October 21, 2018

சூழ்நிலை


சூழ்நிலைதான் மனிதனையும் மனித குணங்களையும் உருவாக்குகிறது.  படு சீரியஸாக இருக்கும் ஆசாமி கூட சீட்டுக் கோஷ்டியில் இருக்கும் போது அரட்டையும், கூச்சலும் போடத் தயங்குவதில்லை. அவரே மாலையில் கதாகாலட்சேபத்தில் உட்கார்ந்திருக்கும் போது, காதலாகிக் கசித்து, கண்ணீர்ப் பெருக்கி நிற்கிறார்.  சீட்டாட்டத்தின்போது , ஜோக்கடிக்காமல் இருப்பது நடக்கக் கூடிய காரியமல்ல. எப்பேர்ப்பட்ட முசுடுவும் மாறி விடுவார்.

  வீட்டு வாசலுக்கு வரும்  காய்கறிக்காரியிடம் "என்ன? கொத்தமல்லி ஒரு ரூபய்க்கு நாலு கட்டுதானா?  அநியாய வெலை சொல்றியே! ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது , சற்றும் யோசிக்காமல் ’டிப்’பாக ஐந்து ரூபாய் கொடுப்பார்- சர்வர் கேட்காமல் இருந்தாலும்!
    மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சிப்பந்தி, தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு’டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில், தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து க் கொண்டு, வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம்.  எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
    இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். "ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலை ஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபது, முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்! இது பழைய கணக்கு. இப்போது எவ்வளவு இருக்கும் என்று எனக்குத் தெரியாது!))  இவரே கிளப்பை விட்டு  இரவு 12 மணிக்கு வெளியே வரும் போது ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். "என்னய்யா,  சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது  ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.

    தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: "என்ன இது? இன்னும் இரண்டு கவு ன்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை. '' ஆனால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில், ஒரு  ‘சலானி’ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் கூட காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
          பீச், சினிமா தியேட்டர் என்று  போனால் பாப்கார்ன், ஐஸ் கிரீம் என்று கண்ணை மூடிச் செலவு பண்ணுவார்: கோவில் உண்டியில் பணம் போட, பர்ஸைத் துழாவித் துழாவிச் சில்லறையைத் தேடுவார்.
                          நாம் எல்லாரும் சூழ்நிலைகளின் கைப்பொம்மைகள்!
=====================

( அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.)

10 comments:

  1. கடுகு சார்... இதற்கு சூழ்நிலை என்பதைவிட, ஒவ்வொரு மனிதனும் பலப்பல முகமூடிகளை அணிந்துள்ளான், சமயத்துக்கு ஏற்றபடி அந்த அந்த முகமூடியோடு நடந்துகொள்கிறான் என்று சொல்வதுதான் பொருத்தமா இருக்கும்.

    நம் குழந்தைகள், அம்மாவிடம் பேசும்போதும், அம்மா செய்தவைகளைச் சாப்பிடும்போதும் (ஓ..இன்றைக்கும் துவையலா? எனக்கு வேண்டாம். எனக்கு இப்போவே பச்சிடி வேணும் என்றெல்லாம்), அதே சமயம் நண்பர்களோடு அல்லது அவர்கள் வீட்டில் சாப்பிடும்போதும் பிஹேவியர் மாறுகிறது.

    ஆபீசில், தனக்குக் கீழ் வேலைபார்ப்பவரிடம், அல்லது கீழ்நிலை உத்தியோகம் செய்பவர்களிடம் காட்டும் 'அதிகார தோரணை', தனக்கு மேலுள்ளவர்களிடம் காட்டும் 'பம்மல்' என்று நிறைய உதாரணம் சொல்லலாம்.

    ReplyDelete
  2. என்னுடைய மாமனார், ஆட்டோ காரர்கள், எளியவர்களிடம் பேரம் பேசுவதை ஏற்றுக்கொள்ளமாட்டார். அவர்கள் 10 ரூபாய் கூடக் கேட்டு வாங்கி, மாடி வீடு கட்டப்போவதில்லை, அப்படிக் கொடுப்பதால் நாமும் ஏழையாகிவிடப் போவதில்லை என்பது அவர் எப்போதும் சொல்வது.

    நான் காட்மண்டுவில், சாளிக்கிராமம் பேரம் பேசியபோது, அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவங்க கேட்கிற விலையைக் கொடுப்பதுதான் சரி, நாம் வாங்குவது பூஜைக்கு என்பது அவரது கொள்கை (நான் அதனை ஒத்துக்கொள்ளாத போதும்)

    ReplyDelete
  3. இந்தக் கட்டுரையைப் படித்து நான் எப்படி நடந்துகொண்டேன், கொள்கிறேன் என்று எண்ணவைத்துவிட்டீர்கள்.

    எனக்கு என்று வரும்போது, இது எதுக்கு அநாவசியச் செலவு என்று எண்ணுவதும், பேரம் பேசுவதும் எப்போதும் நான் செய்வது. (ஒரு தடவை சிங்கப்பூரில் கடுமையாகப் பேரம் பேச முயன்று, விற்கிறவள், உனக்கு நான் விற்கப்போவதில்லை என்று சொன்னது தனிக் கதை). ஆனால் பசங்களுக்கு என்று வரும்போது, இந்த மாதிரி சிக்கன எண்ணம் வெகுவாகக் குறைந்துவிடும்.

    வித்தியாசமான டாபிக்கில் கட்டுரை எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. நீங்க 'சூழ்நிலை' என்று சொல்வது ஒரு விதத்தில் சரியாகவும் இருக்கும். நாம் மட்டும் போகும்போது சிக்கனமாகவும் பேரம் பேசும் மனநிலையிலும் இருப்போம். நமக்குத் தெரிந்தவரோடோ இல்லை 'காதலி'யோடோ செல்லும்போதும் செலவைப் பற்றிக் கவலைப்படாதது போல் நடிப்போம்..ஹாஹாஹா. (நாங்கள் கணிணி ப்ராஜக்ட் செய்வதற்காக குழுவில் உள்ள ஒவ்வொருவருடைய வீட்டிற்குச் செல்வோம். அங்கு பேசி ப்ராஜக்ட் வேலைகளைச் செய்வது என்பது காரணம். அப்படிச் செல்லும்போது அந்த அந்த வீட்டில் உணவு உண்ணுவோம். அப்படி ஒருவர் வீட்டிற்குச் சென்றபோது, இட்லியை ஒவ்வொரு தட்டில் வைக்கும்போது ஒன்று மேசையில் விழுந்துவிட்டது. உடனே அந்தப் பெண்ணின் அம்மா அதனைத் தூரப் போட்டார். எனக்கு என்னடா இப்படிச் செய்துவிட்டாரே என்று தோன்றியது. உணவை இப்படி ப்ரஸ்டிஜுக்காக வீணாக்கிவிட்டாரே என்று நினைத்தேன்).

    ReplyDelete
  5. மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு! விசித்திரமானதும் கூட!

    ReplyDelete
  6. இதுக்கு நான் போட்ட கருத்து வெளியே வரலையோ? நெல்லைத் தமிழரோட கருத்து எனக்கும் வந்திருக்கிறதாலே ஃபாலோ அப் சரியா இருக்கு. ஆனால் என்னோட கருத்தைக் காக்கா தூக்கிண்டு போயிடுத்தா? :) என்ன எழுதினேன் என்பது நினைவில் வரலை! :)

    ReplyDelete
  7. இரண்டாவதும் போயிருக்குமானு ஜந்தேகமா இருக்கு! :)

    ReplyDelete
  8. நம் வீடுதேடி வரும் கடைகாரரிடம் காலம் காலமாக பேரம் பேசி பழகிவிட்டோம் ஆனால் வணிக வளகங்கள், பெரிய கடைகள் எல்லாம் சமீபத்தில் வந்தவை அதனால் அந்த பழக்கம் இல்லை. மேலும் பெரிய இடங்களில் பேரம் பேசினால் எதிர் வினை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது, மானம் போய்விடும் என்ற பயம், தெருவோர கடைகளில் பேரம் பேசினால் அப்படி இல்லை என்ற தைரியம் காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  9. என்னது... மோடி அவர்களின் படம் போட்டுவிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று எழுதியிருக்கீங்க! இரண்டு படங்களையும் ரசித்தேன். கோபுலு அவர்கள் இல்லாத்தால் அவருடைய ஏரியாவிலும் புகுந்துட்டீங்க போலிருக்கு..

    ReplyDelete
  10. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு, நன்றி. தவறை சரி செய்து விட்டேன்..
    (கோபுலுவின் எரியாவில புகுவதற்கு அசாதாரண திறமை வேன்டும். எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறுவதை விடக் கடினம்!)
    -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!