September 25, 2012

ரா.கி.ரங்கராஜன் - ஒரு ஆத்மார்த்த அஞ்சலி : கடுகு

முன்குறிப்பு: இந்தக் கட்டுரையில் நிறைய ‘நான்’ வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நான் அறிந்த ரா.கி.ர’ வைப்பற்றி  எழுதும் போது, என் அனுபவ பூர்வமான  விஷயங்களைச்  சொல்லும்போது  தவிர்ப்பது சாத்தியமல்ல, கூடிய வரைக் குறைத்திருக்கிறேன்!)
+++++++++++++++

என் எழுத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த  முக்கியமானவர்களில் ஒருவர் ரா.கி.ரங்கராஜன்..

அவரை எப்போது முதன் முதலில் படித்தேன்? பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சிறுவர் பத்திரிகையில் ( அணில்?  ஜிங்க்லி ?  கல்கண்டு?) ‘பிரபலங்கள் பிள்ளைகள்” என்ற வரிசையில் கல்கி ராஜேந்திரன் அவர்களை, ரா.கி.ர  பேட்டி கண்டு எழுதினார்.. அப்போதே அவர் எழுத்தின்மீது எனக்கு அபிமானம் ஏற்பட்டது!

அதன் பிறகு குமுதத்தில் வந்த பல கதை, கட்டுரைகளைப் படித்து ரசித்து இருக்கிறேன். குமுதத்தில் எழுதுபவர்கள் எல்லாரும் நன்றாக எழுதுகிறார்களே என்று யோசித்ததும் உண்டு. அதனால் அதில் எழுதும் பல எழுத்தாளர்களூக்கு விசிறியாகி விட்டேன். பின்னால் நான் குமுதத்தில் எழுத ஆரம்பித்த (1963) பிறகு எனக்குத் தெரியவந்தது, ரா,கி,ர, , ஜ,ரா,சு, மற்றும் புனிதன் ஆகிய மும்மூர்த்திகள்தான் அந்தப் ‘பலர்’ என்று! அவர்களில் அதிகப் புனைபெயர் கொண்டவர் ரா,கி,ர’ வாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.

(ஒரு சமயம் தினமணி கதிரில் அவர் படத்தைக் கார்ட்டூனாகப் போட்டு ஒரு துணுக்கு வந்ததது. ” நான் இரண்டு டஜன் புனைப்பெயர்களை வைத்துக் கொண்டு  எழுதுவதாகச் சொல்கிறர்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை... எனக்கு இருப்பதெல்லாம்  ஒரே ஒரு டஜன் புனைப்பெயர்கள்தான் !-ரா.கி.. ர..)  (40 வருஷத்திற்கு முந்திய துணுக்கு, நினைவிலிருந்து எழுதியுள்ளேன். லேசான தவறு இருக்கலாம்!)

அந்தப் புனைபெயர்களையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு மேலும் ரசித்துப் படித்தேன். இப்படி பல அவதாரங்களை எடுத்த அவர் இன்று இல்லை. அவருக்கு நான் ரசிகன்  மாணவன், குடும்ப நண்பன். இவற்றுடன் சில வருஷங்களுக்கு முன்பு, ஆண்டவன் செய்த ஏற்பாட்டினால் ஒரு திருமணம் மூலம் அவரது உறவினனும் ஆனேன்.

அவர் 60-களில் புரசைவாக்கத்தில் குடி இருந்தார். அவர் வீடும் என் மனைவியின் வீடும் மிக மிக அருகில் இருந்தன. ஆகவே அவர் வீட்டிற்குப் பல தடவை போயிருக்கிறேன்.

அவரது கற்பனையின் வேகம், அவர் எழுதும் கதை கட்டுரைகளில் இருப்பதைப் போல பேச்சிலும், கடிதங்களிலும் தெரியும்.. பேனாவா, இங்க் போட்ட ஸ்கூட்டரா என்ற சந்தேகம் தோன்றும்.. அவரது பேனா அரை புட்டி இங்க் பிடிக்கும்: பேனா நிப்போ பட்டையோ பட்டை.!

ரா.கி, ர.-வைச் சந்திக்கும்போதெல்லாம் குமுதத்தின் ‘உள்’ விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சில கேள்விகளைக் கேட்டு வைப்பேன். (இதெல்லாம் 1964 வாக்கில் நடந்தவை.) அவர் சிலவற்றைத் தவிப்பார். ஆனாலும் நிறைய  சொல்லியிருக்கிறார், அவை எனக்கு மட்டும்தான்.

வார்த்தைக்கு வார்த்தை  எடிட்டர்,   எடிட்டர்தான். அவர் வீட்டில் அதிக உயரத்தில் இல்லாத பரண் இருந்தது. அதைக் காட்டினர். அங்கு நிறைய புத்தகங்கள் இருந்த\ன..” இது  எல்லாம் எடிட்டர் கொடுத்து  என்னைப் படிக்கச் சொன்ன புத்தகங்கள்தான்” என்றார். அவரைப் பார்த்து எனக்கு  பொறாமையாக இருந்தது.

அவருடைய மனைவி திருமதி கமலாவும் என் மனைவி கமலாவும் சிநேகிதர்கள். இருவரும் கடிதங்களில் குடும்ப விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

திருமதி கமலாவின் பிறந்தகத்தில் ஒரு மூத்த  உறவினரின் பெயர் கமலா என்பதால் இவருக்குச் ‘சின்னக்கமலா’ என்று பெயர் வந்து விட்டது. ரா,கி,ர-வும்  'சின்னக்கமலா’ என்ற பெயரில் ஒரு நாவலை எழுதிவிட்டார்!


யாராவது  உறவினர்களோ போரடிக்கும் நண்பர்களோ வீட்டிற்கு வந்தால் இவுர் பேப்பரும் பேனாவுமாக. சில சமயம் புரூஃப்களுடன் மொட்டைமாடிக்குப் போய் விடுவார். ஒரு சமயம் சொந்தமாக வீடு கட்டினார். எல்லாம் திருமதி ரா. கி. ர.தான் மேற்பார்வை. இப்படி அவர் காரியம் யாவினும் திருமதி கமலா கை கொடுத்ததால், குமுதம் பத்திரிகைக்கு
ரா,கி,ர முழுமனதுடனும் முழுமையாகவும் ஈடுபட முடிந்தது. ரா. கி. ர. விற்கு, வீட்டில் நடக்கும் விஷயங்களில் நிறைய விஷயங்கள் தெரியாது.
*                                          *                 
நான் டில்லியிலிருந்த போது அவரிடமிருந்து வரும், ஒரு வரி, இரண்டு வரி கடிதங்கள்தான் என் எழுத்து ஆர்வத்திற்கும், வளர்ச்சிக்கும் நீராகவும் உரமாகவும் உதவின. ( “என்ன ஓய், டில்லியில் பூகம்பமாமே., என்ன செய்து கொண்டிருக்கிறீர்? --ராகிர.  இப்படித்தான் இருக்கும் கடிதம்.அவ்வளவுதான். அடுத்த செகண்ட் அரக்கப் பரக்கக் கிளம்பிப் போய் தகவல் திரட்டி, மொபைல் போஸ்டாபீஸில் சாயங்காலம் ஆறு மணிக்குக் கட்டுரையை அனுப்பிவிடுவேன்.  அடுத்த நாள் காலையில் என்  கட்டுரை குமுதம் ஆபீசுக்குப் போய் சேர்ந்துவிடும். (அடுத்த நாளே வா என்றெல்லாம் கேட்காதீர்கள். அது ஒரு பொற்காலம்!)

ஒரு சமயம் ரா. கி. ர. என் னை வீட்டிற்கு அழைத்திருந்தார். ”ராத்திரி சாப்பிட வந்து விடுங்கள். உங்களுக்காக நான் ஆபீஸிலிருந்து சீக்கிரம் வந்து விடுகிறேன்” என்றார்.

”சரி  சார் ....... ஏழு ஏழரைக்கு வந்து விடுிகிறேன்” என்றேன்,

’அவ்வளவு சீக்கிரம் வேண்டாமே!. ஒன்பது மணிக்கு வந்து விடுங்கள்.  எனக்கு அது தான் சீக்கிரம்” என்றார்.

அன்றிரவு சீக்கிரமாக ஒன்பதரைக்கு வந்து விட்டார், சாப்பிட்டோம். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஆபீஸ் பையன் வந்தான். நீளமான கேலி ப்ரூஃப்புடன் அதைக் கொடுத்துவிட்டு ”காலையில ஐந்து மணிக்கு வர்றேன்  சார் . அதுக்குள்ளெ பாத்து வெச்சிட்டீங்கன்னா, வாங்கிட்டு போய்டுவேன்...... ப்ரஸ்ல சொன்னாங்க .”. என்றான்.

”சரி வந்து விடு” என்று சொன்னார்.

நான் உடனே விடை பெற்று கிளம்பினேன்.

ஒரு சமயம் ரா. கி. ர விற்கு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய  அமெரிக்க அரசு அழைப்பு விட்டது . போகலாமா வேண்டாமா என்று யோசித்தார். அந்த சமயம் அவர் தொடர் கதை வந்து கொண்டிருந்தது என்று ஞாபகம். அதனாலும் வேறு காரணங்களாலும் அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை. அது பற்றி பின்னால் வேடிக்கையாக அவர் சொன்னது:” அமெரிக்கா போக வேண்டுமென்றால் பேண்ட் போட்டுக் கொள்ளவேண்டும் . இது வரை நான் பேண்ட் போட்டுக்கொண்டதே கிடையாது  ஆகவே எல்லோரும் என்னை விசித்திர பிறவியாகப் பார்ப்பார்கள் என்ற தயக்கம்/ கூச்சமும் ஒரு காரணம்  ”என்றார்.

அவர் எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக படகு வீடு நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்?) தகவல் திரட்ட காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்குச் செல்ல, இரண்டு தடவை டெல்லி வந்து என் வீட்டில் தங்கினார். அவர் கையுடன் கொண்டு வந்திருந்த  200 பக்க பவுண்ட் நோட் புத்தகத்தில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், மெள்ள அதை எடுத்துப் பார்த்தேன்.. கிட்டதட்ட 200 பக்கமும் ஒரு நாவல் அளவு குறிப்புகள்.!


அவரது திறமையையும் உழைப்பையும் பார்த்து அண்ணந்து பார்த்து வியந்திருக்கிறேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அண்ணாந்து பார்ப்பது குறைந்துவிட்டது. அதன் காரணம் எளிமயாகவும்  பந்தா இல்லாமலும் அவர் பழகிய விதம்தான். அது .மட்டுமல்ல; அவர்  என்னை  குட்டி எழுத்தாளனாகப் பார்க்காமல் என தகுதியைவிட சற்று கூடுதல்  உயரத்திற்குத் தூக்கி வைத்ததுதான்.

முதன்முதலில் அவர் என்னைப் பார்த்துச்  சொன்னது “ அட, இவ்வளவு இளைஞராக இருக்கிறீர்கள்! டில்லி வாழ்க்கையில்  ரொம்ப காலம் ஊறிக்கொண்டிருப்பவர் என்று நினைத்தேன்.”

அவர் அவ்வப்போது நடப்பு சேதிகளை வைத்துக்கொண்டு ’குறும்புப்பா’ எழுதுவார். லிமெரிக் வகைப் பாடல்கள்.. அவை எனக்குப் பிடிக்கும். அவரைப் பின்பற்றி நானும் எழுதினேன். குமுதத்தில் போட்டதுடன், எனக்குக் கடிதமும் எழுதிப் பாராட்டி ஊக்கமளித்தார்.

பல வருஷங்களுக்கு முன்பு, அவரது  திருமணமான மகளுக்கு   ஒரு பிரச்னை ஏற்பட்டது.  தீர்வுகாண அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சென்னை வந்த அவரைச் சந்தித்த போது சற்று வருத்தத்துடன் விவரங்களை என் மனைவிடமும் என்னிடமும் சொன்னார்,

பிறகு அவருக்குத் தெரிவிக்காமலேயே நாங்கள் சில முயற்சிகள எடுத்தோம். லேசாகப் பலன் அளிக்கும் அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் பிரச்னை தீரவில்லை. இருந்தும் அவர் எங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியுடன்  நன்றி கூறினார்.

இது நடந்து 40 வருஷங்களுக்குப் பிறகு, அவர் என்னைப் பற்றி அண்ணாநகர் டைம்ஸில் ஒரு பெரிய கட்டுரை எழுதியபோது ஞாபகமாக எங்கள் சிறிய முயற்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார், ( நானே மறந்து விட்ட விஷயம் அது!)

(  அண்ணாநகர் டைம்ஸில் அவர் எழுதிய  கட்டுரயைச் சுருக்கி கடந்த் பிப்ரவரியில்  வெளியான  : ‘கமலாவும் நானும்” என்ற என் புத்தகத்திற்கு அணிந்துரையாகப் போட்டிருக்கிறேன்.)

நான்  சமீபமாகத்தான் சென்னைக்கு குடி வந்தவன் என்பதாலும் நான் இருக்கும்  பேட்டையில் அவர் கட்டுரைகள் வரும் எந்த   டைம்ஸும் வருவதில்லை என்பதாலும் அதிகம் படிக்க முடியவில்லை. ஒரு சமயம்  அவருடைய வீட்டிற்குப் போயிருந்தபோது அவரிடம் அதைச்  சொன்னேன். ( (அவருடைய கட்டுரைகள் வாராவாரம் ஐந்து  ( அல்லது எழோ?) டைம்ஸ்களில் வந்து கொண்டிருந்தன.)

”அதனாலென்னய்யா..இப்படிவாரும்” என்று அடுத்த அ றைக்கு அழைத்துச் சென்று, அண்ணாநகர் டைம்ஸில் வந்த கட்டுரைகள் புத்தகங்களைக் கொடுத்தார். ஒரே மூச்சில் படித்தேன். ’கட்டுரைகள் எப்படி எழுதவேண்டும்’ என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்க வேண்டாம்.  இவருடைய புத்தகங்களைப் படித்தால் போதும் என்று நிச்சயமாகச் சொல்வேன்.

இண்டர்நெட், கூகுள், ஈ-மெயில் எல்லாம் வந்த பிறகு அதில் இரவு பகல் பார்க்காமல் ஆழ்ந்து விட்டார். அவ்வப்போது ஏதாவது சந்தேகம் கேட்பார். முக்கியமாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று அவருக்குத் தெரியவில்லை.  நான் ஒரு பெரிய கில்லாடி என்பது அவரது (தவறான) கணிப்பு.  “ஒரு நடை வந்து போங்களேன்” என்பார் அவர் வீட்டிற்குப் போய் எனக்குத் தெரியாததையும் தெரிந்த மாதிரி விளக்கி விட்டு வருவேன்.

கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலமில்லாமல் இருந்தார் மாத்திரை மருந்துகள் காரணமாகத் தூங்கிக்கொண்டும் , லேசான மயக்க நிலையிலும் இருந்தார் தெளிவு ஏற்பட்டதும் என் பெயரை எழுதிக்காட்டி போன் போடச் சொல்லுவாராம்.அவர் என்னிடம் முக்கியமாகப் பேசியது: அவருடைய ’லைட்ஸ் ஆன்’ கட்டுரைகளைப்  புத்தகமாகப் போடுவதைப் பற்றிதான்.

என்னையே போடச் சொன்னார். அதிலுள்ள சிரமத்தை எடுத்துக் கூறி வேறு யாரிடமாவது சொல்லுகிறேன் என்று சொன்னேன்.  நண்பர்கள் சுபா விடம் கூறினேன் அவர்கள் இப்போது அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரா. கி. ர. பன்முக எழுத்துத் திறமை கொண்ட ஒரு எழுத்தாளர். அவருடன் பழகி, பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டவன் என்ற முறையில் அவருக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். கண்ணீர் மல்க என் சிரம் தாழ்ந்த அஞ்சலியை அவருக்குச் சமர்ப்பிக்கிறேன். 
( இட்லி வடைக்கு நன்றி)

கொசுறு தகவல்:
ரா.கி.ர-வின் பட்டாம்பூச்சி தொடர் பரபரப்பான வரவேற்பைப் பெற்றதைப் பார்த்த சாவி அவர்கள் என்னிடம் ”கதிரிலும் ஒரு மொழிபெயர்ப்புத்  தொடர் வரவேண்டும்.  ஏதாவது புத்தகத்தை தேர்ந்து எடுத்து எழுதி அனுப்புங்கள் என்று சொன்னார். அந்த சமயம் எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது .அதுவும் பட்டாம்பூச்சியின் டெவில்ஸ் ஐலாண்ட்  அனுபவக்கதை போன்றதே. ஆனால் அதற்குப் பல வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. 1938 வாக்கில் என்று நினவு. René Belbenoît  என்ற கைதி பிரஞ்சு மொழியில் எழுதிய  DRY GUILLOTINE  என்ற புத்தகம். அதை நான் மொழிபெயர்த்தேன். கதிரில் 26 (?) வாரங்கள் ‘ஜெயராஜ்’ போட்ட அபாரமான படங்களுடன் வெளிவந்தது.- ”கைதி எண் 46325” என்ற தலைப்பில். ( அந்த எண் 46325 என்று தான் நினைவு!)

7 comments:

 1. எதுவும் சொல்லத் தோனறவில்லை. அந்த மேதைக்கு என் அஞ்சலியை உங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 2. After 'Kalki', how much you respect 'Raaki' (Rangarajan) is revealed. Great soul!
  Jayanthi.

  ReplyDelete
 3. நானும் தினமும் இந்த சைட்டுக்கு வந்து ரா கி யைப்பற்றி கட்டுரை வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருநதேன். இததகைய பன்முக எழுத்தாளர்கள் நினைவு கூறப்படவேண்டும்.

  ReplyDelete
 4. படிக்கும் போதே கண்கள் கலங்கியது!

  ReplyDelete
 5. நானும் திரு ராகிர அவர்களின் ரசிகை. வினோத் என்ற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகளைப் பாராட்டி ஓர் கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு அவர் பதில் எழுதிய விதம் என்னை இன்னும் அவர்பால் அதிகமாக ஈர்த்தது.

  அவரது கடிதத்தை அப்படியே என் வலைத்தளத்தில் கொடுத்திருக்கிறேன்.

  முடிந்தால் படிக்கவும்
  இணைப்பு:http://wp.me/p244Wx-jY

  நானும் என் குடும்பத்தவரும் உங்கள் ரசிகர்கள் கடுகு ஸார்!

  ReplyDelete
 6. ரா.கி.ர. பற்றி எழுத வேண்டுமானால் தாராளமாக நான் என்றே போடலாம். அந்த அளவு நான் சொல்வதாய் அவர் கதைகள். அவரிடம்தான் எனக்கு தொற்றிக் கொண்டது பர்ஸ்ட் பர்சன் சிங்குலரில் கதை சொல்லும் உத்தி. அவரை இன்னமும் பிரமிப்பாய் பார்க்கிற கோஷ்டியில்தான் நானும்.

  ReplyDelete
 7. An excellent tribute to a great writer who gave happiness and enjoyment to a lot of Tamil buffs over half a century. Thank you.

  Best regards
  Madhavan
  Standard Chartered Bank, Singapore

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!