முன்குறிப்பு: இந்தக் கட்டுரையில் நிறைய ‘நான்’ வருவதைத் தவிர்க்க
முடியவில்லை. நான் அறிந்த ரா.கி.ர’ வைப்பற்றி
எழுதும் போது, என் அனுபவ பூர்வமான விஷயங்களைச் சொல்லும்போது தவிர்ப்பது சாத்தியமல்ல, கூடிய வரைக் குறைத்திருக்கிறேன்!)
+++++++++++++++
என் எழுத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த முக்கியமானவர்களில் ஒருவர் ரா.கி.ரங்கராஜன்..
அவரை எப்போது முதன் முதலில் படித்தேன்? பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சிறுவர் பத்திரிகையில் ( அணில்? ஜிங்க்லி ? கல்கண்டு?) ‘பிரபலங்கள் பிள்ளைகள்” என்ற வரிசையில் கல்கி ராஜேந்திரன் அவர்களை, ரா.கி.ர பேட்டி கண்டு எழுதினார்.. அப்போதே அவர் எழுத்தின்மீது எனக்கு அபிமானம் ஏற்பட்டது!
அதன் பிறகு குமுதத்தில் வந்த பல கதை, கட்டுரைகளைப் படித்து ரசித்து இருக்கிறேன். குமுதத்தில் எழுதுபவர்கள் எல்லாரும் நன்றாக எழுதுகிறார்களே என்று யோசித்ததும் உண்டு. அதனால் அதில் எழுதும் பல எழுத்தாளர்களூக்கு விசிறியாகி விட்டேன். பின்னால் நான் குமுதத்தில் எழுத ஆரம்பித்த (1963) பிறகு எனக்குத் தெரியவந்தது, ரா,கி,ர, , ஜ,ரா,சு, மற்றும் புனிதன் ஆகிய மும்மூர்த்திகள்தான் அந்தப் ‘பலர்’ என்று! அவர்களில் அதிகப் புனைபெயர் கொண்டவர் ரா,கி,ர’ வாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.
(ஒரு சமயம் தினமணி கதிரில் அவர் படத்தைக் கார்ட்டூனாகப் போட்டு ஒரு துணுக்கு வந்ததது. ” நான் இரண்டு டஜன் புனைப்பெயர்களை வைத்துக் கொண்டு எழுதுவதாகச் சொல்கிறர்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை... எனக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு டஜன் புனைப்பெயர்கள்தான் !-ரா.கி.. ர..) (40 வருஷத்திற்கு முந்திய துணுக்கு, நினைவிலிருந்து எழுதியுள்ளேன். லேசான தவறு இருக்கலாம்!)
அந்தப் புனைபெயர்களையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு மேலும் ரசித்துப் படித்தேன். இப்படி பல அவதாரங்களை எடுத்த அவர் இன்று இல்லை. அவருக்கு நான் ரசிகன் மாணவன், குடும்ப நண்பன். இவற்றுடன் சில வருஷங்களுக்கு முன்பு, ஆண்டவன் செய்த ஏற்பாட்டினால் ஒரு திருமணம் மூலம் அவரது உறவினனும் ஆனேன்.

