Showing posts with label எஸ்.ஏ.பி.. Show all posts
Showing posts with label எஸ்.ஏ.பி.. Show all posts

March 31, 2010

எஸ்.ஏ.பி. அவர்களும் ஷவர் குளியலும்

சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு ரவி பிரகாஷ் தன் பிளாக்குகளில் பல நல்ல விஷயங்களைப் போடுகிறார்.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.  எனும் உன்னத மனிதரைப் பற்றிய ஒரு தகவல். அதன் லிங்க்:
http://vikatandiary.blogspot.com/

 எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி சொன்னது.
     அந்நாளில் குமுதம் ஊழியர்களுக்கென்று ஒரு குவார்ட்டர்ஸ் உண்டு. (இப்போதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது.) அங்கேதான் ரா.கி.ரா., ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி, புனிதன் எனப் பலரும் குடியிருந்தார்கள்.
         வசதியான குவார்ட்டர்ஸ்தான். ஆனால், அப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். எனவே, குவார்ட்டர்ஸ்களில் தண்ணீர் வரவில்லை. அங்கே குடியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், யாரும் எஸ்.ஏ.பி-யின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகவில்லை.
       வெள்ளிக்கிழமைகளில் சாயந்திர வேளையில் குமுதம் ஊழியர்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குமுதம் நிறுவனரும், எடிட்டருமான எஸ்.ஏ.பி-யின் உத்தரவு. அவரும்கூடக் கலந்து கொள்வார் - ஃப்ரெஷ்ஷாக ஷவர் அடியில் நின்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து!

        ஒருநாள், அவர் யதேச்சையாக, “ஆன்மிகச் சொற்பொழிவுகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு. அதற்காக யாரும் உடம்பைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் இதில் வந்து கலந்து கொள்ளக் கூடாது. எல்லோரும் குளிச்சுட்டீங்கதானே?” என்று பொதுவாகக் கேட்டிருக்கிறார்.

“குளியலா..? அப்படின்னா..?” என்று கேட்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி.   
       எஸ்.ஏ.பி-க்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்றீங்க ஜ.ரா.சு.?” என்று கேட்டார்.
  “இல்லே... குளிக்கணும்னா தண்ணி வேணுமோல்லியோ? நாங்க தண்ணியைப் பார்த்தே பல மாசமாச்சு! நாங்க எல்லாரும் தலையில தண்ணியைப் புரோக்ஷணம்தான் (விரல்களால் தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்வது) பண்ணிக்கிட்டு வரோம் கொஞ்ச நாளா!” என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் பாக்கியம் ராமசாமி.
      அமைதியில்  ஆழ்ந்துவிட்டார் எஸ்.ஏ.பி.

March 22, 2010

எஸ். ஏ. பி. யும் (நன்றியுடன்) நானும் - கடுகு

 நினைவு தெரிந்த நாள் முதலாக குமுதம் பத்திரிகையை ஆர்வத்துடன் படித்து வந்த நான், அதன் ஆசிரியர் எஸ். ஏ. பி. அவர்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. 1954’ம் ஆண்டு சென்னை ஹந்தி பிரசார சபா மைதானத்தில் ’பாரதியார் விழா’ மூன்று தினம் நடந்தது. கல்கி, ஆக்கூர் அனந்தாச்சாரி, பித்துக்குளி முருகதாஸ். நீதிபதி. எஸ். ஏ. பி. ஐயர், திரிலோக (திருலோக என்பது தான் சரி)   சீதாராம். பேராசிரியர் ஆ.சீனிவாசராகவன். எஸ். ஏ. பி. போன்றவர்கள் (இன்னும் பலரின் பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை. பாரதியாரைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.) அடடா, என்ன அற்புதமான இலக்கிய விருந்து. அந்த விழாவில்தான் குமுதம் ஆசிரியரை முதல் முதலாகப் பார்த்தேன். மெலிதான குரலில் ஒரு கல்லூரி பேராசிரியரைப் போல பேச ஆரம்பித்தார்.
"உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு கவிஞன்தான். இதை யாரோ பெயர் தெரியாத குப்பனோ சுப்பனோ சொல்லவில்லை. இது எமர்ஸன் என்ற மேதை கூறியது." என்று ஆரம்பித்து, கோர்வையாக தங்கு தடையில்லாமல் பேசினார். அவர் பேசியதில் மேலும் சில வரிகள் நினைவில் இருந்தாலும் பெரும்பாலான கருத்துகள் மறந்து போய் விட்டது. அவர் பேசி முடிக்கும் வரை மகுடியில் மயங்கிய பாம்பைப் போல் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பேசி முடித்ததும் மேடைக்குப் போய் அவரிடம் கையெழுத்து வாங்கினேன்.
1954 ல் கல்கி அவர்கள் காலமான பிறகு எஸ். ஏ. பி. யின் எழுத்தைதான் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்
1962’ல் டில்லி சென்றேன். டில்லியில் எல்லாம் புதிதாக, புதிய அனுபவமாக இருந்தது. மொழி, உணவு முறை, டிசம்பர் குளிர். புது டில்லியின் அகன்ற தெருக்கள், ராஷ்டிரபதி பவன், அமைச்சகங்களின் பிரும்மாண்டமான கட்டிடங்கள், ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி நள்ளிரவு நேரு உரை நிகழ்த்திய செங்கோட்டை எல்லாம் திக்குமுக்காடச் செய்தன. இந்த சமயத்தில் குமுதத்தில் வாசகர்களுக்கு ஒரு போட்டியை வைத்தார்கள். அதைப் பார்த்த நான் டில்லியில் எனக்குப்  புதுமைகளாகத் தோன்றியவகளைப் பற்றி எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். ஓரிருவாரங்கள் கழித்து கட்டுரைக்குச் சன்மானமாக ரூ35.க்கு செக் வந்தது. குமுதம் இதழ் கரோல்பாக்கில் தான் கிடைக்கும் என்றார்கள். கஷ்டப்பட்டு கரோல்பாக் போய் குமுதத்தை வாங்கி வந்தேன். "அரே டில்லிவாலா" என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியாகியிருந்தது.