December 29, 2014

கமலா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்


ஒரு கணம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா, நிஜமா என்று புரியவில்லை. நிதர்சனமா, பிரமையா என்று தெரியவில்லை!

தொச்சு.. என் அருமை கமலாவின் அருமைத் தம்பி தொச்சு என் முன்னே கட்டுக்கட்டாய் ரூபாய் கட்டுகளை வைக்கிறான். "அத்திம்பேரே, இந்தாங்க பணம் என்கிறான்.

என்ன அதிசயம்? தொச்சு கை நீட்டி கொடுத்ததாக வரலாறே கிடையாது. வாங்கி வாங்கி சிவந்த கை அவனுடையது. அப்படிப்பட்டக் கறவை திலகம் எனக்கு - ஏமாந்த சோணகிரி சங்கத்தின் தலைவரான எனக்கு - பணத்தைக் கொடுக்கிறான்!

கமலா, பற்களுக்கு இடையில் முகமாகத் திகழ்கிறாள். கதவை ஒட்டி நின்று கொண்டிருந்த என் மாமியார்,  ஒலிம்பிக்கில்   தானே மெடல் வாங்கி வந்ததைப்போல் முகம் மலர்கிறார்!

`என்னப்பா இது' எங்கேயாவது லாட்டரி அடிச்சியா?'' என்று கேட்டேன்.

`காலத்துக்கும் தொச்சு உங்க கிட்டேயிருந்து பணம் வாங்கிக் கொண்டெ இருப்பான்னு நெனைச்சிங்களா!'' என்றான் உற்சாகமாக!

`அதில்லைடா... கொள்ளை அடிச்சுண்டு வந்தேயா, பிக்பாக்கெட் பண்ணிண்டு வந்தேயான்னு கேட்க மறந்துட்டார்.  ஒரு தத்துப் பித்து கதை எழுதி ரூபாய் சம்பாதிச்சா அது பெரிசு! மத்தவங்க நாயா அலைஞ்சு பேயா திரிஞ்சு சம்பாதிச்சா, அது கள்ள நோட்டு, பிக்பாக்கெட் பணம்!'' தொச்சுவின் உடன் பிறந்த சகோதரியின் பாகற்காய் + எட்டிக்காய் ஜூஸ்  வார்த்தைகள்!

"கமலா, நான் தொச்சுவைக் கேட்கறேன்; அவன் சொல்றான். நீ என்ன, நடுவில்?'' என்றேன்.

`பழங்காநத்தத்திலே நாம மனை வாங்கினோமே, ஞாபகமிருக்கா? அது பழங்காநத்தம் இல்லை. குப்பையெல்லாம் கொட்டிய பழங்கா நாத்தம்னு கூட நீங்களே சொல்வீங்களே!''

"அதுக்கு என்ன வந்தது?அதுல போட்ட பணத்திற்கு எப்போதோ எள்ளு போட்டாச்சே!''

"நீங்க போடுவீங்க,...ஆனால் அவனுக்கு மனசே சரியில்லை. நம்மால அத்திம்பேருக்கு நஷ்டமாயிடுத்தேன்னு வருத்தம்... வருத்தம்''.

"கமலா...சட்டுனு விஷயத்துக்கு வா. அந்த பிளாட்டை யார் தலையிலேயாவது கட்டிட்டானா?'' 

"கட்டறதா... பக்கத்திலே ஒரு இண்டஸ்ட்ரி வர்றது. அவங்களுக்குப் போகறதுக்கு வழி நம்ப பிளாட்தான். நல்ல விலை கொடுத்தான். நாம எப்பவோ பாதி பாதி பணத்தைப் போட்டு பத்தாயிரத்துக்கு வாங்கினோம். இப்போ எண்பதாயிரத்திற்குப் போயிருக்கு... உங்க பங்கு நாற்பதுதான் இது'' என்றான் தொச்சு.

"பரவாயில்லைப்பா...பிளாட் வாங்கி வித்தால் நல்ல லாபம் வரும்போல இருக்கே! ஆமாம்,.பாதி பாதி பணம் போட்டோம்னு சொன்னியே. உன் பங்கு 5000 ரூபாயை என் கிட்ட கடனாக வாங்கிண்டே இல்லயா? இதுவரை அந்த பணத்தைத் தரலையே?''

December 21, 2014

என் புத்தக முன்னுரைகள்

நான் எழுதிய “கமலா, கலியாணமே, வைபோகமே” புத்தகம் 1985-ம் ஆண்டு வெளியாயிற்று. புத்தகத்தின் முதல் பக்கத்தில் நான் சில குறும்புக் குறிப்புகளை எழுயிருந்தேன். அவற்றை இங்கு தருகிறேன்.       
முன்னணி நகைச்சுவையாளர்களின் பாராட்டுகள்

சோ:  உங்கள் நகைச்சுவை கதைகளைப் படித்து ரசித்தேன். உடனே எரிச்சலும் அடைந்தேன். இந்த மாதிரி அபாரமான நகைச்சுவை நமக்கு எழுத வரவில்லையே என்று என் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டேன். ஏதோ ஒப்புக்குச் சொல்லவில்லை. வேண்டுமானால் வந்து என் தலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மாதிரி நகைச்சுவை எழுத்தாளர்கள் எங்கேயோ இருக்க வேண்டும். உதாரணமாக, வட துருவம், சஹாரா பாலைவனம், இமய மலை உச்சி!

சாவி :  நீங்கள் பிரமாதமான நகைச்சுவை எழுத்தாளர் என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டீர். ஆமாம், எத்தனை தடவை நிரூபித்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லையே! நீங்கள் தமிழில் எழுதுவதற்குப் பதில் புஷ்டு, ஸ்வாஹிலி போன்ற மொழிகளில் எழுதிப் பாருங்கள். அப்போதாவது நம்புகிறார்களா என்று பார்க்கலாம்....

பாக்கியம் ராமசாமி:  ஹைய்யோ... ஹைய்யோ... வயிறு புண்ணாய்ப் போய்விட்டது. ! உமக்கு கோவில் கட்டி அதில் உள்ளே விட்டு பூட்டுப் போட வேண்டும். (வயிறு புண்ணானதுக்குக் காரணம், ஒரு வாரம் ஆந்திர சாப்பாடு!)
             
ரா.கி. ரங்கராஜன்:  எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி உருக்கமான கதைகளை எழுதுவீர்கள்?  நகைச்சுவையாக எழுதினால் ஏன்ன?.... ஆமாம், விலை ரூ.18 என்று போட்டிருக்கிறீர்களே, கிலோ ரேட் தானே அது?

சுஜாதா:  உங்கள் புத்தகத்தை இத்துடன் 17 காபிகள் வாங்கி விட்டேன். அவைகளை என் எதிரிகளுக்கு அனுப்பியிருக்கிறேன். அதைப் படித்து அவர்கள் பாயைப் பிராண்டட்டும்.       

December 13, 2014

பாடாதே கமலா!

சுவாரசியமில்லாமல் டி.வி. யைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அந்தச் சமயம் என் அருமை மனைவி கமலா, "கிளம்புங்க", என்றாள்.
"எங்கே கமலா?" என்று பயந்தபடியே கேட்டேன். கமலா என்னை எங்கேயாவது அழைத்துப் போகிறாள் என்றால், எனக்குச் செலவு நிச்சயம் என்பது அர்த்தம்!

"என்னவோ தூக்குமேடைக்குப் போறவன் மாதிரி பெதபெதன்னு நடுங்கறீங்களே... ஒண்ணும் பயப்பட வேண்டாம். உங்க பணத்திற்குச் செலவு வைக்கலை... சும்மா நம்ப பெசன்ட் நகர் பிள்ளையர் கோவில் வரைக்கும் போய்ட்டு வரலாம். வாங்கோ'' என்றாள்.
“கோவில்ல என்ன விசேஷம்?''
“ஸ்ரீராமநவமி கச்சேரி நடக்கிறது. இன்னிக்கு மைலாப்பூர் மகளிர் மன்றம் பஜன் நடத்தறாங்க. ரொம்ப நல்லா இருக்குமாம். போய்க் கேட்டுட்டு வரலாம்.''
“இல்லை கமலா...'' என்று இழுத்தேன்.
“இந்த டி. வி. யைத் தூக்கிக் கடாசிடப் போறேன். எப்பப் பார்த்தாலும் டி. வி. தானா...? அதுலேயும் இந்தச் சோப்பு விளம்பரமாப் போட்டு, எல்லாத்திலேயும் பொண்ணு குளிக்கிறதைக் காட்டறானா. அதை அலுக்காமல் பார்த்துண்டு இருங்கோ...''
“இல்லை கமலா...!''
“கொஞ்சாதீங்கோ... அந்த மன்றத் தலைவியின் வீட்டுக்காரர் தொச்சுவுக்குப் பெரிய கான்ட்ராக்ட் தரப் போறார். அதனால் தொச்சு உங்களையும் அழைச்சுகிட்டு வரச் சொன்னான். நாம் போனா அவனுக்குப் பெருமை. என் தம்பி தொச்சுவுக்கு ஏதாவது அனுகூலம் கிடைச்சால், உங்கள் கப்பல் கவிழ்ந்துடுமா?''
''தொச்சு கவிழ்க்க இனிமேல் என்னிடம் கப்பல் இல்லை'' என்னறு மனதுக்குள் சொல்லிக் கொண்டு டி. வி. யை அணைத்து விட்டுக் கமலாவுடன் கிளம்பினேன்.

December 05, 2014

வியப்பு.. மேலும் வியப்பு

 FASTFOOD சேவை
சிகாகோவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான மருத்துவர் மகாநாட்டில் என் பெண் கலந்து கொண்டாள். பிரம்மாண்டம் என்றால் சாதாரண பிரம்மாண்டம் இல்லை. 25,000 -க்கும் மேற்பட்ட புற்று நோய் மருத்துவர்கள் கலந்து கொள்ளும் நான்கு நாள் மகாநாடு. மிகப் பெரிய ஹோட்டலில், ஏராளமான அறைகளிலும், கூடங்களிலும் பல்வேறு  கூட்டங்கள்; ஆராய்ச்சி உரைகள், பெரிய பெரிய விளக்கப் போஸ்டர்கள்,  எலக்ட்ரானிக் அறிவிப்புப் பலகைகள், ஆங்காங்கே ஃபாஸ்ட் ஃபுட் வசதிகள்  என்று திருவிழா!

ஒரு நாள் சுமார் பகல் 12 மணி வாக்கில் என் பெண் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கக் கூட்டம் நிறைவடைந்தது. அவள் 12.30 மணி நடை பெறும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தாள். அந்தக் கூட்டம்  சற்று தள்ளி 10  நிமிடம்  நடந்து போகும் தூரத்தில் இருந்தது.  “சரி.. வராந்தாவில் இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கவுன் டரில் அவசரமாகப்  பகலுணவுச் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று எண்ணி அங்கு போனாள்.,  ”மேடம்.. பில்லிங் மெஷின் வேலை செய்யவில்லை. சூபர்வைசர்  இதோ  வந்து விடுவார்” என்றார் ஒரு சர்வர் பெண்மணி.
“பரவாயில்லை.. பில் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்.”
“ அப்படி வாங்கிக்கொள்ள முடியாது. அதை திறந்தால்தான் பாக்கி சில்லறை தரமுடியும்”
“ இந்தாருங்கள். இது, இது, இது -- இந்த மூன்றும் எடுத்துக் கொள்கிறேன். இந்தாருங்கள் 25 டாலர். மீதியை அடுத்த கூட்டம் முடிந்த பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்றாள்.
” நீங்கள் இப்போது பணம் கொடுக்க வேண்டாம். அப்புறம் வந்து கொடுங்கள்” என்றாள் அந்தப் பெண்மணி.