December 13, 2014

பாடாதே கமலா!

சுவாரசியமில்லாமல் டி.வி. யைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அந்தச் சமயம் என் அருமை மனைவி கமலா, "கிளம்புங்க", என்றாள்.
"எங்கே கமலா?" என்று பயந்தபடியே கேட்டேன். கமலா என்னை எங்கேயாவது அழைத்துப் போகிறாள் என்றால், எனக்குச் செலவு நிச்சயம் என்பது அர்த்தம்!

"என்னவோ தூக்குமேடைக்குப் போறவன் மாதிரி பெதபெதன்னு நடுங்கறீங்களே... ஒண்ணும் பயப்பட வேண்டாம். உங்க பணத்திற்குச் செலவு வைக்கலை... சும்மா நம்ப பெசன்ட் நகர் பிள்ளையர் கோவில் வரைக்கும் போய்ட்டு வரலாம். வாங்கோ'' என்றாள்.
“கோவில்ல என்ன விசேஷம்?''
“ஸ்ரீராமநவமி கச்சேரி நடக்கிறது. இன்னிக்கு மைலாப்பூர் மகளிர் மன்றம் பஜன் நடத்தறாங்க. ரொம்ப நல்லா இருக்குமாம். போய்க் கேட்டுட்டு வரலாம்.''
“இல்லை கமலா...'' என்று இழுத்தேன்.
“இந்த டி. வி. யைத் தூக்கிக் கடாசிடப் போறேன். எப்பப் பார்த்தாலும் டி. வி. தானா...? அதுலேயும் இந்தச் சோப்பு விளம்பரமாப் போட்டு, எல்லாத்திலேயும் பொண்ணு குளிக்கிறதைக் காட்டறானா. அதை அலுக்காமல் பார்த்துண்டு இருங்கோ...''
“இல்லை கமலா...!''
“கொஞ்சாதீங்கோ... அந்த மன்றத் தலைவியின் வீட்டுக்காரர் தொச்சுவுக்குப் பெரிய கான்ட்ராக்ட் தரப் போறார். அதனால் தொச்சு உங்களையும் அழைச்சுகிட்டு வரச் சொன்னான். நாம் போனா அவனுக்குப் பெருமை. என் தம்பி தொச்சுவுக்கு ஏதாவது அனுகூலம் கிடைச்சால், உங்கள் கப்பல் கவிழ்ந்துடுமா?''
''தொச்சு கவிழ்க்க இனிமேல் என்னிடம் கப்பல் இல்லை'' என்னறு மனதுக்குள் சொல்லிக் கொண்டு டி. வி. யை அணைத்து விட்டுக் கமலாவுடன் கிளம்பினேன்.
பெரிய பெரிய படகுக்காரர்களிலிருந்து இறங்கி வந்த மகளிர் மன்ற மாமிகள், மேடையில் உட்கார்ந்ததும் நல்லி ஷோரூமைத்தான் நினைவுபடுத்தினார்கள். ஒரே பளபளா! ஒரே தகதகா! ஒவ்வொரு மாமிக்கும் ஒரு பி. ஏ. கூடவே பிளாஸ்க்கில் காப்பி, ஜøஸ் என்று கொண்டு வந்திருந்தார்கள்.
அவர்கள் மேடையில் உட்கார்ந்து, சுருதி சேர்த்து, தியானம் செய்து, பக்தி பாவத்தை வரவழைத்துக் கொண்டு பாட ஆரம்பித்தார்கள்.

பக்திப் பாடல் நிகழ்ச்சி முடிந்தது. திடீரென்று முளைத்தான் தொச்சு...
“அத்திம்பேர்... வாங்கோ, உங்களை அறிமுகப்படுத்தறேன்'' என்று என்னை இழுத்துக் கொண்டு போனான், இசைக் குழு லீடர் பங்கஜம் கிருஷ்ணனிடம்.
“மாமி... இவர்தான் எங்க அத்திம்பேர் அகஸ்தியன்.''
“நீங்கதானா அகஸ்தியன்! உங்க கதையெல்லாம் ரொம்ப நன்னாயிருக்கும்'' என்றார் ப. கி.
மரியாதை தெரிந்தவனாதலால் நான் “உங்க பாட்டை விடவா..? நான் எத்தனையோ பஜனையைக் கேட்டிருக்கேன். உங்களை மாதிரி இவ்வளவு பக்தி பூர்வமா, மனத்தைத் தொடற மாதிரி பாடிக் கேட்டதேயில்லை. உங்களுடையது சங்கீதமே இல்லை. தெய்வீகம்'' என்றேன்.
கோவிலில் ஒரேயடியாகப் பொய் சொல்லக் கூடாது. இருந்தாலும் தொச்சுவுக்கு ஒரு நன்மை பயக்கும் பொய் என்பதால் சொன்னேன்!
நான் கொடுத்த சர்ட்டிபிகேட்டைக் கேட்டு உச்சிக் குளிர்ந்து, புளகாங்கிதம் அடைந்தார் பங்கஜம் கிருஷ்ணன். இந்தச் சமயம் கிருஷ்ணனும் அங்கு வரவே, தொச்சு அவரருகில் சென்று ஏதோ கிசுகிசுத்தான்.
“அதுக்கென்னப்பா, முடிச்சுக் கொடுத்திடறேன்'' என்றார்.
தொச்சுவுக்குக் காரியம் பலித்து விடும்!
ஒரு வாரம் கழிந்து ஒரு நாள் நான் வீட்டிற்குள் நுழைந்தபோது, வீட்டிற்குள் நிறைய மாமிகளின் சளசள கேட்டது. நடுநடுவே ஒரு கீச்சுக்குரல் (அங்கச்சி?) கேட்டது.
என்னுடைய இடது கண், தோள், கை, கால் எல்லாம் துடித்தது. துன்பம் வரப் போகிறது என்பதற்கு முன்னோட்டமா?
காலிங் பெல்லைப் பலமாக அழுத்தினேன்.
கமலா கதவைத் திறந்தாள். உள்ளே சுமார் டஜன் மாமிகள் - எல்லோரும் என் பேட்டை வாசிகள்தான்-இருந்தார்கள்.
“என்ன கமலா, லேடீஸ் மகாநாடு மாதிரி இருக்கிறதே. ஏதாவது பிக்னிக், நாடகம் பிளானா?'' என்றேன்.
“இல்லை அத்திம்பேர், நாங்கள் எல்லோரும் அக்கா தலைமையிலே ஒரு லேடீஸ் பஜன் குழு ஆரம்பிக்கப் போகிறோம்'' என்றாள் அங்கச்சி.
“அடப்பாவமே. கோவிலுக்குப் போனால் வினை போகும் என்பார்களே, இப்போது என்னடாவென்றால் வினை பிடித்து விட்ட மாதிரி இருக்கிறதே! இவர்கள் பாடுவார்கள். அதற்காக நான் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ!
“எல்லாமே தொச்சுவின் ஐடியாதான்... அவனுக்கு எப்படித்தான் இப்படி நல்ல நல்ல ஐடியாவெல்லாம் தோன்றுகிறதோ?'' என்று கமலா சர்ட்டிபிகேட் கொடுத்தாள்.
அந்தச் சமயம் வாயைத் துடைத்தபடி தொச்சு வந்தான், டைனிங் ஹாலிலிருந்து.
“ஆமாம் அத்திம்பேர்... அக்காவுக்கு இருக்கிற சங்கீத ஞானத்திற்கும் பக்திக்கும் ஒரு குரூப் அமைச்சால், அந்த பேத்தல் பங்கஜம் கிருஷ்ணன் குரூப்பைத் தூக்கி அடிச்சுடலாம்னு தோணித்து... அங்கே ஒரு மாமிக்கும் சுருதி சேராது... பாட்டும் தெளிவில்லே... என்னமோ பெரிய பெரிய கார் இருந்துவிட்டால் போதுமா...?'' என்று கேட்டான்.
“என்னப்பா... அந்தக் கிருஷ்ணன் உனக்குக் கான்டிராக்டைத் தரலையா?'' என்று யதார்த்தமாகக் கேட்டேன்.
“பெரிய கான்டிராக்ட்... விடுங்க அத்திம்பேர். அந்தப் பிசாத்து கான்டிராக்டையே தர அவருக்கு வக்கில்லை.... எவ்வளவு பெரிய எழுத்தாளர் நீங்க...? தண்டத்திற்கு உங்களை அவங்க பஜனுக்கு அழைச்சுண்டு வரச் சொன்னேன் அக்காகிட்டே...  அவங்களுக்கு இவ்வளவு மதிப்பு தளாது... விடுங்கோ, அத்திம்பேர். இந்தக் கான்டிராக்ட் இல்லாவிட்டால் நூறு கான்டராக்ட் இருக்கிறது'' என்றான் தொச்சு.
“அந்த நூறில் ஒன்றிரண்டை நமக்குத் தள்ளி விடேன்'' என்றேன். தொச்சுவும் அங்கச்சியும் என் அருமை மாமியாரும் கமலாவும் விழுந்து விழுந்து சிரித்து விட்டார்கள்.
''அதனால் இங்கே அக்கம்பக்கம் இருக்கிற மாமிகளை எல்லாம் 'திரட்டி', "அஷ்டலட்சுமி பஜனை மண்டலி'ன்னு ஒண்ணை நான்  ஆரம்பிக்கப் போகிறேன்'' என்றாள் கமலா.
''ஜமாய் கமலா!'' என்றேன், முழம் போய் விட்டது. இனி நிறுத்த முடியாது!
தினந்தோறும் எங்கள் வீட்டில் பாடல்கள் ஒத்திகை நடந்தது. அக்கம்பக்கத்து மாமிகள் என்கிற ஒரே காரணத்தால் இசைக் குழுவிற்குப் பலர் வந்திருந்ததால், இசையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.
வந்தவர்களுக்குக் காப்பி போட்டு உபசரித்தாள் என் மாமியார். அதற்கு உதவியாக இருப்பதற்காகவும், பாட்டுக்குச் சுருதி போடுவதற்காகவும் அங்கச்சியும் தினமும் வர ஆரம்பித்தாள்.
பார்க்கப் போனால், சுருதி போடுவதால் ஒரு லாபமுமில்லை! யாராவது சுருதியோடு சேர்ந்து பாடினால்தானே!
ஒருநாள் கமலாவிடம் ''என்ன கமலா எத்தனை வருஷம் ரிகர்சல் நடக்கும்?'' என்று கேட்டேன்.
“ரிகர்சல் முடிஞ்சு போச்சு. கச்சிதமாக இரண்டு மணி நேர புரோகிராம் பண்ணறதுக்குத் தயார் பண்ணியிருக்கோம்... நங்கநல்லூர்ல கூப்பிட்டிருக்கா... எங்களை'' என்றாள் கமலா.
“எப்போ...?''
“நவராத்திரிக்கு!''
“நவராத்திரி எங்கேயோ ஆறு மாசம் இருக்கே?''
“இருக்கட்டுமே... கடைசி நிமிஷத்திலே வந்தால் நாங்க வேறே எங்கேயாவது ஒத்துண்டு இருந்தால் என்ன செய்யறதுன்னு இப்பவே புக் பண்ணிட்டா'' என்றாள். தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான். ஆனால் இவ்வளவா?
“அதனால் இனிமே ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒவ்வொருத்தர் வீட்ல பஜனை வெச்சுக்கப் போறோம்'' என்றாள் கமலா.
“வெரிகுட்'' என்றேன் உற்சாகமாக. அது "வெரிகுட்' அல்ல. அதற்கு நேர் எதிர் என்று பின்னால் நடந்தவைகள் நிரூபித்தன.

வியாழக்கிழமை வந்தாலே கமலா பரபரப்பாகி விடுவாள். விடியற்காலை நாலு மணிக்கே எழுந்து சீக்கிரம் சமையலை முடித்து விடுவாள். அங்கச்சியும் வருவாள். கூடவே சில பல இலவச இணைப்புகளும் வரும். ஆகவே அவைகளுக்காகவும் எக்ஸ்ட்ரா சமையல் பண்ணுவாள்.
நாலைந்து வியாழக்கிழமைகள் போயின. ஒரு வியாழக்கிழமை காலை, கமலா பரபரக்க என்னிடம் வந்தாள். ''பேப்பர் படிக்கறச்சே வந்துட்டேன். மூணாவது கண்ணைத் திறந்துடாதீங்க'' என்று சொல்லிவிட்டு, ''கொஞ்சம் முந்திரிப்பருப்பும், திராட்சைப் பழமும் வாங்கிண்டு வர்றீங்களா?'' என்று கேட்டாள்.
“இன்னிக்கு என்ன பண்டிகை கமலா?''
“பண்டிகை ஒண்ணுமில்லை. இன்னிக்கு எங்க பஜனை நடக்கிறது இல்லை. அப்போ பூஜையிலே வைக்க ரவா கேசரி பிரசாதம் பண்ணலாம்னு யோசனை.''
“இத்தனை நாளா பிரசாதம்னு எதுவும் நீ கொண்டு வந்து கொடுத்ததில்லையே?''
“இந்த வாரத்திலேயிருந்துதான் ஆரம்பிச்சிருக்கோம். யார் வீட்டிலே பஜன் நடக்கிறதோ அவங்க ஏதாவது பிரசாதம் பண்ணணும்னு. இன்னிக்கு நம்ப வீட்டிலே. அதான் ரவா கேசரி பண்ணப் போறேன்'' என்றாள் கமலா.
கஷ்டங்கள் தனியாக வராது என்பார்கள். வீட்டில் பஜனை நடத்துவதே கஷ்டம். அது போதாதென்று இம்மாதிரி பிரசாதச் செலவு வேறே. ஆண்டவா!
“போகட்டும், பத்து பன்னிரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதானே இந்தச் செலவு'' என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு கடைக்குப் போய் கமலா கேட்டவைகளை வாங்கி வந்து கொடுத்தேன்.
அடுத்த வியாழன் மாலை வீட்டிற்குள் காலடி வைத்ததும், கமலா ஒரு ரவிக்கைத் துண்டைக் காட்டினாள்.
“என்ன கமலா இது?'' என்று கேட்டேன். ஓர் எரிமலை வாயைத் திறக்கக் காத்திருக்கிறது என்று என்னுள் கௌளி ஜோசியம் சொல்லிற்று.
''தெரியலை...? ரவிக்கைத் துண்டு. முப்பது ரூபாயாவது இருக்கும். இன்னிக்கு சுபா கண்ணன் வீட்ல பஜனை... பாயசம் கொடுத்து எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு, ரவிக்கைத் துண்டு கொடுத்தாள்.''
“எல்லோருக்குமா?''
“பின்னே எல்லோருக்கும் கொடுக்காமல், ஒருத்தருக்கு மட்டும் கொடுப்பாளா? போகிறதே உங்க புத்தி! உங்க பரம்பரையிலேதான் இந்த மாதிரி கேள்வி கேட்கத்தோணும்... ஹூம்'' என்று 70 எம். எம் பெருமூச்சு விட்டாள்!
“ என்ன கமலா, என்னமோ ஒரேயடியா அலுத்துக்கறியே? இப்ப நான் என்ன கேட்கக் கூடாததைக் கேட்டுட்டேன். என்ன கொலை பாதகம் பண்ணிட்டேன்?'' என்று கோபமாகக் கேட்டேன்.
“கோபம்... கோபம்... கோபம்... இது ஒண்ணுக்கும் குறைச்சல் இல்லே... நம் வீட்டில் பஜனை நடந்த போது இது மாதிரி கொடுக்கலாம்னு நினைச்சேன். பிசாத்து முந்திரிப் பருப்பு ('கிலோ 180 ரூபாய் பிசாத்தாம்!') வாங்கிண்டு வரவே ஆயிரம் அஷ்டகோணலாக்கிk (அதாவது 1000x8, எட்டாயிரம் கோணல்?) கொண்டீர்கள்?''
“ஐயோ கமலா... ரவிக்கைத் துண்டு கொடுக்கணும்னு நினைச்சிருந்தால், சொன்னால் நான் சரின்னு சொல்லியிருப்பேனே!''
“உங்க அக்காவுக்குத் தர்றேன்னு சொல்லியிருந்தால் சரின்னு சொல்வீங்க...''
“போதும் கமலா... எப்பவும் இப்படி கரிச்சுக் கொட்டறதை நிறுத்து!''
“அடடே... ஐயாவுக்குக் கோபம் வந்துடுத்து. நாம் வாய்க்குப் பூட்டு போட்டுண்டுடணும்,'' என்றாள். முணுமுணுத்தபடியே சமையல் கட்டிற்குள் போய், மீதி இருந்த கோபத்தைப் பாத்திரத்தின் மீது காட்டினாள்!
மறுபடியும் வியாழன் வந்தது. எனக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. இன்னிக்கு 

எந்த சுபா கண்ணன் எதைக் கொடுக்கப் போகிறாளோ, என் மன அமைதியைக் கெடுக்கப் போகிறாளோ என்று அடிமனதில் ஒரு பயம் ஏற்பட்டது.
அன்று மாலை வீடு திரும்பும் போது வழக்கத்திற்கு மாறாக மல்லிகைப் பூவும் திருநெல்வேலி அல்வாவும் வாங்கிக் கொண்டு வந்தேன். (சினிமாக்களில் இப்படி வாங்கி வந்து மனைவியைச் சமாதானப்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். எனக்குக் கற்பூர புத்தி. பார்த்தால் சட்டென்று பிடித்துக் கொண்டு விடுவேன்!)
“என்ன கமலா? இன்றைக்கு யார் வீட்டில் பஜன், எப்படி இருந்தது?'' என்று கேட்டேன்.
“யோகம் ஈசுவரன் வீட்ல...''
“ரவிக்கைத் துண்டு உண்டா?''
“ஏன் ரவிக்கைத் துண்டுக்குப் பறக்கறீங்க? ('நான் பறக்கிறேனாம்!') வடை, சர்க்கரைப் பொங்கல், ரோஸ் மில்க் கொடுத்தா. அடடா என்னமா இருந்தது தெரியுமா?''
“உன்னை விடவா நன்னா சர்க்கரைப் பொங்கல் பண்றா? பண்ண முடியாதே?'' (இது ஐஸ்!)
“ஐயோ, சர்க்கரைப் பொங்கலைச் சொல்லலை. அதைக் கொடுத்த கிராக்கரி, கப், தம்ளர் எல்லாம் என்னமா இருந்தது. தெரியுமா? இன்னிக்கெல்லாம் பார்த்துண்டே இருக்கலாம் போல அவ்வளவு பிரமாதமா இருந்தது. ஹும்... நம் வீட்டிலேயும் ஆயிரம் நொக்கு வாங்கிய அதிசய டம்ளர்கள், அலைபாயற விளிம்புத் தட்டுகள், பாம்பு மாதிரி நெளியற ஸ்பூன்கள்... அவமானம், அவமானம்'' என்றாள்.
மறுநாள் - நாங்கள் பர்மா பஜார் சென்றோம். அங்கிருந்த மகமது யாசீனோ முர்ஷத் பாஷாவோ, சென்ற ஜன்மத்தில் எங்களிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொண்டார்கள்!
மறுபடியும் வியாழன் வந்தது - என்னைக் கேட்காமலேயே. என்னைக் கேட்டிருந்தால் வியாழனே வரக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பேன். வியாழன் மாலை வீடு திரும்புப் போது, ஒரு பாலியெஸ்டர் புடைவை வாங்கிக் கொண்டு வந்தேன்.
“கமலா, எப்படியிருந்தது பஜனை? - இதோ பார். உனக்காகப் பாலியெஸ்டர் புடைவை. டிஸ்கவுண்ட்ல கிடைச்சது'' என்றேன்.
“இப்ப புடைவை இல்லைன்னு யார் அழுதது? வீட்டிலே ஒழுங்கா ஒரு நாற்காலி இருக்கா? திவான் இருக்கா? இருக்கிற ஏழு நாற்காலி எட்டு வித டிசைன்ல இருக்கு. சகிக்கலை'' என்றாள்.
“எனக்குக் கோபம் வரும். நல்ல நாற்காலி வாங்கறதுக்கு நான் ரெடி. புது டிசைன் எங்கே கிடைக்கிறது? பணம் வேணுமானால் கொடுத்துடறேன். வாங்கறது உன் பொறுப்பு!'' என்றேன், அரைக் கோபத்துடன்.
“துட்டை விசிறி எறிஞ்சா எல்லாம் வரும். தொச்சு சாயங்காலம் வந்திருந்தான். பேச்சு வாக்கிலே சொன்னேன். யாரோ அமெரிக்கன் லைப்ரரியிலே அவனுக்குத் தெரியுமாம். அங்கே அப்பப்போ ஏலம் போடுவாளாம். பழைய மேஜை, நாற்காலிகளை. பழசுன்னு பேரே தவிர, சும்மா ஜொலிக்குமாம்...''
கமலாவின் விரிவுரையைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் மனதுக்குள்ளே இருக்கும் லெட்ஜரைத் திறந்து, மேஜை நாற்காலி வாங்கும் வகையில் (வீண்) செலவு ரூ.3000/- என்று பதிவு செய்து கொண்டேன்!
அடுத்த வியாழக்கிழமையைப் பயந்து கொண்டே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
“கமலா... யார் வீட்டில் புது கர்ட்டன், கார்ப்பெட், பார்த்துவிட்டு வந்திருக்கிறாய்? என்று ஆரம்பித்தேன்.
“ஒரு மண்ணும் பார்க்கலை... இது பாருங்க... நீங்களே சொல்லுங்க... ஜானகி கோபாலன் வீட்டில் பஜனை... என்னாச்சு தெரியுமா? எல்லாருக்கும் இலை போட்டுச் சாப்பாடு போட்டாள். அப்புறம் எல்லாருக்கும் வெற்றிலை பாக்குலே வெள்ளி ஜோதி கொடுக்கறா... அவளுக்குப் பணம் இருக்கிற திமிர்தானே இப்படி தர்றாள்? நாளைக்கு நம் வீட்டிலே இப்படி கொடுக்கலைன்னு, ஆயிரம் நங்கு நடிக்க மாட்டாளா?''
“ஆமாம். ஆமாம். ஏதோ சாமி மேலே பாடணும். அதிகம் செலவில்லாமல் பிரசாதம் கொடுக்கணும். அதை விட்டுட்டு இவங்க பணக்காரங்கன்னு காண்பிக்கிறதுக்கு இதுதான் இடமா, சமயமா?'' (ஜிங்-சிங் சத்தம் கேட்கிறதா?)
“அது மட்டுமில்லே. அன்னிக்கு சுபா கண்ணன் கொடுக்கலை ரவிக்கைத் துண்டு... ’அது நல்ல குவாலிட்டியே இல்லை. எங்க வீட்டு வேலைக்காரிக்குக் கூட இது மாதிரி வாங்கிக் கொடுக்க மாட்டோம்'னு இளக்காரமா சொன்னா'' என்றாள்.
“சுபா கண்ணன் நேரிலேயா?''
“உம்... சுபா வரலை இன்னிக்கு.  அதனால்தான் இப்படி பேசினா... சுபா எதிரே பேசியிருந்தால் அவ பிய்ச்சு உதறிட மாட்டாளா?''
“ஆனாலும் கர்வம் பிடிச்சவளா இருக்கிறாளே ஜானகி கோபாலன்'' என்றேன்.
“கர்வமா, பின்னேயும் கர்வமா?'' என்று, வாழ்க்கையில் முதல் தடவையாக என்னுடன் ஒத்துப் போனாள் கமலா.
அந்த சமயம் தொச்சு உள்ளே வந்தான்.
“அத்திம்பேர் நீங்க லக்கி. அமெரிக்கன் சென்டர்ல ஒரு "லாட்'டாக சேர், நாற்காலி, கிராக்கரி, கட்-கிளாஸ்னு அப்படியே பிடிச்சுண்டு வந்திருக்கேன். டெம்போவில் வந்திருக்குது'' என்றான்.
ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். டெம்போவை, தெம்பில்லாமல்!
அடுத்த வியாழன் வந்தது. மாலையும் வந்தது. நானும் வீட்டுக்கு வந்தேன்.
கமலா சூடாகக் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்.
“இன்னிக்கு என்ன பிரசாதம்?'' என்று கேட்டேன். “பஜனை நல்லா நடந்ததா?''
“பஜனையை விட அர்ச்சனைதான் நிறைய நடந்தது... ஹும். உங்க பேச்சைக் கேட்காமல், பஜனை அது, இதுன்னு ஆரம்பிச்சது தப்புதான்'' என்றாள்.
ஆண்டவா! நான் எங்கிருக்கிறேன்? என் மனைவி கமலாவா இப்படிச் சொல்கிறாள்!
கமலா மேலும் தொடர்ந்தாள்: “இன்னிக்கு லட்சுமி சீனுவாசன் வீட்டில பஜன். அந்த கர்வம் பிடிச்சவ - யாரு, அதுதான் ஜானகி கோபாலன் வரலை. எல்.ஐ.ஜி. வீடாம்.  அங்கே வர்றதுு அவ கௌரவத்துக்குக் குறைஞ்சுடுமாம். பஜனை முடிந்ததும் வந்தது சுபா கண்ணன் கொடுத்த ரவிக்கைத் துண்டைப் பற்றி பேச்சு.. ’ஜானகிக்கு இவ்வளவு வாய் கூடாது'ன்னு இவ சொல்ல, ஜயலட்சுமி ராமன் பதிலுக்கு, “அவ அபிப்பிராயம் அது. சொன்னா அவளைக் கேட்க நீ யார்னு'' கேட்க. ஆரம்பிச்சுதம்மா பிலுபிலுன்னு சண்டை.. நாலு பேர் சுபா பக்கம், நாலு பேர் ஜானகி பக்கம்... அப்பா, அப்பா... குழாயடி கெட்டது... சீ... சீ... என்ன பேச்சு? என்ன ஏச்சு...? கூசறது... சொல்றதுக்கே...''
“இதெல்லாம் அல்ப விஷயங்கள். இதக்குப் போய்  சண்டை போட்டுண்டு இருக்கலாமா?'' என்றேன். ஏதாவது அபிப்பிராயம் சொல்ல வேண்டுமே!
“பஜன் பண்ணவேதான் இதெல்லாம் வர்றது. அதனால பஜனை குரூப்பையே கலைச்சிட்டேன்...''
“அடாடா, ஏன் கமலா... சுவாமி விஷயம், பக்தி விஷயம். சங்கீத விஷயம். கலைச்சுட்டியே'' என்றேன். முகத்தில் ஆயிரம் லிட்டர் சோகத்தைத் தேக்கியபடி! (ஏய், சூப்பர் ஸ்டார்களே, நடிப்பு மன்னர்களே, புரட்சித் திலகங்களே, அந்த இரண்டு நிமிஷம் நான் காட்டிய சோகத்தை உங்களால் இந்த ஜன்மத்தில் கொண்டு வர முடியுமா? நிச்சயமாக முடியாது.)
“அவங்க அவங்க தங்கள் வீட்டு சேர் நாற்காலியைப் பற்றிய பெருமை அடிச்சுக்கறதுக்கும் புது கிராக்கரியைப் பற்றிப் பெருமை அடிச்சுக்கிறதுக்கும் பஜனை குரூப்தானா அகப்பட்டது? வேண்டாம் சாமி'' என்றாள் கமலா.
"யூ ஆர் ரைட். கமலா'' என்றேன். முகத்தில் சோகம். உள்ளத்தில் மகிழ்ச்சியுடன்!

5 comments:

  1. இவர்கள் பாடுவார்கள். அதற்காக நான் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ!

    அருமையான பாடல்கள்...

    ReplyDelete
  2. ஹாஹாஹா! அருமையா இருக்கு கதை! நன்றி!

    ReplyDelete
  3. WOW!!!
    Bhajanaiyil arambithu archanaiyil thodarnthu iruthiyil prachanayil mudinthathu.

    ReplyDelete
  4. Appa, navaraaththirikku unga aaththukku vanthaa, american crockeryila munthiri kaesariyum, cut-glassla rose milkum, aayiram dokku vaangiya tumblerla coffeeyum saappidalaam! Intha katturaiyil ungal dhairyam angangu therikiRathae! - R. J.

    ReplyDelete
  5. அப்பா இனிமேல் அந்த சோப்பு விளம்பரங்களை நிம்மதியாக பார்க்கலாம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!