பொறாமை உணர்வுகளும் மடிந்து போகின்றன. உன்னதமானவர்களின் கல்லறை வாசகங்களைப் படிக்கும்போது அனைத்து வித அற்ப ஆசைகளும் விலகிப் போகின்றன. கல்லறைகளின் மீது படிந்துள்ள, பெற்றோர்களின் துயரங்களை உணரும்போது என் இருதயம் இரக்கத்தினால் நெகிழ்ந்து உருகுகிறது. அதே சமயம் அந்த பெற்றோர்களின் கல்லறைகளைப் பார்க்கும்போது, இறந்துபோனவர்களுக்காக சோகமடைவது வீண் என்று தோன்றுகிறது. 

July 01, 2012

சோவிடம் சில கேள்விகள்: - கடுகு

டில்லிக்கு வந்திருந்த சோவிடம் சில கேள்விகள்:
(வருஷம்: 1968 அல்லது 1969 )

கேள்வி: மிஸ்டர் சோ! நீங்கள் ஆயிரம் நாடகங்கள் போட்டதைப் பற்றிப் பலர் பாராட்டுகிறார்கள். ஆனால் அதே சமயம் தமிழ் நாடகக் கலைக்கும் தமிழ் நாடக இலக்கியத்திற்கும் நீங்களும் உங்கள் நகைச்சுவை நாடகங்களாலும் ஓரளவு தீங்கு விளைந்துள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் என்ன பதில் கூறப் போகிறீர்கள்?

சோ: குற்றச்சாட்டு இருப்பதாக நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்?

கே: ஏன், நானே அப்படிக் கருதுகிறேன்.

சோ: நீங்கள் அப்படிக் கருதினால் அதற்கு நான் ஏன் விளக்கம் தர வேண்டும்? இரண்டாவது, தமிழ் நாடகக் கலை வளர விடாமல் தடுக்கவோ அதற்கு ஊறு விளைவிக்கவோ சக்தி படைத்தவனா நான்? மூன்றாவது, எனக்கு நாடகக் கலை, நாடகம், இலக்கியம் என்பவைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் ஏதோ ஒன்று எழுதுகிறேன். அதை நாடகம் என்றுகூடக் கூறுவதில்லை. ஏதோ ஒன்று. மேடையில் போடுகிறேன். மக்கள் பாராட்டினால் திரும்பப் போடுகிறேன். இல்லாவிட்டால் மூட்டை கட்டி விடுகிறேன். நான் ஏன் சார் நாடக இலக்கியம் போன்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?

கே: நீங்கள் கவலைப்படாமல் இருக்க முடியாது. நீங்கள் நாடகாசிரியர்- நடிகர் மட்டுமல்ல. நீங்கள் ரசிகர் இல்லையா? நாடகங்களை ரசிக்கிறீர்கள் இல்லையா?

சோ: நிச்சயம் நான் ரசிகன். என் நாடகங்களை ரசிக்கிறேன். வேறு சில நாடகங்களையும் ரசித்துப் பார்க்கிறேன். காடக முத்தரையன் நாடகத்தை ஐந்தாறு தடவைகள் பார்த்திருப்பேன்.

கே: நல்லது. ஆனால் காடக முத்தரையன் போன்ற நல்ல வலுவான அழுத்தமான நாடகங்கள் அடிக்கடி உருவாகவில்லையே. ஏதோ அத்தி பூத்தது போல் உருவாவதற்குக் காரணம் தங்களுடைய- மலிவான - நகைச்சுவை நாடகங்கள்தான் என்று நான் உங்கள் மேல் குற்றம் கூறுகிறேன்.

சோ: அதை நான் ஒத்துக் கொள்ள முடியாது. எதிர் நீச்சல், தீர்ப்பு, வியட்னாம் வீடு, ஞான ஒளி போன்ற நாடகங்களை மறந்து விட்டீர்களா? நண்பர் சுந்தரராஜன் சிறந்த நாடகங்களை அளித்திருக்கிறாரே...