October 30, 2018

துணுக்குப் பேரணி


  அம்மாடி, கேட்லாக்
           எழுபதுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் டில்லி தாரியாகஞ்ச்                       நடைபாதை கடைகளுக்கு படையெடுப்பது என் வழக்கம். அங்கு பல, அற்புதமான, அரிய ஆங்கில புத்தகங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.
     
புத்தகம் மட்டுமல்ல, அயல்நாட்டு ஃபேஷன் பத்திரிகைகள், அமெரிக்கSEARS  கேட்லாக் போன்றவைகளும் (அயல் நாட்டு தூதரகங்கள் பழைய பேப்பர் கடையில் போட்டவை!)  இங்கு கிடைக்கும். அதை வாங்கி நம் உள்ளூர் தையல்காரர்கள் புதுவிதமான டிரஸ்களைத் தைப்பார்கள். பர்னிச்சர் தயாரிப்பாளர்கள் பல்வேறு விதமான மேஜை, நாற்காலி என்று தயாரிப்பதற்கு ஐடியா கிடைக்கும்.
    கேட்லாக்  பயங்கரக் கனமாக இருக்கும். (1975-ம் வருஷ SEARS  கேட்லாக் 1491 பக்கங்கள்!). (பழைய  கேட்லாக்குகள் இப்போதும் கிடைக்கின்றன. E-book - 1969- ம் வருஷ SEARS  விளையாட்டு பொம்மைகள் கேட்லாக் விலை 150 டாலர்!

இரட்டையர்கள், ஆனால் விரோதிகள்.
     உலகின் மிகப் பிரபல இரட்டையர்கள் பல வருஷங்களுக்கு முன்பு சையாம்  நாட்டில் ( இன்றைய தாய்லாந்தில்)   1811-ம் ஆண்டு பிறந்த இரட்டையர்கள். 
அவர்கள் தனித்தனியாக, இரண்டு பேராக பிறக்கவில்லை. விலாப்பகுதி சதை அவர்களை ஒட்ட வைத்து இருந்தது. CHANG-ENG ஒட்டிய உடலுடன் வளர்ந்தார்கள்.  1829 -ம் ஆண்டு அவர்கள் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார்கள். பல கண்காட்சிகளில் கலந்து கொண்டு நிறைய பணம் சம்பாதித்தார்கள்.
1874’ம் ஆண்டு, ஒரு மணி  நேர இடைவெளியில் இரண்டு பேரும் காலமானார்கள்! 
பி.கு: காலமாவதற்கு சில வருஷங்களுக்கு முன்பு அவர்களுக்குள்
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விரோதிகளாக ஆகிவிட்டார்களாம்!

மூடுக்கு ஏற்ற கலர்
     பிரபல எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட்டிற்கு ஒரு விசித்திர வழக்கம் இருந்தது. அவருக்கு பிடித்த எழுத்தாளரான DORIAN GRAY  எழுதிய புத்தகத்தை ஒன்பது காபிகள் வாங்கி, ஒவ்வொரு புத்தகத்தையயும் ஒவ்வொரு வித கலரில் பைண்ட் செய்து வைத்துக் கொண்டார். 
“எதற்கு ஒரே புத்தகம் ஒன்பது காபிகள். அவற்றை ஒன்பது கலரில் வைத்திருக்கிறீர்களே?என்று கேட்பவர்களுக்கு “ஆமாம்.. என் மூடுக்கு தகுந்த கலர் அட்டை போட்ட காபியை எடுத்துப் படிக்க விரும்புவதே காரணம் என்பார்.

   பிரிட்டீஷ் மியுசியமில் உள்ள புத்தகங்கள் எல்லாம் கலர் அட்டை போட்ட புத்தகங்களாக இருக்கும் என்கிறது ஒரு தகவல். சரித்திரம் சம்பந்தமான புத்தகங்கள்-சிவப்பு, Theological  புத்தகங்கள் – நீலம் கவிதைகள் – மஞ்சள், Natural History  பச்சை என்று வைத்திருக்கிறார்களாம்.

ஆசிரியர் சாவி சொன்னது
     சாவி சொல்வார். “சிறுகதை போட்டியில் எனக்கு நம்பிக்கையில்லை. ஐம்பதாயிரம் லட்சம் என்று பரிசுத் தொகை வைத்தால், சிறப்பான கதை எழுதுவார்கள் என்று கருதுவது தவறு. 

October 21, 2018

சூழ்நிலை


சூழ்நிலைதான் மனிதனையும் மனித குணங்களையும் உருவாக்குகிறது.  படு சீரியஸாக இருக்கும் ஆசாமி கூட சீட்டுக் கோஷ்டியில் இருக்கும் போது அரட்டையும், கூச்சலும் போடத் தயங்குவதில்லை. அவரே மாலையில் கதாகாலட்சேபத்தில் உட்கார்ந்திருக்கும் போது, காதலாகிக் கசித்து, கண்ணீர்ப் பெருக்கி நிற்கிறார்.  சீட்டாட்டத்தின்போது , ஜோக்கடிக்காமல் இருப்பது நடக்கக் கூடிய காரியமல்ல. எப்பேர்ப்பட்ட முசுடுவும் மாறி விடுவார்.

  வீட்டு வாசலுக்கு வரும்  காய்கறிக்காரியிடம் "என்ன? கொத்தமல்லி ஒரு ரூபய்க்கு நாலு கட்டுதானா?  அநியாய வெலை சொல்றியே! ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது , சற்றும் யோசிக்காமல் ’டிப்’பாக ஐந்து ரூபாய் கொடுப்பார்- சர்வர் கேட்காமல் இருந்தாலும்!
    மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சிப்பந்தி, தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு’டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில், தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து க் கொண்டு, வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம்.  எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
    இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். "ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலை ஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபது, முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்! இது பழைய கணக்கு. இப்போது எவ்வளவு இருக்கும் என்று எனக்குத் தெரியாது!))  இவரே கிளப்பை விட்டு  இரவு 12 மணிக்கு வெளியே வரும் போது ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். "என்னய்யா,  சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது  ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.

    தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: "என்ன இது? இன்னும் இரண்டு கவு ன்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை. '' ஆனால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில், ஒரு  ‘சலானி’ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் கூட காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
          பீச், சினிமா தியேட்டர் என்று  போனால் பாப்கார்ன், ஐஸ் கிரீம் என்று கண்ணை மூடிச் செலவு பண்ணுவார்: கோவில் உண்டியில் பணம் போட, பர்ஸைத் துழாவித் துழாவிச் சில்லறையைத் தேடுவார்.
                          நாம் எல்லாரும் சூழ்நிலைகளின் கைப்பொம்மைகள்!
=====================

( அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.)

October 09, 2018

கமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2

 ஒரு வாரம்  கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா, அந்த பூச்சி மருந்து புட்டிகளின் லேபில்களில் பூச்சிகளின் படத்தை மூன்று வர்ணங்களில்  மாதிரி இருந்தன) “ரவிவர்மா” தீட்டிய படங்கள் பொட்டலங்கள்  இருந்தன.  
படமங்கள் மட்டும் பெரிதாக இருந்திருந்தால், எனக்கு செலவு நூறு, இருநூறு  ஆகி இருக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? கமலா அந்த பூச்சி படங்களையும் ஃபிரேம் போட்டுக் கொண்டு வரச் சொல்லி இருப்பாள். பிழைத்தேன்.
     பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்த போதும், கஜலஷ்மி பதக்க செயினை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்த போதும், ‘மாட்டல்’ என்ற நகை திடீர் ஃபாஷனாக வந்த போது, என் அக்காவிற்கு வாங்கிக் கொடுக்காமல், கமலாவிற்கு வாங்கிக் கொடுத்த போதும் வராத, சந்தோஷம்,  ஏதோ கலியாண சீர் வந்தது போல் மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்து!
      பெட்டியில் ஒரு நோட்டீஸ் இருந்தது. அதுவும் மூன்று கலரில் அச்சடித்து இருந்ததா என்று கேட்காதீர்கள்:.அது அந்த விதைக் கம்பெனியை    அவமானப்படுத்துகிற மாதிரியான கேள்வி. 

அந்த நோட்டீஸில் “அன்புடையீர், உங்கள் கிச்சன் கார்டன் ஆர்வத்தை நாங்கள் பாராட்டும் வகையில் நான்கு ‘பண்டில்’ வைக்கோலை எங்கள் அன்பளிப்பாகத் தருகிறோம். விதைக்கும் போது, வைக்கோல் தேவைப்படும். (பயிர் வளர்ப்புக் குறிப்பைப் பார்க்கவும்.) வைக்கோல் சுலமாகக் கிடைப்பதில்லை. உங்களுக்கு வைக்கோல் ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது என்பதற்காக நாங்களே சப்ளை செய்கிறோம். பணம் ஏதும் தர வேண்டாம். நீங்கள் எங்கள் பண்ணைக்கு வந்து வைக்கோல் பண்டில்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதைப் பார்சலில் அனுப்பினால் வைக்கோலின் விலையை விட பார்சல் கட்டணம் அதிகமாகிவிடும்” என்று எழுதியிருந்தார்கள்.
       உடனே கமலா, “ஒரு நிமிஷம் இருங்கோ. இதோ புடவையை மாத்திக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே பெட்ரூமிற்குள் போனாள்.
     என்ன கமலா! புடவையை எதுக்கு மாத்திக்கப் போறே?” என்று கேட்டேன்.
     அந்த நோட்டீஸை எடுத்து, எழுத்துக் கூட்டிப் படியுங்கோ. அப்பவாவது உங்க மர மண்டையில் ஏதாவது உறைக்கிறதா என்று பார்க்கலாம்.  'பண்ணைக்கு வந்தால் வைக்கோல் பண்டில் இலவசமாகத் தருகிறோம்’ என்று அதில் போட்டிருக்கா இல்லையா?... இன்னிக்கே போய் எடுத்துண்டு வந்துடலாம், நம்ப காரில்” என்றாள்.
     “கமலா.. அது நோட்டீஸ் தானே.. ஏதோ கோர்ட் சம்மன் மாதிரி நினைச்சுண்டு, காலில் வெந்நீர் கொட்டிண்ட மாதிரி பதைபதைச்சுண்டு அவசரப்படறயே...  ஸ்டாக் தீர்ந்துடுச்சு என்று சொல்லிவிடுவார்களா என்ன?” என்று கேட்டேன்.
     இதற்கு கமலாவின்  ‘நியுட்டன் விதி’ ரியாக்‌ஷன் பற்றியும் அவள் விட்ட ராம பாணங்களைப் பற்றிய விவரங்களும் இப்போது தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வைக்கோல் பண்டில் வாங்க, பண்ணைக்குப் போகக் கார் புறப்பட்டது. இரண்டு மணி கழிந்து நாலு பண்டில் வைக்கோலுடன் வீடு திரும்பினோம்.
     நாளைக்குக் காலையில் ‘கிச்சன்’ கார்டன்’ வேலையை ஆரம்பிச்சுடப் போறேன்” என்றாள்.
      “தப்பு, தப்பு,  ‘ஆரம்பிச்சுடப் போறோம்’ என்று சொல்லு” என்று சொன்னேன்.
       “என்ன, என்ன? என்ன சொன்னீங்க? ஆரம்பிச்சுடப் போறோம்னு என்றா சொன்னீங்க. நிஜம்மாவா? சுனாமிதான் வரப் போறது” என்றாள்.
          “சுனாமியும் வராது…பினாமியும் வராது. நம்ப தோட்டம் பாரேன், ஹார்ட்டி கல்சரல் கிளப் நடத்தும் தோட்டப் போட்டியில் நிச்சயம் பரிசு வாங்கும். பரிசு வாங்கறதுக்கு நீ போகிற போது ,என்ன கலர் பட்டுப் புடவை கட்டிக்கணும்னு இப்பவே பிடிச்சு யோசிக்க ஆரம்பி” என்றேன்.

     மறுநாள் முதல், தோட்ட வேலை ஜரூராக நடந்தது. பள்ளம் தோண்டுவதும், கொத்துவதும் என் வேலை. கிராமத்தில் இந்த வேலைகளைச் சிறு வயதில் செய்திருந்ததால், மளமளவென்று செய்தேன். கமலா அவ்வப்போது இங்கே கத்தரி செடி, இங்கே பச்சை மிளகாய், இங்கே தக்காளி என்று பிளான் போட்டாள்.

October 04, 2018

கமலாவும் கிச்சன் கார்டனும்- பாகம் 1


      என் அருமை மனைவி டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளில் எதைப் பார்க்க மறந்தாலும், இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தவறமாட்டாள். ஒன்று; சமையல் குறிப்பு; இரண்டாவது; தோட்டக்கலை, கிருஷிதர்ஷன், வயலும் வாழ்வும் என்ற பெயர்களில் வரும் எல்லா நிகழ்ச்சிகளையும் விடமாட்டாள்.

இத்தனை வருஷங்களாக நிகழ்ச்சிகளைப் பார்த்து வருவதால், என் மனைவிக்கு 200, 300 விதமான சமையல் குறிப்புகள் அத்துப்படி. கவனியுங்கள், குறிப்புகள் அத்தனையும் அத்துப்படியே தவிர, இன்னும் ‘பிராக்டிகல்’ பாடங்கள் வகுப்புக்கு அவள் போகவில்லை! அதனால், அது  ‘பிஸிபேளா-அன்னா’வாக இருந்தாலும் சரி, மிகவும் கஷ்டமான செய்முறையில் தயாரிக்கப்படும் சோன்பப்டி போன்ற இனிப்பு வகைகளானாலும் சரி, பாதி வார்த்தைகளாலும், மீதி பாதி மோவாயையும், தலையையும் அப்படி இப்படி ஆட்டி, தயாரிப்பதை விவரித்து விடுவாள்.
     பல சமயம் அவளிடம்  “சமையற்கலை பாடங்களில் தியரியில்    நூற்றுக்கு நூறு வாங்கி விட்டாய். பிராக்டிகல்தான்…..” என்று ஆரம்பிப்பதற்குள்  “அது என்ன கம்ப சூத்திரமா என்ன?  ‘ப்பூ’ என்று ஊதித் தள்ளி விடுவேன்”  என்பாள். (அவள் ‘ப்பூ’ என்று சொல்லும் வேகத்தில், நானே   இரண்டு அடி பின்னால் தள்ளப்படுவேன்!)
     “போகட்டும்.. மணி நாலு ஆகிறது. பசிக்கிறது  ஏதாவது டிஃபன் பண்ணேன்” என்பேன்.
      ”இதோ ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் ஓடுவாள். சரியாக அரைமணி நேரம் கழித்து, பிளேட்டில் சுடச்சுட டிபன் கொண்டு வருவாள். என்ன டிபன்? ரவா உப்புமா!
      “நேற்று கூட ரவா உப்புமாதானே?” என்று ஈன சுரத்தில் கேட்பேன்.
      ”அதுவேற உப்புமா? இரும்பு வாணலியில் பண்ணேன். அது அவ்வளவு மணமாகவும் ருசியாகவும் இல்லை. இன்னிக்கு  ‘டெஃப்ளான் கோட்டட் ’ வாணலியில் பண்ணி இருக்கேன். அமெரிக்காவிலிருந்து என் அண்ணா வாங்கி அனுப்பினான். ரொம்ப உசத்தி தவ்வா?”
     “ரொம்ப உசத்தியா? எம்பையர் ஸ்டேட் கட்டடத்தில், 80-வது மாடியில் இருக்கிற கடையில் வாங்கி இருப்பாராக்கும்….” என்பேன். அதற்கு மேல் நையாண்டி பண்ணினால், இந்த ரவா உப்புமாவும் அம்பேல் ஆகிவிடும் என்று சும்மா இருந்து விடுவேன்.
       மறுநாள் டிபன் என்ன இருக்கும் தெரியுமா? அதே ரவா உப்புமாதான்!
      “என்ன கமலா….?  என்று என் காதுக்கே கேட்காதபடி மவுனமாகக்(!) கேட்பேன்.
      கமலா நியூட்டனின் விதிகளைக் கரைத்துக் குடித்திருப்பவள். அவைகளைச் சற்று தனக்கு வசதியாக லேசாக மாற்றிக் கொள்வாள்.
     நியூட்டனின் மூன்றாவது விதி; “Every action has an equal  and opposite reaction” என்பதை நியூட்டனின் ‘ஆன்டிகமலா அதைக் கொஞ்சம் மாற்றி Every action has an equal and increased opposite reaction’ என்று, லேசான திருத்தத்துடன் மாற்றிக் கொள்வாள்.
     அதனால்தான் நான் மெல்லமாக என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன். அது பலமடங்கு   ‘டெஸிபலில்’ ரியாக்‌ஷனா’க வரும். சரி விட்ட இடத்திற்கு வருகிறேன்.
      ‘ஆமாம், நேற்று பண்ண உப்புமாவேதான். இன்னிக்கு எந்த பிளேட்டில் கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கோ…. கலியாணத்தின் போது உங்களுக்கு எங்க அப்பா வாங்கிக் கொடுத்த தட்டு. வெள்ளித் தட்டு. சாப்பாட்டுக்கு ருசி சேர்க்கும் என்பது மட்டுமல்ல; கொஞ்சம் வெள்ளியும் பஸ்பமாக உள்ளே சேர்கிறதால் உடம்புக்கும் பலம்என்பாள்.
இந்த விளக்கம் அல்லது சிற்றுரை  எத்தனை தடவை சொல்லி இருப்பாள் எனக்குத் தெரியாது. அவள் சொன்ன அடுத்த கணம், அந்த வார்த்தைகளை அப்படியே காதிலிருந்து கொட்டிவிடுவேன்!
     இதுதான் கமலாவின் வெரைட்டி! ஒரு கவிஞர் சொன்ன புத்திமதியை என் மூளையில் ‘க்விக் ஃபிக்ஸ்’போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன். அது; உன் மனைவி நல்லது செய்தால்,  ‘BE KIND’;  சள்ளு புள்ளு என்று விழுந்தால் ’BE BLIND’!  இதன் காரணமாக  கிட்டத் தட்ட முழு  Blind  என்ற ஸ்டேஜில் இருக்கும் நான், மேலும் Blind  ஆக விரும்பவில்லை. ஆகவே, ‘ஆமாம். வெள்ளித் தட்டு மட்டும் இருந்தால் போதாது. வெள்ளி ஸ்பூன் கொடு… இன்னும் தூக்கி அடிக்கும். இரண்டு மடங்கு பலம் வரும். …. வெள்ளியில் Shovel  யாரும் பண்ணலையே… சேஎன்பேன்.
     “போதும், உங்க அசட்டுத்தனம்…என்பாள்.
      இப்படி, அவளை அடிக்கடி குறை சொன்னதாலோ என்னவோ, சமையல் குறிப்பு நிகழ்ச்சிகளை விட அதிகமாகத் தோட்டக்கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினாள்.  ஹிந்தி, தெலுங்கு, ரஷ்யன், ஸ்பானிஷ் என்று எந்த மொழியாக இருந்தாலும் பார்ப்பாள்.
      ஒரு நாள் - அன்றைக்கு ஏதோ பண்டிகை தினம் என்று நினைக்கிறேன்.-அல்லது ஒரே நாளில் இரண்டு தடவை ராகுகாலம் வந்ததோ என்னவோ, சமையல் குறிப்பு நிகழ்ச்சியில் இங்கிலீஷ் வெஜிடபள்கள் பயிரிடும் முறையை ஒருத்தர் அரைகுறை ஆங்கிலத்தில் விளக்கி விவரித்தார். (அவரது ஆங்கிலம், தமிழ் மாதிரியும், தமிழ், ஆங்கிலம் மாதிரியும் இருந்ததால் பாதி புரியவில்லை!)

           நிகழ்ச்சி முடிந்ததும், அவர் ஒரு சின்ன அறிவிப்பு செய்தார். “அன்பான நேயர்களே, உங்களுக்கு அரிய பரிசு காத்திருக்கிறது. “உங்களுக்கு இங்கிலீஷ் காய்கறிகள் விதை இங்கிலாந்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டிற்கு வரும். முழுதும் இலவசம். தபால் செலவு மட்டும் நூறு ரூபாய்  அனுப்பினால் போதும். கிட்டத்தட்ட 500 ரூபாய் மதிப்பு விதைகள். உடனே கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதுங்கள்….என்று ஏதேதோ சொன்னார்.  அதுமட்டுமல்ல; “இது லண்டன் வீட்டுத் தோட்டம். பாருங்கள் கத்திரிக்காய்.. இது ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி தோட்டம். பாவக்காய் பாருங்கள். அல்ஃபோன்சா மாம்பழம் கெட்டுது. அவ்வளவு ஸ்வீட்..என்று சுற்றுலா விளம்பரம் மாதிரி பல ஊர்களைக் காட்டினார்.
     “நம்ப வீட்டில் தோட்டம் போடப் போகிறேன் நான் …உங்களைத்தான்… நூறு ரூபாய் அனுப்புங்கோ” என்று சொன்னாள். இல்லை, இல்லை.. சொல்லவில்லை. உத்தரவிட்டாள்!
     “உடனே நானும் தசரத மகாராஜனாக ஆகிவிட்டேன். மனைவிக்கு வாக்குக் கொடுத்ததைக் காப்பாற்றினேன். நூறு ரூபாயை அனுப்பினேன். அது 100% நஷ்டம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் 
              *                           *
       ஒரு வாரம் கழித்து, தபாலில் ஒரு பளபள பாக்கெட் கமலாவின் பெயரில் வந்தது. அதில் முகவரி பொன்னிற எழுத்துக்களில் இருந்தது. பாக்கெட்டைப் பிரித்தாள். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் விதைப் பொட்டலங்கள் நாலு இருந்தன. பொட்டலங்களின் மீது தக்காளி, கத்திரிக்காய், காலிஃப்ளவர், கேரட் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஏதோ தன் வீட்டுத் தோட்டத்திலிருந்து வந்த காய்கறிகள் அவை என்று கமலா கருதினாளோ என்னவோ,  அல்லது சில வாரங்களில் இப்படிக் கண்ணைப் பறிக்கும் அழகுடன் கூடை கூடையாகத் தன் கிச்சன் கார்டனில் வரப்போகும் காய்கறிகள் இப்படி இருக்குமோ என மானசீகமாக ரசித்தாளோ என்னவோ, அவள் முகம் அத்தனை மலர்ச்சி பெற்றது.
     “பொட்டலத்தை இப்படிக் கொடு, நான் பார்க்கிறேன்.என்று கையை நீட்டினேன்.
     “தரேன்.. கொஞ்சம்  தளுக்காக வாங்கிக் கொள்ளுங்கள். உள்ளே விதைகள். உங்கள் இரும்புக் கையைப் போட்டு அதைப் பஸ்பமாக கசக்கி விடப் போகிறீர்கள். ஒவ்வொரு விதையிலிருந்தும் 10 கிலோ தக்காளி வரும்என்றாள். (விதை விற்பனை செய்த கம்பெனி ஒவ்வொரு விதையும் 5 கிலோ தக்காளியை உற்பத்தி செய்யும்என்றுதான் போட்டிருந்தான். ’கமலாவின் கைராசி; எல்லாம் இரண்டு மடங்கு உற்பத்தி செய்தாலும் செய்யும்’ என்று எனக்கு நானே விளக்கம் கொடுத்துக் கொண்டேன்.!)
     விதைப் பொட்டலங்களுடன், விவரமாக அச்சிடப்பட்ட சாகுபடி முறைக் கையேட்டையும் அனுப்பியிருந்தார்கள். பளபளவென்ற நேர்த்தியான காகிதம். அதை எடுத்து லேசாகப் புரட்டினாள்.  பக்கங்கள் புரளப் புரள கமலாவின் முகத்தில் மலர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. (அவளுடைய கல்யாண அழைப்பிதழைப் பார்த்தபோது கூட இப்படி ஜொலிப்பு அவள் முகத்தில் வந்திருக்குமா என்பது சந்தேகம்!)
     எந்த செடிக்கு எந்த உரம் போட வேண்டும், போட வேண்டிய அளவு, அட்டவணை போன்ற விவரங்கள் கொடுத்து இருந்தார்கள். சொட்டு நீர் பாய்ச்சுவதற்கு தேவையான குழாய்கள் முதலியவற்றையும் அவர்கள் விற்பனை செய்வதாகவும், “நீங்கள்  எங்களது மிக முக்கியமான வாடிக்கையாளர் என்பதால் உங்களுக்குப் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறோம்என்று அச்சடித்த கூப்பனையும் அனுப்பி  இருந்தார்கள்.
     “கமலா, நீ ஸ்பெஷல் கஸ்டமர்.. உன் பெயருக்கு தனி ராசி இருக்குஎன்று ‘ஐஸ்வைத்தேன். இத்தனை வருஷங்கள் நான் வைத்த ஐஸ் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால், கமலாவை ஒரு ’ஐஸ்பெர்க்’ என்று சொல்வீர்கள்.
     மளமளவென்று, தேவையான உரம், பூச்சி மருந்து, கோழிவலை, பயிர் டானிக் என்று பெரிய லிஸ்ட்டைப் போட்டு விட்டாள். ஐயாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்தேன்.
     “இருங்க… போய் காபி போட்டுக் கொண்டு வருகிறேன்என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள். அட, திடீர் கரிசனம்!!!.
     அவள் சென்றதும், அந்த முக்கியமான வாடிக்கையாளர் கூப்பனை எடுத்து, இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தேன். அப்போது மூலையில் சிறிய எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த சிறிய குறிப்பு கண்ணில் பட்டது. “ஸ்பெஷல் கஸ்டமர் கூப்பன் 20,000 காபிகள்என்று இருந்தது! (இந்த கம்பெனிக்கு சாதாரண வாடிக்கையாளர் ஒருத்தர் கூட இருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம்… இதைக் கமலாவிடம் சொல்லக் கூடாது” என்று எனக்கு நானே புத்திமதியாகச் சொல்லிக் கொண்டேன்!)
(தொடரும்)
( பாகம்-2  இன்னும் நலைந்து நாட்களில் வரும்.)