நான் எழுதிய “கமலா, கலியாணமே, வைபோகமே” புத்தகம் 1985-ம் ஆண்டு வெளியாயிற்று. புத்தகத்தின் முதல் பக்கத்தில் நான் சில குறும்புக் குறிப்புகளை எழுயிருந்தேன். அவற்றை இங்கு தருகிறேன்.
முன்னணி நகைச்சுவையாளர்களின்
பாராட்டுகள்
சோ: உங்கள் நகைச்சுவை கதைகளைப் படித்து ரசித்தேன். உடனே எரிச்சலும் அடைந்தேன். இந்த மாதிரி அபாரமான நகைச்சுவை நமக்கு எழுத வரவில்லையே என்று என் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டேன். ஏதோ ஒப்புக்குச் சொல்லவில்லை. வேண்டுமானால் வந்து என் தலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மாதிரி நகைச்சுவை எழுத்தாளர்கள் எங்கேயோ இருக்க வேண்டும். உதாரணமாக, வட துருவம், சஹாரா பாலைவனம், இமய மலை உச்சி!
சாவி : நீங்கள் பிரமாதமான நகைச்சுவை எழுத்தாளர் என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டீர். ஆமாம், எத்தனை தடவை நிரூபித்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லையே! நீங்கள் தமிழில் எழுதுவதற்குப் பதில் புஷ்டு, ஸ்வாஹிலி போன்ற மொழிகளில் எழுதிப் பாருங்கள். அப்போதாவது நம்புகிறார்களா என்று பார்க்கலாம்....
பாக்கியம் ராமசாமி: ஹைய்யோ...
ஹைய்யோ... வயிறு புண்ணாய்ப் போய்விட்டது. ! உமக்கு கோவில் கட்டி அதில் உள்ளே விட்டு பூட்டுப் போட வேண்டும். (வயிறு புண்ணானதுக்குக் காரணம், ஒரு வாரம் ஆந்திர சாப்பாடு!)
ரா.கி. ரங்கராஜன்: எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி உருக்கமான கதைகளை எழுதுவீர்கள்? நகைச்சுவையாக எழுதினால் ஏன்ன?.... ஆமாம், விலை ரூ.18 என்று போட்டிருக்கிறீர்களே, கிலோ ரேட் தானே அது?
சுஜாதா: உங்கள் புத்தகத்தை இத்துடன் 17 காபிகள் வாங்கி விட்டேன். அவைகளை என் எதிரிகளுக்கு அனுப்பியிருக்கிறேன்.
அதைப் படித்து அவர்கள் பாயைப் பிராண்டட்டும்.
கி. ராஜேந்திரன்: உங்கள் புஸ்தகத்திற்கு மெடிகல் கவுன்சில் பரிசு கிடைத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்... இத்தனைக்கும் முதல் இரண்டு பக்கங்களுக்கு மேல் நான் படிக்கவில்லை. அதற்குள் அறுவை தாங்காமல் தூங்கி விடுகிறேனே... தூக்கமின்மை வியாதியஸ்தர்களுக்கு ஒரு சிறந்த தயாரிப்பை உருவாக்கியதற்கு உங்களுக்கு மருத்துவ உலகின் பாராட்டு கிடைக்கும்.
கி. ராஜேந்திரன்: உங்கள் புஸ்தகத்திற்கு மெடிகல் கவுன்சில் பரிசு கிடைத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்... இத்தனைக்கும் முதல் இரண்டு பக்கங்களுக்கு மேல் நான் படிக்கவில்லை. அதற்குள் அறுவை தாங்காமல் தூங்கி விடுகிறேனே... தூக்கமின்மை வியாதியஸ்தர்களுக்கு ஒரு சிறந்த தயாரிப்பை உருவாக்கியதற்கு உங்களுக்கு மருத்துவ உலகின் பாராட்டு கிடைக்கும்.
ராஜேந்திரகுமார்: உங்கள் புத்தகத்தில் உள்ள நகைச்சுவையின் உண்மையான மதிப்பு இப்போது, தெரியாது. இன்னும் 5000 வருஷங்களுக்குப் பிறகு தான் தெரியும்.
முக்கியக் குறிப்பு: ஆசிரியருக்குக் கற்பனையே கிடையாது என்று இனிமேல் யாரும் கூற முடியாது. மேலே உள்ளவை யாவும் அவருடைய சொந்தக் கற்பனையே!
"கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்" புத்தகத்தில் நான் எழுதிய முன்னோட்டம்
"கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்" புத்தகத்தில் நான் எழுதிய முன்னோட்டம்
* கோபம் வந்தால் கமலா வேஸ்ட் பண்ண மாட்டாள். ஒருத்தர் இல்லாவிட்டால் வேறு ஒருவர் மேல் அதைச் செலுத்தி விடுவாள்.
* கமலா என்னை எத்தனை விதமாகத் திட்டினாலும், "நாசமாகப் போக' என்று திட்டமாட்டாள். காரணம் என் மேல் அவளுக்கு அளவு கடந்த ஆசை!
* தொச்சு மட்டும் பவநகர் சமஸ்தானத்திற்கு திவானாகப் போயிருந்தால், சமஸ்தானம் திவாலாகிப் போயிருக்கும்.
* ....என்று கமலாவிற்கு ஜிங்-சிக் போட்டேன். வெற்றிகரமான தாம்பதியத்திற்கு ஆதார சுருதியே ஜிங்-சிக் தான்!
* கமலா ஹார்மோனியம் வாசிக்க, ஏதோ ஒரு கட்டை சுயாட்சி பெற்று, தன்னிச்சையாக உரிமைக் குரலை எழுப்பியது. கமலாவின் கட்டைக் குரலுக்கு, ஹார்மோனிய "கட்டை"யின் குரல் எவ்வளவோ தேவலாம்!.
* கமலா பாடியது கர்நாடக இசை அல்ல. கர்நாடக இ(ம்)சை!
* "கொள்ளை லாபம்' என்றாள் கமலா. "கொள்ளை போய் விடும் நமக்கு. லாபம் கிடைத்துவிடும் கடைக்காரருக்கு' என்றேன்.
ஐயோ பாவம் சுண்டு” நாவலுக்கு எழுதிய முன்னுரை.
அதாவது, என்ன சொல்ல வருகிறேன் என்றால்...!
உலகில் சில விஷயங்களுக்கு என்றுமே ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. சமுத்திரம், யானை, ரயில் என்ஜின், இரட்டைப்பிறவி, குள்ள மனிதர்கள். சர்க்கஸ் பஃபூன், பட்டாம்பூச்சி, பாலத்தின் கீழ் ஓடும் ஆறு, அயர்ந்து தூங்கும் குழந்தை என்று பட்டியலே போடலாம்.
உலகில் சில விஷயங்களுக்கு என்றுமே ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. சமுத்திரம், யானை, ரயில் என்ஜின், இரட்டைப்பிறவி, குள்ள மனிதர்கள். சர்க்கஸ் பஃபூன், பட்டாம்பூச்சி, பாலத்தின் கீழ் ஓடும் ஆறு, அயர்ந்து தூங்கும் குழந்தை என்று பட்டியலே போடலாம்.
நான் இளைஞனாக இருந்தபோது படித்த ஒரு புத்தகம் சயாம் இரட்டையர்கள் வாழ்க்கை வரலாறு. உடலில் மார்புக்குக் கீழே சதையினால் ஒட்டிக்கொண்டு பிறந்த இரட்டையர் சாங்-யங்கின் வாழ்க்கை சுவையானது.
இது போல் என்னைக் கவர்ந்த மற்றொரு புத்தகம் அமெரிக்காவில் பார்னம் அண்ட் பெய்லி சர்க்கஸ் நிறுவிய பி.டி.பார்னம் அவர்களின் வாழ்க்கை வரலாறு. அந்த சர்க்கஸ் கடந்த 300 வருடங்களாக (ஆமாம், 300 தான்!) -- அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பார்னம் ஒரு பெரிய கில்லாடி. சர்க்கஸில் பல புதுமைகளைப் புகுத்தியவர். ஏராளமான குள்ளர்களை சர்க்கஸ் பஃபூன்களாக அறிமுகப்படுத்தியவர். "கட்டைவிரல் அளவே உள்ள குள்ள பஃபூனைக் காண வாருங்கள்' என்று விளம்பரப்படுத்தி கூட்டம் திரட்டியவர். (சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது இந்த சர்க்கஸ் (தி கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த்) நிகழ்ச்சியை நார்த் கரோலினாவில் பார்த்தேன். அபாரம். பிரமாதம். சூப்பர்! நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்ததைவிட மலைத்துப் போனதே அதிகம்.
சரி, இந்த புத்தகத்தின் முன்னுரையில் இவை எல்லாம் எங்கு வந்தது என்று கேட்பது தெரிகிறது. வருகிறேன் விஷயத்திற்கு!
தினமணிக்கதிரில் ஒரு தொடர் கதை எழுதச் சொல்லி, ஆசிரியர் சாவி என்னைக் கேட்டுக்கொண்டபோது, எனக்குப் பிடித்தவைகளையெல்லாம் நான் எடுத்துக்கொண்டு, அவற்றைக் கலந்து கட்டி ஒரு தொடர்கதை எழுதினேன். அது தான்: ஐயோ பாவம் சுண்டு.
இந்த நாவலில் இரட்டையர்கள் உண்டு, சர்க்கஸ் உண்டு, குள்ளன் உண்டு, பஃபூன் உண்டு, கொஞ்சம் மர்மம் உண்டு, நகைச்சுவை உண்டு. ஆக எனக்குப் பிடித்த விஷயங்களைப் போட்டு சுவையான அவியலைத் தர முயன்றிருக்கிறேன்.
இந்த நாவலைப் பற்றிய ஒரு வித்தியாசமான தகவலைக் கேளுங்கள்.
இந்த நாவலைத் தொடர்கதையாக எழுதினேன். வாராவாரம் டெல்லியிலிருந்து தினமணிக் கதிருக்கு அனுப்பிவந்தேன். கதை ஆரம்பித்து பத்து, பன்னிரண்டு வாரங்கள் ஆகி யிருக்கும். அடுத்த இதழுக்கான கதையை ஒரு நாள் இரவு ஒரு மணி வாக்கில் எழுதிக் கொண்டிருந்தேன். யாரோ தமிழ் சினிமா பாட்டுகளை டேப் ரிகார்டரில் போட்டுக் கொண்டிருந்தது காற்றில் மிதந்து வந்து கேட்டது. எல்லாம் பழைய கால தமிழ் சினிமா பாடல்கள்.
பாட்டை அவ்வளவாக ரசிக்காமல், கதையை மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து காற்றில் வந்த ஒரு பாட்டு சட்டென்று என் கவனத்தைக் கவர்ந்தது. அது, எம். கே. தியாகராஜபாகவதர் பாடிய "தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே, மௌன குருவே ஹரனே.....' ஒரு கணம் வியப்பால் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. என் கதையிலுள்ள எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்தப் பாடலில் இருந்தன!
நான் கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைத்தபோது இந்த பாட்டைப் பற்றி நினைக்கக்கூட இல்லை. இந்த விசித்திரம் ஒரு புரியாத புதிர்.
இந்தக் கதையைப் படித்து நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். அதே சமயம், ரசிப்பதற்கு இந்த நாவலில் என்ன இருக்கிறது என்பதும் உங்களுக்குப் புரியாத புதிராக இருக்கும்! ஆகவே இது ஒரு புதிர் நாவல் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை!!
***
என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை, சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!
கேரக்டரோ கேரக்டர்!
என் ’கேரக்டரோ கேரக்டர்!’ புத்தகத்தின் பின் அட்டையை இங்கு தருகிறேன்.
Cho, Saavi, Bhagyam Ramasamy, RaaKiRa, Sujatha - all full of jealousy!
ReplyDeleteI can see the Panda in the side sketch - with some difficulty!
-R. J.
கமலா கல்யாணமே வைபோகமே புத்தகத்தை முதல்முறை படித்தபோதே இந்த (கற்பனை) முன்னுரையை வெகுவாக ரசித்தேன். மற்ற முன்னுரைகளும் அபாரம் ஸார். அதிலும் குறிப்பாக...
ReplyDeleteஇந்தக் கதையைப் படித்து நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். அதே சமயம், ரசிப்பதற்கு இந்த நாவலில் என்ன இருக்கிறது என்பதும் உங்களுக்குப் புரியாத புதிராக இருக்கும்! ஆகவே இது ஒரு புதிர் நாவல் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை!!
சான்ஸே இல்ல... ஒன்லி கடுகு..!
இந்த பதிப்பு அருமை .நீங்கள் பிரபலங்கள் கையில் குட்டு பட்டிருகிரிர்கள் உங்கள் பதிப்புகளை விடாமல் படித்து வருகிரியன் (உண்மை). நகை சுவயாக எழுதுவது ஒரு தனி கலை வடகலை ,தென்கலை மாதிரி உங்கள் பணி தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் .உங்களுடன் தொலை பேசியில் பேசவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது .என் மெயில் விலாசத்திற்கு தொலை பேசி நம்பரை அனுப்ப விருப்பம் இருந்தால் அனுப்பவும் .
ReplyDeleteகே.ராகவன்
write2ragavan@gmail.com
மிக்க நன்றி.
ReplyDeleteஅன்புடன் உங்கள் தொலைபேசி எண்ணை எனக்குத் தெரிவியுங்கள். நான் பேசுகிறேன்.
-கடுகு
Hi Thatha! I love your blog and you! I wish I could read Tamil to enjoy it! Miss you so much, Love Bubbly :-)
ReplyDelete