Showing posts with label அம்புஜத்தின் அர்ச்சனை. Show all posts
Showing posts with label அம்புஜத்தின் அர்ச்சனை. Show all posts

April 05, 2011

அம்புஜத்தின் அர்ச்சனைகள் - ஒரு பின்னூட்டம்!

இந்த தொடரை சென்ற பதிவில் எழுதிய அத்தியாயத்துடன்  முடித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அர்ச்சனைகள் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் All good things must come to an end எனறு 1374’ல் Chaucer சொல்லியிருக்கிறாரே!

இந்த அர்ச்சனைகள் என் சொந்த ஐடியா அல்ல. 1902’ம் வருஷம் வெளியான MRS. CAUDLE'S CURTAIN LECTURES என்ற புத்தகத்தைப் படித்ததின் விளைவு. இதை எழுதியவர் DOUGLAS JERROLD.  அவருடைய புத்தகத்தில் இன்னும் நிறைய அர்ச்சனைகள் உள்ளன.

டகள்ஸ் ஜெரால்ட்  ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர். ஏராளமாக எழுதியிருக்கிறார். PUNCH  பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.
Mr.PUNCH  என்று குறிப்பிடும் அளவுக்குப் பிரபலமானவர். இவர் எழுதிய புத்தகங்கள் இண்டர்னெட்டில் வெளியாகியுள்ளன.

ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களை PROJECT GUTENBURG  என்றஅமைப்பு  தங்கள் இணைய தளத்தில் (http://www.gutenberg.org/wiki/Main_Page)  வெளியிட்டு வருகிறார்கள். அதில் நான்  கண்டெடுத்த பல நல்ல புத்தகங்களில் இதுவும் ஒன்று.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்தவர்களின் சராசரி வாழ்க்கை நமது வாழ்க்கை மாதிரியே  இருந்திருக்கிறது. ஆகவே தான் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே என் மனதில் அர்ச்சனைகள் அப்படியே தமிழில் வீடியோவாக ஓடிக் கொண்டிருந்தன. இதன் காரணமாக, ஓரே மூச்சில் ’அம்புஜத்தின் அர்ச்சனைகள்’ தொடரை எழுதினேன்.
இன்னும் வேறு பல புத்தகங்களையும் தமிழில் தர உத்தேசம்.

March 30, 2011

அர்ச்சனை - 7 சிக்கனமும் தலைக்கனமும்!

சமையலறை வேலைகளை முடித்து விட்டு, விளக்குகளை அணைத்து விட்டு, மாடி பெட்ரூமுக்குள் நுழைந்த அம்புஜம், தன் கையிலிருந்த மின்சார பில்லை படுக்கையில் படுத்துக் கொண்டு மர்ம நாவலைப் படித்துக் கொண்டிருந்த பஞ்சுவின் பக்கமாகத் தூக்கிப் போட்டாள்.
``கொஞ்சம் கடைக்கண்ணை இப்படித் திருப்பி, ’என்னடா ஏதோ பேப்பர் போட்டாளே’ என்று பார்த்தால் குடி முழுகிப் போய் விடாது. அந்த இலக்கியப் புத்தகத்தை கீழே வெச்சால் தெய்வக் குற்றம் இல்லை. போகிறதே புத்தி, பத்து ரூபாய் கொடுத்து `பல்லாவரம் பங்களா மர்மம்' நாவலை வாங்கிப் படிக்கா விட்டால் தப்பில்லை. நாளைக்கு உங்க ஆபீஸ் மானேஜர் உங்க தலையை வாங்க மாட்டார்.
தெருக்கோடி பழைய பேப்பர்க்காரன்  இந்த மாதிரி குப்பை நாவல்களை கடையில் அடுக்கி வெச்சிருக்கான். பத்து பைசா பெறாத புஸ்தகத்திற்கு பத்து ரூபாய்! அட்டையில் அழகி படம் போட்டிருந்தால் வாங்கிடுவீங்க. மதுரையில் ஒரு கள்ளழகர். இங்கே ஒரு ஜொள்ளழகர்!
போகட்டும்... அது என்ன பேப்பர் என்று பார்த்தீங்களா? ஆமாம்... மின்சார பில். எடுத்துப் பாருங்க... ஷாக் அடிக்காது.

March 16, 2011

அர்ச்சனை - 6 வீ டா, தர்மசத்திரமா? - கடுகு

என்னது படிக்கறீங்க? டிராமா நோட் புத்தகமா? இல்லை ஆபீஸ் வேலையா..? ஆபீஸ் நோட் புத்தகத்துக்குள்ள டிராமா நோட்டாக இருக்கும். முறைக்காதீங்க... காலைல போய் அர்த்த ராத்திரி திருடன் மாதிரி வர்றீங்க... நேபாளி கூர்க்கா மாதிரி நான் கொட்டு கொட்டுன்னு முழிச்சிண்டு கவலைப்பட்டுண்டு உட்கார்ந்திண்டு இருக்கேன்...
மத்தியானம் ஊரிலிருந்து வந்து கதவைத் திறக்கறேன். குப்புன்னு வாசனை தூக்கி அடிக்கிறது. ஆமாம்... சந்தனம், மல்லிகை, மருக்கொழுந்து வாசனைதான் பாக்கி.... கேட்கறீங்களே வெட்கமில்லாமல்... திருட்டுத்தனம் பண்ணவும் சாமர்த்தியம் வேணும்.
நான் ஊரில் இல்லாத போது இங்கே அடிச்ச கொட்டம் எனக்குத் தெரிஞ்சுடுத்து. தோட்டத்தில புதருக்குள் போட்டு மறைச்சுட்டால் ஆகிவிட்டதா? சிகரெட்டால் ஹோமம் பண்ணின மாதிரி இருக்கு... எவ்வளவு துண்டுகள்! பேப்பர் பிளேட் மட்டும் 20, 30 இருக்கும்.
என்ன விசேஷம்... பார்ட்டியா? எத்தனை பெண்கள் வந்தார்கள்... நீங்க சொல்லாவிட்டால் என்னால் கண்டுபிடிக்க முடியாதா? பக்கத்து வீட்டு சித்ராங்கிதான் இருக்காளே... இந்த மாதிரி விஷயங்களை மசாலா போட்டுச் சொல்வதற்கு..? என்னது... பத்து பேரா? சீமந்தம், வளைகாப்பு நிகழ்ச்சியா? என்னது... பர்த்டே பார்ட்டியா? இது என்ன கல்யாண மண்டபமா, சமுதாயநலக் கூடமா, தியான மண்டபமா, குத்துப்பாட்டு பாசறையா? யாருக்கு பர்த்டே? உங்களுக்குன்னு சொல்லிக் கூட பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருப்பீங்க... நான் வீட்லே இல்லைன்னா உங்க சில்மிஷ புத்திக்கு ஆயிரம் குயுக்தி யோசனை வருமே...

March 11, 2011

அர்ச்சனை-5 ஜாமீன் கொடுத்த ஜமீன்தார்? -கடுகு

அம்புஜம் படுக்கை அறைக்குள் நுழைந்த போது, பஞ்சு படுக்கையை தட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். இரண்டு நிமிஷம் தான் வந்ததை அவர் கவனிக்கிறாரா என்று இரண்டு நிமிஷம் பார்த்த அம்புஜம், பஞ்சுவைப் பார்த்துச் சொன்னாள். ``இப்ப சொல்லுங்க... பசங்க அவங்க அவங்க ரூமில் பரீட்சைக்குப் படிக்கப் போய்ட்டாங்க. என்னது? சொல்றதுக்கு ஒண்ணுமில்லையா? நிச்சயமா ஒன்றுமேயில்லையா? ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்ததிலிருந்து திருட்டு முழி முழிச்சுண்டு, மசமசன்னு சுத்தி வந்துண்டு இருந்தீங்க... பசங்க எதிரே பேசவேண்டாம்னு இருக்கீங்கன்னு நெனைச்சேன். ஒண்ணுமே இல்லைன்னா அந்த முழி முழிச்சதுக்கு என்ன காரணம்? வழக்கமான உங்க பரம்பரை முழி எனக்குத் தெரியும். இன்னிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா முழியாக இருந்ததே!

நான்தானே? வாயை மூடறேன். என் வாயை மூட முடியும். ஊர் வாயை எப்படி மூட முடியும்? எனக்கு எல்லாம் தெரியும்... ஆமாம். எல்லாம் தெரியும்.
என்னது? எல்லாம் தெரிஞ்சே ஏன் என்னைக் கேக்கறேன்னு கேக்கறீங்களா? எவ்வளவு தூரம் உண்மையைச் சொல்றீங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்காகத் தான்!
அது எப்பேர்ப்பட்ட சிதம்பர ரகசியமாக இருந்தாலும் சொல்லலாம். ஏன், பக்கத்து வீட்டு அழகி சித்ராங்கியின் வீட்டுக்காரர் சிதம்பரத்தைப் பற்றிய ரகசியமாக இருந்தாலும்... என்ன முறைக்கறீங்க? பாயின்டைப் பிடிச்சுட்டேனா? சரி... வேற வழியில்லை... சலிச்சுக்காம ஆரம்பியுங்க.

February 27, 2011

அர்ச்சனை-4 யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி
அம்புஜம் பெட்ரூமில் நுழையும் போதே, பஞ்சு  ஒரு பக்கமாகப் புரண்டு படுத்தார். கொட்டாவி விடுவது போல் பாவ்லா காட்டினார்.
``...பாவம். ஆபீஸில் ஏகப்பட்ட வேலை... தூங்கறதுக்கு டைம் கிடைக்கலை போல் இருக்கு. அதுதான் தூக்கம் வந்துடுத்து. ஆபீஸ  நாடகம் ஒத்திகை பார்க்கிற மாதிரி, கொட்டாவி விடறது, குறட்டை விடறது, முழித்துக் கொண்டே தூங்கறது எல்லாம் ஒத்திகை பார்க்கறாரோ, என்னவோ!  மனுஷன். அப்பதானே பொண்டாட்டி தொணதொணப்பிலிருந்து தப்பிக்கலாம்?
யார் அப்படிச் சொன்னதுன்னு கேக்கறீங்களா? நீங்க சொன்னீங்கன்னு நான் சொல்லலை. பாகீரதி சொன்னதைச் சொல்றேன். பாகீரதி யாருன்னு தெரியாதா? இதை நம்பச் சொல்றீங்களா? `பகீர்'ரதின்னு சொல்வீங்களே, உங்க உப்பிலியின் ஒய்ஃப். அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று என்னைக் கேட்டால்?... நல்லா இருக்கே .கேள்வி!.. அவளுக்கு அவ வீட்டுக்காரர் உப்பிலி சொல்லி இருப்பார். உப்பிலிக்கு அவரோட பெஸ்ட் ஃப்ரெண்ட் பஞ்சு சொல்லி இருப்பார்.
நான் நச்சுதான், தொணதொணப்புதான். பிக்கல் பிடுங்கல்தான்... அதனாலதான் என்னை பொண்டாட்டின்னு வெளியில சொல்லிக்க உங்களுக்கு வெட்கமா இருக்கு.

ஆமாம்... நான் இல்லாததும் பொல்லாததும்தான் சொல்றேன். நேற்று சாயங்காலம் கோயிலுக்குப் போகும் போது எதிரே ஒரு மோகினி வந்தாளே, அவளைப் பார்த்ததும் அண்ணலும் இளித்தான், அவளும் இளித்தாள். அவள் யாரு? இளிக்கிற அளவுக்கு என்ன நெருக்கம் என்று இந்த க்ஷணம் வரை எனக்குச் சொல்லலை. அவளுக்கு என்னை அறிமுகம் கூட செய்து வெக்கலையே... பாவம், சொல்லிக்க வெட்கமாக இருந்திருக்கும்! அவள் கழுத்தை ஒடித்து, கண்ணைச் சுழற்றி பார்த்த பார்வையே சரியாக இல்லை. இதோ பாருங்க... அம்புஜம் மக்காக இருந்த காலம் மலை ஏறியாச்சு. அவளுக்கு ஞான திருஷ்டி இல்லாவிட்டாலும், மனுஷாளை எடை போடத் தெரியும். ஏதோ கண்ணிலே சாளேசுவரம் வரலை... ஒரு பார்வையிலேயே மனுஷாளின் தராதரத்தைக் கண்டுபிடிச்சுடுவேன்.
ஆஹா... அவளைத் தப்பாகச் சொல்லக் கூடாதா? அடாடா... என்னமா உருகுகிறார்! பொண்டாட்டி தவிர எல்லாரும் ப்த்தரை மாத்துத் தங்கம், நல்லவங்க; நம்பகமானவங்கன்னு . சொல்றீங்க... எனக்கு எல்லாரும் தளுக்கு மினுக்கு சுந்தரிகள்தான். பல்லை இளிக்கிறவர்கள்தான்.  அது சரி, அப்படி நான் எங்கே. எப்போ  சொன்னேன். இந்த பாகீரதியைத்தான் சொன்னேன். அவள்தான்  தன் பேரை பேஷன் பேரா மாத்திக்கப் போறாளாம். அனுஷ்காவோ, கத்திரிக்காவோ ஏதோ ஒரு பேர்...
அவள் பார்வையே சரியில்லை. அவள் எதுக்கு ஒரு உதட்டுச் சுழிப்புடன் சிரிக்கணும்... என்னது, நீங்க பாக்கலையா? அவள் தெருக்கோடியில் வரும் போதே நீங்க வெச்ச கண்ணை எடுக்காமல் பார்த்துட்டு இருந்ததை நான் பார்த்துண்டுதான் இருந்தேன்.

February 12, 2011

அர்ச்சனை - 3 ட்ராமாவுமாச்சு, வெங்கட்ராமாவுமாச்சு! --கடுகு


படுக்கையில் சாய்ந்தபடி பஞ்சு ஏதோ ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டு வேலையை முடித்து விட்டு சமையலறையை மூடிவிட்டு மாடிக்கு வந்த அம்புஜம், ``ஆமாம்... வீட்டுக்கு வர்றப்போ காபிப்பொடி வாங்கிண்டு வரச் சொன்னேனே... என்னது, வாங்கிண்டு வரவில்லையா? இது என்ன வீடுன்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா? இல்லை, ஓட்டல்னு நெனைச்சுக்கிட்டு இருக்கீங்களா..? வீடு, வாசல், குடும்பம்னு அக்கறை இருந்தால் எப்படி மறப்பீங்க?
மறக்கலையா? கடை மூடியிருந்ததா? எப்போ? சரிதான். நீங்க பீரோ புல்லிங் கொள்ளைக்காரன் மாதிரி நடுராத்திரிக்கு வீட்டுக்கு வர்றப்போ எந்த கடைக்காரன் கடையைத் திறந்து வெச்சு காத்துகிட்டு இருப்பான்? சரி... கொஞ்சம் இப்படி திரும்பிப் பாருங்க. என்னமோ விழுந்து விழுந்து படிக்கறீங்களே... படிக்கிற சமயத்திலே படிக்கலை. படிச்சிருந்தால் தாலுகா ஆபீஸ்ல ஹெட்கிளார்க் வேலையிலே வந்து விழுந்திருக்க மாட்டீங்க...
நடுராத்திரிகு வந்ததுதான் வந்தீங்க... ஏன் லேட்டுன்னு சொன்னா வாய் முத்து உதிர்ந்துடுமோ? பசங்களைப் பற்றி ஒரு கேள்வி உண்டா? உமாவுக்கு சல்வார்-கமிஸ் வேணும்னு சொன்னேன். பணம் காசு கேட்கலை. என்ன படிக்கறீங்க, ஆடிட் ரிப்போர்ட்டா? ஆபீஸ் வேலையா? என்ன சொன்னீங்க..? டிராமா கதை வசனமா? எதுக்குப் படிக்கிறீங்க?
நெனைச்சேன்... டிராமா குரூப்ல சேர்ந்திருக்கீங்களா? இந்த வயசிலே இப்படி ஒரு ஆசையா? டிராமா ரிகர்சல் அது இதுன்னு லேட்டாக வர்றதுக்கு ஒரு சாக்குக் கிடைச்சது. ஆமாம், உங்களுக்கு நடிக்கத் தெரியும்னு யார் சொன்னது? ஏற்கனவே குடும்பத்தின் பேரில உங்களுக்கு சொல்ல முடியாத அளவு அக்கறை. இனிமேல் நடிகர் திலகமாயிடுவீங்க! அவ்வளவுதான்... வீடு அம்போதான்.

February 02, 2011

அர்ச்சனை-2 சித்ராங்கி ஒரு ராங்கிக்காரி

வீட்டிற்குள் பஞ்சு நுழைந்தபோது இரவு மணி ஒன்று.  கதவைத் திறந்த அம்புஜம் மெகா அர்ச்சனைக்கு ஆயத்தமானாள்.
``வாங்க... வாங்க... சாப்பிடத் தட்டு போடட்டுமா? என்னது, சாப்பிட்டு ஆகிவிட்டதா? நல்லதுதான்.  என்ன, என்ன கேட்டீங்க? நானா? நான் இன்னும் சாப்பிடவில்லை. வீட்டில் ஒரு பைத்தியக்காரி சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாள் என்று உங்களுக்கு எங்கே நினைவிருக்கப் போகிறது? ஆபீஸில் ஓடாய் உழைத்து வீட்டுக்கு வருகிறாரே, வாய்க்கு ருசியா நாமதானே பாத்து போடணும்னு இருக்கறவள் நான். ’அவர் எப்படியாவது போகட்டும், நாம கொட்டி மூடிக்கலாம்’னு இருக்க எனக்குத் தெரியாது. எங்கம்மா அப்படி வளர்க்கலையே என்னை!  எனக்கும் பசி போய்ட்டுது. இரண்டு மூணு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்துக்கறேன். வயிற்றெரிச்சலும் தீரும்!

“என்னது, நல்லா சொன்னீங்களே, நீ சாப்பிட்டு விட்டு படுத்துக்கறதுக்கு என்ன என்றுதானே? சரி, படுத்துக்கறேன். அர்த்தராத்திரி கொள்ளைக்காரன் மாதிரி நீங்க கதவை இடிக்கிறபோது திறக்க வேண்டாமா?
ஆமாம்... என்னமோ வாசனை வர்றதே, ஆபீஸ்லே ஏதாவது பார்ட்டியா? எங்கே, என்ன சாப்பிட்டீங்க? அவன் சொன்னான், இவன் சொன்னான்னு கொஞ்சம் சாப்பிட்ட மாதிரி இருக்குதே...
”சரிதான். ஆபீஸில் மேனேஜர் பிறந்தநாள் விழாவா? அவர் குடிக்கட்டும், இல்லாவிட்டால் சாராயத்திலேயே குளிக்கட்டும். உங்க புத்தி எங்கே போச்சு?
இதபாருங்க... ஒவ்வொரு வீட்டுப் பொம்பளை மாதிரி எனக்கு கத்தத் தெரியாது. வாய் செத்த பூனையாக இருக்கறதாலே நீங்க ஆட்டம் போடறீங்க. ஷாப்பிங், அரட்டைக் கச்சேரி என்று எங்கேயும் போகத் தெரியாத அசமஞ்சம் நான்.
இதோ இருக்காளே, பக்கத்து வீட்டு சித்ராங்கி... அவ மாதிரி தாடகை உங்களுக்கு மனைவியா வந்திருக்க..... இல்லை, இல்லை, அதை ஏன் என் வாயால சொல்லணும்?

January 17, 2011

அர்ச்சனை-1 --ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சகஸ்ர அர்ச்சனை

வீட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு முகத்தைத் துடைத்தபடியே இரவு பத்து மணிக்கு படுக்கை அறைக்குள் வந்தாள் அம்புஜம். லேசாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். அவள் வந்ததைக் கவனிக்காத மாதிரி பேப்பரை படிப்பது போல் பஞ்சு பாவ்னை செய்துகொண்டிருந்தார்.


.``என்ன உங்களைத்தான்..பேப்பர் படிச்சாச்சா? இன்னும் வரி விளம்பரம், மணமகள் தேவை, ஏல நோட்டீஸ் எல்லாம் பாக்கி இருக்கா? ஜில் ஜில் ரமாமணி காதல் விவகாரம் பற்றியெல்லாம் ஒரு எழுத்து விடாமல் படிச்சு ஆச்சா?  ஆமாம், பெரிய பொண்ணு உமா நீல-வெள்ளை சல்வார் கமீஸ் கேட்டாளாம்.  இந்த மாசம் முடியாதுன்னு சொன்னீங்களாமே... நேற்று உங்க பர்ஸில் 200 ரூபாய் இருந்ததைப் பார்த்தேனே... என்ன, கடுவம்பூனை மாதிரி பாக்கறிங்க? உங்க பர்ஸை எடுத்துப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா? அந்த பேப்பரைத் தூக்கி எறியுங்க... முதல்லே என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க...

”இருநூறு ரூபாய்க்கு கணக்குச் சொல்லுங்க. மம்மியா, ரம்மியா? அம்மா கேட்டார்; இவர் மணியார்டர் அனுப்பினாரா? இல்லே, ஆபீஸ்ல கிளப்பில் ரம்மியில் மொய் எழுதியாச்சா?  சரி, சரி, மம்மியோ, ரம்மியோ... பர்ஸ் காலி!
ஏதோ ஸ்காலர்ஷிப்புக்காக  இன்டர்வியூவிற்குப் போகணுமாம். புது டிரஸ் கேட்டாள். அவள் கிட்ட சொல்லிடறேன். நாலு எவர்சில்வர் டம்ளரைப் போட்டு பழைய பாத்திரக்காரன் கிட்ட இருந்து சல்வார் கமீஸ் வாங்கிக் கொடுத்துடறேன்னு!.

”என்னது... என்னது... நீ இதுவும் செய்வே, இன்னமும் செய்வேன்னு சொல்றீங்களா?  நூற்றுக்கு நூறு உண்மையான பேச்சு. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரம் ஏறித்தான் ஆகணும். வேறு ஒருத்தியாக இருந்தால் எப்பவோ குடும்பநலக் கோர்ட்டுக்குப் போயிருப்பா.
`குழந்தை, நீ இன்டர்வியூவிற்குப் போக வேண்டாம்'னு சொல்லிடறேன். ஏன், படிப்புக்கே தலைமுழுகிடச் சொல்லிடறேன். ஊரெல்லாம் அப்பளம், கைமுறுக்கு, சீடை இதுக்கெல்லாம் நல்ல டிமாண்ட் இருக்கே... ஏதாவது பண்ணி பொழைச்சுக்கட்டும்! அவள் தலையிலே , வாணலி, ஜாரணின்னு பிரம்மா படம் போட்டிருந்தால் யாரால அழிக்க முடியும்? அடி, உங்கப்பாவால   பணத்தை மட்டும்தான் அழிக்க முடியும்னு சொல்லிடறேன்.வேறு எதையும் அழிக்க முடியாதுன்னு சொல்லிடறேன்.

January 14, 2011

அம்புஜத்தின் அர்ச்சனைகள்- ஆரம்பம்

ஒரு நாள் காலை என் நண்பன் கிட்டப்பா என் வீட்டிற்கு வந்தார். கையில் பெரிய பை.
``என்னப்பா, பையும் கையுமா காலையில் வந்திருக்கிறாய். பையில் என்ன? உன் கிராமத்திற்குப் போயிருந்தாயா? கத்திரிக்காய் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டேன்.
``கத்திரிக்காயும் இல்லை, ஒண்ணுமில்லை. நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடரைக் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு அவ்வளவு சரியாக எழுத வரவில்லை. நீதான் பெரிய எழுத்தாளன் என்று ஊரெல்லாம் சொலிக் கொண்டு திரிகிறாயே, கொஞ்சம் சரி செய்து கொடு'' என்றான்.
``உன் கட்டுரைகளில் சரியாக இல்லாத பகுதிகளை எல்லாம் எடுத்து விட்டால் தலைப்பும், `முற்றும்' மட்டும்தான் இருக்கும்'' என்றேன்.
``நீ கை வெச்சால் எல்லாம் பிரமாதமாகி விடும் என்றுதானே உன்னிடம் வந்தேன். நீ என்னை நக்கல் பண்ணறே. பண்ணு, பரவாயில்லை. அப்படியே இதையும் சரி பண்ணு'' என்றான்.
``சரியப்பா... பாக்கறேன்...'' என்றேன்.
கிட்டப்பா தன் கையெழுத்துப் பிரதியை வைத்து விட்டுப் போனான்.
இரண்டு நாள் கழித்து அதை எடுத்துப் பார்த்தேன். இங்க் புட்டிக்குள் விழுந்த எறும்பு காகிதத்தில் ஓடியது போல் இருந்தது அவன் கையெழுத்து! கஷ்டப்பட்டுப் படித்தேன். சொந்த வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருந்தான்.  உண்மை போல் இருந்தது. அதே சமயம் நம்பமுடியாததாகவும் இருந்தது.

ஒரு வாரம் கழித்து கிட்டப்பா வந்தான்.
``கிட்டப்பா... இதில் எழுதி இருக்கிறதெல்லாம் உண்மையா? உன் மனைவி உனக்குப் பண்ணின அர்ச்சனைகள் நம்ப முடியாதபடி இருக்கிறது. உன் மனைவியைப் பற்றி இத்தனை நாளில் ஒரு சமயம் கூட என்னிடம் குறைபட்டுக் கொண்டதில்லையே! சும்மா ரீல் மாதிரி இருக்கிறதே!'' என்றேன்.
``இல்லைப்பா... உண்மைதான். கணவன்-மனைவி பெயர்களை மாற்றி இருக்கிறேன். இதை நீ சரிபார்த்த பிறகு சில சம்பவங்களையும், பெயர்களையும் மாற்றி விடப் போகிறேன்.  அதிருக்கட்டும், மொத்தத்தில் எப்படி இருக்கிறது நான் எழுதியது?'' என்று கேட்டான்.
``மொத்தத்தில் நன்றாக இருக்கிறது. சில்லறையில்தான் போரடிக்கிறது'' என்றேன்.
``இந்த கலாட்டாதான் வேண்டாம் என்கிறது. கதையில் வரும் மனைவியின் பெயரை அம்புஜம் என்று வைத்து விடலாம். கணவன் பெயரை பஞ்சு என்று மாற்றி விடலாம்.'' என்று சொல்லிவிட்டுப் போனான்.
அவன் எழுதிய உண்மையான `கற்பனை'க் கட்டுரைதான் அம்புஜத்தின் அர்ச்சனைகள்!                                                              (தொடரும்)

அம்புஜத்தின் அர்ச்சனைகள் -முன்னுரை

அம்புஜத்தின் அர்ச்சனைகள்
- அகஸ்தியன் -

ஒரு நாள் காலை என் நண்பன் கிட்டப்பா என் வீட்டிற்கு வந்தார். கையில் பெரிய பை.
``என்னப்பா, பையும் கையுமா காலையில் வந்திருக்கிறாய். பையில் என்ன? உன் கிராமத்திற்குப் போயிருந்தாயா? கத்திரிக்காய் கொண்டு வந்தாயா?'' என்று கேட்டேன்.
``கத்திரிக்காயும் இல்லை, ஒண்ணுமில்லை. நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடரைக் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு அவ்வளவு சரியாக எழுத வரவில்லை. நீதான் பெரிய எழுத்தாளன் என்று ஊரெல்லாம் சொலிக் கொண்டு திரிகிறாயே, கொஞ்சம் சரி செய்து கொடு'' என்றான்.
``உன் கட்டுரைகளில் சரியாக இல்லாத பகுதிகளை எல்லாம் எடுத்து விட்டால் தலைப்பும், `முற்றும்' மட்டும்தான் இருக்கும்'' என்றேன்.
``நீ கை வெச்சால் எல்லாம் பிரமாதமாகி விடும் என்றுதானே உன்னிடம் வந்தேன். நீ என்னை நக்கல் பண்ணறே. பண்ணு, பரவாயில்லை. அப்படியே இதையும் சரி பண்ணு'' என்றான்.
``சரியப்பா... பாக்கறேன்...'' என்றேன். கிட்டப்பா தன் கையெழுத்துப் பிரதியை வைத்து விட்டுப் போனான்.
இரண்டு நாள் கழித்து அதை எடுத்துப் பார்த்தேன். இங்க் புட்டிக்குள் விழுந்த எறும்பு காகிதத்தில் ஓடியது போல் இருந்தது அவன் கையெழுத்து! கஷ்டப்பட்டுப் படித்தேன். சொந்த வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருந்தான். உண்மை போல் இருந்தது. அதே சமயம் நம்ப முடியாததாகவும் இருந்தது.
ஒரு வாரம் கழித்து கிட்டப்பா வந்தான்.
``கிட்டப்பா... இதில் எழுதி இருக்கிறதெல்லாம் உண்மையா? உன் மனைவி உனக்குப் பண்ணின அர்ச்சனைகள் நம்ப முடியாதபடி இருக்கிறது. உன் மனைவியைப் பற்றி இத்தனை நாளில் ஒரு சமயம் கூட என்னிடம் குறைபட்டுக் கொண்டதில்லையே! சும்மா ரீல் மாதிரி இருக்கிறதே!'' என்றேன்.
``இல்லைப்பா... உண்மைதான். கணவன்-மனைவி பெயர்களை மாற்றி இருக்கிறேன். இதை நீ சரிபார்த்த பிறக சில சம்பவங்களையும், பெயர்களையும் மாற்றி விடப் போகிறேன். அதிருக்கட்டும், மொத்தத்தில் எப்படி இருக்கிறது நான் எழுதியது?'' என்று கேட்டான்.
``மொத்தத்தில் நன்றாக இருக்கிறது. சில்லறையில்தான் போரடிக்கிறது'' என்றேன்.
``இந்த கலாட்டாதான் வேண்டாம் என்கிறது. கதையில் வரும் மனைவியின் பெயரை அம்புஜம் னெ்று வைத்து விடலாம். கணவன் பெயரை பஞ்சு என்று மாற்றி விடலாம்.'' என்று சொல்லிவிட்டுப் போனான்.
அவன் எழதிய உண்மையான `கற்பனைக்' கட்டுரைதான் அம்புஜத்தின் அர்ச்சனைகள்!