April 29, 2013

சகுந்தலா தேவி

கம்ப்யூட்டரையே கணிதத்தில் வென்றவர் சகுந்தலா தேவி. 
 சமீபத்தில் காலமானார்.,

தன் ‘அபூர்வ’ சக்தியால் உலகப் புகழ் பெற்ற இவரைiக் கணக்குப் புலி என்றோ, கணித மேதை என்றோ, பிராடிஜி  என்றோ கூற முடியாது.அவரிடம் ஒரு அதிசய சக்தி இருந்தது. அது இறைவன் கொடுத்த அபூர்வத் திறமை. பெரியபெரிய எண்களைப் பெருக்குவது, வர்க்க மூலம், (ஸ்கொயர் ரூட். க்யூப்ரூட், கண்டு பிடிப்பது போன்ற திறமை இருந்தது.

சுமார் 40 வருஷத்திற்கு முன்பு அவரைச் சந்தித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் சகஜமாகப் பேசினார்.

அவரிடம், “  பெரிய பெரிய கணக்குகளை கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களால் எப்படி . போட முடிகிறது?  அந்த சமயங்களில் ஏதாவது ஆழ்மனதில் யோசிக்கிறீர்களா ? உங்களுக்கே உங்கள் திறமையைக் கண்டு வியப்பு ஏற்படுகிறதா?” என்றெல்லாம் கேட்டேன்.

“ எனக்கு விடை தெரிகிறது, சொல்கிறேன். எப்படி தெரிகிறது என்பதை என்னாலேயே  விளக்க முடியாது.  ... சரி.. உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்... 17-ஐயையும் 18-ஐயையும் கூட்டினால் என்ன வரும்?”என்று கேட்டார்.

நான் உடனே  “35”என்றேன்..

“ சரி.. எப்படி இவ்வளவு சீக்கிரம் சொன்னீர்கள்? மனதிற்குள் கூட்டிப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

 ” இல்லை..இது என்ன பெரிய கணக்கு.. கூட்டாமலேயே எனக்கு விடைதெரியும்” என்றேன்


“ அதாவது உங்கள் மூளை எப்படிக் கூட்டியது என்று உங்களுக்குத் தெரியாது. அது மாதிரிதான் எனக்கும்.. மனதில் வரிசையாக எண்கள் தெரிகிறது” என்றார்.

“ நீங்கள் தூங்கும்போது கனவு காண்பதுண்டா?” என்று கேட்டேன்.

“ ஏன், காண்பதுண்டு. எல்லா விதத்தில்லும் நான் சாதாரணமானவள்தான்... இந்தத்  திறமை எப்படி எனக்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.. இப்படி அதிசயத் திறமை உள்ளவர்கள் பலர் பல நாடுகளில் இருந்துள்ளார்கள்” என்றார்.

( அவரது பேட்டியைக்  குமுதத்தில் நான் எழுதினேன்)’

April 23, 2013

லால்குடி ஜெயராமன்

 திரு லால்குடி ஜெயராமன் காலமாகி விட்டார்.  அவர் என் நண்பர். அவருக்கு நான் நண்பன்.   அவர் சிறந்த  கலைஞர். நகைச்சுவையாளர். சிலேடை விரும்பி. சுமார் 35 வருஷத்திற்கு முன்பு அவர் என் வீட்டிற்கு வந்து என்னக்  கௌரவப்படுத்தி இருக்கிறார். ( ’கர்வப்படுத்தி இருக்கிறார்’  என்று  சொன்னாலும் தப்பு இல்லை!)    அவருக்கு என் அஞ்சலி.
-------------------------------------------------
’என் அன்புள்ள டில்லி’ தொடரில் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன்.
                                                     
நான்தான் ’லால்'
டில்லியில் உள்ள சங்கீத சபாக்கள் வருஷத்தில் ஐந்தாறு நிகழ்ச்சிகளை நடத்தும். அதற்கு மேல் நடத்தக் கட்டுப்படி ஆகாது.
இந்த சபா நிகழ்ச்சிகளிலும், ஜுகல் பந்தி போன்ற நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொள்பவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். ஒரு சமயம் மாதம் இரண்டு தடவைகூட வந்திருக்கிறார். இதைக் குறிப்பிட்டு நான் பத்திரிகையில் எழுதியிருந்தேன். "டில்லிக்கு லால் என்றால் ஒரு ஈடுபாடு உண்டு போலும். ஜவஹர்-லால், குல்ஜாரி-லால், லால்-பகதூர் ஆகியவர்கள் மாதிரி லால்-குடியும் டில்லியில் ஆட்சி புரிகிறார் இசை ரசிகர்களை'' என்று எழுதியிருந்தேன்.

சில நாள் கழித்து ஒரு காலை நேரத்தில் எனக்குப் போன் வந்தது. என் மனைவி கமலா போனை எடுத்தாள். மறுமுனையிலிருந்த குரல், "ஹலோ, நான் லால் பேசறேன்' என்று சொன்னது குரல்.கமலாவிற்குப் புரியவில்லை. "நீங்க யாரு? யார் வேண்டும்?'' என்று கேட்டாள்.
"நான் லால்குடி ஜெயராமன் பேசுகிறேன். அவருடன் பேச வேண்டும்'' என்றார்.
"ஓ... லால்குடி சாரா? நமஸ்காரம்.  நமஸ்காரம் அவர் பாத்ரூ... இல்லை... இல்லை இதோ கூப்பிடுகிறேன்'' என்றாள் கமலா.


லால்குடியுடன் நான் பேசினேன்.  அவர் ” சார், உங்களைப் பார்க்க வேண்டும். நான் உங்கள் விசிறி. உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.  உங்களுக்கு எப்போது   சௌகரியப்படும்?'' என்று கேட்டார்..

எனக்குத் தலைகால் புரியவில்லை. உலகமே என் எழுத்தைப் பாராட்டிக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது என்ற கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். அட, உண்மையாகவே என் எழுத்திற்கு ஒரு விசிறி கிடைத்து விட்டார்.!

April 16, 2013

பழமொழி விளக்கம் -கடுகு

நமது பழமொழிகளில் பல, வழக்கில் உருவம் மாறிவிட்டுள்ளன,
சிலவற்றைத் தவறான பொருளில் உபயோகிக்கிறோம். செம்மொழிக்குச் செய்யும் பணியாக ஒரு சில பழமொழிகளுக்கு ’சரியான’ விளக்கம் இங்கு தரப்படுகிறது


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


 இந்தப் பழமொழியைத் தோற்றுவித்தவர்  தனவந்த்ரி என்ற வைத்திய நிபுணர் என்பது ஆராய்ச்சியில் தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் பல டாக்டர்கள் இந்தப் பழமொழியை அறிந்து வைத்திருப்பதுடன், அவர்கள் பெரிய கார்கள், பங்களா, டி.வி, போன்ற பல வசதிகளுடன் வாழ்வதிலிருந்தும் தெரிவதாவது: இந்தப் பழமொழியின் உண்மையான உருவம், நோயுற்ற வாழ்வேு குறைவற்ற செல்வம்.மக்களுக்கு நோய் ஏற்பட்டால், டாக்டர்களுக்கு நல்ல வருவாய்!

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
\

இதைப் போல் தவறான பழமொழி எதுவும் இருக்கமுடியாது. அம்மியைப் போய் யாராவது அடிப்பார்களா? அடியின் வலி தாங்காது அது நகர்ந்து போகுமா?அம்மியை நகர்த்த வேண்டுமென்றால் அதைத் தூக்கி வைத்தால் ஆயிற்று. அதை போய் அடிப்பானேன்? அது என்ன பாவம் பண்ணிற்று? சரியான பழமொழி என்ன தெரியுமா?
அடி மேல் அடி அடித்தால் அம்மாமியும் நகர்வாள். கொடுமைபப்டுத்தும் மாமியாரை ஊருக்கு எப்படி அனுப்புவதாம். என்ன கேட்டாலும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிக் கொண்டே இருந்தால் ”போதுமடா சாமி” என்று சொல்லி ஊருக்குக் கிள்ம்பிப் போய் விடுவார்!  யாரோ ஒரு கெட்டிக்கார நாட்டுப்பெண் கண்டுபிடித்த பழமொழி அல்லது சூத்திரம் இது,

 சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

சங்கு என்பது ஊதுவதற்காகவே அமைந்தது. அதை ஊதினால் எப்படிக் கெட்டுப் போகும்? மேலும் ஆண்டிகள் சங்கு  ஊதி பிழப்பை நடத்துகிறவர்கள், அவர்களுக்கா  சங்கு ஊதத் தெரியாது? ’சும்மா இருந்த சங்கை’ என்றால் என்ன அர்த்தம்?  சங்கு சும்மா இல்லாமல் ஓடி ஆடி ‘ஐஸ்பாய்’ விளையாடிக் கொண்டிருக்குமா, என்ன?
இந்த பழமொழியின் சரியான  உருவம்  ”சும்மா இருந்த சங்கை ஊதி கொடுத்தான் ஆண்டி” என்பது தான்!

ஆண்டி சங்குக் கடை வைத்திருக்கிறான். அவனிடம் வந்து சங்கு வாங்குபவர்களுக்கு. சங்கை ஊதிக்காட்டிக் கொடுக்கிறான். இது தான் உண்மையான கருத்து.

April 10, 2013

மகளும் பெற்றோரும்— இரண்டு செய்திகள்


1, ஜீவிகா
 விஜய் டி.வியில் வெல்லலாம் ஒரு கோடி ஷோவில் மார்ச் மாதத்தில் ஒரு நாள் 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றவர் ஜீவிகா.
 
போட்டி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் அப்பாவைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும்  மிகவும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.
தான் வென்ற 25 லட்ச ரூபாய் செக்கையும், உறவினர் பெண்ணைக் கூப்பிட்டுப் பெற்றுக் கொள்ளச் சொன்னார் – அந்த பெண்ணின் படிப்பிற்காக!
“அப்பா, அம்மாவிடம் பணம் வாங்கி கொண்டால் கூட செக் கொடுத்து விட்டுத்தான் வாங்கிக் கொள்வேன்” என்று கூறிச் சிலிர்க்கச் செய்தார்..

பாராட்டுகள், ஜீவிகா! பெற்றோருக்குப் பெருமை சேர்த்தீர்கள்!

2. மார்ச் 28’ம் தேதி ‘ஹிந்து’ வில் வந்த வாழ்த்து விளம்பரம்  இதுவும் ஒரு பெண், அவளுடைய பெற்றோர் தொடர்பானது
 

சங்கரலக்ஷ்மி, 2011 வருடம்  B.E யில் தங்கப் பதக்கம்; 2013-ல்  M.E யில் தங்கப் பதக்கம் பெற்றார்.!
பெற்றோர்  செல்லா சுந்தரம், சுந்தரம் தங்கள் பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.. 
பார்க்க: படத்தை! 

பாராட்டுகள், சங்கரலக்ஷ்மி! பெற்றோருக்குப் பெருமை சேர்த்தீர்கள்

April 06, 2013

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 3

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 3


  சித்ராவுக்கு டானிக், வைட்டமின் என்று பலவற்றை வாங்கி வந்தான் சிவா.
    ஆஸ்பத்திரியில் பெயரை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்தாள் சித்ரா.
    பேபி பவுடர், ஃபீடிங் பாட்டில், நாப்கின் என்று பல பொருள்களை வாங்கினார்கள்.
    "தொட்டில் வாங்க வேண்டாமா?''
    "சித்ரா, தொட்டில் போட இடம் இல்லையே?''
    "தூளியில் போட்டால் என் செல்ல ராஜா நன்றாகப் புரண்டு தூங்க முடியாதே!''
    "செல்லராஜா இல்லை, செல்லதுரை.''
    "ஆமாம்... திடீர் என்று ராத்திரியில் நோவு எடுத்தால் எப்படி ஆஸ்பத்திரிக்குப் போகிறது?''
    "தெருக்கோடி டாக்ஸி ஸ்டாண்டு சர்தார்ஜியிடம் சொன்னேன். அவன் வீட்டு அட்ரஸையும் வாங்கி வந்திருக்கிறேன். நல்ல மனிதன். "நீ எப்போது வந்து குரல் கொடுத்தாலும் வண்டியை எடுத்துக் கொண்டு வரேன்' என்று சொல்லி இருக்கிறான்... ஆமாம்... சித்ரா... உன் வாய்க்குப் பிடிச்சதைப் பண்ணிப் போட ஆள் இல்லையே!''
    "நீங்க ஒருவர் அன்பாக இருக்கிறபோது எனக்கு வேறு எதுவுமே வேண்டாம்! அண்ணாவுக்கு லீவு கிடைக்கலியாம்.''
    "சித்ரா, நான் அடுத்த வாரத்திலிருந்து லீவு போட்டு விடுகிறேன். உனக்கு ஹெல்ப் பண்ண''
    "இன்னும் இரண்டு மாசம் கழிச்சுதான் குவா, குவா. அதற்கப்புறம் இரண்டு மூன்று மாசம் தான் முக்கியம். அப்போது லீவு போட்டால் நல்லது. அம்மாடி... பாருங்களேன், வயிற்றில் உதைக்கிறான் உங்கள் செல்வம்.''
    "ஏண்டா, சுட்டிப் பயலே. அம்மாவைத் தொந்தரவா பண்றே?'' என்று சித்ராவின் வயிற்றைப் பார்த்துச் சொல்லி, மெள்ளமாகத் தட்டினான்.
    "அவனை ஏதாவது அடித்தீர்கள் என்றால் எனக்கு ரொம்பக் கோவம் வரும்!''
    "சித்ரா. உனக்குக் கோபம் வந்தே நான் பார்த்ததில்லை'' என்று கூறியபடியே அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.


April 03, 2013

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 2

 இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 2

"ஹலோ... நமஸ்தே... ஐ மீன், குட்மார்னிங்... மிஸ்... சித்ரா'' என்றான் சிவா, லைப்ரரி "இஷ்யூ' டெஸ்க்கில் இருந்த சித்ராவைப் பார்த்து.
    ""உஷ்... உரக்கப் பேசக்கூடாது... இது லைப்ரரி... நமஸ்காரம். அன்றைக்குப் படம் முடிந்த பிறகு உங்களைப் பார்க்க முடியவில்லையே. உங்கள் போன் நம்பரைக் கேட்க வேண்டும் என்று அண்ணா சொன்னார்'' - கிசு கிசு குரலில் சித்ரா சொன்னாள்.
    ""மருந்து தானே? சொல்லியிருக்கிறேன். கிடைத்தவுடன் கொண்டு வந்து தருகிறேன்.''
    ""உஷ்... மறுபடியும் உரக்கப் பேசுகிறீர்கள்.''
    ""சாரி...  "சைலன்ட் மூவி"யில் பேசுகிற மாதிரி பேச வேண்டுமா?.. ஒன்றுமில்லை, அந்த லெட்டர்...''
    ""இதோ வைத்திருக்கிறேன்'' என்று சொல்லிச் சித்ரா டிராயரைத் திறந்து எடுத்துக் கொடுத்தாள்.
    "தாங்க்ஸ்...''
    அச்சமயம் வேறொரு பெண் அங்கு வந்து, ""சித்ரா நீ லஞ்சுக்குப் போ. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றாள்.
    கைப் பையை எடுத்துக் கொண்டு சித்ரா புறப்பட்டாள். சிவா தயங்கியபடியே லைப்ரரியை விட்டு வெளியே வந்தான். சித்ராவும் வெளியே வருவதைப் பார்த்த, சிவா, பைத்தியக்கார இளிப்பை இளித்து வைத்தான்.
    "ஒன்றுமில்லை. அம்மா எழுதியிருந்த கடிதத்தை நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பா வந்தது'' என்றான்.
    ""உம்.''
    ""நானும் லஞ்சுக்குத்தான் போகிறேன். "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' கான்டீனுக்கு, இஃப் யூ டோண்ட் மைண்ட், நீங்களும் வரலாம். கான்டீனில் போய் உட்கார்ந்து பேசலாம். ரொம்ப இன்டரஸ்டிங்காகப் பேசறீங்க...''


    அடுத்த அரைமணி நேரம். இருவரும் கான்டீனில் - இல்லை. அது ஒரு சின்ன சொர்க்க லோகம்! அவனைப் பொறுத்தவரை  -பல விஷயங்களைப் பேசினார்கள்.
    ""அம்மாவுக்கு ஊரைவிட்டு வருவதற்கு இஷ்டமில்லை. நான் இங்கே தனியாக ஓட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறேனாம்.''
    ”உம்''
    "இத்துடன் பத்து லெட்டர் போட்டு விட்டாள்.''
    ""கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லியா?''
    "ஆமாம்.''
    "செய்து கொள்வது தானே?''
    "நான் தயார். அவள்?''
    "அவள் யார்? உங்களுக்கென்ன குறை. மெடிகல் ரெப்ரசென்டேடிவ். சம்பளம், டி.ஏ., அது இது என்று வரும்... முக்கியமானது ஒண்ணு கேட்க மறந்துட்டேனே, வென்டாலினுக்காக எவ்வளவு பணம் தரணும்?''
    "இப்போது பணம் வேண்டாம். மருந்து கிடைச்சதும் கேட்டு வாங்கிக் கொள்கிறேன். உங்கள் மாமாவுடன்தான் இருக்கீங்களா?''
    "மாமா கிராமத்தில் இருக்கிறார். நானும் அண்ணாவும் தனியாகத்தான் இருக்கிறோம்.''
    "அப்படியா? காலையில் சமையல் வேலை. பகலில் லைப்ரரி ட்யூடி... மறுபடியும் ஈவினிங் சமையல், பாவம் ரொம்ப எக்ஸாஸ்டிங்!''
    "அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது ஒரு பெரிய பிராப்ளம் வந்திருக்கிறது''  சித்ராவின் முகத்தில் கவலையின் ரேகைகள் ஓடின.
    "என்ன விஷயம், சித்ரா?''
    "எங்க அண்ணாவுக்கு நேஃபாவிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது.''
    "உங்க அம்மா, அப்பா யாராவது இங்கு வரமாட்டார்களா?''
    ""இங்கு எப்படி வர முடியும்? இந்த உலகத்திலேயே அவங்க இல்லையே!'' þ சித்ராவின் கண்களில் இரண்டு முத்துக்கள்.
    "மை காட்... உங்க மனசை வருத்தப்படச் செய்துட்டேன்... உங்கள் பிரதர் நேஃபா போய்விட்டால்?''
    ""என்ன செய்வது என்று தெரியவில்லை.''
    "யார் வீட்டிலாவது பேயிங் கெஸ்ட்டாக இருக்கலாமே.''
    "நல்லவங்களாக இருக்கணும். நம்பிக்கையானவங்களாக இருக்கணும். எங்க அண்ணாவும் ஒரு சிலர் கிட்டே சொல்லியிருக்கிறார்.''
    ""நானும் யாராவது இருந்தால் சொல்கிறேன்.''