டில்லிக்கு வந்திருந்த சோவிடம் சில கேள்விகள்:
(வருஷம்: 1968 அல்லது 1969 )
கேள்வி: மிஸ்டர் சோ! நீங்கள் ஆயிரம் நாடகங்கள் போட்டதைப் பற்றிப் பலர் பாராட்டுகிறார்கள். ஆனால் அதே சமயம் தமிழ் நாடகக் கலைக்கும் தமிழ் நாடக இலக்கியத்திற்கும் நீங்களும் உங்கள் நகைச்சுவை நாடகங்களாலும் ஓரளவு தீங்கு விளைந்துள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் என்ன பதில் கூறப் போகிறீர்கள்?
சோ: குற்றச்சாட்டு இருப்பதாக நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்?
கே: ஏன், நானே அப்படிக் கருதுகிறேன்.
சோ: நீங்கள் அப்படிக் கருதினால் அதற்கு நான் ஏன் விளக்கம் தர வேண்டும்? இரண்டாவது, தமிழ் நாடகக் கலை வளர விடாமல் தடுக்கவோ அதற்கு ஊறு விளைவிக்கவோ சக்தி படைத்தவனா நான்? மூன்றாவது, எனக்கு நாடகக் கலை, நாடகம், இலக்கியம் என்பவைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் ஏதோ ஒன்று எழுதுகிறேன். அதை நாடகம் என்றுகூடக் கூறுவதில்லை. ஏதோ ஒன்று. மேடையில் போடுகிறேன். மக்கள் பாராட்டினால் திரும்பப் போடுகிறேன். இல்லாவிட்டால் மூட்டை கட்டி விடுகிறேன். நான் ஏன் சார் நாடக இலக்கியம் போன்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?
கே: நீங்கள் கவலைப்படாமல் இருக்க முடியாது. நீங்கள் நாடகாசிரியர்- நடிகர் மட்டுமல்ல. நீங்கள் ரசிகர் இல்லையா? நாடகங்களை ரசிக்கிறீர்கள் இல்லையா?
சோ: நிச்சயம் நான் ரசிகன். என் நாடகங்களை ரசிக்கிறேன். வேறு சில நாடகங்களையும் ரசித்துப் பார்க்கிறேன். காடக முத்தரையன் நாடகத்தை ஐந்தாறு தடவைகள் பார்த்திருப்பேன்.
கே: நல்லது. ஆனால் காடக முத்தரையன் போன்ற நல்ல வலுவான அழுத்தமான நாடகங்கள் அடிக்கடி உருவாகவில்லையே. ஏதோ அத்தி பூத்தது போல் உருவாவதற்குக் காரணம் தங்களுடைய- மலிவான - நகைச்சுவை நாடகங்கள்தான் என்று நான் உங்கள் மேல் குற்றம் கூறுகிறேன்.
சோ: அதை நான் ஒத்துக் கொள்ள முடியாது. எதிர் நீச்சல், தீர்ப்பு, வியட்னாம் வீடு, ஞான ஒளி போன்ற நாடகங்களை மறந்து விட்டீர்களா? நண்பர் சுந்தரராஜன் சிறந்த நாடகங்களை அளித்திருக்கிறாரே...
கே: இப்படிப்பட்ட சிறந்த நாடகங்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ளவில்தானே உருவாகியள்ளன. இத்தனைக்கும் இவை உங்கள் நாடகக் காட்டாற்றை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் வந்துள்ளன. பல நல்ல நாடகங்கள் எதிர் நீச்சல் போட முடியாத காரணத்தால் முழுகிப் போயுள்ளன...
சோ: உங்கள் வாதம் எனக்குப் புரியவில்லை. நல்ல நாடகம் என்றால் தானாகப் பிரபலம் அடையும். எதிர் நீச்சல் போட வேண்டிய அவசியமில்லையே...
கே: சொல்கிறேன். ஒரு கருத்துள்ள நாடகத்தை ஒருவர் எழுதியிருக்கிறார். அதை மேடை ஏற்றுமுன் இது ஞான ஒளி மாதிரியோ எதிர்நீச்சல் மாதிரியோ சிறப்பாக அமையுமா என்று சின்ன கேள்விக்குறி எழுகிறது. அதே சமயம் சோ நாடகம் மாதிரியோ அதே பாணியில் எழுதி நடிக்கப்படும் வேறு பல நாடகங்கள் மாதிரியோ சிரிப்புக் கோர்வையாகத் தன் நாடகம் இல்லை என்பதையும் உணர்கிறார். இதன் காரணமாக `நமக்கேன் சீரியஸ் நாடகம். கேலியும் சிரிப்பும் கலந்த நாடகத்தை எழுதலாமே' என்று அவரும் ஜோக் தோரணம் கட்டி விடுகிறார்.
சோ:. நீங்கள் என்னை மடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுவதாகக் கருதுகிறேன்.
கே: அப்படி இல்லை. `சோ'வை அனலைஸ் செய்ய முயற்சிக்கிறேன். சரி... கேள்விகளை வேறு பக்கம் எடுத்துப் போகிறேன். நீங்கள் புதிய நாடகம் எழுதி அதிக நாள் ஆகவில்லையா?
சோ: யூ ஆர் ரைட்! என் புதிய நாடகம் `ஓவர் ட்யூ' எழுத வேண்டும்.
கே: நான் நினைக்கிறேன், ஒரே மாதிரி நையாண்டி நாடகங்களாகவே எழுத வரும் உங்களுக்குக் கற்பனை, ஜோக்குகள் எல்லாம் வறண்டு விட்டன.
சோ: நோ... நோ... நானும் இரண்டு மூன்று நாடகங்களை பிளான் செய்து அவ்வளவாகப் பிடிக்காததால் கை விட்டு விட்டேன். விரைவில் புதிய நாடகம் எழுத நினைக்கிறேன். என் கற்பனை வறண்டு விட்டதாக நான் நினைக்கவில்லை. என் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கே: ஏன் ஒரு புதிய கருத்துள்ள நாடகத்தை- மனதைத் தொடக் கூடிய நாடகத்தை எழுதக் கூடாது?
சோ: நான் ஏன் எழுத வேண்டும்? பிறகு சரித்திர நாடகங்கள் எழுதச் சொல்வீர்கள். டிராஜடி, சஸ்பென்ஸ் என்று பலவித நாடகங்கள் உள்ளன. ஒருத்தரே எல்லா மாதிரியும் எழுத வேண்டுமா என்ன? நான் ஒரு அட்வொகேட். ஒரு குறிப்பிட்ட வழக்கை எடுத்து வாதாடுகிறேன். தீர்ப்பை ஜனங்களிடம் விட்டு விடுகிறேன். எனக்கு இஷ்டமான கேஸை நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தக கேஸை எடுத்துக் கொள், அந்தக் கேஸை எடுத்துக் கொள் என்று நீங்கள் ஏன் எனக்கு அட்வைஸ் செய்கிறீர்கள்? எனது அடுத்த நாடகத்தை நான்தான் தீர்மானிப்பேன்.
கே: நீங்கள் புதிய நாடகத்தை இன்னும் தீர்மானிக்கவில்லை. சரி, ஏன் வேறு ஒரு ஆசிரியர் எழுதியுள்ள சீரியஸ் நாடகத்தைப் போடக் கூடாது? அம்மாதிரி நாடகங்களை வெற்றிகரமாகப் போட உங்களால் முடியாது என்று நான் கூறலாமா?
சோ: நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். உங்களை மிகவும் பணிவுடன் கேட்கிறேன். ஒரு நல்ல நாடகத்தை எனக்கு வாங்கிக் கொடுங்கள். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல் நான் நிச்சயமாகப் போடுகிறேன்.
கே: உங்களுக்கு நல்ல நாடகம் கிடைக்கவில்லை என்றா கூறுகிறீர்கள்? தான் எழுதிய நாடகத்தை நீங்கள் போட வேண்டும் என்று எத்தனை பேர் ஆர்வமாக இருக்கிறார்கள்!
சோ: நான்தான் சொல்கிறேனே, ஒரு நல்ல நாடகத்தைக் கொடுங்கள் என்று. ஆனால் ஒரு நிபந்தனை. அது நல்ல நாடகமா என்பதை நான்தான் `ஜட்ஜ்' செய்வேன்!
கே: சரி, பார்க்கிறேன்... அதிருக்கட்டும். பல அமெச்சூர் நாடகக் குழுக்கள் அதிக நாள் நிலைத்திருப்பதில்லை. உங்கள் குரூப் மட்டும் எப்படி எக்ஸப்ஷனாக இருக்கிறது?
சோ: பல குழுக்களில் குரூப் சேர்ந்த பிறகு ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு நண்பர்களாக ஆகிறார்கள். எங்கள் குழு அமைந்த விதம் வேறு. முதலில் நாங்கள் நண்பர்கள். பிறகு நாடகக் குழுவில் ஒன்று
சேர்ந்தோம். எங்களுடைய நெருக்கமான நட்பு மட்டுமல்ல; எங்களில் அனைவருக்கும் நாடகத் துறையில் அளவற்ற மோகம், பித்து. மற்ற சில குழுக்களில் சின்னதும் பெரிதுமாகச் சண்டைகள் ஏற்பட்டு விரிசல், உடைசல் எல்லாம் உண்டாகியுள்ளன. பல கலைந்தும் போய் உள்ளன.
கே: அப்படியானால் உங்கள் குழுவில் தகராறோ மனத்தாங்கலோ கிடையாது என்று சொல்கிறீர்களா?
சோ: அப்படிச் சொல்லவில்லை. எங்களிடையேயும் எத்தனையோ உரசல்கள், வாக்குவாதங்கள் எல்லாம் உண்டு. ஆனால் எங்கள் நாடக ஆர்வமும், நட்பும் குழு உடையாமல் இருக்கச் செய்கின்றன.
கே: நான் சொல்கிறேன், உங்கள் குரூப், உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அல்லது பயந்து இருப்பதால்தான் நிலைத்திருக்க முடிகிறது என்று. நீங்கள் ஒரு பிரபலமான நபராகி விட்டீர்கள். வளர்ந்து விட்டீர்கள். ஆகவே, உங்கள் வார்த்தைக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றபடி குழுவினர் நடக்கிறார்கள் என்றுதான் நான் விளக்கம் தருவேன்.
சோ: நாட் அட் ஆல்! நான் ஓரளவு பிரபலமடைந்து உள்ளேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். பிரபலம் அடைவதற்கு முன்பே எங்களது குழு அமைத்த முதல் ஆண்டு நிறைந்தவுடனே ஒன்று சொன்னேன். நமது குழுவிற்கு ஜெனரல் பாடி மீட்டிங், தேர்தல், நிர்வாக் குழு அது இது என்பதெல்லாம் கிடையாது. நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள ஒருத்தன்தான். அவன்தான் எல்லாம். வரவு, செலவு எல்லாம் அவன்தான் செய்வான். யாருக்கும் அவன் கணக்குக் காட்ட வேண்டியதில்லை. இப்படித்தான் அன்று சொன்னேன். அப்படித்தான் குழுவை நடத்தி வருகிறோம் இன்று வரை.
கே: அப்படியா!
சோ: ஓரளவுக்கு சர்வாதிகாரமான நிர்வாகம் இருந்தால்தான் அமெச்சூர் சங்கங்களை நடத்த முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் ஒரே ஒரு ஜெனரல் பாடி மீட்டிங் போட்டோம். ஒரு சிலர் வம்புக்காக அலட்டிக் கொண்டு கேள்விகள் போட்டார்கள். அடுத்த வருஷம் அவர்களை டாட்டா சொல்லி அனுப்பி விட்டோம். அதற்கப்புறம் கூட்டமோ ஒன்றோ கிடையாது...
கே: உங்கள் நாடகங்கள் மூலமாகக் கிடைக்கும் பணம்?
சோ: அந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நடிகர்கள் ரிகர்சல், நாடக நிகழ்ச்சிகளுக்கு வந்து போக டாக்சி சார்ஜ் தருகிறோம். ரிகர்சலின் போது இஷ்டமான சிற்றுண்டி சாப்பிடலாம்.
லிமிட் எதுவும் கிடையாது. நாடகச் செலவுகள் போக, வருட முடிவில் ஏதாவது- ஆம்... ஏதாவது மீந்தால்தான் -எல்லாருக்கும் சின்ன பரிசுப் பொருள்களாவது கிடைக்கும். எங்கள் குழுவிண் நிதி நிலமை, சாதாரணமாக `நில் பாலன்ஸ்'தான்.
கே: உங்கள் குரூப்பில் சேரப் பலர் ஆவலாக இருப்பார்களே?
சோ: யூ ஆர் ரைட். எங்கள் குரூப்பில் சுலபமாகச் சேர்க்க மாட்டோம். எங்களுடன் பழகி நல்ல நட்பு ஏற்பட்ட பிறகுதான் ஒருவரைச் சேர்ப்போம். சிலர் வருடக் கணக்கில் எங்களுடன் வந்து எங்கள் நாடகங்களின் போது
எங்களுடன் பழகுகிறார்கள்.
கே: ஆமாம்... மாதத்தில் 15 நாட்கள் நாடகம், சினிமாவில் நடிப்பு. இது மாதிரி ஓய்வில்லாத வாழ்க்கை உங்களுக்குச் சலிப்போ வெறுப்போ தரவில்லையா?
சோ: துளிக்கூட இல்லை. நான் வெகுவாக ரசிக்கிறேன். எங்களது புரோகிராம் இல்லாத நாட்களில் வேறு ஏதாவது நாடக நிகழ்ச்சியைப் பார்க்கப் போய் விடுவேன்.
கே: மிஸ்டர் சோ! உங்கள் கருத்துக்களை அறியவே நான் பலவித அபிப்ராய நிலைகளிலிருந்து சற்று `மழுங்கலான' கேள்விகளைக் கேட்டேன். தவறாக . எண்ணாதீர்கள்.
சோ: நெவர், நெவர் ! அதிருக்கட்டும். உங்கள் உண்மையான அபிப்ராயங்கள் என்ன?
கே: பேட்டியளிப்பவர் நீங்கள்தான். நான் அல்ல; என்னை நீங்கள் கேள்வி கேட்டுப் பதில் பெறுவதில் யாருக்கும் லாபம் இல்லை.
===================
பின் குறிப்பு 1: இந்த பேட்டிக்கு : சோவுடன் ஒரு மோதல்”
என்று தலைப்பு கொடுத்து இருந்தேன் அப்படியே கதிரில்வெளியாயிற்று.
வேடிக்கை என்னவென்றல். அதே வாரம் குமுதம் ஒரு இலவச இணைப்பு வெளியிட்டது. குமுதத்தில் பாதி அளவு - 32 பக்கங்கள். - அது சோவின் பேட்டி, அதன் தலைப்பு: மோதாமல் ஒரு நாளும் இருக்க மாட்டேன்! இந்த பிரசுரம் என்னிடம் இருக்கிறது. பின் குறிப்பு 2: இந்த பேட்டியின்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபர் அங்கிருந்தார்.. நான் ‘சோ’ வுடன் ஏதோ மல்யுத்தம் செய்வதாகக் கருதிக் கொண்டார். பேட்டி முடிந்ததும் அவர் சொன்னார்: YOU HAVE WON THE BATTLE BUT LOST THE WAR!.
அப்பப்பா எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டு பதில் பெற்றிருக்கீங்க....
ReplyDeleteஉங்கள் கேள்விக்கணைகளையும், சோ-வின் பதில்களையும் ரசித்தேன்...
ரொம்ப நல்லா இருக்கு. ரசித்துப் படித்தேன். கேள்வி கேட்டவர், பதில் சொன்னவர் இருவருக்கும் அந்தக் காலத்திலிருந்தே நான் பரம ரசிகன்!
ReplyDeleteஅருமையான பேட்டி. கேள்வி கேட்டவர் எப்படி கேட்டலும் பதில் சொன்னவர் சமாளித்திருக்கிராரே. சூப்பெர்.
ReplyDeleteயாரைப் புகழ்வது என்று புரியவில்லை. எப்படி கேள்வி கேட்டாலும் தவறாய்க் கொள்ளாமல் பதில் சொல்லிப் போன விதம் ரசிக்க வைத்தது.
ReplyDeleteஅது ‘68, ‘69!! நீங்களும் இளைஞர், அவரும் இன்று மாதிரி VVIP இல்லை! கேள்விகள் கேட்கப்பட்டவிதம், சோ சொன்ன மாதிரி அவரை மடக்கவே கேட்கப்பட்டது தெரிகிறது. ஒருவேளை, அது புரிந்தே சோ பொறுமையாக பதில் அளித்திருப்பார் என்று நம்புகிறேன்!
ReplyDeleteஇன்று இதே கேள்விகளுக்கு / இதே மாதிரி அவரை accuse / tease செய்யும் கேள்விகளை அவரிடம் கேட்க முடியுமா? அவர் இந்த மாதிரி பதில் சொல்வாரா?!
என்னைப் பொறுத்தவரை, சோ நாடகங்கள் மற்ற குழுக்களிடமிருந்து தனிப்பட்டது, அவரையும் மற்றவர்களைப் போல் நாடகம் போடவேண்டும் என்று எதிர் பார்ப்பது தவறு. அவர் டைப் நாடகங்களால் மற்ற சிறந்த நாடகங்களை மக்கள் புறக்கணித்தார்கள் என்பதும் சரியல்ல என்பது என் எண்ணம்.
நான் நகைசுவை எழுத்துக்கும் ரசிகன், சீரியசான எழுத்துக்களுக்கும் ரசிகன்!
வணக்கத்துடன்,
-ஜெ.
Super Sir! kaduku sirukkavillai..aanaal kaaram jaasthi!
ReplyDeleteசோ இப்போது எப்படி பதில் அளிப்பார் என்பது முக்கியமில்லை. அவரது படைப்பக்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்துகிறது என்பது அதன் சிறப்பு. மக்கள் வாழ்வு, அரசியல், ஊழல் எதுவும் மாறாமலிருப்பது நமது துரதிர்ஷ்டம்.
ReplyDeleteஒவ்வொரு விஷயத்தையும் அணு அணுவாக இரசித்து அந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களின் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும் போது அடுத்த பிறவியிலாவது நாற்பதுகளில் பிறந்து, அறுபதுகளில் இளைஞனாகி அனைத்தையும் பொறுமையாக அனுபவித்து வாழ வேண்டும் என ஆசை மேலிடுகிறது,
ReplyDeleteஜெ. பாபு,
கோவை - 20