July 27, 2012

ஜி பி ஓ வாழ்க்கை, –4 : எங்கே போயிருக்கும்


ஒரு ரிஜிஸ்டர்ட் தபால் கணக்கில் குறைந்த கவலையில் இரவு தூங்காமல் கழிந்தது. அதே சமயம் ஏதேதோ பயங்கர ’கனவுகள்’(?) வந்ததால் மனதில் அமைதியில்லை.
மறு நாள் ரயிலைப் பிடித்து, பீச் ஸ்டேஷனை அடைந்து, ஜி.பி.ஓ விற்குள் எப்படி நுழைந்தேன் என்பதெல்லாம் தெரியாது. “எங்களுக்கு  வந்த பையில் கூடுதலாக ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கிறது என்ற தகவல் அறிய கவலையுடனும் ஆர்வத்துடனும் செக் ஷனுக்குள் சென்றேன்.”
ஹெட்கிளார்க் இருந்தார் என்னைப் பார்த்ததும் “இன்னும் ஒரு மெஸேஜும் வரவில்லையேப்பா. கவலைப்படாதே வந்து விடும். ஒரு தபால் அதிகமாக இருந்தால் அவர்களுக்கும் தலைவலி.... முதலில் ஒரு தபால் குறைந்த விவரங்களை, எரர் புக்கிலே ( ERROR BOOK) ஒரு குறிப்பு எழுதி பி..பி..எம்.முக்கு அனுப்பு.  (பி பி எம் = பிரெஸிடென்ஸி போஸ்ட் மாஸ்டர்.)

நானே என்மேல் குற்றப் பத்திரிகைத் தயாரித்து அனுப்ப வேண்டும். எழுதினேன். அனுப்பினேன்.. அரை மணி நேரம் கழித்து பி.பி.எம்-இன் பியூன் எரர் புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். அதில் “தவறுக்கான காரணமானவரிடம் விளக்கம் வாங்கி அனுப்பவும்” என்று எழுதி இருந்தார். விளக்கம்?  என்ன சொல்வது?  ஒரு தபால் எப்படி குறைந்தது என்று தெரிந்தால், இப்படி ஏன் எரர் புத்தகத்தில் குறிப்பு எழுதப் போகிறேன்?.
ஜி.பி.ஓ.வில் வேறு ஒரு செக் ஷனில் செங்கல்பட்டிலிருந்து வரும் ஒரு சீனியர் இருந்தார். அவருடன் லேசான பழக்கம்தான் இருந்தது. அவரிடம் போய் விவரங்களைச் சொன்னேன். அவரிடம் சொல்லும் போது என் குரலிலும் முகத்திலும் பயம் இருந்தது
”ஒண்ணும் கவலைப்படாதே. ஒரு மண்ணும் ஆகாது.  தானாக மெஸேஜ் வரும். ஆர்.எம்.எஸ்.காரரிடம் போயிருக்கும். அவனால் உடனே மெஸேஜ் அனுப்ப முடியாது.  அவன்  குறிப்பு எழுதி தபால் பையில்போட்டு அனுப்புவான். அவனுக்கு இது மாதிரி தினமும் நடந்து கொண்டுதான் இருக்கும்..உன் விளக்கத்தை இரண்டு நாள் கழித்து அனுப்பலாம், நான் எழுதித் தருகிறேன்” என்று தைரியம் கொடுத்தார். 

தபால் பைகள் வர வர கூடவே இருந்து பிரித்துப் பார்த்தேன். விஜயவாடா ஆர்.எ.ம்.எஸ். பையில் ஒரு கவர் இருந்தது. பிரித்தேன். அதில் உள்ளே ஒரு ஓலை மாதிரி நீளமான குறிப்பு இருந்தது. தலைப்பில் ’எரர் எக்ஸ்ட்ரேக்ட்’ (ERROR EXTRACT) என்று எழுதி இருந்தது. ’ஒரு ரிஜிஸ்டர் தபால் லிஸ்டில் எழுதப்படாமல் கூடுதலாக வந்து விட்டது. புதிய லிஸ்ட் போட்டு அனுப்பவும்’ என்பதைப் படித்தேன். ஹெட் கிளார்க் “பாத்தியா நான் சொன்னேனே. தபால் அகப்பட்டு விட்டது, போ, இனிமேல் ஜாக்கிரதையாக வேலை செய்” என்றார்.
எல்லாம் இந்த நம்பர் ஸ்லிப்பு ஒட்டும் போது ஏற்பட்ட சிறிய அலட்சியத்தால் வந்த வினை. ஸ்லிப்பு ஒட்டுவதற்கு விரலில் பசையை எடுத்துத் தடவும்போது சற்று அதிகப்படியாக பசையையோ அல்லது கைவிரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் பசையையோ கவரின்மீது எங்கேயாவது கவனக்குறைவாக தீற்றியிருப்பார்கள். அதன் காரணமாக அந்தக் கவரின் மேலே வைக்கப்படும் கவருடன் அது ஒட்டிக்கொண்டு விட்டது (இரட்டைப் பிறவிபோல!) இதனால் பட்டியல் போடும்போது அது கண்ணில் படாமல் டிமிக்கிக் கொடுத்து விட்டுப் போய்விட்டது.
எர்ரர் புக்கை உடனே எடுத்தேன். விஜயவாடா ஆர்.எ.ம்.எஸ்.ஸிலிருந்து வந்திருந்த தகவல் குறிப்பை அதில் ஒட்டிவிட்டு, அவசர அவசரமாகக் குறிப்பு எழுதினேன். ”ஒரு தபால் கூடுதலாகப் போய்விட்டது. ஆகவே எல்லாம் சரியாகிவிட்டது” என்று எழுதினேன்.  
அத்துடன் ஒரு தனி காகிதத்தில் “தபால் பை குறித்த நேரத்தில் அனுப்புவதற்காக அவசரம் அவசரமாக வேலை செய்த போது இந்தத் தவறு நேர்ந்துவிட்டது. இனிமேல் நான் கவனமாக வேலை செய்கிறேன் என்று உறுதி அளிக்கிறேன்.”
எர்ரர் புக்கை போஸ்ட் மாஸ்டருக்கு அனுப்பினேன். அவர் அதைப் பார்த்துவிட்டு கொக்கி போட்டு அனுப்பி விட்டார். (அரசாங்க அகராதியின்படி கொக்கி என்பது அவரது இனிஷியலைக் குறிக்கும்.)
“இனிமேல் இது மாதிரி தவறு நேராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக எச்சரிக்கப் படுகிறது” என்று அவர் எழுதி இருந்தார்.
இந்த மாதிரி ஏற்படும் தவறுகளுக்கு மெமோ கொடுப்பதும் அதற்கு விளக்கம் பெறப்படுவதும், கண்டிப்பாக எச்சரிக்கப் படுவதும் வழக்கமான நடைமுறைதான் என்பது எனக்குச் சீக்கிரமே தெரிந்துவிட்டது.. கிட்டத்தட்ட ஒரு சடங்கு மாதிரி தான். எப்போதாவது தான் மேல்நடவடிக்கையாக பணி இடை நீக்கம், இன்கிரிமென்ட் நிறுத்தம் போன்ற தண்டனைகள் தரப்படும். ’இனிமேல் தவறு செய்யமாட்டேன்’ என்று விளக்கத்தின் கடைசியில் எழுதிவிட்டால் போதும். எல்லாம் மன்னிக்கப்படும்!
 (இந்த மாதிரி  ஒரு சமயம் விளக்கம் கொடுக்கும்போது, ஒரு மகா குறும்புக்காரன் செய்த குறும்பைப் பற்றி பின்னால் எழுதுகிறேன். சற்று விரிவாக எழுத வேண்டிய விஷயம்!)
 =          +                 +           +
அன்று பகல் நாலைந்து பேர் கையில் லிஸ்டுடனும் ஒரு ரசீது புத்தகத்துடனும் வந்தார்கள். எல்லாரும் பார்த்த முகங்கள் தான் ஆனால் அறிமுகமில்லாதவர்கள். நேரே என்னிடம் வந்தார்கள்.
“ஹலோ எப்படி இருக்கீங்க, காம்ரேட். நாங்களெல்லாம் யூனியனிலிருந்து வந்திருக்கிறோம். இவர் நம்ப ஜி.பி.ஓ. யூனியனின் செகரெட்டரி. நான் அஸிஸ்டென்ட் செகரெட்டரி. நீங்கள் நம்ம யூனியனில் மெம்பர் ஆகவேண்டும்” என்றார் ஒருத்தர்.
யூனியன் என்றால் என்ன? மெம்பர் ஆனால் என்ன லாபம்? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
“நான் செங்கல்பட்டிலிருந்து வருகிறேன் என்னால் ஒரு வேலையும் யூனியனில் செய்யமுடியாதே.”
அவர்கள் சிரித்தார்கள். “யூனியன் என்றால் தொழிற்சங்கம்……. “
“என்னது தொழிற்சங்கமா ஜி.பி.ஓ. ஒரு தொழிற்சாலையா?”  இது மத்திய சர்க்கார் டிபார்ட்மென்ட் இல்லையா? ”
”தொழிற்சங்கமென்றால் டிரேட் யூனியன். இதில் எல்லோரும் சேர்ந்தால் பலமானதாக இருக்கும். நம்முடைய பொதுவான குறைகளை எடுத்துச் சொல்ல முடியும். தேவையானால் போராடவும் முடியும்” என்ற
ஒன்றும் புரியவில்லை.”சரி.. சரி” என்று தலையை ஆட்டி விட்டேன். இப்பபடி ஏனோ தானோ என்று யூனியனில் சேர்ந்த நான் பின்னால் தீவிர ஈடுபாட்டுடன் பங்கும் பெற்றேன். யூனியனின் மாநில மா நாட்டில் மைக் முன்னே நிற்பேன் என்றோ.  ”WORKERS OF THE WORLD UNITE”  என்று முழங்கப்போகிறேன் என்றோ நினைத்துக்கூட பார்க்கவில்லை! அது மட்டுமல்ல. ஒரு சமயம் கைதுகூட செய்யப்படுவேன் என்று தெரிந்திருந்தால் யூனியனுக்குப் பெரிய கும்பிடு போட்டிருப்பேன். யூனியனில் சேர்ந்ததால் நிறைய பேரின் அறிமுகம் கிடைத்.தது.
ஜி..பி,ஓவில் பொழுதுபோக்கு மன்றம் என்று ஒன்று இருப்பது வெகு நாள் வரை தெரியாது. ஏன் கட்டிடத்தின் எல்லா செக் ஷன்களையும் கூட பார்த்ததில்லை. அங்கெல்லாம் போகலாமோ கூடாதோ என்று தயக்கம்.(பயம்) முக்கியமாக ஸ்டாஃப் செக் ஷன், ஏ. ஜி.க்ரூப் என்னும் பிரிவுகளுக்கு.. ஏ,ஜி. என்பது அட்மினிஸ்ட்ரேடிவ் க்ரூப்பின் சுருக்கம். அப்போது ஏ.ஜி க்ரூப்  என்றால் அட்மினிஸ்ட்ரேடிவ் க்ரூப் க்ரூப் என்று ஆகுமே என்று கேட்டேன். அப்படியெல்லாம் கலாட்டா பண்ணாதே பி. பி. எம், மின் காதில் விழுந்து விடப் போகிறது, என்று சில தொடை நடுங்கிகள் சொன்னார்கள். நானும் பேசாமல் ஒரு தொடை நடுங்கியானேன் இந்த செக் ஷன்களில்தான் சர்வீஸ் புத்தகங்கள் பி.எம்.ஜி.-யின் சுற்றறிக்கைகள், நீண்டநாள் லீவு விண்ணப்பங்கள், பொது மக்களின் புகார் கடிதங்கள், மாற்றல் உத்திரவுகள் போன்றவை கவனிக்கப்படும். அங்கு வேலை செய்பவர்கள் – அவர்களும் குமாஸ்தாக்கள் என்றாலும் – ஒரு படி உயர்ந்த குமாஸ்தாக்கள் என்று தங்களை கருதிக் கொள்வார்கள் என்று கருத்து உண்டு.
நான் பார்க்காத மற்றொரு செக் ஷன் இரண்டாவது மாடியில் இருந்தது .அது வி.பி.க்ளெய்ம்ஸ் செக் ஷன் என்பது. வி. பி. தபால்கள். அதற்கான வி. பி. தொகைகள் ஆகியவற்றைச் சரிபார்க்கும் செக்ஷன் அது. அங்கு ஹெட்க்ளார்க் முதல் பணிபுரியும் பெண்கள்தான். அல்லி ராஜ்யம் என்று குறிப்பிடப்படும் அந்த செக் ஷன் மட்டும் தான் மாடியில் இருந்தது. 

பின்னால் ஜி.பி.ஓ. கிளப்பில் நாடக ரிகர்சலுக்கு அந்த செக் ஷனுக்குப் போனோம். அப்படி போனபோது தான் முதல் முறையாக அந்த செக் ஷனைப் பார்த்தேன். எல்லா மேஜைகளும் காலியாக இருந்தாலும் அங்கு ரம்பை, திலோத்தமை, ஊர்வசி ,மேனகை, ரதி போன்றோர் வேலை செய்வது மாதிரியான ஒரு தோற்றம் ஏற்பட்டது. அந்த பழைய மேஜைகளும் நாற்காலிகளும் அறையும் கூட தேவலோகத்து  அரண்மனை மாதிரியும் சிம்மாசனம் போன்றும் தோன்றியது, எல்லாம் வயசுக் கோளாறு.. (அப்போது பிடித்த கோளாறு இன்னும் போகவில்லை என்பது வேறு விஷயம்.) 
சரி, விட்ட இடத்துக்கு வருகிறேன். பொழுது போக்கு மன்றத்தை அன்று  போய்ப் பார்த்தேன். அது ஒரு பெரிய அறை. இரண்டு அலமாரிகளில் புத்தகங்கள். இரண்டு மேஜைகளின் மீது கேரம்போர்ட். பத்து பன்னிரண்டு நாற்காலிகள். எல்லாம் ஐயோ பாவம் நாற்காலிகள்! (அப்படிப்பட்ட நாற்காலிகாளாக இருந்ததால்தான் யாரும் கடத்தி எடுத்துக்கொண்டு போகவில்லை.)
கைக்கு எட்டாத உயரத்தில் ஒரு ஸ்டாண்டில் பெரிய ரேடியோ. ’தடக்’ ’தடக்’ என்று மாவரைக்கும் இரண்டு மின் விசிறிகள்.ரேடியோவில் ’ஆல் இண்டியா ரேடியோ’ செய்தி சொல்லிக் கொண்டிருந்தது. செய்தி முடிந்து திரைப்பட பாடல்கள் ஆரம்பித்தது. .பாடுபவர்கள் எல்லோருக்கும் தொண்டை கட்டிக்கொண்டிருந்தது. – ரேடியோவின் உபயத்தால்! வாரப்பத்திரிகை, தமிழ் பேப்பரெல்லாம் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தது..
கிளப்பிற்கு மாத சந்தா 25 பைசா என்று நினைக்கிறேன். இது ஒரு சந்தாவா என்று கேட்காதீர்கள். சம்பளமே ரூ125 தான் அதுவும் மூன்று வார பயிற்சிக்குப்(!) பிறகு .(சந்தாவை மாதா மாதம் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளச் சொல்லலாம்!
எனக்கு நாடகப் பித்து உண்டு என்பதால் கிளப்பில் சேர்ந்து ஏதாவது நாடகம் போடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். கிளப் அறிவிப்புப் பலகையில் ஒரு சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. ரிக்ரியேஷன் க்ளப் தேர்தல் அடுத்த மாதம் குறிப்பிட்டத் தேதியில் நடைபெறும் என்றும் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு கொடுக்கலாம் என்பது போன்ற விவரங்கள் இருந்தன.
கிளப்பிலிருந்து செக் ஷனுக்கு வந்தேன். ஹெட்க்ளார்க் ”எங்கே போய்விட்டாய்?. ரிஜிஸ்டர் தபால் கணக்கில் குறைந்து விட்டது என்றதும் சப்த நாடியும் அடங்கிவிட்டது அது கிடைத்துவிட்ட குஷியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தாயா?” என்று கேட்டார். ”இல்லை சார்... வந்து” என்று வழிந்தேன்.
”போகட்டும்.. இன்றைக்கு நான் சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் போகவேண்டும். ஜெனரல் அப்ஸ்ராக்ட்டைப் பூர்த்தி செய்து ஏ.பி.எம்-மி.டம் கையெழுத்து வாங்கி விடு. டேபிள் மூன்றில் தபால் கட்டுகளை செக் பண்ணி போட்டு சீல் வைத்து டெஸ்பாட்ச் அனுப்பி விடவும்” என்றார். 
அதன் படியே 5.30 மணிக்கு அவசர அவசரமாக பையின் வாயைக் கட்டி அனுப்பிவைத்தேன். (செங்கல்பட்டு ரயில் 5.35 க்கு. அதனால்தான் அவசரம்!)) என் மேஜை மேலிருந்த பைல்களையெல்லாம் பீரோவில் வைத்துப் பூட்டினேன். தோள் பையை எடுத்து மாட்டிக்கொண்டேன். (ஜி பி.ஓ.வில் இருந்த வரை என்னுடைய ட்ரேட் மார்க் தோள்பை தான். ஜோல்னா பை என்று வேணடுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.) பின்னால் பெரிய எழுத்தாளனாக வருவதற்கு மூன்று ‘ஜே’க்கள் இருக்க வேண்டும்.  Jolnabag, Jilpaa, Jibba!) 

முதல் படி ஜோல்னா பை. அடுத்தது ஜிப்பா. அதற்கடுத்தது ஜில்பா .கொஞ்ச நாளில் கதர் ஜிப்பாவுக்கு மாறினேன். ஜில்பாதான் காலை வாரிவிட்டது  ஹூம்..தலையை வாரி விட்டிருக்கலாம்! அதையும் செய்யவில்லை. அதனால்தான் நான் இன்றுவரை முழு எழுத்தாளனாக மாறவில்லை. 

சரி அதை விடுங்கள் தோள்பையை மாட்டிக்கொண்டு கிளம்பும் முன். பர்ஸ் இருக்கிறதா என்று ஜேபியைத் தொட்டுப் பார்த்தேன் . கைக்குட்டை இருந்தது. என் உடன் பிறவா சகோதரன் விக்ஸ் இன்ஹேலர் இருந்தது, ஆனால் பர்ஸ் இல்லை.
பர்ஸில் பணம் அதிகமில்லை என்றாலும் அதில் ரயில் சீஸன் டிக்கட்டு இருந்தது.
சரித்திரம் திரும்புகிறதா?.முன் தினம் மாலை இப்படித்தான் ஷாக் அடித்தது. மறுபடியும் இன்றுமா?
பர்ஸ் எப்படிப் போயிருக்கும்?. ’பர்ஸைப் பார்த்தீர்களா?’ என்று பலரிடம் கேட்டேன். அலமாரியை முழுதுமாகக் காலி பண்ணிப் பார்த்தேன்.. காணோம். பர்ஸ் மாயமாக மறைந்து விட்டது. எங்கு போயிருக்கும்? 
சரி இப்போது அடுத்தப் பிரச்சனை. செங்கல்பட்டிற்கு எப்படிப் போகப் போகிறேன்?
ஒரு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு ரயில் டிக்கட்டு வாங்கிக்கொண்டு காஞ்சீவரம் ஃபாஸ்ட் பாஸஞ்சரைப் பிடித்தேன்- பயங்கர கவலையுடன்
முழுதாக ரூ20 (?) கொடுத்து வாங்கின ஸீஸன் டிக்கட்!
தலை சுற்றியது. 
(இன்னும் வரும்!)

9 comments:

 1. இப்போதுதான் புரிகிறது - சுயசரிதையை பெயர் மாற்றி சங்குசாமியார் பேரில் கதை ஆக்கிவிட்டிர்கள்! எப்படி மெகா சீரியலில் தொடரும் போடுவதற்கு யாராவது எதையாவது பார்த்து அதிர்ச்சியோடு விழிப்பார்களே அந்த மாதிரி ஒரு நகம் கடிக்கும்படி இடத்தில் ஒரு தொடரும் போட்டுவிடுகிறீர்கள்? (எனக்கு ஒரு சந்தேகம் - அந்த பர்சில் இருந்த சீசன் டிக்கெட்டுக்கு அன்றே கடைசி நாள், சரியா? நான் பம்பாய் தாதரில் நடைபாதை கடையில் 3 ரூபாய்க்கு புத்தகம் வாங்கிவிட்டு பின் பாக்கெட்டில் வைத்த பர்ஸ் பிக் பாக்கெட் ஆனபோது அதில் இருந்தது அன்று காலாவதியாகும் சீசன் டிக்கெட் தான்! பைசா இல்லை! திருடன் என்னைத் தேடி வந்து அடிப்பானோ என்று கொஞ்ஜ நேரம் பயந்துகொண்டிருந்தேன்!) - ஜெ.

  ReplyDelete
 2. இல்லை. உங்கள் சந்தேகம் தவறு என்பதை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வீர்கள்...
  - கடுகு

  ReplyDelete
 3. purse parcel-il poi vittadhu.. sariyaa?

  ReplyDelete
 4. Purse Parcelil poi vittadhu.. sariyaa?

  ReplyDelete
 5. முன் தினம் அடித்த ஷாக் திரும்பவுமா? காலையில் இருந்தது மாலையில் இல்லை? சஸ்பென்ஸ்! பரவாயில்லை, இன்னும் 4 நகம் பாக்கி இருக்கிறது, அதுவரை பொறுத்துக் கொள்கிறேன். - ஜெ.

  ReplyDelete
 6. “ஜி..பி, ஓவில் பொழுதுபோக்கு மன்றம் என்று ஒன்று இருப்பது வெகு நாள் வரை தெரியாது”- நான் பார்த்த வரை மொத்த ஜி.பி.ஓவும் பொழுதுபோக்கு மன்றம் மாதிரி தானே காட்சியளிக்கும்…
  பரத் குமார்

  ReplyDelete
 7. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  படு விறுவிறுப்பாகப் போகிறது ஒவ்வொரு பகுதியும்! வேலைக்குச் சேர்ந்த புதிதில், ஒவ்வொரு விஷயமும் புதுமையாகவும், பயத்தையும் கொடுப்பதாக இருக்கும் அந்த மன நிலையை, இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

  பகிர்வுக்கு நன்றி.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 8. அடாடா... ஜி.பி.ஓ. அனுபவங்கள் ‘சொல்லடி சிவசக்தி‘யில் கொஞ்சம் கலந்திருக்கிறது என்று நீங்கள் சொன்னது சரிதான். சூப்பர் அனுபவங்கள் தான் ஸார். தொடர்ந்து எழுதி முடியுங்கள். நிச்சயம் இவை தனிப் புத்தகமாக வர வேண்டியவை.

  ReplyDelete
 9. ஜில்பாதான் காலைவாரிவிட்டது ஹூம்..தலையை வாரி விட்டிருக்கலாம்! அதனால் நான் இன்றுவரை முழு எழுத்தாளனாக மாறவில்லை.

  அந்த நாள் கலவரம் இன்று நகைச்சுவை மணிகளாய்.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!