April 06, 2013

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 3

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 3


  சித்ராவுக்கு டானிக், வைட்டமின் என்று பலவற்றை வாங்கி வந்தான் சிவா.
    ஆஸ்பத்திரியில் பெயரை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்தாள் சித்ரா.
    பேபி பவுடர், ஃபீடிங் பாட்டில், நாப்கின் என்று பல பொருள்களை வாங்கினார்கள்.
    "தொட்டில் வாங்க வேண்டாமா?''
    "சித்ரா, தொட்டில் போட இடம் இல்லையே?''
    "தூளியில் போட்டால் என் செல்ல ராஜா நன்றாகப் புரண்டு தூங்க முடியாதே!''
    "செல்லராஜா இல்லை, செல்லதுரை.''
    "ஆமாம்... திடீர் என்று ராத்திரியில் நோவு எடுத்தால் எப்படி ஆஸ்பத்திரிக்குப் போகிறது?''
    "தெருக்கோடி டாக்ஸி ஸ்டாண்டு சர்தார்ஜியிடம் சொன்னேன். அவன் வீட்டு அட்ரஸையும் வாங்கி வந்திருக்கிறேன். நல்ல மனிதன். "நீ எப்போது வந்து குரல் கொடுத்தாலும் வண்டியை எடுத்துக் கொண்டு வரேன்' என்று சொல்லி இருக்கிறான்... ஆமாம்... சித்ரா... உன் வாய்க்குப் பிடிச்சதைப் பண்ணிப் போட ஆள் இல்லையே!''
    "நீங்க ஒருவர் அன்பாக இருக்கிறபோது எனக்கு வேறு எதுவுமே வேண்டாம்! அண்ணாவுக்கு லீவு கிடைக்கலியாம்.''
    "சித்ரா, நான் அடுத்த வாரத்திலிருந்து லீவு போட்டு விடுகிறேன். உனக்கு ஹெல்ப் பண்ண''
    "இன்னும் இரண்டு மாசம் கழிச்சுதான் குவா, குவா. அதற்கப்புறம் இரண்டு மூன்று மாசம் தான் முக்கியம். அப்போது லீவு போட்டால் நல்லது. அம்மாடி... பாருங்களேன், வயிற்றில் உதைக்கிறான் உங்கள் செல்வம்.''
    "ஏண்டா, சுட்டிப் பயலே. அம்மாவைத் தொந்தரவா பண்றே?'' என்று சித்ராவின் வயிற்றைப் பார்த்துச் சொல்லி, மெள்ளமாகத் தட்டினான்.
    "அவனை ஏதாவது அடித்தீர்கள் என்றால் எனக்கு ரொம்பக் கோவம் வரும்!''
    "சித்ரா. உனக்குக் கோபம் வந்தே நான் பார்த்ததில்லை'' என்று கூறியபடியே அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.    செலவுகள் ஏறிக் கொண்டே போயின. ஒரு குழந்தையை வரவேற்க வேண்டுமானால் எத்தனை செலவுகள்!
    கல்யாணத்திற்கு வாங்கிய கடன் அப்படியே நின்று கொண்டிருந்தது. சம்பளம் இல்லாத லீவில் சித்ரா இருந்தாள். இச்சமயத்தில் சிவாவுக்கு மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
    ஒரு நாள் காலை அவன் ஆபீசுக்குப் போனபோது, சின்னக் கவர் ஒன்றை உதவி மானேஜர் கொடுத்தார்.
    "நிர்வாகச் செலவைக் குறைக்க வேண்டி இருப்பதாலும், தொடர்ந்து நஷ்ட மேற்பட்டு வருவதாலும்...''
    ஏதோ ஒரு காரணம். சிவா தன் மனைவியின் பிரசவத்திற்கு லீவு எடுக்கத் தேவையில்லாதபடி செய்து விட்டார்கள். அவனை வேலையிலிருந்து அனுப்பி விட்டார்கள்!
    அந்தச் சின்னக் கவரில் அந்த மாதத்திற்கான சம்பளத்தைப் பைசாக் கணக்குடன் கொடுத்து விட்டிருந்தார்கள்.
    சின்னக் கவர், பெரிய அதிர்ச்சி. சிவா மனதிற்குள்ளேயே அழுது கொண்டு வீட்டிற்கு வந்தான். வரும் போதே தீர்மானித்து விட்டான், சித்ராவிடம் சொல்லக் கூடாது என்று.

    "டெலிவரியை ஒரு கிளினிக்கில் வைத்துக் கொள்ளலாம். நாள் ஆக ஆக எனக்கு ஒரு வித பயம் ஏற்படுகிறது'' என்றாள் சித்ரா.
    "பயம் என்ன இருக்கிறது? சித்ரா, ஆஸ்பத்திரியில் வசதிகள் எதற்கும் குறைவு இருக்காது... அப்புறம், நர்சிங் ஹோம் என்றால் மூவாயிரம், நாலாயிரம் ஆகிவிடும்'' என்றான் சிவா.
    "பரவாயில்லை. செலவைப் பார்க்காதீங்க. நாலு மாசத்திற்குப் பிறகு பாப்பாவை க்ரீஷ்ஷில் விட்டு விட்டு நான் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறேன்... எல்லாக் கடனையும் அடைச்சுடலாம்... என் செயினை விற்று விடுங்கள்...''
    "பைத்தியக்காரி. உன் நகையை எதற்கு விற்க வேண்டும்? ஆபீசில் நான் லோன் போடுகிறேன்'' என்று சிவா சொல்லும்போதே, கள்ளங்க கபடமற்ற சித்ராவிடம், பொய் சொல்லுகிறோமே என்று உள்ளே ஒரு நெருடல் ஏற்பட்டது. ஆபீஸாவது, லோனாவது!
    "அப்புறம் ஒரு மாசத்திற்கு வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம். குழந்தையையும் கவனித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.''
    "உம்.''
    "என்ன, சுரத்தில்லாமல் "உம்' என்கிறீர்கள்?''
    "இல்லையடி என் கண்ணே. இந்தப் பரந்த உலகில் எப்படி நாம் இரண்டு பேரும் உறவு, சுற்றம் எதுவுமின்றித் தனித்து இருக்கிறோம்.''
    "சட், என் ராஜா இதற்காக ஏன் கண் கலங்கணும்? எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் இருக்கும்போது வேறு யார் உறவும் வேண்டாம். கொஞ்ச நாளில் ஒரு பட்டுப் பாப்பாவும் வந்து விடும்'' என்று ஒரு சின்னக் குழந்தை மாதிரி கூறினாள் சித்ரா.


    ஓர் இரவு அவள் "அம்மா, வலிக்கிறதே' என்று பாதி மகிழ்ச்சியுடன் பாதி கஷ்டத்துடன் சொன்னாள். "சித்ரா, டாக்டர் சொன்ன தேதியும் தாண்டியாகிவிட்டதால் இது லேபர் பெயின்தான்... இரு... நான் போய் டாக்சியைக் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்.''
    டாக்சியை அழைத்து வந்தான் சிவா. தனக்கு வேண்டிய துணிமணிகளைச் சித்ரா எடுத்துக் கொண்டாள். ஹோலி ஃபேமலி ஆஸ்பத்திரிக்கு சித்ராவை அழைத்துப் போனான்.
    "என் செல்லக் குட்டி சித்ரா, ஒண்ணும் பயப்படாதே. உன்னுடைய சிவா வெளியே வார்டிலேயே காத்திருப்பேன். குவா குவா என்று சப்தம் கேட்டதும் எனக்குத் தெரிந்து விடும். பாப்பாவுக்கு முதல் முத்தம் என் சார்பில் நீயே கொடுத்து விடு'' என்றான் சிவா.
    "அம்மா... வலி. இரண்டிரண்டு நிமிஷத்திற்கு வருகிறதே... குழந்தை பிறந்ததும் அண்ணாவுக்குத் தந்தி கொடுத்து விடுங்கள்.''
    அன்று காலை சித்ரா தாயானாள். கொழுகொழுவென்று ஏழு பவுண்டு ராஜா பிறந்தான். டெலிவரி ரூமிலிருந்து நர்ஸ் வெளியே வந்து சிவாவிடம் சொன்ன போது மகிழ்ச்சி தங்கவில்லை. சித்ராவையும் குழந்தையும் இறுக அணைத்து முத்தமாரி பொழிய வேண்டும் போலிருந்தது.
   
    ஒரு வாரம் கழித்து சித்ரா  ராஜாவை வீட்டிற்கு அழைத்து வந்தான். எங்கெங்கோ அலைந்து கடன் வாங்கி ஆஸ்பத்திரி பில்களைச் செலுத்தினான். ரூபாய் தண்ணீராகக் கரைவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
    "சித்ரா குட்டி. நம்ப துரையின் மூக்கு, உன் மூக்கு மாதிரியே இருக்கு. அய்யய்யோ, எவ்வளவு குட்டி விரல்கள்! பாதத்தைப் பாரேன், சில்க் கெட்டது, அவ்வளவு மழமழப்பு!''
    "ரொம்ப அழுத்தாதீங்க, வலிக்கப் போகிறது. ஏண்டா துரை, அப்பா தொந்தரவு பண்ணுகிறாரா?''
    "இல்லையேடா என் செல்லமே? நீ அம்மா பக்கமா? என் பக்கமா?''
    "அவன் அம்மா பக்கம். ஆனால் நான் உங்கள் பக்கம்'' என்றாள் சித்ரா.
    அன்றலர்ந்த புதுமலர் மாதிரி இருந்தாள் சித்ரா. தாய்மை அவளுக்கு ஒரு சோபிதத்தையும் மென்மையான கவர்ச்சியையும் தந்திருந்தது.
    "உங்கள் லீவு நாளைக்கு முடியப் போகிறது, இல்லையா?''
    "ஆம்... வந்து, சித்ரா... சித்ரா...''
    "உங்கள் பக்கத்தில் தானே இருக்கிறேன். எத்தனை தடவை சித்ரா, சித்ரா என்று கூப்பிடுவீர்கள்?''
    ""வந்து... சித்ரா...'' - அவன் குரல் கரகரத்தது. கண்களில் நீர் திரண்டது.
    "என்ன? இது என்ன? என் கண்ணான கண்ணன் எதுக்குப் பச்சைக்குழந்தை மாதிரி அழறீங்க? -- சித்ரா ஒருவிதப் பரபரப்புடன் கேட்டாள்.
    "சித்ரா... என் மேல் வருத்தப்படவோ கோபப்படவோக் கூடாது. நான் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன்.''
    "இது என்ன, இத்தனை நாள் இல்லாமல் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்கள் மேல் நான் ஏன் கோபப்படப் போகிறேன். எனக்கு நீங்கள் தானே எல்லாம்...? நீங்கள் தயங்கி தயங்கிப் பேசுவதைப் பார்த்தால் எனக்கு திகில் ஏற்படுகிறது.''
    "சீச்சி... திகிலான விஷயம் இல்லை. சித்ரா கண்ணு. உன்னிடம் ஒரு விஷயத்தை மறைச்சு வெச்சிருந்தேன்... எனக்கு எப்போதோ வேலை போய்விட்டது... உன் சிவாவிற்கு வேலை போய்விட்டது'' என்றான்.
    "இதற்கு ஏன் கவலைப்பட வேண்டும். உலகம் அஸ்தமித்தா போய்விட்டது? நான் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் போது ஒரு கவலையும் வேண்டாம்... முன்னமேயே என்னிடம் சொல்லியிருக்கலாம். என் ராஜா... எதுக்கும் வருத்தப்பட வேண்டாம்... 'இவன் என்னமாய் சிரிக்கிறான்? டேய் துரைக்கண்ணா, அப்பாவை அழாதேன்னு சொல்லுடா'' என்று சற்றுப் பொய்யான உற்சாகத்துடன் சித்ரா அவனைத் தேற்றினாள்.
    அச்சமயம், "சார்! போஸ்ட்'' என்று சொல்லியபடி கீழ்வீட்டு வேலைக்காரன் ஒரு கவரை ஜன்னல் வழியாகப் போட்டுவிட்டுப் போனான்.
    "ரிலையன்ஸ் கம்பெனிக்கு அப்ளை பண்ணியிருந்தேன். வேலைக்கு ஆர்டராக இருக்க வேண்டுமே'' என்று சொல்லிக் கொண்டே, அந்தக் கவரை எடுத்தான் சிவா.
    சிவா- சித்ரா வாழ்க்கை சினிமாவோ நாடகமோ அல்ல. ஆகவே அந்த கவரில் வேலைக்கான உத்தரவு வரவில்லை. "தற்சமயம் வேலை காலி இல்லை'' என்ற ஒற்றை வரிக் கடிதம்தான் இருந்தது!
    "சித்ரா... தலைக்கு மேல் கடன் ஏறிவிட்டது. வேலையும் கிடைத்த பாடில்லை. நீயும் வேலைக்குப் போக முடியாது.''
    "ஏன் இடிந்து போகிறீர்கள்? கூரையில் சிட்டுக் குருவிக் கூட்டைப் பாருங்கள். ஒட்டடை அடிக்கும் போது நம்மைக் கண்டு அவை கலங்கிப் போய்விடுகின்றனவா? நீங்கள் என்ன குழந்தையா? இதோ பாருங்கள், நம் துரைக்கண்ணனை. அவன் குட்டிக் கையால் எப்படி என் விரலைப் பிடித்திழுக்கிறான்... உங்கள் விரலைக் கொடுங்கள். எப்படிக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான்?... அவனுக்கு நம் பேரில் எவ்வளவு நம்பிக்கை!'' - சித்ரா சொல்லும் போதே அவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் குழந்தையின் முகத்தில் வழிந்தது.
    சிவாவின் கண்ணீரும் துரையின் மேல் விழுந்து தெறித்தது.
    குழந்தை ஏதோ வேடிக்கை பார்ப்பது போல் பொக்கை வாயைத் திறந்து கைகாலை ஆட்டிச் சிரித்தது.
    அவனது சின்னக் கையின் இறுக்கமான பிடிப்பில் இருந்த நம்பிக்கை அவர்களையும் பற்றிக் கொண்டது!

3 comments:

  1. நம்பிக்கை பற்றிக் கொண்ட வாழ்க்கை ..!

    ReplyDelete
  2. மனதை தொட்டு விட்டது அய்யா.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :