என் அருமை மனைவி டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளில்
எதைப் பார்க்க மறந்தாலும், இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தவறமாட்டாள். ஒன்று; சமையல்
குறிப்பு; இரண்டாவது; தோட்டக்கலை, கிருஷிதர்ஷன், வயலும் வாழ்வும் என்ற பெயர்களில் வரும்
எல்லா நிகழ்ச்சிகளையும் விடமாட்டாள்.
இத்தனை வருஷங்களாக நிகழ்ச்சிகளைப் பார்த்து வருவதால், என்
மனைவிக்கு 200, 300 விதமான சமையல் குறிப்புகள் அத்துப்படி. கவனியுங்கள், குறிப்புகள்
அத்தனையும் அத்துப்படியே தவிர, இன்னும் ‘பிராக்டிகல்’ பாடங்கள் வகுப்புக்கு அவள் போகவில்லை! அதனால், அது ‘பிஸிபேளா-அன்னா’வாக இருந்தாலும் சரி, மிகவும் கஷ்டமான செய்முறையில் தயாரிக்கப்படும்
சோன்பப்டி போன்ற இனிப்பு வகைகளானாலும் சரி, பாதி வார்த்தைகளாலும், மீதி பாதி மோவாயையும்,
தலையையும் அப்படி இப்படி ஆட்டி, தயாரிப்பதை விவரித்து விடுவாள்.
பல சமயம் அவளிடம் “சமையற்கலை பாடங்களில் தியரியில் நூற்றுக்கு நூறு வாங்கி விட்டாய். பிராக்டிகல்தான்…..”
என்று ஆரம்பிப்பதற்குள் “அது என்ன கம்ப சூத்திரமா என்ன? ‘ப்பூ’ என்று ஊதித் தள்ளி விடுவேன்” என்பாள். (அவள் ‘ப்பூ’ என்று சொல்லும் வேகத்தில், நானே இரண்டு அடி பின்னால் தள்ளப்படுவேன்!)
“போகட்டும்.. மணி நாலு ஆகிறது. பசிக்கிறது ஏதாவது டிஃபன் பண்ணேன்” என்பேன்.
”இதோ ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள்
ஓடுவாள். சரியாக அரைமணி நேரம் கழித்து, பிளேட்டில் சுடச்சுட டிபன் கொண்டு வருவாள்.
என்ன டிபன்? ரவா உப்புமா!
“நேற்று கூட ரவா உப்புமாதானே?” என்று ஈன சுரத்தில்
கேட்பேன்.
”அதுவேற உப்புமா? இரும்பு வாணலியில் பண்ணேன்.
அது அவ்வளவு மணமாகவும் ருசியாகவும் இல்லை. இன்னிக்கு ‘டெஃப்ளான் கோட்டட் ’ வாணலியில்
பண்ணி இருக்கேன். அமெரிக்காவிலிருந்து என் அண்ணா வாங்கி அனுப்பினான். ரொம்ப உசத்தி
தவ்வா?”
“ரொம்ப உசத்தியா? எம்பையர் ஸ்டேட் கட்டடத்தில், 80-வது மாடியில் இருக்கிற கடையில் வாங்கி இருப்பாராக்கும்….” என்பேன். அதற்கு மேல்
நையாண்டி பண்ணினால், இந்த ரவா உப்புமாவும் அம்பேல் ஆகிவிடும் என்று சும்மா இருந்து
விடுவேன்.
மறுநாள் டிபன் என்ன இருக்கும் தெரியுமா? அதே
ரவா உப்புமாதான்!
“என்ன கமலா….?”
என்று என் காதுக்கே கேட்காதபடி
மவுனமாகக்(!) கேட்பேன்.
கமலா நியூட்டனின் விதிகளைக் கரைத்துக் குடித்திருப்பவள்.
அவைகளைச் சற்று தனக்கு வசதியாக லேசாக மாற்றிக் கொள்வாள்.
நியூட்டனின் மூன்றாவது விதி; “Every action has an equal and opposite reaction” என்பதை நியூட்டனின் ‘ஆன்டி’ கமலா
அதைக் கொஞ்சம் மாற்றி Every
action has an equal and increased opposite reaction’ என்று, லேசான திருத்தத்துடன் மாற்றிக் கொள்வாள்.
அதனால்தான் நான் மெல்லமாக என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன்.
அது பலமடங்கு ‘டெஸிபலில்’ ரியாக்ஷனா’க வரும். சரி விட்ட இடத்திற்கு வருகிறேன்.
‘ஆமாம், நேற்று பண்ண உப்புமாவேதான். இன்னிக்கு
எந்த பிளேட்டில் கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கோ…. கலியாணத்தின் போது உங்களுக்கு எங்க
அப்பா வாங்கிக் கொடுத்த தட்டு. வெள்ளித் தட்டு. சாப்பாட்டுக்கு ருசி சேர்க்கும் என்பது
மட்டுமல்ல; கொஞ்சம் வெள்ளியும் பஸ்பமாக உள்ளே சேர்கிறதால் உடம்புக்கும் பலம்” என்பாள்.
இந்த விளக்கம் அல்லது
சிற்றுரை எத்தனை தடவை சொல்லி இருப்பாள் எனக்குத் தெரியாது. அவள் சொன்ன அடுத்த
கணம், அந்த வார்த்தைகளை அப்படியே காதிலிருந்து கொட்டிவிடுவேன்!
இதுதான் கமலாவின் வெரைட்டி! ஒரு கவிஞர் சொன்ன
புத்திமதியை என் மூளையில் ‘க்விக் ஃபிக்ஸ்’’
போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன்.
அது; உன் மனைவி நல்லது செய்தால், ‘BE
KIND’; சள்ளு புள்ளு என்று விழுந்தால் ’BE BLIND’! இதன் காரணமாக கிட்டத்
தட்ட முழு Blind என்ற
ஸ்டேஜில் இருக்கும் நான், மேலும் Blind ஆக
விரும்பவில்லை. ஆகவே, ‘ஆமாம். வெள்ளித் தட்டு மட்டும் இருந்தால் போதாது. வெள்ளி ஸ்பூன்
கொடு… இன்னும் தூக்கி அடிக்கும். இரண்டு மடங்கு பலம் வரும். …. வெள்ளியில் Shovel
யாரும் பண்ணலையே… சே’ என்பேன்.
“போதும், உங்க அசட்டுத்தனம்…” என்பாள்.
இப்படி, அவளை அடிக்கடி குறை சொன்னதாலோ என்னவோ,
சமையல் குறிப்பு நிகழ்ச்சிகளை விட அதிகமாகத் தோட்டக்கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினாள். ஹிந்தி, தெலுங்கு, ரஷ்யன், ஸ்பானிஷ் என்று எந்த
மொழியாக இருந்தாலும் பார்ப்பாள்.
ஒரு நாள் - அன்றைக்கு ஏதோ பண்டிகை தினம் என்று
நினைக்கிறேன்.-அல்லது ஒரே நாளில் இரண்டு தடவை ராகுகாலம் வந்ததோ என்னவோ, சமையல் குறிப்பு
நிகழ்ச்சியில் இங்கிலீஷ் வெஜிடபள்கள் பயிரிடும் முறையை ஒருத்தர் அரைகுறை ஆங்கிலத்தில்
விளக்கி விவரித்தார். (அவரது ஆங்கிலம், தமிழ் மாதிரியும், தமிழ், ஆங்கிலம் மாதிரியும்
இருந்ததால் பாதி புரியவில்லை!)
நிகழ்ச்சி முடிந்ததும், அவர் ஒரு சின்ன அறிவிப்பு செய்தார். “அன்பான நேயர்களே, உங்களுக்கு அரிய பரிசு காத்திருக்கிறது. “உங்களுக்கு இங்கிலீஷ் காய்கறிகள் விதை இங்கிலாந்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டிற்கு வரும். முழுதும் இலவசம். தபால் செலவு மட்டும் நூறு ரூபாய் அனுப்பினால் போதும். கிட்டத்தட்ட 500 ரூபாய் மதிப்பு விதைகள். உடனே கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதுங்கள்….” என்று ஏதேதோ சொன்னார். அதுமட்டுமல்ல; “இது லண்டன் வீட்டுத் தோட்டம். பாருங்கள் கத்திரிக்காய்.. இது ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி தோட்டம். பாவக்காய் பாருங்கள். அல்ஃபோன்சா மாம்பழம் கெட்டுது. அவ்வளவு ஸ்வீட்..” என்று சுற்றுலா விளம்பரம் மாதிரி பல ஊர்களைக் காட்டினார்.
நிகழ்ச்சி முடிந்ததும், அவர் ஒரு சின்ன அறிவிப்பு செய்தார். “அன்பான நேயர்களே, உங்களுக்கு அரிய பரிசு காத்திருக்கிறது. “உங்களுக்கு இங்கிலீஷ் காய்கறிகள் விதை இங்கிலாந்திலிருந்து நேரடியாக உங்கள் வீட்டிற்கு வரும். முழுதும் இலவசம். தபால் செலவு மட்டும் நூறு ரூபாய் அனுப்பினால் போதும். கிட்டத்தட்ட 500 ரூபாய் மதிப்பு விதைகள். உடனே கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதுங்கள்….” என்று ஏதேதோ சொன்னார். அதுமட்டுமல்ல; “இது லண்டன் வீட்டுத் தோட்டம். பாருங்கள் கத்திரிக்காய்.. இது ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி தோட்டம். பாவக்காய் பாருங்கள். அல்ஃபோன்சா மாம்பழம் கெட்டுது. அவ்வளவு ஸ்வீட்..” என்று சுற்றுலா விளம்பரம் மாதிரி பல ஊர்களைக் காட்டினார்.
“நம்ப வீட்டில் தோட்டம் போடப் போகிறேன் நான்
…உங்களைத்தான்… நூறு ரூபாய் அனுப்புங்கோ” என்று சொன்னாள். இல்லை, இல்லை.. சொல்லவில்லை.
உத்தரவிட்டாள்!
“உடனே நானும் தசரத மகாராஜனாக ஆகிவிட்டேன். மனைவிக்கு வாக்குக் கொடுத்ததைக் காப்பாற்றினேன். நூறு ரூபாயை அனுப்பினேன். அது 100% நஷ்டம் என்று மனதிற்குள்
நினைத்துக் கொண்டேன்
* *
ஒரு வாரம் கழித்து, தபாலில் ஒரு பளபள பாக்கெட்
கமலாவின் பெயரில் வந்தது. அதில் முகவரி பொன்னிற எழுத்துக்களில் இருந்தது. பாக்கெட்டைப்
பிரித்தாள். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் விதைப் பொட்டலங்கள் நாலு இருந்தன. பொட்டலங்களின்
மீது தக்காளி, கத்திரிக்காய், காலிஃப்ளவர், கேரட் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது. ஏதோ
தன் வீட்டுத் தோட்டத்திலிருந்து வந்த காய்கறிகள் அவை என்று கமலா கருதினாளோ என்னவோ, அல்லது சில வாரங்களில் இப்படிக் கண்ணைப் பறிக்கும்
அழகுடன் கூடை கூடையாகத் தன் கிச்சன் கார்டனில் வரப்போகும் காய்கறிகள் இப்படி இருக்குமோ
என மானசீகமாக ரசித்தாளோ என்னவோ, அவள் முகம் அத்தனை மலர்ச்சி பெற்றது.
“பொட்டலத்தை இப்படிக் கொடு, நான் பார்க்கிறேன்.” என்று
கையை நீட்டினேன்.
“தரேன்.. கொஞ்சம் தளுக்காக வாங்கிக் கொள்ளுங்கள். உள்ளே விதைகள்.
உங்கள் இரும்புக் கையைப் போட்டு அதைப் பஸ்பமாக கசக்கி விடப் போகிறீர்கள். ஒவ்வொரு விதையிலிருந்தும்
10 கிலோ தக்காளி வரும்” என்றாள். (விதை விற்பனை செய்த கம்பெனி ஒவ்வொரு
விதையும் 5 கிலோ தக்காளியை உற்பத்தி செய்யும்” என்றுதான்
போட்டிருந்தான். ’கமலாவின் கைராசி; எல்லாம் இரண்டு மடங்கு உற்பத்தி செய்தாலும் செய்யும்’
என்று எனக்கு நானே விளக்கம் கொடுத்துக் கொண்டேன்.!)
விதைப் பொட்டலங்களுடன், விவரமாக அச்சிடப்பட்ட
சாகுபடி முறைக் கையேட்டையும் அனுப்பியிருந்தார்கள். பளபளவென்ற நேர்த்தியான காகிதம்.
அதை எடுத்து லேசாகப் புரட்டினாள். பக்கங்கள்
புரளப் புரள கமலாவின் முகத்தில் மலர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே போயிற்று. (அவளுடைய
கல்யாண அழைப்பிதழைப் பார்த்தபோது கூட இப்படி ஜொலிப்பு அவள் முகத்தில் வந்திருக்குமா
என்பது சந்தேகம்!)
எந்த செடிக்கு எந்த உரம் போட வேண்டும், போட
வேண்டிய அளவு, அட்டவணை போன்ற விவரங்கள் கொடுத்து இருந்தார்கள். சொட்டு நீர் பாய்ச்சுவதற்கு
தேவையான குழாய்கள் முதலியவற்றையும் அவர்கள் விற்பனை செய்வதாகவும், “நீங்கள் எங்களது மிக முக்கியமான வாடிக்கையாளர் என்பதால்
உங்களுக்குப் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறோம்” என்று
அச்சடித்த கூப்பனையும் அனுப்பி இருந்தார்கள்.
“கமலா, நீ ஸ்பெஷல் கஸ்டமர்.. உன் பெயருக்கு தனி
ராசி இருக்கு” என்று ‘ஐஸ்’ வைத்தேன்.
இத்தனை வருஷங்கள் நான் வைத்த ஐஸ் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால், கமலாவை ஒரு ’ஐஸ்பெர்க்’
என்று சொல்வீர்கள்.
மளமளவென்று, தேவையான உரம், பூச்சி மருந்து, கோழிவலை,
பயிர் டானிக் என்று பெரிய லிஸ்ட்டைப் போட்டு விட்டாள். ஐயாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்தேன்.
“இருங்க… போய் காபி போட்டுக் கொண்டு வருகிறேன்” என்று
சொல்லிக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள். அட, திடீர் கரிசனம்!!!.
அவள் சென்றதும், அந்த முக்கியமான வாடிக்கையாளர்
கூப்பனை எடுத்து, இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தேன். அப்போது மூலையில் சிறிய
எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த சிறிய குறிப்பு கண்ணில் பட்டது. “ஸ்பெஷல் கஸ்டமர் கூப்பன்
20,000 காபிகள்” என்று இருந்தது! (”இந்த
கம்பெனிக்கு சாதாரண வாடிக்கையாளர் ஒருத்தர் கூட இருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம்…
இதைக் கமலாவிடம் சொல்லக் கூடாது” என்று எனக்கு நானே புத்திமதியாகச் சொல்லிக் கொண்டேன்!)
(தொடரும்)
( பாகம்-2 இன்னும் நலைந்து நாட்களில் வரும்.)
ஆரம்பமே அமர்க்களம். தொடருங்கள் அடுத்துக் கமலாவுடன் தொச்சுவும் சேர்ந்து கொண்டு அங்கச்சியின் உதவியோடு தோட்டம் போட்டுக் காய்கள் அறுவடை செய்து கமலாவின் அம்மாவும் சமைப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கேன். தொச்சுவையும் அங்கச்சியையும் மறந்துடாதீங்க. :)))))
ReplyDeleteரொம்ப அட்டஹாசமான ஆரம்பம். இது வரும் என்று மனதில் தோன்றுகிறது. எழுதுவதைத் தவிர்க்கிறேன் (நிறைய உங்க புத்தகங்கள், கதைகளைப் படித்ததனான் வந்த வம்பு இது-வம்பு உங்களுக்கு எனக்கல்ல... வாசகர் நினைக்காததை, நினைக்காத கோணத்தில் எழுதணுமே)
ReplyDeleteஉப்புமால ஆரம்பித்து காய்கறித் தோட்டம் போடறதுக்குத் திரும்பியிருக்கீங்க. கடைசியில் நிச்சயம் அதே 'உப்புமா'ல போய் முடியும். 5000 செலவழித்து, தொச்சு வால வம்பு வளர்ந்து, மாமியார்/கமலாவிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதற்கு ஒருவேளை ஆறுதலா, 'ரவா கிச்சடி' (பிறகு விளைந்த அரைகுறை காய்கறியை யார் தலைல கட்டறது) என்ற ஃபார்மில் உங்களுக்கு டிபனாக வரலாம்.
இண்டெரெஸ்டிங் ஆக படிக்கும்படி இருக்கு. தொடருங்கள்.
மிக்க நன்றி..
ReplyDeleteவாசகர்கள் நினைக்காததைத தான் எழுதி இருக்கிறேன். இன்னும் இரண்டு பாகம் வரும்.
--கடுகு
கணவர்மார்களின் மனதில் ஓடுவது அனைத்தும் அப்படியே எழுத்து வடிவில் தந்துள்ளீர்கள்.ஒவ்வொரு வரியும் அருமை.
ReplyDelete"நூறு ரூபாய் அனுப்புங்கோ” என்று சொன்னாள். இல்லை, இல்லை.. சொல்லவில்லை. உத்தரவிட்டாள்"
மனைவியின் வார்த்தைகள் அனைத்தும் உத்தரவுதான், கேட்டே ஆகவேண்டும் யாரும் தப்பிக்க வழியில்லை